Pages

சனி, ஜனவரி 30, 2016

முஸ்லிம்களுக்கு ஓர் எச்சரிக்கை: அமைதிக்கு வேட்டு வைக்கும் மத அமைப்புகள்!

தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை உருவாக்கும் வேலைகளை சில அமைப்புகள் மேற்கொண்டுள்ளன. அவை குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் நடத்தும் 'ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்காக' எல்லை மீறி அடுத்தவர் மத நம்பிக்கைகளை சீண்டும் வகையிலான விளம்பரங்களை சில இடங்களில் மேற்கொள்கின்றனர். இதனை பயன்படுத்தி, சில உள்நாட்டு தீவிரவாத அமைப்பினர் போலியான விளம்பரங்களையும் வாட்ஸ்அப் செய்திகளையும் வெளியிட்டு வருகின்றனர். 

இதன் உச்சகட்டமாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களே மோசடி விளம்பரங்களை பயன்படுத்தி விஷமத்தனமான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவற்றின் பின்னணி குறித்து பார்ப்போம்:

1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்: ஷிர்க் ஒழிப்பு மாநாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் "ஷிர்க் ஒழிப்பு மாநாடு" என்கிற ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். இஸ்லாமிய மதத்திற்குள் மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் இயக்கம் இது என்றே நான் கருதுகிறேன்.
 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' உண்மை விளம்பரம்
ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் அவர்களது மதத்தில் சீர்திருத்தம் கேட்பதில் தவறேதும் இல்லை. (அது சரியா தவறா என்பது அந்த மதத்தின் உள் விவகாரம்). 'சட்டம் ஒழுங்கை பாதிக்கும் நிலை இல்லாதவரை' - அதில் மற்ற மதத்தினர் தலையிட வேண்டிய தேவையும் இல்லை.

2. பா.ஜ.க.,வினரின் மோசடி பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் முஸ்லிம் மதத்தினருக்கான "ஷிர்க் ஒழிப்பு மாநாடு" என்பதை இந்துக்களுக்கு எதிரான "சிலை ஒழிப்பு மாநாடு" என்று சில விஷமிகள் பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். (இது இஸ்மியர்களுக்கு எதிரான அமைப்பின் பிரச்சாரமாக இருக்கலாம்).

"ஷிர்க் ஒழிப்பு" என்பது "சிலை ஒழிப்பு" என்று மோசடியாக கிராஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளதை படத்தில் காண்க.
 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' போலி விளம்பரம்
தவ்ஹித் ஜமாத்தினரின் விளம்பரங்கள் போன்றே மோசடியாக விளம்பரம் தயாரித்து, அவற்றில் இந்து கடவுளர் சிலைகள் மீது 'தவறானவை' என குறியிட்டுள்ளனர். 

இந்த மோசடியான கிராபிஃக்ஸ் படத்தை உண்மையானது போன்று காட்டி, இதனை பாஜகவின் முன்னணி நிர்வாகிகளே விளம்பரமும் செய்கின்றனர். 

பாஜகவின் செய்தித் தொடர்பாளரான கே.டி. ராகவன் இந்த மோசடி விளம்பரத்தை அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கே.டி. ராகவன் வெளியிட்டுள்ள படம் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் விளம்பரம் அல்ல. அது மோசடியான கிராபிஃக்ஸ் படம்.
போலி விளம்பரத்தை உண்மை போல காட்டும் பாஜகவின் கே.டி. ராகவன்
ஆக, முஸ்லிம்களின் மாநாடு குறித்த போலியான மோசடி விளம்பரங்களை பாஜகவினர் அதிகாரப்பூர்வமாகவே வெளியிட்டுள்ளனர்.

3. எல்லை மீறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

எந்த ஒரு மதத்தினரும் அவர்களது மத நம்பிக்கைகள் குறித்து, அவர்களுக்குள் மேற்கொள்ளும் பிரச்சாரங்களுக்கு ஒரு எல்லை இருக்க வேண்டும்.

ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்பதற்காக வைக்கும் விளம்பரங்களில் "சிலைகள், தேர், விபூதி, சூடம், விளக்கு, பாலாபிஷேகம், அர்ச்சனை, திதி" - என வரிசையாக இந்து மத வழிபாடுகளை குறிப்பிட்டு - அதையெல்லாம் முஸ்லிம்களின் தர்காவில் செய்வதாக குறிப்பிடுகிறார்கள். இதெல்லாம் இழிவான செயல் என்றும் கூறுகின்றனர்.
இந்துமத்தை சீண்டும் தவ்ஹீத் ஜமாத்தின் உண்மை விளம்பரம்
பிற மதங்களின் வழிபாடு குறித்து முஸ்லிம்கள் விளம்பரம் செய்யும் தேவை எதுவும் இல்லை. தன்னுடைய மதத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காக, பிற மதத்தின் 'ஆத்மார்த்தமான' நம்பிக்கைகளை எடுத்துக்காட்டாக குறிப்பிடுவது - மாற்று மதத்தினரை இழிவுபடுத்தும் செயலாகும்.

இந்திய அரசியல் சாசனம் எல்லா மதங்களையும் சரிசமமாக ஏற்கிறது. எனவே, இது ஒரு இஸ்லாமிய நாடு இல்லை என்பதை 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' நடத்துகிறவர்கள் உணர வேண்டும். இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்பது இஸ்லாமிய மதத்தின் நம்பிக்கையாக இருக்கலாம். அதற்காக மற்ற மதத்தின் நம்பிக்கைகளை இழிவாக பிரச்சாரம் செய்வதை ஏற்க முடியாது!

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எச்சரிக்கை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் எல்லை மீறும் போக்கினை தடுக்கும் கடமை அனைத்து முஸ்லிம்களுக்கும் இருக்கிறது. 

இந்துக்களை பொறுத்தவரை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் எல்லை மீறும் விளம்பரங்களை எதிர்க்கும் அதே நேரத்தில், முஸ்லிம்கள் போன்று வேடமிட்டு கட்டுக்கதைகளை பரப்பும் சதிகாரர்களின் போலி விளம்பரங்களை நம்பாமல் விழிப்போடு இருக்க வேண்டும்.

மதக்கலவரங்களுக்கு தமிழ்நாட்டில் இடமளிக்க மாட்டோம் என உறுதி ஏற்போம்.

கருத்துகள் இல்லை: