Pages

திங்கள், செப்டம்பர் 09, 2013

விநாயகர் சதுர்த்தியும் தமிழர்களின் வீரமும் - அறியாத தகவல்கள்!

விநாயகர் சதுர்த்தி தமிழர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பண்டிகை அல்ல. விநாயகர் தமிழ்நாட்டின் முதல் கடவுளும் அல்ல. கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் விநாயகர் தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கு முந்தைய தமிழ் இலக்கியங்களில் அப்படி ஒருவர் குறிக்கப்படவில்லை. எனினும் விநாயகர் தமிழ்நாட்டிற்கு வந்ததின் பின்னணியில் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.

பல்லவ - சாளுக்கிய போர்

தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும். 
 புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போர் - கற்பனைப் படம்
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்ம்மன், இதற்காக மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான் (கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி).
பாதாமி
இந்த போரின் தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டில் மிக முக்கியமான நிகழ்வுகள் அமைந்துள்ளன. தமிழ்நாடெங்கும் உள்ள திரௌபதி அம்மன் கோவில்கள் இதனால் ஏற்பட்டவைதான். கூவாகம் கூத்தாண்டவர் இந்த நிகழ்வோடு தொடர்புடைய சாமிதான். இன்றும் பெங்களூரு நகரின் முதன்மை திருவிழாவாக இருக்கும் 'கரகா' திருவிழா இதன் தொடர்ச்சியே. தமிழ்நாடெங்கும் கோவில் திருவிழாக்களில் நடக்கும் பாரதம் படிக்கும் பழக்கம் இதனால் ஏற்பட்டதுதான். அவ்வாறே, புலிகேசியின் பாதாமி நகரைத் தாக்கி அழித்து அதன் நினைவாகக் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டவர்தான் விநாயகரும்.

சாளுக்கிய மன்னன் புலிகேசி - வன்னிய புராணம் - கூத்தாண்டவர்

நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள். வன்னியர்கள் வாழும்பகுதிகளில் இப்போதும் பாரதம் படிக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பாரதம் படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து வந்துள்ளது. இத்தகைய தெருக்கூத்து முறைகள் வளர்ந்ததும் வன்னியர் சமூகத்தினரிடையேதான். பாரதக்கதையின் பாதிப்பால் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் திரௌபதி அம்மன் கோவில்கள் உருவாயின.
திரௌபதி அம்மன்
சாளுக்கிய மன்னன் புலிகேசியை வாதாபி சூரனாக சித்தரித்து, அவனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட வன்னிய புராணம் வன்னியர்களிடையே கதையாக பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீரவன்னிய ராசன்.

வாதாபி அரக்கனை அழிக்கப்புறப்படும் போது வீரவன்னியராசனின் மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப்படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார். வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள் கவனிக்கவில்லை.
போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இதுதான் வன்னியக் கூத்து ஆகும்.

இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர். இப்படியாக வன்னியர் புராணத்தில் உள்ள ஒரு கதை - பாரதக் கதையில் உட்புகுத்தப்பட்டு கடைசியில் அரவாணிகள் கதை ஆகிவிட்டது.
கூவாகம் கூத்தாண்டவர்
கூவாகம், கொத்தட்டை, அண்ணாமைலை நகர், தேவனாம் பட்டினம், தைலாபுரம், பிள்ளையார் குப்பம் ஆகிய கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. கோவை சிங்காநல்லூர் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. அனைத்து கூத்தாண்டவர் கோவில்களும் வன்னியர்களின் கோவிலாக உள்ளன. அவற்றில் பூசாரிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான். இக்கோவிலுக்கு வழிபட வரும் சுற்றுக்கிராம மக்கள் அரவாணிகள் அல்ல. அவர்கள் சாதாரண மக்கள். தமது வேண்டுதலுக்காக தாலி கட்டிக்கொள்கின்றனர்.
மாமல்லபுரம் திரௌபதியம்மன் 
வன்னிய புராணம், பாரதக் கதை - இவை இரண்டுமே வன்னிய மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை. பாரதம் படிப்பதற்கென்று பல மானியங்களை மன்னர்கள் அளித்துள்ளதை கல்வெட்டுகள் காட்டுகின்றன. பாரதக் கதையின் பாதிப்பால் திரௌபதை அம்மன் கோவில்கள் உருவாயின. பல்லவர்களின் மாமல்லபுர கோவில்களில் திரௌபதிக்கும் கோவில் உள்ளது. எல்லா திரௌபதியம்மன் ஆலயங்களும் வன்னியர் கோவில்களாக நீடிக்கின்றன. வன்னியர்களே பூசாரிகளாக உள்ளனர். பெங்களூரின் முக்கிய விழாவான தர்மராஜா கோவிலின் கரகா திருவிழா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
திருச்செங்காட்டன்குடி வாதாபி கணபதி
நரசிம்மவர்ம்மனின் படை கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகரைத் தாக்கி அழித்தது என்பதற்கான கல்வெட்டு இப்போதும் பாதாமி நகரில் இருக்கிறது. அங்கிருந்து கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலை திருவாரூர் அருகே திருச்செங்காட்டன்குடி எனும் ஊரில் இருக்கிறது. தமிழ்நாட்டி விநாயகரை வாதாபி கணபதி என்றும் அழைக்கின்றனர்.

இப்போது இந்துத்வா அமைப்புகளால் ஊக்குவிக்கப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கும் - வாதாபி கணபதியின் வரலாற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

(செப்டம்பர் 19, 2012 அன்று எழுதப்பட்டது)

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

அறிய முடியாத பல அரிய தகவல் தந்தமைக்கு மிக நன்றி பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

viyasan சொன்னது…

//அனைத்து கூத்தாண்டவர் கோவில்களும் வன்னியர்களின் கோவிலாக உள்ளன. அவற்றில் பூசாரிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான். இக்கோவிலுக்கு வழிபட வரும் சுற்றுக்கிராம மக்கள் அரவாணிகள் அல்ல. அவர்கள் சாதாரண மக்கள். தமது வேண்டுதலுக்காக தாலி கட்டிக்கொள்கின்றனர்.//


எனது வலைப்பதிவிலும் இதைப்ப்பற்றி ஒரு பதிவு உள்ளது. :)

உண்மையில் கூவாக‌ம் கூத்தாண்ட‌வ‌ர் கோயிலுக்கும் திருநங்கைகளுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அந்தக் கோயிலில் ஆண்க‌ள், பெண் வேட‌மிட்டு கூத்தாண்ட‌வ‌ருக்கு நேர்த்திக் க‌ட‌ன் செலுத்துவ‌தும் அடுத்த‌ நாள் த‌ம‌து தாலியை அறுத்து ஒப்பாரி வைப்ப‌தும் வ‌ன்னிய‌ர் அல்ல‌து பள்ளி சாதி ம‌க்க‌ளின் வ‌ழ‌க்க‌மாகும். அது ம‌ட்டும‌ல்ல‌ கூத்தாண்ட‌வ‌ர் கோயில் வ‌ன்னிய‌ர்க‌ளுக்குச் சொந்த‌மான‌து. ம‌காபார‌தக் க‌தைக‌ளைப் பார‌ம்ப‌ரிய‌மாக‌ அந்த‌க் கோயிலில் வாசிப்ப‌தும் வ‌ன்னிய‌ர்க‌ள் தான்.

http://viyaasan.blogspot.ca/2013/05/blog-post.html