ஆனால், காலம் மாறிவிட்டது. ரசிகர்களின் செயல்களை கடுமையாக விமர்சித்த பத்திரிகையாளர்களில் சிலரே இப்போது நடிக அரசியல்வாதிகளை புகழ்ச்சி என்னும் பீரும், பாராட்டு என்னும் பாலும் கலந்து அபிசேகம் செய்து கொண்டிருக்கிறார்கள் வெட்கமில்லாமல்!
செய்தியா? கற்பனையா?
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜயகாந்த் தான் கிங் மேக்கர் என்றும் அவரது கூட்டணிக்காக மற்ற கட்சிகள் தவம் கிடக்கிறார்கள் என்றும் பாரம்பரியமிக்க ஆங்கில நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. கேப்டனுக்கு பல வாய்ப்புகள் இருந்தாலும் தி.மு.கவுடன் சேர வேண்டும் என்பது தான் அவரது கட்சியினரின் விருப்பமாக இருக்கிறது என்று அந்த நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
விஜயகாந்த் கட்சியில் யாருக்கு திமுகவுடன் சேர விருப்பம் இருக்கிறது? என்பது தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அதைக் கட்சித் தலைமையிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் இந்த பத்திரிக்கையிடம் வந்து சொன்னார்களா? என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. பல பத்திரிகையாளர்கள் சில அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகளாக மாறி விட்ட நிலையில், அவர்கள் தங்களின் விருப்பங்களை கட்சிகளின் விருப்பங்களாக எழுதுவதாகவே தோன்றுகிறது.
ஆனால், விஜயகாந்த் தமது முடிவு என்ன? என்பது குறித்து எதுவுமே சொல்லாத நிலையில் அதைப் பற்றி கற்பனையாக, விஜயகாந்த் தான் தமிழகத்தை காக்க வந்த தடவுள் என்கிற ரீதியில் எழுதுவது ஊடக தர்மமா? என்பதை பத்திரிகைகள் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆலையில்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை
விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க டிமாண்ட் இருப்பது உண்மை தான். அது ஆலையில்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் தவிக்கும் சில கட்சிகள், தங்களுடன் கூட்டணி அமைக்க பெரிய கட்சிகள் எதுவும் முன்வராத நிலையில் விஜயகாந்த் கட்சியையாவது சேர்த்துக் கொள்ளலாம் என நினைப்பது தான் இதற்கான முக்கியக் காரணம்.
எப்போதுமே தேவை அதிகரிக்கும் போது அதற்கேற்ற இருப்பு இல்லாவிட்டால் விலை அதிகரிக்கும். அது தான் தமிழகத்தில் இப்போது நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 4 அணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது ஐந்தாகக் கூட மாறலாம். இத்தகைய சூழலில் கூட்டணியில் சேரத் தயாராக இருக்கும் கட்சிகள் ஒன்றிரண்டு தான். அவற்றில் சில கட்சிகள் சில அணிகளில் சேர முடியாது. காரணம் கொள்கைகள் தடுக்கும். ஆனால், எந்தக் கட்சியுடனும் சேரத் தயாராக இருக்கும் கட்சி தே.மு.தி.க. தான். அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சிகளுக்கும் கொள்கைத் தடை இருக்காது.
ஒருவேளை தேசியக் கட்சிகளுடன் தான் கூட்டணி என சில கட்சிகள் முடிவு செய்தால் திராவிடக் கட்சிகளுக்கு கிராக்கி கிடைக்காது அல்லது திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என்று சில கட்சிகள் முடிவு செய்தால் தேசியக்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்காது. இப்படி எந்த முடிவு எடுத்தாலும் தமது கட்சியுடன் கூட்டணி அமைக்க முன்வர வேண்டும் என்பதற்காகத் தான் தமது கட்சியில் தேசியம், திராவிடம் ஆகிய இரு வார்த்தைகளும் வரும்படி பெயர் வைத்திருக்கிறார் நமது புத்திசாலிக் கேப்டன்.
ஊடக அதர்மம்
ஒருவேளை விஜயகாந்த் சேரும் அணி வெற்றி பெறுவதாக (கடல் வற்றினாலும் இது நடக்காது என்பது வேறு விஷயம்) வைத்துக் கொண்டால் கூட எந்த கொள்கை அடிப்படையில் அந்த கூட்டணி அமைகிறது என்பது பற்றி ஆராய வேண்டியது, அதில் உள்ள சந்தர்ப்பவாதத்தை அம்பலப்படுத்த வேண்டியதும் ஊடகங்களின் கடமை.
வாழ்க... கோமாளிகளுக்கு கொடி பிடிக்கும் இதழியல் தர்மம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக