தமிழக அரசியலின் மிகப் பெரிய சக்தியான மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள், தங்களை விட சக்தி வாய்ந்த மிக மிகப்பெரிய சக்தியான நடிகரை அவரது அலுவலகத்துக்கு தேடிச் சென்று சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக சந்திக்கச் சென்ற தலைவர்கள் கற்பனைக் குதிரையை கயிற்றைப் பிடிக்காமலேயே ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் செல்வதற்காக கோயம்பேடு அலுவலகத்தின் கதவு திறந்ததை ஏதோ கூட்டணிக் கதவே திறந்து விட்டதாகக் கருதி தாழ்ப்பாள் போடாமலேயே தன்மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்.... தாங்கள் அனைவரும் மீனை பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் மண்புழுக்கள் என்பதை அறியாமலேயே!மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள 4 கட்சிகளுமே தாங்கள் தான் கொள்கைக் கோமான்கள் என்று கூறிக்கொள்வார்கள். ஆனால், இடதுசாரிக் கட்சிகளின் கொள்கை என்பது எப்படியாவது, யார் காலிலாவது விழுந்தாவது 8 முதல் 10 எம்.எல்.ஏக்களை பெற்று விட வேண்டும் என்பது தான். விடுதலை சிறுத்தைகளுக்கு கொஞ்சம் பணமும், கொஞ்சம் இடமும் வாங்கி விட வேண்டும் என்பதை விட சிறந்த கொள்கை இருக்க முடியாது.
புரட்சிப் புயலுக்கோ நமக்கு இரு கண்கள் போனாலும் பரவாயில்லை... அடுத்தவர்களுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்பது தான் கொள்கை. சரி... அவை கிடக்கட்டும். அவர்களுக்கு கொள்கை இருப்பதாகவாவது கூறிக் கொள்கிறார்களே. அப்படிப்பட்ட 4 கட்சிகளும் தஞ்சம் தேடி சென்றிருப்பது யாரைத் தெரியுமா? தனது கட்சியின் கொள்கைகள் என்னவென்று தனக்கே தெரியாது என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடும் தலைவர் தலைமையிலான கட்சியிடம் தான். தே.மு.தி.க. தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும் இதுவரை அந்த கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு அந்தக் கட்சி கொள்கைக் குன்று!
காற்றில் பறந்த குப்பை கோபுரத்தில் அமர்ந்ததைப் போல கடந்த தேர்தலில், தி.மு.க. மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ஆனவர் விஜயகாந்த். நான்கரை ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அவர் இதுவரை நான்கரை நாட்கள் கூட சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றதில்லை. அவைக்கு சென்ற நாட்களில் கூட நாக்கைத் துறுத்திக் காட்டியதையும், ‘ஒண்டிக்கு ஒண்டி வாங்கடா’ என்று சவால் விட்டதையும் தவிர வேறு எதையும் செய்ததில்லை.
சரி.... அவைக்கு உள்ளே நடந்ததை விடுங்கள்... வெளியில் அவர் சாதித்தது என்ன? சென்னை விமான நிலையத்தில் மூத்த பத்திரிக்கையாளரை தாக்கியது, தில்லி பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ‘‘அப்படியே... மைக்கை தூக்கி அடிச்சிடுவேன்’’ என்று மிரட்டியது, வெள்ள பாதிப்பு பற்றி கேட்டபோது, அதுபற்றியெல்லாம் சென்னைக்கு போய் தான் சொல்லுவேன் என்று சென்னை விமான நிலையத்தில் நின்று கொண்டே கூறியது, சிங்கப்பூரில் தமது மகன் நடித்த சகாப்தம் படப்பிடிப்புக்காக சென்று திரும்பியவரிடம் அரசியல் நிலவரம் பற்றி கேட்ட போது, ‘‘நான் ஒரு மாதமாக பத்திரிகைகளே படிக்க வில்லை. தமிழ் தொலைக்காட்சி செய்திகளும் பார்க்கவில்லை’’ என்று பொறுப்பாக பதில் கூறியது, நடிகை மஞ்சுளாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்று விட்டு, ‘‘அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த நன்றிகள்’’ என்று உளறியது என எதிர்க்கட்சித் தலைவராக ஆற்றிய பணிகளுக்கு ஏராளமான உதாரணங்களைக் கூறலாம்.
இன்னொரு பக்கம் கொள்கைக்காகவே வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் இடதுசாரிகள், நேற்று வரை முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பது ஜனநாயக விரோதம் என்று முழங்கி வந்தனர். இன்றோ, மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளர் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று கோயம்பேடு அலுவலக வளாகத்தில் நின்று ஆசை காட்டியிருக்கின்றனர். அதற்கு முன்பே முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட விஜயகாந்தின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவோம் என்று இந்து நாளிதழ் மூலம் தூது விட்டார். அவர்களைப் பொறுத்தவரை அன்புமணி இராமதாசை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் அது ஜனநாயக விரோதம்... அதுவே விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் அது சீன சித்தாந்தத்தை விட சிறந்த கொள்கை. அய்யா இடதுசாரிகளே... உங்கள் கொள்கைக் கோவணம் கிழிந்து தொங்கி நீண்ட நாட்களாகி விட்டதை உணர்ந்து கொள்ளுங்கள்.
தம்மை சந்திக்க வந்த பாரதிய ஜனதா தலைவர்களை ஒரு மணி நேரம் காக்க வைத்த நடிகர், உங்களை வழியனுப்ப வாசல் வரை வந்ததை நினைத்து நீங்கள் புளங்காகிதம் அடையாதீர்கள். அது உங்களுக்கான மரியாதை அல்ல. தனக்கு எவ்வளவு மரியாதை தேவை என வேறு சிலருக்கு தெரிவிப்பதற்கான சிக்னல்.
நடிகர் விஜயகாந்த் வேறு சில இடங்களில் இருந்து வேறு சிலவற்றை எதிர்பார்க்கிறார். அவை கிடைக்க வேண்டுமானால் தனக்கு அதிக கிராக்கி இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும். ஜப்பானில் சாக்கி சான் கூப்பிட்டாக.... அமெரிக்காவில் மைக்கேல் சாக்சன் கூப்பிட்டாக... இங்கிலாந்தில் இருந்து எமி ஜாக்சன் கூப்பிட்டாக... என்கிற ரேஞ்சில் சீன் கேட்டால் நடிகர் எதிர்பார்ப்பது நடக்கும்.
ஒரு பெரிய மீனை பிடிப்பதற்கான தூண்டிலில் குத்தப்பட்டிருக்க புழுக்கள் தான் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள். இந்த சந்திப்புக்கு பிறகு மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.ஆனால், அது உற்சாகத்தால் அல்ல... தூண்டிலில் குத்தப்பட்டதால் ஏற்பட்ட வலியால் தான்.... என்பது விரைவில் புரியும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக