Pages

வியாழன், மார்ச் 17, 2016

பெண்களுக்கு எச்சரிக்கை: தினமலரின் நாடகக் காதல் கட்டுரை

அவசரம் வேண்டாம் பெண்களே!
சமீபத்தில், காவல் துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, தமிழ்நாட்டில் நடக்கும், 'விவகாரக் கொலை'கள் பற்றிக் கூறினார்.

அதில் ஒன்று இதோ: இரண்டே அறைகள். ஒன்று ஹால்; மற்றொன்று சமையலறை. அந்த இரண்டும் கூட, குண்டும், குழியுமாக. அதைச் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம் அல்லவா! அந்தப் பழக்கத்தை ஏனோ கைகொள்ள வரவில்லை. ஹாலின் ஒரு மூலையில், 'டிரங்க்' பெட்டி, அதன் மேலே, இன்னது தான் என்று சொல்ல முடியாத வகையில், ஒரு மூட்டை. அதன் மீது, சாற்றி வைக்கப்பட்ட பாய்; இந்த கும்பலினுாடே, உறை அற்ற, தலையழுக்கு ஏற, இனியும் இடமில்லை என்ற வகையில், முழு நாற்றத்துடன் தலையணைகள், நான்கைந்து!

'இப்படியே எத்தனை காலம் வாழ்வது? நமக்கு மட்டும், இப்படி தான் வாழ வேண்டும் என விதிக்கப்பட்டிருக்கிறதா? அப்பா கூலி வேலைக்குப் போயி மாரடிக்கிறாரு; அம்மா கல்லுடைக்கிறாங்க; இதிலிருந்து இவங்க மாறணும்... இல்லேன்னா, நான் மாத்தணும்... ஏய்... எனக்கு யாராச்சும் ஐடியா சொல்லுங்கடா...'

- இப்படியான பேச்சுடன் படியிறங்கும் மகன், 'தலைவரிடம்' அழைத்துச் செல்லப்படுகிறான்; அவர், அவன் காதில் கிசுகிசுக்கிறார்.

தினமும் ஒரு கூலிங் கிளாஸ்; நவீன வடிவமைப்பில் ஷர்ட்; ஜீன்ஸ் பேன்ட்; பஜார் கடையில் வாங்கிய, மனதை மயக்கும் சென்ட். அனைத்தும் வாரத்திற்கு ஒரு, 'ரவுண்டு' வரும். இதையெல்லாம் தாண்டி, தனியார் வங்கியில் தவணை முறையில் வாங்கிய, 'பவர் பிரேக்' உள்ள ஒரு, 'பைக்!' இந்த இத்யாதிகளுடன், 'குறிப்பெடுக்கப்பட்ட' பெண்ணின் கல்லுாரி வாசலுக்குச் செல்கிறான்; தவம் கிடக்கிறான்.

'மற்றவர்களை விட வித்தியாசமாய் இருக்கிறாய் நீ; உன் உடையிலேயே உன் அடக்கம் தெரிகிறது; ஏன் முகம் வாட்டமாய் இருக்கு? பசிக்கிறதா... வா ஓட்டலுக்குப் போவோம்...'

- மெத்தையில் படுத்துறங்கி, வேளைக்கு ஒரு ஆள் வேலை செய்ய என வசதியாய் வாழ்ந்தாலும், தன் சின்ன சின்ன சோகங்களையும், உடல் உபாதைகளையும் பகிர்ந்தபடி தோள் சாய, தாயோ, தந்தையோ முன் வராத நிலையில், மந்திரம் ஓதுவது போல், தினமும் இப்படி ஒரு, 'சரக்கை' இவளிடம் அவிழ்த்து விட்டால், மயங்காமல் இருப்பாளா; அதுவும் மேற்படி, 'விஷுவல் குவாலிபிகேஷன்'களோடு திரியும் ஆணிடம்! மயங்குகிறாள்; 'எல்லாம்' முடிகிறது.

'கல்யாணம் கட்டிக்கலாமா?' - இவன்.
'காத்திருக்கிறேன்! ஆனால் பேரன்ட்ஸ்...' - இழுக்கிறாள் இவள்.
'கட்டிய துணியோடு கிளம்பி வா...' - தைரியம் கொடுக்கக் கொடுக்க, இவனை நம்பி, தாய் - தந்தைக்கு கம்பி.மணக்கோலத்தில் நுழைகிறாள், இரண்டறை கொண்ட வீட்டில்! சுற்றி முற்றி பார்க்கிறாள்; தலை சுற்றுகிறது. ஊண் உறக்கம் எல்லாமே, அந்த ஹாலில் தான் என்பதற்கு சாட்சியாய், அவளின் இள வயது மைத்துனர், ஒரு ஓரத்தில் படுத்துக் கிடக்கிறான்.

சோறு சாப்பிட அமர்கிறாள்; ரேஷன் அரிசி. நேற்று வைத்த கருவாட்டுக் குழம்பு நெஞ்சை இழுத்தாலும், அதைத் தாண்டி ஏதோ பிசைகிறது மனதை... அம்மா வைக்கும் மீன் குழம்பும், நெத்திலி வறுவலும் நினைவிற்கு வந்து செல்கின்றன! கண் கிறுகிறுக்க, அரை வயிற்றுணவுடன் அன்றைய பொழுதைக் கழிக்கிறாள். 'எங்கேங்க துாங்குறது?' எனக் கேட்ட இவளுக்கு, மற்றொரு மூலையில் பாய் விரிகிறது; தலையணையும் விழுகிறது!

அதில் தலை சாய்க்க மனமில்லாமல், கையை முட்டுக் கொடுத்து, கண் மூடுகிறாள்...
இப்போது தான் உணர்கிறாள் அம்மா வீட்டின் சொர்க்க வாழ்க்கையை... இனி வாய் பேச முடியாது. பல குடித்தனங்களுக்கும் பொதுவாக ஒரு குளியலறை; கழிப்பறையும் அப்படியே! கண்களில் நீர் முட்டுகிறது; வாய் பேச முடியவில்லை! இரண்டு நாள், மூன்று நாள் செல்ல, வீட்டு வாயிலில் ஆரவாரம். 'வெளியில் செல்லாதே...' என, புகுந்த வீட்டினரும், கணவரும் எச்சரிக்கின்றனர். எட்டிப் பார்த்தால், ஏழெட்டு ஆட்கள், வெட்டுக் கத்தியுடன்; அரவமற்று, தலையை உள்ளிழுத்துக் கொள்கிறாள். 'ஏய்... வௌில வராம போயிருவீங்களா ரெண்டு பேரும்...' என எச்சரித்துச் செல்கின்றனர்.

'வீட்டைச் சுத்தம் செய்ய, துடைப்பம் இல்லை, துணி சோப்பு இல்லை, பாத்ரூமுல இருக்கும், கொழ கொழ பக்கெட்டை துாக்கிப் போட்டுட்டு வேற ஒண்ணு வாங்கணும்... என்னங்க, நைட்டு கடைக்கு போவம்... பகல்ல தானே மிரட்டுறாங்க...' என்கிறாள்.கணவன், 'ஓகே' சொல்ல, படியிறங்குகிறாள். ஐந்து நிமிடம், ஐந்தே நிமிடம்... அப்பகுதியைத் தாண்டுவதற்குள், கணவனின் தலை தனியே, உடல் தனியே விழுகின்றன. தமிழகமே அரண்டு போகிறது. 'ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் செஞ்சா இப்படி தான்; கவுரவக் கொலை; கொலை செய்யிறவங்களை போலீசும் கண்டுக்கறதில்லே...' - அரற்றுகின்றனர் மக்கள்.

மற்றொன்று சம்பவம் இதோ:

கிட்டத்தட்ட இதே போல் திருமணம். இது முடிவதற்கு முன்பே, 'மற்ற எல்லாம்' முடிந்து போவதால், புகுந்த வீடு வந்த சில நாட்களிலேயே, மசக்கை. 'அம்மாடி... நிறைய செலவாகும் போலிருக்குமா... நீ என்ன செய்யிறே... விஷயத்தை உங்கப்பாகிட்டே பக்குவமா சொல்லி, கொஞ்சம் பணம் கேட்டு வாங்கிட்டு வா...'கணவனின், 'அன்பான' உத்தரவுக்கு அடிபணிகிறாள் அவள். அப்பாவைத் தேடிச் செல்கிறாள். சமயம் பார்க்கும் அப்பா, 'ரெண்டு கோடி கொடுக்குறேன்... என் மகளை விட்டுடு...' என, பேரம் பேசுகிறார்; பணம் கை மாறுகிறது; மகளுக்கு வீட்டு சிறை.தப்பிக்கும் மகள், கணவனைத் தேடி ஓடி வருகிறாள். 'மீனு மறுபடி, தானா மாட்டுது பா நம்மகிட்டே...' என்றெண்ணி, மனைவியிடம் மீண்டும் துாண்டில் போடுகிறான் கணவன். மீண்டும் பணப் பரிமாற்றம் நடக்கிறது. இம்முறை ஐந்து கோடி. அவ்ளோ தான்... விடு ஜூட் வேறு கண்டத்துக்கு!குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றிய மிதப்பில், பெண்ணின் தந்தை!

இறுதியில் அந்தப் பெண்கள், தன் சுயத்தை இழந்து, சுய கவுரவத்தை இழந்து, இரண்டாம் தாரமாய், யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழும் நிலை ஏற்படுகிறது.இப்படி ஏராளமான கோணங்களில், சம்பவங்கள் நடக்கின்றன.

- இப்படி சொல்கிறார், அந்த காவல் துறை அதிகாரி.

ஜாதிகளைப் பழி வாங்க, 'ஏற்பாடு' செய்யப்படும் திருமணங்களா, குறுக்கு வழியில் பணக்காரன் ஆக ஆசைப்பட்டு செய்யப்படும் திருமணங்களா என்பது பற்றி எல்லாம் இங்கே விவாதம் செய்ய விருப்பமில்லை. 'ஏட்டுப் படிப்பில் எட்டுக் கணக்குப் போடும் சாதுர்யத்தை மட்டும் வளர்த்துக் கொள்கின்றனரே; எதிர்காலத்தை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள, சற்றே முன்னோக்கிப் பார்த்து, சுற்றி இருக்கும் ஆபத்தை உணர்வதில்லையே...' என, மனம் வேதனை கொள்கிறது!

அவசரப்படாதீர்கள் பெண்களே!

தொடர்புக்கு: chennaicity@dinamalar.in

தினமலர் 16.03.2016

http://www.dinamalar.com/news_detail.asp?id=1479325

தினமலர் கட்டுரையில் நாம் முரண்படும் கருத்துகள்:

ஏழை பையன் - பணக்கார பெண் என்பதாக, பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலையை குற்றம் சாட்டுவது போல, இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் ஏற்கக் கூடியவை அல்ல. 

குறிப்பிட்ட சாதி, மதம் அல்லது குறிப்பிட்ட பொருளாதார நிலையில் உள்ள பெண்களை வீழ்த்த வேண்டும், பணம் பறிக்க வேண்டும் என்பதான நோக்கங்களே தவறானவை. மேலும், திருமணத்துக்கு முன்பாக கல்வியை முடிப்பதும், பொருளாதார தற்சார்பை ஏற்படுத்திக்கொள்வதும் மிக அடிப்படையான தேவைகள் ஆகும்.

கல்வி, வேலையுடன் தற்சார்பான நிலையில், விபரம் அறிந்த வயதில் நடக்கும் காதல் திருமணங்கள் எதற்காகவும் தடுக்கப்படவோ, கண்டிக்கப்படவோ கூடாது. இத்தகைய நியாயமான திருமணங்களை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் எதிர்ப்பதை அனுமதிக்கக் கூடாது.

கருத்துகள் இல்லை: