Pages

திங்கள், ஏப்ரல் 23, 2012

மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு!


உலக மது எதிர்ப்பு மாநாடு - நம்பிக்கையளிக்கும் புதிய தொடக்கம்.

உலகின் முதல் மதுஒழிப்பு உலக மாநாடு தாய்லாந்து நாட்டில் நடந்து முடிந்துள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகள் மதுவினால் ஏற்படு தீமைகளை உணர்ந்து அதனை தடுக்கவும் மதுத்தீமையை ஒழிக்கவும் உரிய வழிமுறைகளைக் கண்டறிவதாக இம்மாநாடு இருந்தது. 

இந்நேரத்தில் உலக அளவில் தமிழ்நாடு மட்டுமே மதுபானத் தீமையை வளர்க்கும் ஒரு தனித்தீவாக இருப்பதை எண்ணித் தமிழர்கள் வெட்கப்பட வேண்டும்!

மதுவளர்க்கும் தமிழ்நாடு

தமிழ்நாடு அரசுக்கு மதுபானத்தின் மூலமாகக் கிடைத்த வருவாய் 1997 - 98 இல் 1970 கோடி ரூபாயாக இருந்தது. 2007 - 08 ஆம் ஆண்டில் 8815 கோடியாக அதிகமானது. அதுவே 2010 - 11 இல் 15000 கோடியாக மிக அதிகமாகிவிட்டது. இப்படியாக தமிழ்நாட்டில் மதுபான விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், 'தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை தமிழ்நாட்டு அரசாங்கமே ஊக்குவிக்கிறது' என்பதுதான். இது உலகின் வேறு எந்த மூலையிலும் இல்லாதக் கொடுமை ஆகும்! காலை 10 மணி முதல் இரவு 10 வரை திறந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை இனி காலை 9 மணி முதல் இரவு 11 வரையிலும் திறக்க அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. கடந்த நிதியாண்டில் 15000 கோடி ரூபாயாக இருந்த மதுபான வருவாயை இந்த ஆண்டில் 18000 கோடி ரூபாயாக அதிகரிக்கவும் அரசு இலக்கு நிருணயித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தன் சொந்த குடிமக்களை குடியில் தள்ளி அதனால் வருவாய் ஈட்டும் கொடுங்கோல் அரசு உலகில் வேறு எங்குமே காணக்கூடியது அல்ல.

மதுவை ஒழிக்கும் உலகம்

கடந்த சில ஆண்டுகளில் உலகளாவிய மதுபானக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மே மாததில் "தீங்கான மதுப்பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தி" (WHO Global Strategy to Reduce Harmful Use of Alcohol) எனும் தீர்மானத்தை உலக நலவாழ்வு அமைப்பு நிறைவேற்றியது (இந்த தீர்மானம் உலக நலவாழ்வு அமைப்பில் முன்வைக்கப்பட முதன்மை உந்துசக்தியாக செயல்பட்டவர் இந்திய நலவாழ்வுத்துறை முன்னாள் அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்). வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்மானத்தின் மூலமாக மதுபானத் தீமையைக் குறைப்பது என்ற அதிகாரப்பூர்வமான நிலைபாட்டை உலகநாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன. அதாவது - இன்றைய நிலையில் மதுபானத்தை ஊக்குவிக்கும் அரசு உலகில் எதுமே இல்லை (தமிழ்நாட்டைத் தவிர!).

அடுத்ததாக 2011 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா.பொதுச்சபையின் 'தொற்றா நோய்கள்' உச்சிமாநாட்டில் (United Nations high-level meeting on noncommunicable disease prevention and control) தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான நான்கு முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக மதுபானத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா.அவை ஏற்றது.

2012 பிப்ரவரி மாதத்தில் தாய்லாந்து அரசாங்கம், உலக நலவாழ்வு அமைப்பு, உலக மதுபானக் கொள்கைக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து உலகின் முதல் 'மதுபானக் கொள்கை உலக மாநாட்டை' (Global Alcohol Policy Conference) தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடத்தின.

- இவ்வாறாகக் கடந்த மூன்றாண்டுகளில், மதுபானத்துக்கு எதிரான பாதைக்கு உலகமே திரும்பியுள்ளது. பொதுமக்களின் நலவாழ்வுக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் மதுபானத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக முக்கியமான தேவை என்கிற நிலைபாட்டுக்கு உலகின் எல்லா நாடுகளும் வந்துவிட்டன. அதனை ஏற்காத உலகின் ஒரே ஒரு அரசாங்கம் தமிழ்நாட்டு அரசாங்கம் மட்டும்தான். இதற்காக தமிழ்நாட்டு மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

உலக மதுபானக் கொள்கை மாநாடு 
(Global Alcohol Policy Conference)
உலக நலவாழ்வு அமைப்பின் தீங்கான மதுப்பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியை உள்ளூர் அளவிலும் தேசிய அளவிலும் செயல்படுத்த வேண்டும் என்கிற முழக்கத்துடன் உலக மதுபானக் கொள்கை மாநாடு தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் 2012 பிப்ரவரி 13 முதல் 15 வரை நடத்தப்பட்டது. உலகின் 59 நாடுகளில் இருந்து சுமார் 1500 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர் (தமிழ்நாட்டிலிருந்து பசுமைத் தாயகம் அமைப்பு பங்கேற்றது). இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மாநாட்டுப் பிரகடனம் தேசிய அளவிலும், உள்ளூர் அளவிலும், உலகளவிலும் மதுபானத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்தியது.

உலகெங்கும் ஏற்படும் மரணங்கள், ஊனங்களுக்கு மூன்றாவது பெரிய காரணமாக இருப்பது மதுபானம் தான். 2004 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி 23 லட்சம் பேர் மதுபானத்திற்கு ஓர் ஆண்டில் பலியானார்கள். குறிப்பாக 15 முதல் 29 வயது வரையிலானோரின் இறப்புக்கும் ஊனமடைவதற்கும் மதுபானம்தான் முதல் காரணமாக உள்ளது.

புற்றுநோய்கள், இருதய நோய்கள், ஈரல் பாதிப்புகள் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு மதுபானம் முக்கிய காரணமாக உள்ளது. மதுபானத்தால் பாதிக்கப்பட்டு இறப்போரில் பாதியளவினர் இத்தகைய நோய்களால் சாகிறார்கள்.

சாலை விபத்துகளுக்கு மதுபானம் முக்கிய காரணமாக உள்ளது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றுவதற்கும் காசநோய் தொற்றுவதற்கும் மதுபானம் காரணமாகிறது.

மதுபானத்தால் ஏற்படும் இழப்புகள் அளவிடமுடியாத அளவு மிகப்பெரியதாகும். தனிநபர், குடும்பம், சமுதாயம் என எல்லோருக்குமே மதுபானம் பேரிழப்பை உண்டாக்குகிறது. சிகிச்சைக்காக அதிக பணத்தை, சொத்தை இழத்தல், வேலை செய்யும் திறன் இழப்பால் வருமானம் குறைதல், வேலை இழத்தல் - என மதுபானத்தால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் பெரும் பாதிப்படைகிறார்கள். மதுபானத்தால் வறுமை அதிகமாதல், நாட்டின் மேம்பாடு தடைபடுதல் என பெரும் கேடுகள் நேருகின்றன.

எனவே, திட்டமிட்ட முறையில் மதுபானக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்தல், விலையை அதிகமாக்குதல், விளம்பரங்களை ஒழித்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் மதுபானத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மதுபானத்தைக் கட்டுப்படுத்துவதால் நலவாழ்வு, சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என பல வழிகளிலும் பெரிய பலன்கள் விளையும் - எனக் கூறியது உலக மதுபானக் கொள்கை மாநாட்டுத் தீர்மானம்.
உலக மது எதிர்ப்பு மாநாட்டில் நான். இடம்: பாங்காக், பிப்ரவரி 2012
மதுபானத்துக்கு எதிரான இந்த முதல் மாநாடு, உலகம் முழுவதிலுமுள்ள அரசுத்துறையினர், ஐ.நா. அமைப்பினர், அரசுசாரா அமைப்பினர், செயல்பாட்டாளர்கள் என எல்லா தரப்பினரையும் முதல்முறையாக ஒன்றிணைத்துள்ளது. இதன்மூலம் மதுவுக்கு எதிரான போராட்டம் புதிய வடிவெடுத்துள்ளது. இதன் அடுத்த மாநாடு 2013 ஆம் ஆண்டில் தென்கொரியா நாட்டில் கூடவுள்ளது.

இத்தகைய மாறிவரும் உலக சூழலில் தமிழ்நாடு மட்டும் குடிப்பழக்கத்தைப் போற்றி வளர்க்கும் நாடாக இருப்பது தமிழ் இனத்திற்கு பெரும் களங்கமாக அமைந்துள்ளது. இந்த நிலை நிச்சயம் மாற்றப்பட்டாக வேண்டும்.

2 கருத்துகள்:

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் சமூகப்பணி தொடர்க..

மு.இளங்கோவன்
புதுச்சேரி

siva foundation india சொன்னது…

i respect your movement


s.muthuraman
thiruturaipoondi


9150510830