Pages

வெள்ளி, ஏப்ரல் 27, 2012

ஐ.பி.எல்: கொலை செய்யும் கிரிக்கெட்!!!

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் எனப்படும் மட்டைப்பந்தாட்ட கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. நல்லதொரு விளையாட்டாக அல்லாமல், வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாவே நடத்தப்படும் இப்போட்டிகள் மதுபானத்தையும் புகைபிடித்தலையும் திணிப்பதை முதன்மை நோக்காகக் கொண்டுள்ளன. இந்த கேடுகெட்ட நிலைமை மாற்றப்பட்டாக வேண்டும். பெரும் தீமையாக உருவெடுத்துள்ள சட்டத்துக்குப் புறம்பான விளம்பரங்கள் தடுக்கப்பட்டாக வேண்டும். 
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 
மான்சன் அவுஸ் பிராந்தி விளம்பரம் 
புகையிலையும் மதுபானமும் சட்டத்துக்கு புறம்பானப் பொருட்கள். புகையிலை 18 வயதுக்கு கீழானவர்களுக்கும் மதுபானம் 21 வயதுக்கு கீழானவர்களுக்கும் விற்கப்படுவதற்கு 'சட்டப்படி' அனுமதிக்கப்படுவது இல்லை. பொது இடங்களில் புகைபிடிப்பதும் குடித்துவிட்டு பொது இடங்களில் நுழைவதும் தடைசெய்யப்பட்டதாகும். புகையிலை மற்றும் மதுபானப்பொருட்களை விளம்பரப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதகைய ஒரு சூழலில்தான், மதுபான நிறுவனங்களும், புகையிலை நிறுவனங்களும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை முறைகேடாக பயன்படுத்தி சட்டவிரோத விளம்பரத்தினை செய்து வருகின்றனர். இந்தக் கொடுமையைத் தடுக்க கிரிக்கெட்டை நேசிப்போர் முன்வர வேண்டும்.

மாறும் உலக சூழல்:

உலக தொற்றாநோய்கள் உச்சி மாநாடு

2011 செப்டம்பர் 19 அன்று நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை, மிகமுக்கியமானதொரு மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியது. "தொற்றாநோய்களைத் தடுப்பதற்கான ஐ.நா. உச்சிமாநாடு" பிரகடனத்தில் - உலகளவில் தொற்றா நோயின் பாதிப்புகள் அதிகமாவதைச் சுட்டிக்காட்டி, 1. புகையிலைப் பொருள் பயன்பாடு, 2. ஆரோக்கியமற்ற உணவு, 3. உடலுழைப்பு இல்லாமை, 4. மதுபானம் ஆகிய நான்கு தீமைகளே இதற்கு காரணம் எனக்கூறியது.

மதுபானத்தையும், புகையிலைப் பொருட்களையும் கட்டுப்படுத்துவதற்கான பன்னாட்டு உடன்படிக்கைகளை செயல்படுத்த ஐ.நா. உச்சிமாநாடு அறைகூவல் விடுத்தது. முறையே, 1. புகையிலைக் கட்டுப்பாட்டுக்கான பன்னாட்டு உடன்படிக்கை (The WHO Framework Convention on Tobacco Control - WHO FCTC), 2. தீங்கான மதுபானப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தி (Global strategy to reduce harmful use of alcohol) ஆகியவற்றை தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா. மாநாடு கூறியது. அந்த இரண்டு உடன்படிக்கைகளுமே,  மதுபானம் மற்றும் புகையிலை விளம்பரத்தை முற்றிலுமாக ஒழிக்கக் கோருகின்றன.

உலக மதுபானக் கொள்கை மாநாடு

உலக மதுபானக் கொள்கை மாநாடு 2012 பிப்ரவரி மாதத்தில் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் கூடியது. அந்த மாநாட்டின் தீர்மானம் மதுபான விளம்பரங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் எனக்கோரியது.

உலக புகையிலைக் கட்டுப்பாட்டு மாநாடு

உலக புகையிலைக் கட்டுப்பாட்டு மாநாடு 2012 மார்ச் மாதத்தில் சிங்கப்பூரில் கூடியது. அந்த மாநாட்டின் தீர்மானம் புகையிலை விளம்பரங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் எனக்கோரியது.

- எனவே, புகையிலை விளம்பரங்களும் மதுபான விளம்பரங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வ்ழிமுறைகளாகும்.

தொடரும் படுகொலைகள்

புகையிலை ஆண்டுக்கு 60 லட்சம் பேரை வயது முதிரும் முன்பே கொலை செய்கிறது. உலகில் மிக அதிகமானோரைக் கொல்லும் மிகப்பெரிய தீமை இதுதான். 2008 ஆம் ஆண்டுக் கணக்கின் படி மதுபானத்தால் உரிய வயதாகும் முன்பே கொல்லப்பட்டவர்கள் 24 லட்சம் பேர். 15 வயது முதல் 29 வயது வரையிலான இளைஞர்களின் இறப்பிற்கு முழுமுதல் காரணமாக இருப்பது மதுபானம் தான்.

இந்தியாவில் புகையிலைப் பொருட்களால் வயது முதிரும் முன்பே இறப்பவ்ர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 10 லட்சம் பேர். அதிலும் புகையிலையால் வரும் மரணம் மிகக் கொடூரமான புற்றுநோய் மரணமாக வருகிறது. 2010 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 5 லட்சத்து 56 ஆயிரம் பேர் புற்று நோய்க்கு பலியாகியுள்ளனர். இதில் ஆண்களில் 42 விழுக்காட்டினரும் பெண்களில் 18 விழுக்காட்டினரும் புற்றுநோயால் தாக்கப்படுவதற்கு புகையிலையே காரணமாகியுள்ளது. 

மதுபானத்தால் 60 வகையான நோய்கள் தாக்குகின்றன. சாலை விபத்திற்கு மதுபானமே முதன்மைக் காரணமாக உள்ளது. வன்முறை, தற்கொலை, எச்.ஐ.வி/எய்ட்சு தொற்று என ஏராளமான தீமைகளுக்கு மதுபானம் வழிசெய்கிறது.எனினும், இந்தியாவில் மதுபானத்தால் இறப்பவர்கள் குறித்த முறையான புள்ளி விவரம் இல்லை.

மதுபானம், புகையிலை விளம்பரங்கள் தொடர்வது ஏன்?

மதுபானம், புகையிலை ஆகியவற்றின் விற்பனையில் மிகப்பெருமளவு பணம் படைத்த பன்னாட்டு நிறுவனங்களும், நாட்டின் பெரும் பணக்காரர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழில்கள் தமது வாடிக்கையாளரையே வயது முதிர்வதற்குள் கொன்றுவிடுகின்றன. மறுபுறம், சுமார் 25 வயதைக் கடந்த பின்னர், வளர்ந்த வயதினர் தமது அறிவு வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வின் காரணமாக மதுவுக்கோ, புகைபிடித்தலுக்கோ பெரும்பாலும் அடிமை ஆவதில்லை.

எனவே, மதுபானம் மற்றும் புகையிலை விற்பனை அதிகரிக்க வேண்டுமெனில் சிறு வயதிலேயே வாடிக்கையாளர்களைப் பிடித்துவிட வேண்டும் என நிறுவனங்கள் சதி செய்கின்றன. அறியாத பருவத்திலேயே மது, புகை பழக்கத்தை கற்பவர் அதற்கு அடிமையாகிவிடுகிறார். வளர்ந்த பின்னரும் அந்த அடிமைத்தனத்திலிருந்து அவர் மீள முடிவதில்லை. கடைசியில் அந்த பழக்கத்தாலேயே கொலை செய்யப்படும் நிலை ஏற்படுகிறது. உண்மையில், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவோரில் பாதியளவினர் வயது முதிரும் முன்பே கொடிய நோயினால் தாக்கப்பட்டு கொல்லப்படுவார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் மான்சன் அவுஸ் பிராந்தி விளம்பரம் 
இப்படியாக, தாம் விற்பனை செய்யும் பொருள் அதன் நுகர்வோரைக் கொலை செய்யும் என நன்றாக அறிந்த பின்னரும் - மதுபான, புகையிலை நிறுவனங்கள் மிகத்தீவிரமாக விளம்பரம் செய்து வருகின்றன. அதுவும், சட்டத்தால் இந்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்ட பின்னரும் போலிப் பொருட்களைக் காட்டி, திருட்டுத்தனமாக மரைமுக விளம்பரங்களை செய்து வருகின்றனர். அதற்கு கிரிகெட் விளையாட்டு பயன்படுத்தப்படுகிறது.

சட்டத்தை ஏமாற்றும் திருட்டு விளம்பரங்கள்

புகையிலைப் பொருட்கள் அல்லது மதுபான வகைகளின் பெயரோ, வடிவமோ, வணிகச் சின்னமோ, அவற்றை நினைவுபடுத்தக்கூடிய எந்த ஒரு விளம்பரமும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த நிறுவனங்கள் அதே பெயரில், அதே வடிவத்தில் புகையிலைப் பொருட்கள் அல்லது மதுபான வகைகளை மிக எளிதில் நினைவூட்டக்கூடிய வேறொரு 'இல்லாத' பொருளின் பேரில் விளம்பரம் செய்து வருகின்றனர்.

ஐ.பி.எல் கிரிகெட்டில் அப்பட்டமான 'போலி' விளம்பரங்கள்

ஐ.பி.எல் கிரிக்கெட் அணிகளுக்கான விளம்பரதார்களில் இடம் பிடித்துள்ள மதுபான வகைகள் இதோ:

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி
மான்சன் அவுஸ் பிராந்தி விளம்பரம் 

டெக்கன் சார்ஜர்ஸ் அணி  
வொயிட் மிஸ்ச்சீஃப் வோட்கா விளம்பரம் 
இந்த அணியின் இதர மதுபான விளம்பரங்கள்:
கிங்பிஷர் பிரிமியம் பீர் விளம்பரம்
மெக்டோவல் விஸ்கி விளம்பரம்

டெல்லி டேர் டெவில்ஸ் அணி 
ராயல் சேலஞ் விஸ்கி விளம்பரம் 
இந்த அணியின் இதர மதுபான விளம்பரங்கள்:
கிங்பிஷர் பீர் விளம்பரம் 

கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 
மெக்டோவல் விஸ்கி விளம்பரம் 
இந்த அணியின் இதர மதுபான விளம்பரங்கள்:
கிங்பிஷர் பிரிமியம் பீர் விளம்பரம் 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 
ராயல் ஸ்டேக் விஸ்கி விளம்பரம் 

மும்பை இந்தியன்ஸ் அணி 
கிங்பிஷர் பிரிமியம் பீர் விளம்பரம் 
இந்த அணியின் இதர மதுபான விளம்பரங்கள்:
ராயல் ஸ்டேக் விஸ்கி விளம்பரம் 

புனே வாரியர்ஸ் இந்தியா அணி 
மெக்டோவல் விஸ்கி விளம்பரம் 
இந்த அணியின் இதர மதுபான விளம்பரங்கள்:
கிங்பிஷர் பிரிமியம் பீர் விளம்பரம் 

ராஜஸ்தான் ராயல் அணி 
கிங்பிஷர் பீர் விளம்பரம்  

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 
மெக்டோவல் விஸ்கி விளம்பரம் 
இந்த அணியின் இதர மதுபான விளம்பரங்கள்:
கிங்பிஷர் பிரிமியம் பீர் விளம்பரம்  
ராயல் சேலஞ் விஸ்கி விளம்பரம்  

கிரிக்கெட்டில் புகையிலை விளம்பரம்

ஐ.பி.எல் கிரிக்கெட் அணிகளுக்கு விளம்பரதாரராக மதுபான நிறுவனங்கள் செயல்படுவது போல, கிரிக்கெட் விளையாட்டு மைதானங்களில் புகையிலைப் பொருட்கள் விளம்பரம் செய்யப்படுகின்றன. குறிப்பாக, சைனி கைனி மற்றும் கம்லா பசந்த் ஆகிய மெல்லும் வகைப் புகையிலை வகைகள் கிரிக்கெட் திடலில் விளம்பரம் செய்கின்றன.
சைனி கைனி  புகையிலை விளம்பரம் 
கம்லா பசந்த்  புகையிலை விளம்பரம் 
இந்தியாவுக்கு வெளியில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் கூட இத்தகைய விளம்பரங்கள் வைக்கப்பட்டு, அவை தொலைக்காட்சி மூலம் இந்தியாவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. அண்மையில் ஆஸ்திரேலிய நாட்டில் இந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போட்டியின் போது - அங்கு சைனி கைனி மற்றும் கம்லா பசந்த் புகையிலை விளம்பரங்கள் இந்தி மொழியில் வைக்கப்பட்டதால், ஆஸ்திரேலிய அரசு சுமார் 35 லட்சம் ரூபாய் தண்டம் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்திற்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது. 

என்ன செய்ய வேண்டும்?

மதுபானம் மற்றும் புகையிலைப் பொருள் நிறுவனங்கள் தங்களது சதிக்கு கிரிக்கெட் போட்டியை பலியாக்குவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 

கிரிக்கெட் விளையாட்டு திருட்டு விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படாமல் தடுப்பது விளையாட்டினை மேம்படுத்த உதவும். கிரிக்கெட்டை விளையாட்டு என்று எடுத்துக்கொண்டாலும், பொழுதுபோக்கு என எடுத்துக்கொண்டாலும் - அதன் ரசிகர்கள் ஏமாற்றப்படாமலும், கொடிய நோய்களுக்கு ஆளாகாமலும் காப்பாற்றுவது ஐ.பி.எல் குழுவினரின் தார்மீகக் கடைமை ஆகும். அந்த நியாயமான கடைமையைச் செய்வதற்கு அவர்கள் முன்வர வேண்டும்.

கூடவே, மதுபான நிறுவனங்களும் புகையிலை நிறுவனங்களும் ஒரே பெயரில் மாற்றுப் பொருட்களைத் தயாரிப்பதற்கு தடைவிதிப்பதன் மூலம், மாற்றுப்பொருட்கள் மூலம் திருட்டு விளம்பரங்கள் செய்யப்படுவதை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும்.

1 கருத்து:

சிவக்குமார் சொன்னது…

மிகச் சிறநத பதிவு இதெல்லாவற்றையும் விட கிரிக்கெட்டே ஒரு போதைதான்