Pages

செவ்வாய், ஜனவரி 08, 2013

பொங்கல் திருநாளை முன்னிட்டு சிகரெட் வாங்கினால் தங்கக்காசு! தமிழர் பண்பாட்டை இழிவுபடுத்தும் சிகரெட் நிறுவனம்

புகைபிடித்தல் ஒரு கொடிய உயிர்க்கொல்லும் பழக்கம். இந்திய நாடு முழுவதும் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் புகைபிடித்தலால் கொலை செய்யப்படுகின்றனர். தமது வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே இறந்து போவதால் புதிய வாடிக்கையாளர்களைப் பிடிப்பதற்காக சிகரெட் நிறுவனங்கள் பலவிதமான சட்டவிரோத விளம்பர தந்திரங்களை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் "பொங்கல் திருநாளை முன்னிட்டு சிகரெட் வாங்கினால் தங்கக்காசு பரிசு" என்கிற விளம்பரத்துடன் தமிழர் பண்பாட்டை அவமானப்படுத்தும் அவலம் சென்னை நகரில் நடந்துவருகிறது.
"காவண்டர் ஸ்பெஷல் சிகரெட் - இந்த பொங்கல் திருநாளில் வெல்லுங்கள் தங்கம்' என்கிற விளம்பரம் சென்னையில் ஏராளமான சிகரெட் விற்கும் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. அந்தக் கடைகளில் "ஹாப்பி பொங்கல்" எனும் பொங்கல் வாழ்த்துடன் காவண்டர் சிகரெட் பாக்கெட் விற்கப்படுகிறது. அதற்குள் 'பொங்கல் சலுகை தங்கக்காசு, வெள்ளிக்காசு, கடிகாரம், பணப்பரிசு' என்கிற பரிசுக் கூப்பன் இணைக்கப்பட்டுள்ளது.  பரிசுக் கூப்பனில் உள்ள பரிசும் அளிக்கப்படுகிறது.

"புகையிலைப் பொருட்களை எந்த வடிவிலும் விளம்பரப் படுத்தக்கூடாது. புகையிலைப் பொருட்களுடன் இலவச இணைப்புகள் எதையும் அளிக்கக் கூடாது" என இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விளம்பரம் செய்வோர், பரிசுகள் அளிப்போர் மீது ஐந்தாண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கவும் அச்சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழ்நாட்டில் சிகரெட் நிறுவனங்கள் விளம்பரம் செய்வதும், மிகத் துணிச்சலாக பொங்கல் திருநாளுக்கு தங்கக்காசு பரிசு அளிப்பதும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த அநியாயத்தை தமிழ்நாடு அரசு இனிமேலும் வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
இந்த சட்டவிரோதச் செயலை தமிழ்நாட் அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் முன்னாள் இந்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

"சிகரெட்டுடன் இலவசப் பரிசுகள் எதையும் அளிக்கக் கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை பொங்கல் பரிசாக அளிப்பது மிகக் கொடுமையான செயல். தமிழர் பண்பாட்டை இழிவுபடுத்தும் இக்கொடிய செயல் புரிந்தோர் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

"காவண்டர் ஸ்பெஷல் சிகரெட் - இந்த பொங்கல் திருநாலில் வெல்லுங்கல் தங்கம்' என்கிற விளம்பரம் மற்றும் சிகரெட் பெட்டி மீது பொங்கல் வாழ்த்துடன் விற்பனை செய்யும் காவண்டர் சிகரெட் தயாரிப்பாளர்களான காட்ஃபிரே பிலிப் இந்தியா நிறுவனத்தினர், அதன் முகவர்கள், விற்பனையாளர்கள் மீது இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கடைகளில் ஒட்டப்பட்டுள்ள இத்தகைய சிகரெட் விளம்பரங்களை முற்றிலுமாக அகற்றவும், பொங்கல் வாழ்த்துடன் விற்பனை செய்யப்படும் காவண்டர் சிகரெட் பாக்கெட்டுகளை கைப்பற்றி அழிக்கவும் வேண்டும். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: