Pages

புதன், நவம்பர் 14, 2012

குற்றவாளிக் கூண்டில் இலங்கையுடன் ஐநா: போர்குற்றத்தை ஐநா வேடிக்கைப் பார்த்தது தொடர்பான அறிக்கை பான்கி மூனிடம் அளிக்கப்பட்டது!


இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் ஈழத் தமிழர்களை பாதுகாக்கவேண்டும் என்ற கடமையிலிருந்து ஐ.நா. அதிகாரிகள் தவறி விட்டது தொடர்பாக ஐ.நா. சார்பில் நடத்தபட்ட உள்விசாரணை அறிக்கையின் சில பகுதிகள் நேற்று கசிய விடப்பட்டன.

இப்போது ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையிலான இந்த விசாரணைக் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக ஐநா பொதுச்செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது (15.11.2012). 


அந்த அறிக்கை இதோ:


விசாரணைக் குழு அறிக்கையை ஐநா பொதுச்செயலரிடம் கையளிக்கும் சார்லஸ் பெட்ரி
விசாரணைக் குழு அறிக்கையை பான்கி மூனிடம் சார்லஸ் பெட்ரி அளிக்கும் நிகழ்வில் விஜய் நம்பியார் பங்கேற்கவில்லை.
இலங்கையில் இருந்த ஐ.நா. குழுவினர் ஈழத்தமிழர்களின் உயிர்களை எவ்வளவு துச்சமாக மதித்தனர் என்பது தொடர்பாக அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் தவதாக உள்ளன என்று இது குறித்து மருத்துவர் இராமதாசு அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

“இலங்கையில் பணியிலிருந்த ஐ.நா. அதிகாரிகள் அங்குள்ள தமிழர்களை காக்கும் கடமையிலிருந்து தவறி விட்டனர்; 2008ஆம் ஆண்டில் போர் உச்சகட்டத்திலிருந்த போது, வடக்கு மாநிலத்திலிருந்து வெளியேற வேண்டாம் என ஈழத்தமிழர்கள் கண்ணீர் மல்க மன்றாடிய போதும், ஐ.நா. அதிகாரிகள் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் எண்ணத்துடன் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்; அவர்கள் அங்கேயே இருந்திருந்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை ஓரளவாவது தடுத்திருக்க முடியும்; இலங்கையில் அபாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது , அங்கு என்ன நடக்கிறதுஎன்பதை உலகிற்கு தெரிவித்து,இனப்படுகொலையை தடுக்க ஐ.நா. தவறிவிட்டது என்று ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையிலான விசாரணைக் குழு அதன் அறிக்கையில் சாட்டையடி கொடுத்திக்கிறது.

இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்த போதே அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்களை தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களான நடேசன், புலித்தேவன், ரமேஷ் உள்ளிட்டோர் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடையவரும் தகவல் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மேரி கால்வின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த ஐ.நா. உயரதிகாரி விஜய் நம்பியார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் சர்வதேச விதிகளின்படி நடத்தப்படுவார்கள் என்று விஜய் நம்பியார் உறுதியளித்திருந்த நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அப்போதே இலங்கை அரசுக்கு ஐ.நா. மற்றும் இந்திய அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டது அம்பலமானது. இந்த நிலையில் ஐ.நா.வின் தவறு இப்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
உலகில் அமைதியை நிலைநிறுத்தி, மக்களுக்கு பாதுகாப்பு அளித்தல், மனித உரிமைகளையும், மனித உயிர்களையும் பாதுகாத்தல், சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பாடுபடுதல் ஆகியவை தான் ஐ.நா. அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம். ஆனால், ஈழத்தமிழர் பிரச்னையில் இந்தக் கடமைகளில் ஒன்றைக் கூட ஐ.நா. செய்யவில்லை. மொத்தத்தில் உலகின் மனசாட்சியாக செயல்படவேண்டிய ஐ.நா. இலங்கை மற்றும் அதற்கு ஆதரவாக செயல்பட்ட வல்லரசுகளின் கைப்பாவையாக செயல்பட்டிருக்கிறது என்பது இந்த அறிக்கையின் மூலம் உறுதியாகியிருக்கிறது." என்று மருத்துவர் இராமதாசு அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். (இலங்கையின் போர் குற்றத்தை வேடிக்கை பார்த்த ஐ.நா.: ராமதாஸ்)

அறிக்கையில் உள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள்

ஐநா குழு அறிக்கையில் ஐநா அமைப்பு கடமைத் தவறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாக பி.பி.சி மற்றும் நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. (இறுதியுத்தத்தில் தமிழர்களை பாதுகாக்க தவறியது ஐ.நா: கசிந்தது விசாரணை அறிக்கை)

ஐநா அதிகாரிகளின் தகுதி, அனுபவம் போதவில்லை

இலங்கையில் ஐநா ஆற்றிவந்த பணியின் நோக்கம் யுத்தத்தை தடுப்பது என்பதல்ல, மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச்செய்வதுதான் அவர்களுடைய வேலை. ஆனால் இலங்கைத் தலைநகர் கொழும்பில் பணியாற்றிய ஐநா பணியாளர்களுக்கு அவ்வாறான உதவிகளை செய்வதற்கான தகுதிகளோ, அனுபவமோ இல்லை என்பதை இந்த ஆய்வு அறிக்கை விவரிக்கிறது.
இலங்கையின் கொடூரமான யுத்தத்தால் எழுந்த சவால்களை இவர்களால் சமாளிக்க முடியவில்லை என்றும், நியுயார்க்கிலுள்ள ஐநா தலைமையகத்திலிருந்து இவர்களுக்கு ஒழுங்கான உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

பயங்கரவாதத்தை நசுக்குவதாக சூளுரைத்துவிட்டு அரசாங்கம் முன்னெடுத்த விஷயங்களை சர்வதேச நாடுகள் பெருமளவில் கண்டும்காணாமல் இருந்துவிட்டனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஆக கட்டமைப்பு ரீதியாகவே கூட பெரும் தவறுகள் நடந்துள்ளன என்றும், இப்படி ஒன்று எதிர்காலத்தில் நடக்கவே கூடாது என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

யுத்தப் பிரதேசத்திலிருந்து ஐநா விலகியது

யுத்தப் பிரதேசத்துக்குள்ளிருந்து வெளியேற முடியாமல் ஒரு சிறு இடத்தில் பொதுமக்கள் மாட்டப்பட்டிருந்தனர். செப்டம்பர் 2008ல், ஐநா தனது பணியாளர்களை இலங்கையின் வடக்கிலுள்ள யுத்த பகுதிகளிலிருந்து விலக்கிக்கொண்டிருந்தது.

ஐநா ஊழியர்களின் பாதுகாப்புக்கு தாங்கள் உத்திரவாதம் வழங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் எச்சரித்ததை அடுத்து அது இம்முடிவை எடுத்திருந்தது. இலங்கை அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கையை ஐநா எப்போதும் எதிர்த்துக் கேள்வி கேட்கவே இல்லை என்றும், ஐநா அந்த இடத்திலிருந்து விலகியதால் யுத்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கு உதவிகள் கிடைப்பதிலும் அவர்களுடைய உயிர்கள் பாதுகாக்கப்படுவதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதென்று இந்த அறிக்கை கூறுகிறது.

கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை

இலங்கையில் மிக மோசமான ஒரு பெருந்துயர சூழல் நிலவியதாக ஐநாவின் இந்த அறிக்கை கூறுகிறது. பொதுமக்கள் கொல்லப்படாமல் தடுப்பதற்கு முயல வேண்டும் என்பதை கொழும்பிலுள்ள மூத்த ஐநா அதிகாரிகள் தங்களது பொறுப்பாகவே கருதியிருக்கவில்லை என்றும், நியூயார்க்கிலுள்ள ஐநா தலைமையக அதிகாரிகளும் அவர்களுக்கு அறிவுறுத்தல்களையோ மாற்று உத்தரவுகளையோ வழங்கியிருக்கவில்லை என்றும் இந்த அறிக்கை விமர்சித்துள்ளது.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதை வலுவான உத்திகள் மூலம் தெளிவாக கணக்கிட்டுவருகிறது ஐநா என்று அதுவே கூறினாலும், அந்த விவரங்களை ஐநா பிரசுரிக்கத் தவறியது என்பதையும் இந்த அறிக்கை விவரமாக எடுத்துரைக்கிறது.

மேலும் பொதுமக்கள் உயிரிழப்புகளில் பெரும்பான்மையானவற்றுக்குக் காரணம் அரச படையினரின் ஷெல் தாக்குதல்தான் என்பதை இலங்கை அரசின் அழுத்தங்கள் காரணமாக ஐநா தெளிவுபடுத்தியிருக்கவில்லை என்றும் இந்த அறிக்கை குற்றம்சாட்டுகிறது. ஆனால் தகவல்களை உறுதிசெய்ய முடியவில்லை என்பதால்தான் அவற்றை வெளியிடவில்லை என்று ஐநா வாதிடுகிறது.

இவையெல்லாம் ஏன் நடந்தன?

ஐநா கட்டமைப்புக்குள் ஒரு விஷயத்துக்கு மாறாக இன்னொரு விஷயத்தை விட்டுக்கொடுப்பது என்ற ஒரு கலாச்சாரம் அதிகம் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

யுத்தப் பிரதேசத்தில் மக்களுக்கு சென்று உதவ கூடுதலான இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான விஷயங்கள் பற்றி வெளியில் பேசாமல் இருந்துவிட ஐநா பணியாளர்கள் தீர்மானித்திருந்தனர் என்று இது சுட்டிக்காட்டுகிறது.
இலங்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டம் அரங்கேறியபோது ஐநா பாதுகாப்பு சபையோ, வேறு முக்கிய ஐநா நிறுவனங்களோ ஒருமுறைகூட உத்தியோகபூர்வமாகக் கூடியிருக்கவில்லை. ஐநா உறுப்பு நாடுகளுக்கு எது தெரியவேண்டுமோ அதனை வெளியில் சொல்லாமல், அவர்கள் எதனைக் கேட்க விரும்புவார்களோ அதனைத்தான் ஐநா வெளியில் சொன்னது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையைப் பிரசுரித்து அதிலிருந்து படிப்பினைகளை கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இப்படியான விஷயம் நடக்காமல் பார்த்துக்கொள்ள ஐநா முயல வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலர் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிக்கை விறைவில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 கருத்து:

கறுத்தான் சொன்னது…

அய்யா !அனைத்தும் முடிந்த பிறகு எதற்கு இந்த அறிக்கை நாக்கு வளிக்கவா ? ஏகதிபத்தியங்கள் ஒரு இன படுகொலையை நடத்தி முடித்து விட்டு அந்த ரத்த கரையை கழுவ ஐ .நா சபை அறிக்கை அது இது என்று பசப்பு கின்றன ! நாதி அற்ற அடிமை இனமான தமிழினம்கொல்பவனிடமே (இந்தியா ) காப்பாற்ற சொல்லி கதறியது தான் மிகப்பெரிய முரண் ! அதற்க்கு காரணம் இங்கிருக்கும் ஓட்டுபொறுக்கி அரசியல் வாதிகளும் தமிழ்தேசிய தலைவர்கள் என்று சொல்லி கொள்பவர்களும் தான் இன்று வரை இவர்கள் இந்தியாவின் மீது நம்பிக்கை ஊட்டியே வருகிறார்கள் ! தமிழன் தான் இந்தியாவால் அடிமை படுத்த பட்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்து அதில் இருந்து மீள்வதற்காக போராடாத வரை தீர்வு கிடையாது .