Pages

சனி, ஆகஸ்ட் 20, 2016

சாதியும் பிவி சிந்துவும்: ஒலிம்பிக்கால் இந்தியர்களின் போலி வேடம் ஒழிந்தது!

ஒலிம்பிக் போட்டியில் பிவி சிந்து வெள்ளிப்பதக்கம் வென்ற அதே காலக்கட்டத்தில், கூகுள் தேடுதளத்தில் - சிந்துவின் சாதி என்ன? - என்று லட்சக்கணக்கான மக்கள் தேடியுள்ளனர்.

தெலுங்கானா, ஆந்திரத்தில் இருந்து மிக அதிகமானோரும், அகில இந்தியாவில் இருந்து பெருமளவினரும், வளைகுடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து கணிசமானவர்களும் - சிந்துவின் சாதி என்ன? (PV Sindhu caste) - என்று கூகுளில் தேடியுள்ளனர்.

அதாவது, பிவி சிந்துவின் சாதனை, அவரது வரலாறு என்பதை விட - அவர் என்ன சாதி என்பதில்தான் மிக அதிக இந்தியர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
படம்: சிந்துவின் சாதியை அதிகமானோர் தேடியுள்ளனர்.
படம்: ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தியா முழுவதும் சிந்துவின் சாதியை அதிகமானோர் தேடியுள்ளனர்.

சாதியை தேடியதில் தவறேதும் இல்லை

பெருமளவு இந்தியர்கள் சிந்துவின் சாதியைத் தேடியதில் தவறேதும் இல்லை. ஆனால், இந்த உண்மையை மறைத்து, தமக்கு சாதி உணர்வே இல்லை என்று இவர்கள் போலிவேடம் பூணுவதுதான் தவறாகும்.

தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தினர் - சிந்து தங்களது மாநிலத்தின் குழந்தை என கொண்டாடி வருகின்றனர். பிறப்பால் ஆந்திர மாநிலத்தவராகவும் வளர்ப்பால் தெலுங்கானா மாநிலத்தவராகவும் உள்ள பிவி சிந்துவை இந்த மாநிலங்கள் கொண்டாடுகின்றன. இதனால் - மற்ற மாநிலங்கள் அவரைக் கொண்டாடவில்லை என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

அதே போல - சிந்து ஒரு குறிப்பிட்ட சாதி என்பதற்காக, அந்த சாதியினர் கொண்டாடினால் அதில் என்ன தவறு இருக்க முடியும்? அதற்காக மற்ற சாதியினர் அந்தச் சாதனையை மறுக்க வேண்டுமா?

தலித் ஒருவர் எதற்காக பாதிக்கப்பட்டாலும் - அது தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் என்று கொந்தளிப்பதும், அதுவே குற்றம் செய்தவர் தலித்தாக இருந்தால், அவர் குற்றவாளியே இல்லை, தலித் குற்றமே செய்யவே மாட்டார் என்று பொங்கி வழிவதும் - வாடிக்கையாக உள்ள நாடுதான் இது.

எனவே, சாதனை படைக்கும் நபரின் சாதியை தேடுவதில் குற்றம் எதுவும் இல்லை.

படம்: சிந்துவின் சாதியை அதிகமானோர் தேடியுள்ளனர்.

சாதி இல்லை என்போர் சாதி வெறியர்கள்

ஏக இந்தியாவும், இந்தியாவுக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களும் சாதி உணர்வில்தான் ஊறியுள்ளனர் என்பதை "சிந்துவின் சாதி என்ன?" - என்கிற கூகுள் தேடல் மெய்ப்பித்துள்ளது.

சாதி இருக்கிறது என்பதையும், எதிர்காலத்திலும் சாதி இருக்கும் என்பதையும் நேர்மையாக ஒப்புக்கொண்டு - சாதியால் ஏற்படும் கேடுகளை ஒழிக்கவும், சாதிகளுக்கு இடையே சமத்துவத்துக்காகவும் போராடுகிறவர்கள் தான் நேர்மையானவர்கள்.

சாதி இல்லை என்றும், சாதியை எதிர்க்கிறேன் என்றும் பேசுகிற எல்லோருமே போலி வேடம் போடும் சாதி வெறியர்கள் தான். குறிப்பாக, திராவிடம், கம்யூனிசம், போலித் தமிழ்த்தேசிய கும்பல்கள் அனைத்தும் தமக்குள் சாதி வெறியுடன் தான் அலைந்து கொண்டிருக்கிறனர்.

எனவே, "அய்யோ, அதிகமான இந்தியர்கள் சிந்துவின் சாதியை தேடுகிறார்களே! இது வெட்கக் கேடு இல்லையா?" - என்று ஊடகங்கள் போலி வேடம் போடுவது தேவையில்லாதது!

படம்: வளைகுடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சிந்துவின் சாதியை கணிசமானோர் தேடியுள்ளனர்.

வேறுபாடு இயற்கையானது

மனிதரில் பன்முகத்தன்மை என்பது இயல்பானது. மதம் இருக்கிறது. இனம் இருக்கிறது. தேசியம் இருக்கிறது. அதுபோல சாதியும் இருக்கவே செய்யும். எப்படி மதம், இனம், தேசியத்தை எல்லாம் ஒழிக்க முடியாதோ, அதே போன்று சாதியையும் ஒழிக்க முடியாது.

மதம், இனம், தேசியம், சாதியைக் கடந்து - சமத்துவம், ஜனநாயகம், மனித உரிமைகள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். கிடைக்க வேண்டும். அதற்காக பாடுபடுவோம்.

5 கருத்துகள்:

நம்பள்கி சொன்னது…

வர்ணாசிர ஜாதிப் படிக்கட்டு மனிதனை மனிதன் அடக்க செய்த வழி! மதமும் அப்படியே! மனுஸ்ரிதி படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்; அது உண்மை என்று நம்புகிறீர்களா? அப்ப நீங்க பார்ப்பனிய படிக்கட்டில் எங்கு வருகிறீர்கள் என்று தெரியுமா? அதற்கு நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? இந்த இழிவு ஒழிய வேண்டாமா? ஜாதியை பரப்பாதீர்கள்.

நான் வர்ணாசிர ஜாதிப் படிக்கட்டை மனதால் கூட ஒத்துக்கொள்வது இல்லை. நான் பிறப்பால் forward community; அதாவது முட்டாள் தனமானா வர்ணாசிரமப்படி - நான் பிராமணன் அல்ல! என்னால் இந்த சிறு இழிவைகூட (பிராமணன் எனக்கு மேலே என்பதை) மனதளவில் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லையே? இந்த இழிவைக் கூட தாங்க முடியவில்லை என்பதால் தான் என் community-யை பற்றி இங்கு எழுதியுள்ளேன். ஏன் நீங்கள் இப்படி ஜாதி வேண்டும் என்கிறீர்கள்? நனறாகப் படித்தவர்; உலக விஷயங்கள் அறிந்தவர். என் இப்படி இந்த சிறு வளையத்தில் மாட்டிக் கொண்டீர்கள். உங்களுக்கு மேல் மற்ற ஜாதி மனிதர்கள் இருப்பது எனபது இழிவாக தெரியவில்லையா?

நான் செய்தது அன்றே இரு வீட்டு எதிர்ப்புடன்--என் சொந்த உழைப்பில் பணம் சேர்த்து செய்த காசில் செய்த காதல் திருமணம். இருவரும் வேறு வேறுஜாதி. என் குழந்தைகளுக்கு அவர்கள் விருப்பபடி தான் திருமணம் செய்தன். "எல்லோர் மதமுமே வேற வேற!" அதை இங்கு மதம் என்பதை religious faith என்று தான் சொல்வார்கள். எனக்கு எம்மதமும் சம்மதம் என்று சொல்வதை விட---எம்மதமும் சம்மதம் இல்லை என்று தான் சொல்வேன். மதம் என்று சொல்வதில்லை.

எங்கள் குழந்தைகள் யாருக்கும் மத நம்பிக்கை கடவுள் நம்பிக்கை இல்லை. இங்கு எவனுக்கும் என்ன மதம் என்றே தெரியாது! இந்தியாவில் இருந்து வந்த இளைய தலைமுறை (இங்கு வந்தது படிக்காமல் நேராக வேலைக்கு வந்தவர்கள் மென்பொறியாளர்கள் தான் ஜாதி கூடவே கோவிலும்; அப்போ எல்லாம் ஈ ஒட்டிக் கொண்டு இருந்த கோவில் குருக்கள் இப்ப செம்ம கல்லா கட்டுகிறார்கள். காருக்கு கூட பூஜை!

எனக்கு தெரிந்த ஒரு தமிழன் என்னிடம் விவாதம் செய்தான்! நாய்களில் கூட ஜாதி இருக்கு என்றான்! அதற்கு என் பதில் என்னவாக இருந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்!

Arasu சொன்னது…

அருள்:

”சாதிகள் இல்லையடி பாப்பா” என்றார் புதுமைக்கவிஞர் பாரதியார். அவரது சீடர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனோ -
“இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே”
என்று முழங்கினார்.

முனைவர் பழ்நியப்பன் (டல்லஸ் பகுதியைச் சேர்ந்தவர்) தம் வாழ்நாள் ஆய்வாக கண்டறிந்து பறைசாற்றிவருவது - சங்க காலத்தில் தமிழகத்தில் சாதி அடிப்படையில் மேல்நிலை கீழ்நிலை இல்லை என்பதுதான். ”சாதி” பிறப்பால் அக்காலகட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை என்பதுவும் அவரது கருத்து என உணர்கிறேன்.

இந்தியாவின் பிறமாநிலங்கள் போலன்றி படித்த ஒருவர் தமது பெயரின் பின் தன் சாதியை போட்டுக்கொள்ள வெட்கப்படும் நிலையை உருவாக்கிய தந்தை பெரியார் உலவிய தமிழகத்தில் பிறந்தமைக்கு பெருமையடைகிறேன். ”சாதி இருக்கிறது. ஆனால் ஏற்றத்தாழ்வு வேண்டாம்” என்பதில் உள்ள உள்ளர்த்தம் எனக்கு புரியவில்லை. சாதியமைப்பை ஏற்கும் ஒருவர் வர்ணாஸ்ரம தர்மத்தை ஏற்றுக்கொள்கிறார் என்றுதானே பொருள். ஏற்றத்தாழ்வில்லா சாதியமைப்பு என்பவருக்கு ஏதோ ஒருவகையில் தமது சாதியை விடமனமில்லை என்றுதானே பொருள்.

தமிழ்கத்தில் திருமணங்கள் பல்லாயிரக்கணக்கில் சாதியைப்பற்றிக்கவலைப்படாமலேதான் நடக்கிறது.திருமணம் தொடர்பான இணைய தளங்களால் வந்திருக்கும் நன்மையிது. எனக்குத் தெரிந்த பல நண்பர்களும், உறவினர்களும் (தான் சாதிப்பற்றுள்ளவராயினும்) காதலாலும் / இணையத்தில் தனக்கு பொருத்தமானவரை தேர்ந்தெடுப்பதாலும் சாதியை முற்றிலும் மறந்து தம் மணவாழ்க்கையை அமைத்திருக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகள் வளரும்போதும் அவர்கள் திருமணமும் “சாதியை பார்க்காமலேயே” தான் நடக்க இருக்கிறது.

என்னதான் தாங்கிப்பிடித்தாலும் - தமிழன் வாழ்வில் இடையில் வந்த சாதிகள் காணாமல் போய்க்கொண்டிருப்பது கண்கூடு. என்னதான் சில சாதித்தலைவர்கள் இதனை அரசியல் படுத்தி சுய நலத்திற்காக தமிழினம் சிதைந்தாலும் பரவாயில்லை என கூறுபோட முயன்றாலும், படுதோல்வி அடைந்துவருகிறார்கள். தந்தை பெரியாரின் உழைப்புக்கும், சிந்தனைக்கும் கிடைத்த பெருவெற்றி.

பிவி சிந்துவும், சுந்தர் பிச்சையும் என்ன சாதி என்பதில் ஆர்வம் கொண்டு தேடுபவர்களுக்கு என்ன காரணம் இருக்கிறது என தெரியவில்லை. ஆனால் வாழ்வில் உயர்ந்து அரும் சாதனை படைத்த தமிழர்கள்/இந்தியர்கள் சாதியைப்பற்றி அக்கறைகொண்டவர்களாக தெரியவில்லை.

மலரன்பன் சொன்னது…

கடவுளே....தலித்தாக இருந்து தொலைத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் தேடினார்கள். நல்ல வேளை, சிந்து உயர்ஜாதி என்று தெரிந்துவிட எல்லாரும் பெருமூச்சு விட்டு மறந்துவிட்டார்கள்.

சாதிகள் இருக்கும் எப்போதும் என்பது உண்மை. சாதிகள் இருக்க சமத்துவம் வரும் என்பது பொய். சாதிகளை வைத்துக்கொண்டு சமத்துவத்துக்காக போராடி வெற்றி பெறுவோமென்பது எப்படி சாதி இல்லையென்று சொல்லிக்கொண்டே தம் சாதிப்பற்றோடு திரியும் போலி வேடமோ அப்படி!

மானுடன் சொன்னது…

நம்ம ஆட்கள் (அடச்சே! நீங்கள் நினைக்கிற மாதிரியில்லங்க...தமிழனுங்கன்னு சொல்ல வந்தேன்)கொஞ்சம் வித்தியாசமானவங்க. திடீர்னு கரண்ட் போச்சுன்னு வச்சுக்குங்க..உடனே ’ஃப்யூஸ்’ போயிருக்குமா என போய் பார்க்க மாட்டாங்க..கதவை திறந்து வெளிய போய் நின்னுகிட்டு அடுத்த வீடு எதிர்த்த வீடுன்னு தெரு முழுசும் போயிருக்கான்னு பார்த்து எல்லா இடமும் போயிருந்தா நிம்மதியா வந்து உட்கார்ந்துடுவாங்க.

இத ஏன் உங்க கிட்ட சொல்றேன்னு அறிவாளியான உங்க கிட்ட விளக்க வேண்டியதில்ல.

பார்ப்பானுங்க கலர பார்த்து,பேர பார்த்து,பேசுற அவா இவா பாஷைய பார்த்து, அப்படி இப்படி மேல் பட்டன் திறந்திருக்கும் சமயம் வெளிப்படும் பூனூலை பார்த்து இவா நம்மாளு தான் என்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிற மாதிரி நம்ம சூத்திரப்பயல்களுக்குள் சாதியை கண்டுபிடிக்கிற சூத்திரம் தெரியாமல் படற அவஸ்தை இருக்கே அப்பப்பா..! இந்த ’கெட்ட’ அவஸ்தை அந்த பெரியார் கிழவனால் வந்தது.சாதி பெயரை தூக்கி போடுன்னு அவர் சொன்னதை கேட்டு பார்ப்பானுங்களே அதை போட வெட்கப்பட்டு கல்யாண பத்திரிக்கையில் மட்டும் போட்டு ‘அழகு’ பார்த்து கொள்ளுகின்ற நிலையல்லவா வந்தது? இப்படித்தானே இந்த (தமிழ்)நாட்டிலே உன் சாதி என்னன்னு கேட்க வெட்கப்படுகிற பயலுவளா நாமெல்லாம் வளர்ந்துட்டோம்.அட.. நீங்களும் தானே அருள்? ஒருத்தன் சாதிய சொல்லி கூப்பிட சங்கடப்பட்டோம்..அவன் சாதிய கேட்டு நம்ம வீட்டு கிழடுகள் நம் காதை கடிக்கும் போதெல்லாம் நாம அந்த பெருசுகளின் மீது பாய்வோமே...ஞாபகம் வருதா? நாம் சொந்தத்தில் கல்யாணம் கட்டினோம் என்றாலும் நம்ம ’ஃப்ரண்டு’ங்களுக்கு சாதி மீறி ஒரு காதல் வாய்த்தால் அதை ஒரு புரட்சிக்காரனைப் போல ரகசியம் காத்து அவர்கள் இணைவதற்கு சாகசமெல்லாம் செய்வோமே...ஞாபகம் வருதா? நிச்சயமாக ஒரு உயிர் நண்பனாக யாருக்காவது அணிலைப்போலவாவது சின்னஞ்சிறு உதவிகள் செய்திருப்பீர்களே? இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம்.அதை விடுங்கள்.

வன்னியர்களும் ஒடுக்கப்பட்டவர்கள் தான்.அந்த ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு ஆவேசத்தை ராமதாஸ் ஊதி பெருக்கினார்.வன்னியர்களுக்கு மட்டுமல்ல ஒடுக்கப்படும் அனைத்து சாதியினருக்கும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அல்லவா மாறிப்போனார்? தீவிர புரட்சி பேசிய முன்னாள் நக்சலைட்களெல்லாம் கூட யதார்த்த அரசியலுக்கு மாறுவதாக நம்பி அவர் பின்னால் போகவில்லையா? எல்லாமே முடிந்து விட்டது.இப்போது டாக்டர் ராமதாஸ் என்பவர் வன்னிய சாதிக்கட்சி தலைவர் என்பது சின்னக்குழந்தைக்கும் புரிந்த அரசியல்.அவர் பின்னால் உங்களைப்போல நல்ல படித்த, உலகறிவும்,ஆழ்ந்த அரசியல் புரிதலும் உள்ள அறிவாளிகளெல்லாம் அவரும் நீங்களும் ஒரே சாதி என்கிற ஒரே பந்தத்தில் அவருடனே பயணிக்கிறீர்கள்.பிறருடைய சாதியை அறிந்து அதற்கேற்ப அவருடனான உறவை தீர்மானிக்கின்ற வழிக்கு போய் விட்டீர்கள்.ஆனாலும் சாதியை அறிகின்ற வழிமுறைகளை வெட்கத்துடன் செய்கிறீர்கள்.உங்களின் மனதில் இதை ஒரு திருட்டுத்தனமாக செய்யக்கூடிய குற்ற உணர்ச்சி ஆட்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.இப்போது பி வி சிந்துவின் சாதியை தேடும் கூட்டம் அதிகமென தெரிந்ததும் ஒரு ஆசுவாசம் வந்து விடுகிறது.”அட நாம மட்டுமா பார்க்கிறோம்” என ஆரம்பித்து ”சாதி இருக்கலாம்;வித்தியாசம் இருக்கலாகாது” என்றெல்லாம் ஆனந்த தாண்டவமே ஆடுகிறீர்கள்.இந்த கம்யூனிஸ்டுகளும்,திராவிட இயக்க (திமுக அல்ல)சிந்தனையாளர்களும் தான் லூசுங்க என்ற அரிய முடிவை எட்டுகிறீர்கள்.உங்களை நினைத்து எனக்கு கோபமெல்லாம் வரவில்லை!

gnanan சொன்னது…








இன்று தான் முதன் முதலில் உங்களது ஒரு பதிவைப் படித்தேன், சுவரஸ்யமான நடை, ஆர்வமூட்டும் அழகியல் தொடர்ந்து சில பதிவுகளையும் படித்தேன்.. நண்பன் ஒருவன் உங்கள் பெயரை அடிக்கடி சொல்வான் உங்கள் கட்சியில் உள்ளவன்.

வாசிக்கும் போது உங்கள் தரம் உயர்தரம் என்று புரிந்தது.. சமூக மாற்றத்திற்கு வழி கோளுவார் என்று நம்பிய ஒருவர்.. அரசியல் சமரசங்களால் தனிமைப் பட்டுப் போனது, தமிழகத்திற்கு வாய்த்த மாபெரும் இழப்பு..

ஐயா ராமதாஸைத் தான் சொல்கிறேன், அதே தான் உங்களிடமும் காண்கிறேன், அவரது அரசியல் சமரசங்களுக்கு வலு சேர்க்க, உங்கள் எழுத்துக்களும் சமரசமாகிவிட்டன, பேரிழப்பு.

முன்னோர் சொன்ன பின்னூட்டக் கருத்துக்கள் எனக்கு உடன்பட்டதே,

அதன்மேலும்..

1. நிழல் நிதிநிலை அறிக்கை
2. கிராமம் சார்ந்த சிந்தனை
3. அறிவியல் பூர்வ அறிக்கைகள்
4. யாரும் பார்த்திராத புதிய சிந்தனைகள்
5. எதையும் செய்யும் இளைஞர் பட்டாளம்

பாமக தமிழகத்தில் செய்து கொண்டிருப்பது, அளப்பரிய பணி.

1. ஓட்டை நிலை நிறுத்த சாதி அரசியல்

2. கட்சிகளை எதிர்க்க திராவிட எதிர்ப்பு,

3. 6ல் ஒருவன் வன்னியன் தமிழ்நாட்டில்
எத்தனை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், சிவில் சர்வீஸ் பணியாளகளை உருவாக்கியது பாமக

4.படிப்பறிவு எட்டாச் சூழலில் இருக்கும் ஒரு சமூகத்தில் இருந்து வந்துவிட்டு, தனது சமூதாயக் குழந்தைகளை கட்டாய கல்வியை பெறவும், படித்த மாணவர்களை வழிநடத்தி, உயர் கல்வி பெற வைத்தும், இட ஒதுக்கீட்டை மானிட்டர் செய்யும் வேலைகளை செய்யச் சொல்லி தொண்டகளை அறிவு சார் தூண்டல் செய்து, அரசுத் திட்டங்களை கட்சிக் காரர்களைக் கொண்டு தன் மக்களுக்கேனும் செய்து காட்டியதா பாமக.. பதவிகளுக்காக ஏங்கி கிடப்பதை காட்டிலும் இதைச் செய்திருக்க வேண்டும்.

மாறாக உணர்வுசார் வன்முறைகளுக்கு தன் கட்சிக்காரர்களை வழி நடத்தியதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

உங்கள் எழுத்துக்கள் வழியில் உங்களை ஒரு சிறந்த சிந்தனாவாதி என்று இரும்புறுதியில் நம்புகிறேன். மீண்டும் அவரது அரசியல் நிலைப்பாட்டை சரியென்றுக் கட்சிகட்டாமல், எனக்கும் அவருக்கும் சொல்லுங்கள், பாமக தவறான பாதையில் செல்கிறதா இல்லையா...

இந்த உண்மை தான் உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதை உண்ர்ந்து எழுதுங்கள், விவாதியுங்கள்.

5. கடவுள் மறுப்பை நீங்கள் ஏற்காததை இதுவரை யாரும் விமர்சித்ததில்லை என்பதை உண்வீர்கள். சாதி மறுப்பையும் நீங்கள் ஏற்காத போதுதான் நீங்கள் புறந்தள்ளப் படுகிறீர்கள்.

நீங்கள் யாரையோ அடிமைப்படுத்த நினைத்து, உங்களை அடிமைப்படுத்தி இருப்பவர்களை மறந்துவிட்டீர்கள்.

கலெக்டர்கள்
நீதிபதிகள்
அரசு ஊழியர்கள்

எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறீர்கள் என்றால், அதைப் பிடித்துக் கொண்டவர்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, பார்ப்பனர்கள், இன்ன பிற ஆதிக்கத்தினர்.

கேள்வி கேட்க வேண்டியவனை கேட்கத் தெரியாமல், யாரையோ சீண்டி அரசியல் பிழைக்க நினைப்பது, (சொல்ல விரும்பாத பழமொழி என்ன செய்ய நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்)

உங்கள் சமூகத்தை ஏமாற்றியபடி தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் வேண்டும் வரவேண்டும்

அய்யா ராமதாஸ் அவர்கள் தலைமையில் 100 திருமணம் கலப்புத் திருமணம், வன்னியர், பட்டியல் இனத்தவராக அது இருந்தால் இன்னும் சிறப்பு

"சமூகநீதி செயல் பெரியார்" அய்யா ராமதாசு என்று சிறப்பு பெற வேண்டும்.

அரசியல் நாம் பிழைக்க அல்ல
நம் மக்களை உயர்த்த

நட்புடன்

கெளதம்ராஜ்.சை