Pages

திங்கள், நவம்பர் 26, 2012

ஜெனீவா பயணம்ஐநா மனித உரிமைக் குழு: சில நெகிழவைக்கும் அனுபவங்கள்!

ஐநா மனித உரிமை குழுவில் நடைபெற்ற இலங்கை மீதான காலமுறை விசாரணையை நேரில் காண நான் ஜெனீவா நகருக்கு சென்றிருந்தேன் (நவம்பர் 2012). அதில் சில அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஐநாவில் தமிழர் குரலும் பசுமைத் தாயகமும்

இலங்கையில் போர் உச்சத்தை எட்டிய 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் பலரும் அதற்கு எதிரான முன்னெடுப்புகளில் ஈடுபட்டிருந்தனர் (அதில் படுதோல்வி அடைந்தனர் என்பது வேறு விடயம்). அப்போது, இது தொடர்பாக ஐநா மனித உரிமைக் குழுவில் முறையிட வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கூறினார்கள். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. எம்.ஜி.தேவசகாயம், பியுசிஎல் அமைப்பின் திரு. சுரேஷ் ஆகியோருடன் இணைந்து இதற்காக முயற்சித்தோம். பிப்ரவரி மாதத்தில் ஐநா மனித உரிமைக் குழுவின் பத்தாவதுக் கூட்டத்தில் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்தோம். (இங்கே காண்க: A Crying Need To Protect The Rights Of Civilians In Northern Sri Lanka)  இலங்கை மீதான ஐநா மனித உரிமைக் குழுவின் சிறப்புக் கூட்டம், பாதுகாக்கும் பொறுப்புடைமை விதியை செயலாக்குதல், இலங்கையில் ஐநா மனித உரிமைக் கண்காணிப்பு, இனப்படுகொலைத் தடுப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்த அறிக்கை ஐநா மனித உரிமைக் குழுவால் அதிகாரப்பூர்வமாக விநியோகிக்கப்பட்டது.

அதுதான் ஐநா மனித உரிமைக் குழுவில் தமிழர்கள் சார்பில் எடுக்கப்பட்ட முதல் முயற்சியாக இருந்தது. அடுத்து வந்த மே மாதத்தில் இலங்கை மீதான சிறப்புக்கூட்டம் ஐநா மனித உரிமைக் குழுவில் கூட்டப்பட்டது (அதிலும் தமிழர்களுக்கு தோல்விதான்). அப்போதும் பசுமைத் தாயகம் சார்பில் அறிக்கை சமர்ப்பித்தோம். எனினும், பொருட்செலவின் காரணமாக நேரில் பங்கேற்க இயலவில்லை.

எனினும், மனித உரிமைகள் தொடர்பில் ஆர்வமுள்ள கனடா மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் இக்கூட்டங்களில் பங்கேற்க நாங்கள் வழி செய்தோம். ஐநா மனித உரிமைக் குழுக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்க அனுமதி பெற்றுத் தந்தோம்.
ஐநா மனித உரிமைகள் குழு அரங்கில் திரு. கோ.க.மணி அவர்களுடன் நான்
தற்போது ஜெனீவா சென்றபோது அவர்கள் ஒரு முக்கிய விடத்தை பகிர்ந்து கொண்டனர். 'பசுமைத் தாயகம் அளித்த வாய்ப்பின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐநா மனித உரிமைக் குழு கூட்டங்களில் பங்கேற்கத் தொடங்கிய பின்னர்தான், பன்னாட்டு மனித உரிமைத் தொடர்பான ராஜதந்திர வட்டாரங்களுடன் நேரில் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் தொடர்பும் ஏற்பட்டது. படிப்படியான அந்த நல்லுறவின் காரணமாகவும், அமெரிக்காவில் இருந்த தொடர்புகள் மூலமும், அமெரிக்க வெளியுறவுத் துறையினை அனுகி, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை 2012 மார்ச்சில் சாத்தியமாக்கினோம்' என்று அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் பசுமைத் தாயகம் அமைப்புதான் இலங்கைத் தமிழர்களுக்கு ஜெனீவாவில் முதன்மையான வழியாக இருந்தது. ஆனால், ஜெனீவா கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றதன் விளைவாக, அவர்கள் அங்கு சகஜமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதை இப்போது காண முடிந்தது. அரசு சார்பற்ற மனித உரிமை அமைப்புகள், ஐநா அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்களுடன் அவர்கள் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். 2012 மார்ச் தீர்மானத்தில் வெற்றியும் அடைந்தனர்.

உலகின் புகழ்பெற்ற சட்டப்பல்கலைக் கழகங்களில் பன்னாட்டுச் சட்டத்தை முதன்மைப் பாடமாக படித்துக் கொண்டிருக்கும் இளம் தமிழ் மாணவர்கள் இந்தப் பணியில் பகுதி நேரமாக ஈடுபட்டுள்ளனர். உலகின் பல மனித உரிமை அமைப்புகளுடன் அவர்கள் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதால், இனி பசுமைத் தாயகத்தின் மூலமாக ஐநா அவைக்குள் செல்ல வேண்டும் என்கிற தேவையும் இப்போது அவர்களுக்கு இல்லை. ஒரு நீண்ட மனித உரிமைப் பயணம் பசுமைத் தாயகத்தால் தொடங்கியது என்பது நெகிழ்ச்சியான விடயம்தானே.

திமுக பொருளாளர் ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு!

சென்னையிலிருந்து ஜெனீவா செல்ல துபாய் வழியே பயணித்த போது, துபாய் வானூர்தி நிலையத்தில் திமுக பொருளாளர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அவரது துணைவியாருடன் நின்றிருந்தார். அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். சென்னையிலிருது துபாய் சென்ற வானூர்தி தாமதமானதால், அவர் லண்டன் செல்ல வேண்டிய வானூர்தியைப் பிடிக்க முடியவில்லை. அடுத்த விமானத்திற்காக காத்திருப்பதாகக் கூறினார்.
லண்டன் நாடாளுமன்ற அரங்கில் திரு. மு.க. ஸ்டாலின், திரு. கோ.க. மணி ஆகியோருடன் நான்.
அவர் லண்டனில் கலந்துகொள்ள உள்ள நிகழ்வில் நானும் கலந்துகொள்வேன் என்று கூறினேன். அவர் எனது பயணம் குறித்தும், திரு கோ.க.மணி அவர்களின் பயணம் குறித்தும் விசாரித்தார். பின்னர் திரு. டி.ஆர். பாலு அவர்கள் அங்கு வந்த போது "இலங்கை மீதான காலமுறை விசாரணையில் பங்கேற்க செல்கின்றனர்" என்று என்னை அவரே அறிமுகப்படுத்தி வைத்தார்.

அதன் பின்னர் ஒரு வார காலம் கழித்து, லண்டன் நாடாளுமன்ற அரங்கில் திரு. கோ.க.மணி அவர்களை நேரில் சந்தித்த போது, 'துபாய் விமான நிலையத்தில் அருளைப் பார்த்தேன், நீங்கள் இங்கே வருவீர்கள் என்று கூறினார்' என்று திரு. கோ.க.மணி அவர்களிடம் திரு. ஸ்டாலின் கூறினார். ஒருமுறை வழியில் சந்தித்ததை இன்னொரு இடத்தில் ஞாபகமாகக் கூறுவது எல்லோராலும் முடியாது.

ஜெனீவாவில் ஒரு நெகிழ்ச்சி

ஜெனீவா நகருக்கு நான் சென்றடைந்த உடன், அங்கு சென்று சேர்ந்துவிட்ட தகவலை தமிழ்நாட்டில் உள்ள நண்பர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, செல்பேசி இணைப்பை வாங்குவதற்கு ஒரு கடைக்குச் சென்றேன்.

அங்கு 10 பிராங்க் (ரூ. 580) மதிப்பில் ஒரு செல்பேசிக்கான சிம் கார்டினை வாங்கினேன். அந்தக் கடையில் தமிழ் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. "இந்த 'சிம்' வேலைசெய்ய எவ்வளவு நேரம் ஆகும்?" என்று கேட்டதற்கு, அந்தக் கடைகாரர் "சுமார் ஒரு மணி நேரம் ஆகலாம்" என்று இலங்கைத் தமிழில் கூறினார்.

பின்னர், "பத்து பிரங்க் கட்டணத்தைக் கொண்டு எத்தனை நாட்கள் பேசலாம்?, இது போதுமா?" என்று நான் கேட்டேன். "நீங்கள் எத்தனை நாள் ஜெனீவாவில் இருப்பீர்கள்?" என்று கடைகாரர் கேட்டார். அதற்கு "இலங்கை மீதான் காலமுறை விசாரணைக்காக வந்துள்ளேன். நான்கு நாட்கள்தான் ஜெனீவாவில் இருப்பேன்" என்று கூறினேன்.
ஜெனீவா ஐநா அலுவலகம் முன்பு நான்
உடனே, என்னிடம் கொடுத்திருந்த சிம் கார்டினை அந்தக் கடைகாரர் திரும்ப வாங்கிக்கொண்டு, வேறொரு சிம் கார்டை எடுத்து அதனை கணினியில் செலுத்தி ஏதோ செய்தார். பின்னர் எனது கைப்பேசியை வாங்கி அதில் சிம் கார்டினை போட்டு - உடனடியாக நான் தமிழ்நாட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள வழிசெய்து தந்தார்.

அதுமட்டுமல்லாமல், நான் அந்த சிம் கார்டை வாங்க கொடுத்திருந்த பணம் 10 பிராங்கை (ரூ. 580) திருப்பிக் கொடுத்துவிட்டார். நான் "எதற்காக பணத்தை திருப்பிக் கொடுக்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "நீங்கள் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக வந்திருக்கிறீர்கள். உங்களிடம் நான் பணம் வாங்க மாட்டேன்" என்று கூறிவிட்டார். எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அவர் அதை வாங்க மறுத்துவிட்டார்.

இந்தியாவின் இரட்டை நாக்கு

மிகமுக்கிய நிகழவான இலங்கை மீதான காலமுறை விசாரணை 1.11.2012 அன்று மனித உரிமை அவையில் நடந்தது. இதில் இலங்கை அரசின் பிரதிநிதி மகிந்த சமரசிங்க 'இலங்கை மனித உரிமையை மதிக்கும் நாடு' என மிகவும் நிட்டி முழக்கி பொய்யுரைத்தார். இதனை உலக நாடுகள் எதுவும் நம்பவில்லை என்று உடனடியாக அறிய முடிந்தது.

இலங்கை மீதான விவாதத்தில் 98 நாடுகள் பேசினர். இதில் மிகச்சில நாடுகள் தவிர மற்ற எல்லா நாடுகளுமே இலங்கையைக் கண்டிக்கும் விதமாகவே பேசினர். இந்த நிகழ்வின் போது நேர்ந்த எதிர்பாராத மாற்றம் என்பது இந்தியாவின் நிலைபாடுதான்.  இலங்கைக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் 13 ஆவது சட்டத்திருத்தம், வடக்கில் தேர்தல், மனித உரிமை மீறல் குறித்த விசாரணை என பலவற்றைக் குறித்தும் சரமாரியாக இந்தியா கேள்வி எழுப்பியது. (இது குறித்த எனது பதிவு:ஜெனீவா ஐநா மனிதஉரிமை விசாரணையில் ஓர் அதிசயம்: இந்தியாவின் நம்பிக்கையளிக்கும் மாற்றம்!)

ஆனால், இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை! அடுத்த நான்கு நாட்களுக்குள் இந்திய மீண்டும் பல்டியடித்துவிட்டது. நவம்பர் 1 அன்று பிரதானக் கூட்டத்தில் பேசிய விடங்களை இந்தியாவின் சார்பில் இறுதி அறிக்கையில் சேர்க்காமல் விட்டுவிட்டது இந்தியா. இதனால், நவம்பர் 5 அன்று இலங்கை மீதான அறிக்கையை ஏற்கும் கூட்டத்தில் 'இந்தியா முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுவதை' பல நாடுகள் மறைமுகமாக சுட்டிக்காட்டி கண்டித்தன.


இனி என்ன?

இனிவரும் நாட்களில், ஐநா மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு எதிரான விவாதங்கள் சூடுபிடிக்கும். குறிப்பாக 2013 பிப்ரவரி, மார்ச்சில் நடைபெரும் மனித உரிமைக் குழுவின் 22 ஆம் கூட்டத்தில் மிகக் கடுமையான நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ளும். அந்த நேரத்தில் இந்தியா, இலங்கைக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு தமிழர்கள் அனைவரும் ஒரேகுரலில் வலியுறுத்த வேண்டும்.

அதற்கு தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளும், மக்கள் அமைப்புகளும் இப்போதிருந்தே தயாராக வேண்டும். அதுதான் உடனடித் தேவை.

3 கருத்துகள்:

புரட்சி தமிழன் சொன்னது…

பசுமைத்தாயகத்தின் சிறப்பான பனிகளை விளக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

புதுகை.அப்துல்லா சொன்னது…

கட்சி கடந்து அனைவரிடமும் நட்பாக இருக்கும் வரம் சிலருக்கு மட்டுமே வாய்க்கும்! உங்களுக்கு வாய்த்து இருக்கின்றது அருள் அண்ணா.

rajah சொன்னது…

இது வெறும் போர்குற்றம் மட்டுமல்ல இது ஒரு genocide என்று ஐ நா வில் தெளிவு படுத்த வேண்டும்..

இது இலங்கைகும் தமிழர்களுக்கும் இடையேயான 5-ம் ஈழப்போர்..இது ஒரு மறைமுக போர் அந்த போரை பசுமை தாயகம் வழிநடத்தி செல்லுமாறு விரும்பி வேண்டி கேட்டுகொள்கிறேன்..