Pages

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

மகாத்மா காந்தியை உருவாக்கியவர்கள் இஸ்லாமியர்களா? சுவனப்பிரியனுக்கு ஒரு பதிலடி!

"இன்றைக்கு சுதந்திரம் என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது மகாத்மா எனும் தேசப்பிதாதான். அந்த மகாத்மாவை தேசப்பிதாவாக மாற்றியவர்கள் யார் என்ற உண்மையை எல்லா வரலாற்றாசிரியர்களும் சாமர்த்தியமாக மறைத்து விட்டனர்." என்று தனது பதிவில் குறிப்பிடும் சுவனப்பிரியன், மகாத்மா காந்திக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் இஸ்லாமியர்கள் என்று கூறுகிறார். (காந்திஜிக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர்கள் யார்?)

வரலாற்று உண்மை என்ன?

குசராத் மாநிலத்தில் பிறந்து லண்டனில் சட்டம் பயின்ற காந்தி, இந்தியாவில் உரிய வேலை அமையாத காரணத்தினால் 1893 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் நேட்டாலில் பணிக்கு சேர்ந்தார்.அப்போது தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள்தான், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்கியது.
தென் ஆப்பிரிக்காவில் காந்தி
தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டமே மகாத்மா காந்தியை உருவாக்கியது, அதுவே இந்திய விடுதலைப் போரின் வழிகாட்டி என்பதை காந்தியும் தெளிவாக கூறியிருக்கிறார். "காந்தி இந்தியாவில் பிறந்திருக்கலாம் - ஆனால் தென் ஆப்பிரிக்காதான் காந்தியை 'உருவாக்கியது" என்றார் அவர்.

1925 ஆம் ஆண்டு கான்பூர் காங்கிரசு மாநாட்டில் பேசிய காந்தி "தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் என்னை உங்களுக்கு (காந்தியை இந்தியாவுக்கு) அளித்ததாகக் கூறுகிறார்கள். அதனை நான் ஒப்புக்கொள்கிறேன். அது முற்றிலும் உண்மை. இப்போது என்னால் இந்தியாவுக்காக என்னென்ன பணிகளை எல்லாம் செய்ய முடிகின்றதோ, அவை எல்லாம் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவை" என்று கூறினார்

ஆக, தென் ஆப்பிரிக்காதான் சாதாரண மோகன்தாசஸ் காந்தி, மகாத்மா காந்தி ஆனதன் தொடக்கமாகும்.

மகாத்மா காந்தியை உருவாக்கியோர்: இஸ்லாமியர்கள் - தமிழர்கள்!

மதுரையில் துணி வணிகம் செய்யும் இஸ்லாமியர்களின் முன்னோர்கள்தான் தமது நேட்டால் தாதா அப்துல்லா நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக காந்தியை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பினர். அதுமட்டுமல்லாமல், காந்தி முதன்முதலில் முதல் அரசியல் இயக்கம் தொடங்க முயற்சித்தபோது அதுகுறித்து ஆலோசனைக் கேட்டது இதே அப்துல்லாவிடம்தான். அவரது முதல் இயக்கமான 'நேட்டால் இந்தியன் காங்கிரசு' இயக்கம் தொடங்கப்பட்டது தாதா அப்துல்லாவின் அலுவலகத்தில்தான். முதன்முதலில் அந்த இயக்கத்துக்கு நிதிவழங்கி காப்பாற்றியதும் அவர்கள்தான்.
நேட்டால் இந்திய காங்கிரசு இயக்கத்தில் இஸ்லாமியர்கள் (நடுவில் நிற்கும் காந்தி)
“Practice as a lawyer was and remained for me a subordinate occupation. It was necessary that I should concentrate on public work to justify my stay in Natal. Sustained agitation was essential for making an impression on the Secretary of State for the Colonies. For this purpose it was thought necessary to bring into being a permanent organization. So I consulted Sheth Abdulla and other friends, and we all decided to have a public organization of a permanent character. I recommended that the organization should be called the Natal Indian Congress, and on the 22nd May the Natal Indian Congress came into being. Dada Abdulla's spacious room was packed to the full on that day. Only he who paid five shillings monthly could be a member. Abdulla Sheth also put the list with £ 2 per month. I thought I should not stint my subscription, and put down a pound per month. This was for me beyond my means, if at all I was to pay my way.” – MK Gandhi 

இப்படியாக, மகாத்மா காந்தியை உருவாக்குவதில் எல்லாமுமாக இருந்தவர்கள் இஸ்லாமியர்களே. அதுவும் மதுரை நகரோடு தொடர்புள்ள இஸ்லாமியர்கள்.

காந்தி போராட்டக் களத்தில் இறங்கியபோது, போராட்டத்தினை வெற்றியடையச் செய்தவர்கள், வேரும் விழுதுமாக இருந்தவர்கள் தமிழர்கள். அதாவது தமிழர்கள் இல்லாமல் போயிருந்தால் - சத்தியாகிரகப் போரில் வெற்றிபெற முடியும் என்கிற நம்பிக்கையே காந்திக்கு வந்திருக்காது. இதை அவரே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.

காந்தியின் தென்னாப்பிரிக்க போரில் மிக அதிக அளவில் கலந்து கோண்டவர்கள் தமிழர்கள்தான். அப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 10 பேரில் 9 பேர் தமிழர்கள்.

"தமிழர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக மற்ற இந்திய சமூகத்தினரை தமிழர்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் இந்த நன்றிக்கடன் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தமிழர்கள் தம்மீதான புகழ் பேரொளியை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் சமூகத்திற்கு இந்தியர்கள் எப்படி இந்த நன்றி கடனை திருப்பியளிக்கப் போகிறார்கள்?

தமிழர்களிடம் இந்திய சமூகத்தினர் பாடம் கற்க வேண்டும். தமிழர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டும். தாய்நாட்டுக்காக அமைதியாக துன்பத்தை ஏற்பது எப்படி என்பதை இந்தியர்கள் தமிழர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். இதை செய்யத் தவறினால் இந்தியர்கள் தமக்குத் தாமே பழியை சுமப்பார்கள்" என 22.10.1910 அன்று இந்திய ஒப்பீனியன் இதழில் எழுதினார் காந்தி.

1915 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று பர்மாவின் ரங்கூன் நகரில் தி இந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த காந்தி "தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறைக்கு செல்லாவிட்டால் அது தமக்கு அவமானம் என தமிழர்கள் ஒவ்வொருவரும் நினைத்தனர். பொது நோக்கிற்காக சிறை செல்லாமலிருப்பது அவமானம் என்கிற இந்த மனப்பான்மை தமிழ் சமூகத்தைத் தவிர வேறு எந்த ஒரு இந்திய சமூகத்தினரிடமும் இல்லை. நான் முதன்முதலாக தமிழ் சமூகத்தினரை சந்தித்த போது அவர்களை நினைத்து பெருமிதம் அடைந்தேன். அடுத்தடுத்த சந்திப்புகளின் அவர்கள் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது. நான் என்னை வேறு எந்த ஒரு இந்திய சமூகத்தினரை விடவும் தமிழர்களுடன் தான் இணைத்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்தார் காந்தி.

மகாத்மா காந்திக்காக வன்னியர்கள் தியாகம்
ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி படம்
மகாத்மா காந்தியின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போரில் தமிழர்கள் பெருமளவில் பங்கேற்ற போதும், அதிலும் பெரும்பகுதியினராக இருந்தவர்கள் வன்னியர்கள். இன்றைக்கும் தென் ஆப்பிரிக்க தமிழ்சமூகத்தில் முதன்மையாக இருப்பவர்கள் வன்னியர்கள்தான். படையாட்சி எனும் பெயர் இப்போதும் அங்கு பிரபலமான பெயராக உள்ளது. (அண்மையில் தென் ஆப்பிரிக்க அரசாங்கத்தை சோகத்தில் ஆழ்த்திய ஒரு முக்கிய நிகழ்வு அந்நாட்டு கேபினட் அமைச்சர் இராதாகிருஷ்ண படையாட்சியின் மரணம்).

உலகின் முதல் சத்தியாகிரக தியாகி.

மகாத்மா காந்தி வடிவமைத்த மாபெரும் போராட்ட முறை சத்தியாகிரகம் எனப்படுவதாகும். இந்திய விடுதலைப்போராட்டம், நெல்சம் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டம், மார்ட்டின் லூதர் கிங்கின் அமெரிக்க கருப்பின உரிமைப் போராட்டம் என உலகின் மிகப்பெரிய போராட்டங்களின் அடிப்படை வடிவம் சத்தியாகிரகம்தான். அப்படிப்பட்ட தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போருக்காக உயிர்த்தியாகம் செய்த உலகின் முதல் தியாகி "சாமி நாகப்பன் படையாட்சி. உலகின் முதல் சத்தியாகிரக உயிர்த் தியாகம் எனும் அந்த மாபெரும் நிகழ்வு வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்டுவிட்டது.
 சாமி நாகப்பன் படையாட்சி
ஜொகனஸ்பர்க் சத்தியாகிரக காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். "இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்" என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. (இதே சிறையில்தான் காந்தியும், பின்னாளில் நெல்சன் மண்டேலாவும் அடைக்கப்பட்டனர். 'கான்சிடியூசன் மலை' என்று அழைக்கப்படும் அந்த இடம் இப்போது ஜொகனெஸ்பர்க் நீதிமன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது). அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.
ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறை
ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார். 1909 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் அவர் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

1909 ஆம் ஆண்டு சூலை 19 அன்று மாஜிஸ்ட்ரேட் மேஜர் டிக்சன் என்பவரது தலைமையில் "சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது" குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை சிறை அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்றது. இதற்கு இந்திய வம்சாவழியினர் திரண்ட ஜொகனஸ்பர்க் பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு காந்தி எழுதிய கடிதத்தில் விசாரணை அறிக்கையில் உள்ள விசயங்களே நாகப்பன் சிறைவாசத்தால் கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.

சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. அந்த இளம் வயதில் சம உரிமைக்காக தனது உயிரை தந்தார் அவர்.
 பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டம்

1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு, காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அதற்கு மூன்று நாள் முன்னதாக, சாமி நாகப்பன் படையாட்சி இறந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், சூலை 15 அன்று தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார் மகாத்மா காந்தி.

(தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடம் சிதைக்கப்பட்டது, தென் ஆப்பிரிக்காவில் 1994 இல் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 20.4.1997 அன்று மீண்டும் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம் மறுசீரமைக்கப்பட்டது. 
அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு மற்றும் இந்திய தூதரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருட்டின காந்தியும் திறந்து வைத்தனர்.)

தனது சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும்.

தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது -  நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று 14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

தனது சகோதரர் இறந்த போது -   நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல என்று 18.3.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். முதலாவதாக, 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவில்லை.

அடுத்ததாக, நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி உதவித்தொகை நினைவு நிதியை உருவாக்க விரும்பினார். அதற்காக திருமதி.வோகல் என்பவர் நிதிதிரட்ட முன்வந்த போது காந்தி அதனை வரவேற்று ஆதரித்து 9.12.1911 மற்றும் 14.6.1912 தேதிகளில்  இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் எழுதினார். அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும்  நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்றார் காந்தி. அதுவும் நடக்கவில்லை.

காந்தி இந்தியா திரும்பிய பின்னர் - இந்திய சுதந்திரப் போராட்டம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு - போராட வருவோர் நாகப்பனை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பதையில் பயணிக்க வேண்டும் என்றார் காந்தி. சென்னை (21.4.1915), மதுரை (26.3.1919), தூத்துக்குடி (28.3.1919), நாகப்பட்டிணம் (29.3.1919) என தமிழ்நாட்டில் தான் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம்  நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி.

இந்தியாவின் எரவாடா சிறையில் இருந்த காலத்தில் 'தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகிப் போராட்டம்' எனும் விரிவான நூலை எழுதினார். இந்த நூல் 1928 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அந்த நூலில் நாகப்பன் குறித்து விரிவாகக் கூறியுள்ளார் மகாத்மா காந்தி.

"நாகப்பன் ஒரு இளம் சத்தியாகிரகி. பதினெட்டு வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறையில் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்தார். அதிகாலையில் சாலை அமைக்கும் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இரட்டை நிமோனியாவால் தாக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியானவுடன் 6.7.1909 அன்று வீர மரணம் அடைந்தார்.

நாகப்பன் கடைசி நிமிடம் வரை உயிரோடிருந்த ஒவ்வொரு நிமிடமும் சத்தியாகிரகப் போராட்டத்தை மட்டுமே பேசியதாக அவரோடு இருந்தவர்கள் கூறினார்கள். அவர் ஒருபோதும் சிறைக்கு சென்றதை நினைத்து வருந்தவில்லை. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்வதை அவர் பெருமிதமாகக் கருதினார்.

நம்முடைய தராதரத்தில் பார்த்தால் நாகப்பன் எழுத்தறிவற்றவர். அவர் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலமும் சூலு (தென் ஆப்பிரிக்க) மொழியும் பேசினார். அரைகுறை அங்கிலத்தில் எழுதினார். எப்படிப்பார்த்தாலும் அவர் கற்றறிந்தவர் அல்ல. இருந்தாலும் அவரது தேச பக்தி, அவரது வலிமை, அவரது எதையும் தாங்கும் துணிச்சல், மரணத்தையே எதிர்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் அவர் எல்லாம் வல்லவராக இருந்தார்.

கற்றறிந்த கல்விமான்களால் தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போர் வெற்றிபெறவில்லை, மாறாக நாகப்பன் போன்ற வீரர்கள்தான் அதனை வெற்றியடைய வைத்தனர்" என்று எழுதியிருக்கிறார் காந்தி.

இத்தனைக்கு பிறகும் விடுதலை அடைந்த இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் வெளியே தெரியாமல் மறைந்து போய்விட்டது.

இப்படியாக - மகாத்மா காந்தியை உருவாக்கிய "இஸ்லாமியர்கள், தமிழர்கள், வன்னியர்கள்" மற(றை)க்கப்பட்டுவிட்டனர். இதைப்பற்றி பேசினால் அது "சுய மத, சுய இன, சுய சாதிப் பெருமை" என்று அடையாளப்படுத்தப்படலாம்.


தொடர்புடைய சுட்டிகள்

1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!
2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்
3. தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி
4. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

10 கருத்துகள்:

mohaaan சொன்னது…

NAGAPPAN DOES NOT HAVE ONLY ONE IDENTITY AS VANNIAR. FIRST INDIAN, THEN TAMILIAN, THEN ONLY COMES THE VANNIAR CATEGORY. HE WORKED AGAINT BRITISH AGAINST RACISM & AND HE FOUGHT FOR THE COUNTRY. DON'T TRY TO DEFAME HIM BY LABELLING AS "VANNIAR"

கவி அழகன் சொன்னது…

Nalla pathivu

suvanappiriyan சொன்னது…


திரு அருள்!

//மகாத்மா காந்தியை உருவாக்கியவர்கள் இஸ்லாமியர்களா? சுவனப்பிரியனுக்கு ஒரு பதிலடி! //

வன்னியர்கள் சுதந்திரத்திற்காக எதுவும் செய்யவில்லை என்று எனது பதிவு இருந்தால்தான் எனக்குரிய பதிலடியாக இருக்கும். சுதந்திரத்திற்காக பல இனத்தவர்களும் தங்கள் பங்கை செலுத்தியிருக்கிறார்கள். அதில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை நமது அரசும் மீடியாக்களும் திட்டமிட்டு மறைத்ததை எடுத்துக் காட்டுவதே எனது பதிவின் நோக்கம். மற்றபடி வன்னியர்களின் பங்களிப்பை நான் மறுக்க வில்லை. நன்றி.

rajamelaiyur சொன்னது…

நிறைய புது தகவல்கள் நன்றி
==============================
இன்று
இந்த செய்திகள் கண்டிப்பாக உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ...

அருள் சொன்னது…

சுவனப் பிரியன் சொன்னது…

// //வன்னியர்கள் சுதந்திரத்திற்காக எதுவும் செய்யவில்லை என்று எனது பதிவு இருந்தால்தான் எனக்குரிய பதிலடியாக இருக்கும்.// //

தலைப்பில் 'பதிலடி' என்று குறிப்பிட்டது 'சும்மா' கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான். மற்றபடி உங்களது கருத்தை நான் எந்த இடத்திலும் மறுக்கவில்லை.

இஸ்லாமியர்கள், தமிழர்கள், வன்னியர்கள் என்கிற காரணங்களுக்காக தியாகங்கள் மறைக்கப்படுவதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்பிகிறேன்.

அதிக அளவு தியாகங்களை செய்தவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதும், பெரிய தியாகங்களைச் செய்யாதவர்கள் பெருமளவு புகழப்படுவதும் அவர்கள் சார்ந்த மதம் அல்லது சாதியின் காரணமாகவே என்பதுதான் எனது கருத்து.

அருள் சொன்னது…

mohaaan சொன்னது…

// //NAGAPPAN DOES NOT HAVE ONLY ONE IDENTITY AS VANNIAR. FIRST INDIAN, THEN TAMILIAN, THEN ONLY COMES THE VANNIAR CATEGORY. HE WORKED AGAINT BRITISH AGAINST RACISM & AND HE FOUGHT FOR THE COUNTRY. DON'T TRY TO DEFAME HIM BY LABELLING AS "VANNIAR"// //

உங்களது கருத்து கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. ஆனால், உண்மை கசப்பாக இருக்கிறது.

ஒரு ஒப்பீட்டுக்கு, 'சாமி நாகப்பன் படையாட்சியையும், வாஞ்சிநாதனையும்' எடுத்துக்கொள்ளுங்கள். வாஞ்சிநாதன் செய்த கொலைக்கும் இந்திய விடுதலைக்கும் பெரிய தொடர்பு இல்லை. அப்படியே இருப்பதாக வைத்துக்கொண்டாலும் கூட - அதனை உலகின் முதல் சத்தியாகிரக உயிர்த்தியாகத்துக்கு இணையாகக் கூறமுடியாது.

ஆனால், தமிழ்நாட்டில் வாஞ்சிநாதன் அளவுக்கு சாமி நாகப்பன் படையாட்சி அறியப்பட்டிருக்கிறாரா?

தென் ஆப்பிரிக்க போராட்ட வரலாற்றையே எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு முதலில் பலியானவர் சாமி நாகப்பன் படையாட்சி, மூன்றாவதாகப் பலியானவர் வள்ளியம்மா முனுசாமி முதலியார்.

ஆனால், தமிழ்நாட்டில் 'தில்லையாடி வள்ளியம்மா' அளவுக்கு 'சாமி நாகப்பன் படையாட்சி' அறியப்பட்டிருக்கிறாரா?

வன்னியர் என்பதற்காக ஒருவரது தியாகம் மறைக்கப்பட்டால் - அங்கு சாதியைப் பேசாமல் வேறு எதனைப் பேசுவது?

விரிவாக இங்கே காண்க: http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_810.html

நம்பள்கி சொன்னது…

mohaaan சொன்னது…NAGAPPAN DOES NOT HAVE ONLY ONE IDENTITY AS VANNIAR. FIRST INDIAN...

தவறு...வரலாற்றை மாற்றாதீர்கள்.

இந்தியாவை உருவாக்கியது பட்டேல்; பல குறு நில மன்னர்களை அடிமைப் படுத்தி வெள்ளையர்கள் ஆண்டார்கள்.

Privy Purses கொடுப்பதாக சொன்ன பட்டேலின் வாக்குறுதியை இந்திரா தூக்கிப் போட்டு மிதித்தார். அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை மீறக் கூடாது என்ற காமாராஜரை ராஜாவின் கூஜா என்றனர்.

இந்தியா என்ற புடலங்காய் "உருவாக்கப்பட்ட" நாள் 1947 ஆஆ........ஆகஸ்ட் மாதம்.

மேலும் இந்தியா ஒரு நாடே இல்லை; it is a sub-continent.

எனக்கும் ஹிந்திகாரானுக்கும் அஸ்ஸாம் காரனுக்கும் என்ன சம்பந்தம்? மொழி? கலாசாரம்? உணவு வகைகள்; பண்டிகைகள்..ஒன்னும் கிடையாது. ஆப்பிரிக்கா மாதிரி பல மொழி பலவகையான மக்கள் கொண்ட கண்டம்.

ஜோதிஜி சொன்னது…

எனக்கும் ஹிந்திகாரானுக்கும் அஸ்ஸாம் காரனுக்கும் என்ன சம்பந்தம்? மொழி? கலாசாரம்? உணவு வகைகள்; பண்டிகைகள்..ஒன்னும் கிடையாது. ஆப்பிரிக்கா மாதிரி பல மொழி பலவகையான மக்கள் கொண்ட கண்டம்.

குறிப்பாக வட கிழக்கு மாநில மக்கள் பற்றி தென் இந்தியாவில் தெரிந்தவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே,

Unknown சொன்னது…

India united as a country after the death of samy nagappan padayatchi. So at the time of his death as nambalki said it was a sub continent consist of Pakistan, Bangladesh,ect.. So MR Mohan don't try to ignore truth. If u have little knowledge in history ask some one to teach u from this blog.

Arun Ambie சொன்னது…

பதிலடி என்றதும் ஏதோ மறுத்துப் பேசியிருப்பீர்கள் என்ன பார்க்கலாம் என்று வந்தேன். ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் வன்னியரின் பங்கு என்று (typical அருள்)தலைப்பு வைத்தால் போணியாகாது என்பதால் தான் ‘பதிலடி’ என்பது உங்கள் பதிலில் இருந்து புரிந்தது. தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய பூலித்தேவன், கட்டபொம்மன், மருதுபாண்டியர் முதலானோரின் வரலாறே தென்னிந்தியாவிலேயே பலருக்கும் தெரிவதில்லை. கருணாநிதியின் நூல்களை இந்தியில் மொழி பெயர்த்து வெளியிடுவது போல விடுதலைப் போரில் தமிழகத்தின் பக்ங்கையும் இந்தியில் வெளியிட்டுப் பார்க்கலாமா?
http://paarvatheyan.blogspot.in/2012/08/blog-post_19.html