Pages

திங்கள், மார்ச் 14, 2016

கலப்புத் திருமணத்தின் மூலம் அடையாள அழிப்பு: ஒரு கொடூரச் சதி!

பொதுவாக மனிதர்கள் தமது அடையாளத்துக்கு உள்ளேயே திருமணம் செய்துகொள்கின்றனர். ஒரே மதம், ஒரே இனம், ஒரே மொழி, ஒரே சாதி, ஒரே வாழிடம் - என்கிற அடிப்படையில் திருமணம் செய்துகொள்வது தான் மிக அதிகமாக நிகழ்கிறது. 

பன்னாட்டு மனித உரிமைச் சட்டம் 'யாரும் யாரையும் திருமணம் செய்யலாம். அதற்கு மணமக்களின் பரஸ்பர சம்மதம் போதுமானது' (Right to Marriage and Family) என்று கூறினாலும் - மிக முன்னேறிய நாடுகளில் கூட, பெரும்பாலான திருமணங்கள் மத, இன அடையாளங்களைத் தாண்டி நடப்பது இல்லை.
உலகின் மிக புரட்சிகரமான நாடான அமெரிக்காவில், 2008 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 60% மக்கள் தமது அடையாளத்துக்கு வெளியே  கலப்புத் திருமணத்தை ஏற்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், உண்மையில் வெறும் 8% அமெரிக்கர்கள் மட்டுமே கலப்புத் திருமணம் செய்திருந்தனர் (கலப்புத் திருமணம் என தமது அடையாளத்துக்கு வெளியே நடக்கும் திருமணங்களை குறிப்பிடுகிறார்கள்).

தமது அடையாளத்துக்கு வெளியே திருமணம் செய்யும் உரிமை இன்றைய நாகரீக உலகின் ஏற்கப்பட்ட விதி. இந்த விதியை மறுப்பது மனித உரிமைக்கு எதிரானது. எந்த ஒரு நபரும் தாமாக மனம் விரும்பி, தனது அடையாளத்துக்கு வெளியே, வேறொரு அடையாளத்தைச் சேர்ந்த வாழ்க்கைத் துணையை அவரது சம்மதத்தின் பேரில் திருமணம் செய்யலாம்.

ஆனால், தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக அல்லாமல், வேறு ஏதேனும் வெளித் தூண்டுதல் காரணமாக வாழ்க்கைத் துணையை வலுக்கட்டாயமாக ஏற்பது மனித உரிமைகளுக்கு எதிரானது ஆகும். குறிப்பாக, அரசோ அல்லது இயக்கங்களோ, அடையாளத்துக்கு வெளியே திருமணம் செய்யுமாறு ஊக்கப்படுத்துவது மனித உரிமைகளுக்கு எதிரானது. இவ்வாறு திட்டமிட்டு கலப்புத் திருமணம் செய்வது அப்பட்டமான இனவெறிக் கொள்கை ஆகும்.

கலப்புத் திருமணக் கொலைகள்

இனம் மாறி திருமணம் செய்வதற்கு எதிரான கொடூரமான இயக்கமாக ஹிட்லரின் நாஜி ஜெர்மனி இருந்தது. அங்கு 1941 ஆம் ஆண்டு வாக்கில்  ஆரியர் - ஆரியரல்லாத இனத்துக்கு இடையே திருமணம் செய்தவர்கள் - கொடூரமாக கொன்றொழிக்கப்பட்டனர். தாய், தந்தை, குழந்தைகள் என எல்லோரையும் கொன்றொழித்தனர். ஆரிய இனத் தூய்மையைக் காப்பதற்காக இந்தப் படுகொலை நடத்தப்பட்டது.

இன்றைய உலகில், இந்தியாவின் பல மாநிலங்களிலும், மதத்தீவிரவாத நாடுகளிலும் கலப்புத் திருமணம் செய்வோரைக் கொலை செய்யும் கொடூரம் கணிசமாக இருந்து வருகிறது.

கலப்புத் திருமணத்தை எதிர்க்காத நாடாக இருந்தது யுகோசுலோவியா. ஆனால், 1992 - 95 இனப்படுகொலைக்கு பின்னர், அந்த நாடு பல துண்டுகளாக உடைந்து. இப்போது அந்த நாடுகளில் வாழும் செர்பியர்கள், முஸ்லிம்கள், குரோசியர்கள் இடையே கலப்புத் திருமணம் விரும்பத்தகாகததாக மாறிவிட்டது. கலப்புத் திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் இப்போது ஒதுக்கப்படும் நிலையில் உள்ளனர் (Bosnia War Legacy Reduces Number of Mixed Marriages)  

இன அழிப்பு கலப்புத் திருமணங்கள்

இனத்தூய்மைக்காக கலப்புத் திருமணம் செய்தோரைக் கொல்வது அல்லது ஒதுக்குவது எப்படி ஒரு இனவெறிக் கொள்கையோ, அதே போன்று 'அடையாளத்தை அழிப்பதற்காக திட்டமிட்டு திருமணம் செய்வதும்' மற்றொரு இனவெறிக் கொள்கை ஆகும். இந்தப் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது.

ஜப்பான் நாட்டின் இன அழிப்பு கலப்புத் திருமணம்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தைவான் நாட்டினை ஆக்கிரமித்த ஜப்பானிய அரசாங்கம், ஜப்பானிய இராணுவத்தினர் தைவான் பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தியது. இதற்காக, ஜப்பானியர்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என உற்சாகப்படுத்தியது (Intercultural Marriage in Colonial Taiwan) 

கம்யூனிச சீனாவின் இன அழிப்பு கலப்புத் திருமணம்

தனிப்பட்ட தேசிய இனங்களை அழிக்கும் நோக்கில் கலப்புத் திருமணங்களை நடத்துகிறது கம்யூனிச சீன அரசாங்கம். ஹான் சீன இன மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடு சீனா. இதன் ஒற்றைக் கலாச்சார தேச முயற்சிக்கு தடையாக இருப்பது திபெத் பகுதியும், உய்குர் முஸ்லிம்களின் ஹுய்ஜியாங் பகுதியும் ஆகும். அடக்குமுறை சட்டங்கள், மரண தண்டனைகள் மூலம் திபெத்தியர்களையும் முஸ்லிம்களையும் அடக்க முடியாத கம்யூனிச சீன அரசு, இப்போது திருமணம் எனும் ஆயுதத்தை எடுத்துள்ளது. 

முஸ்லிம்களை மணமுடிக்கும் சீனர்களுக்கு வீடு, மருத்துவ வசதி, கல்வி ஊக்கத்தொகை தருவதுடன், முதல் ஐந்தாண்டுகளுக்கு ஆண்டுதோரும் பத்தாயிரம் யுவான் (ஒரு லட்சம் ரூபாய்) தருவதாக அறிவித்துள்ளது சீன அரசு. இது உய்குர் இனத்தை அழிக்கும் முயற்சி என முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். (Chinese authorities offer cash to promote interethnic marriages) 
அதுமட்டுமல்லாமல், 16 வயது முதல் 25 வயது வரையுள்ள இரண்டரை லட்சம் முஸ்லிம் பெண்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து பிரித்து, ஹான் இன மக்கள் வாழும் பகுதிகளுக்கு வலுக்கட்டாயமாக வேலைக்கு அனுப்பியுள்ளது கம்யூனிச சீன அரசாங்கம் (China's other ethnic cleansing) 

இதே போன்று திபெத்திய பகுதிகளில், திபெதியர்களை ஹான் சீன இனத்தினர் திருமணம் முடிக்க ஊக்கப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு கலப்புத் திருமணம் செய்தவர்களை வைத்து விளம்பரம் செய்து வருகின்றனர். இது திபெத்திய தேசிய இனத்தை அழிக்க நடக்கும் சதி என திபெத் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். (China promotes mixed marriages in Tibet as way to achieve ‘unity’) 

சிங்களர் - தமிழர்: இனக்கலப்பு சதி

இலங்கையில் வடமாகாணத்தின் புதிய ஆளுனராக அண்மையில் பொறுப்பேற்ற ரெஜினோல்ட் குரே, "சாதி, சமயம், இனம் என்ற தனித்துவம் பாராமல், கலப்பு வாழ்க்கை மூலமாக நாட்டில் உண்மையான சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியும். கலவை என்பது சிறந்த பலன்களை அளிக்கவல்லது என்பது எனது கருத்தாகும்' என்றார். ('கலப்புத் திருமணம் மூலம் சமாதானம் மலரும்': வடக்கின் புதிய ஆளுநர்) 

இதற்கு பதில் அளித்த வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் "வடகிழக்கு தமிழ் மக்களுக்கு கிடைக்காமல் இருக்கின்ற கிடைக்கவேண்டிய அவர்களுடைய உரிமைகளை வழங்குங்கள் அதற்குப் பின்னர் நாங்கள் கலப்பு திருமணங்களைக் குறித்து பேசிக் கொள்ளலாம்" - என்று பதில் அளித்தார்.

உண்மையில் சிங்கள இராணுவத்தினர் தமிழ்ப் பெண்களை மனமுடிப்பதை ஏற்கனவே ஊக்கப்படுத்தி வருகிறது சிங்கள இராணுவம். இவ்வாறு சிங்களர்கள் தமிழ்ப் பெண்களை திருமணம் செய்வது நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் என்று பிரச்சாரமும் செய்கிறது இலங்கை அரசு. (Northern Tamil girl weds Sinhala soldier)
This marriage signifies the reconciliation that is taking place between the two communities - Sri Lanka Army

தமிழர் - சிங்களர் இனக்கலப்பு சதி குறித்து அச்சம் தெரிவித்துள்ள தமிழர்கள் "இனக் கலப்பு இனவாக்கத்தில் காலப்போக்கில் அரசு அல்லது அரசாங்கத்தின் ஊக்குவிப்புக்குகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிலவுமாயின் அது திட்டமிட்ட இன மாற்றமாக அமைந்து விடும் என்பதே பிரச்சினை. காலப்போக்கில் இவ் விடயம் சனத்தொகை அடிப்படையில் குறைவாக உள்ள தமிழ்த் தேசியத்தினை சனத்தொகை அடிப்படையில் பெரும்பான்மையாகவுள்ள சிங்கள தேசியம் உள்வாங்கும் அபாய பொறிமுறையாக மாறிவிடும்" என்று கூறியுள்ளனர். (இனக்கலப்பு நல்லிணக்கத்திற்கானதா?) 

கலப்புத் திருமணமும் மனித உரிமையும்

யாரும் யாரையும் திருமணம் செய்ய உரிமை உண்டு. ஆனால், அந்த உரிமை தனியாக இல்லை. பெண்களின் கல்வி உரிமை, பெண்களின் பொருளாதார சுதந்திரம், பெண்களின் ஆரோக்கியமான நலவாழ்வுக்கான உரிமை ஆகியவற்றுடன் இணைத்துதான் திருமணம் அல்லது காதலுக்கான உரிமையையும் பார்க்க வேண்டும். இதுதான் ஐநா மனித உரிமைப் பிரகடனங்களின் அடிப்படை ஆகும்.


ஐநா மனித உரிமைப் பிரகடனம் (1948 Universal Declaration of Human rights) சுயமான திருமணத்தை உறுதி செய்கிறது. ஆனால், இதனை தனித்து பார்க்கக் கூடாது. கூடவே, ஐநா குழந்தைகள் பிரகடனத்தில் (1989 Convention on the Rights of the Child - CRC) கூறப்பட்டுள்ள குழந்தைகள் உரிமை, ஐநா பெண்கள் உடன்படிக்கையில் (1979 Convention on the Elimination of All Forms of Discrimination against Women - CEDAW) கூறப்பட்டுள்ள பெண்களின் உரிமைகள் ஆகியவற்றுடன் இணைத்துதான் பார்க்க வேண்டும்.

சுயமாக முடிவெடுக்கு நிலையில் இல்லாத, அல்லது, தனது சொந்தக் காலில் நிற்கும் அளவிற்கு கல்வியோ, வேலையோ இல்லாத நிலையில் இருக்கும் இளம் வயதினரின் 'திருமண உரிமையை மட்டும்' தனியாக எடுத்துக் கொண்டு வியாக்கியானம் பேசுவது மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு எதிரானது.

என்ன செய்ய வேண்டும்?

சுயமாகவும், தற்சார்பாகவும், உரிய வயதுடையவர்களாகவும் இருக்கும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ள அவர்களுக்கு முழு உரிமை உண்டு. சாதி, மதம், இனம், இருப்பிடம், நாடு போன்ற எதுவும் இந்த உரிமைக்கு தடையாக இருக்கக் கூடாது. அத்தகைய தடைகளை அரசாங்கம் அனுமதிக்கவும் கூடாது.

கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எதிரான எல்லாவிதமான வன்முறைகளும், அடக்குமுறைகளும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். தடுக்கப்பட வேண்டும். (இப்போது உடுமலைப் பேட்டையில் ஒரு கொடூரக் கொலையை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.)

அதே போன்று, கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் வகையிலான பிரச்சரங்களும் தடுக்கப்பட வேண்டும். அரசாங்கமோ, தனி நபர்களோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ - கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கக் கூடாது. 

இந்தியாவில் திருமணம் என்பது இரண்டு தனி நபர்கள் மற்றும் இரண்டு குடும்பங்களின் உறவாக பார்க்கப்படுகிறது. இதில் வெளியாரின் தலையீடு முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்.

1 கருத்து:

Vinoth Subramanian சொன்னது…

மிக தெளிவான பதிவு.