Pages

வியாழன், ஜூன் 01, 2017

தலித் தலைவர் வேடமெடுக்கும் ரஜினிகாந்த் - காமராஜருடன் ஒப்பிடும் தினத்தந்தி 

அண்ணல் அம்பேத்கரின் சமூகமான மராட்டிய தலித் மகர் சமூகத்தை சேர்ந்தவரான நடிகர் ரஜினி காந்தை - கர்மவீரர் காமராஜருடன் ஒப்பிட்டு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது தினத்தந்தி நாளிதழ்.

தனக்கென எந்த சொத்துமே இல்லாமல், தமிழக மக்களுக்காகவே வாழ்ந்த காமராஜர் அவர்களை, தமிழக மக்களை சுரண்டி கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்திருக்கும் ரஜினி காந்துடன் ஒப்பிடும் துணிச்சல் தினத்தந்திக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை!

யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. உண்மையில் எல்லா மக்களும் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதும், அரசியல் அமைப்புகளில் இணைந்து செயலாற்றுவதும் தான் ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் நல்லது.

அதே நேரத்தில், அரசியலில் தலைமை பொறுப்புகளுக்கு வர நினைப்பவர்கள், அதற்கான தகுதிகளை கொஞ்சமாவது வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மாநிலத்தின் அரசியலில் தலைமையேற்க விரும்புகிறவர்கள், அந்த மாநிலத்தின் பிரச்சினைகளில் - சிலவற்றிலாவது தமக்கென நிலைப்பாட்டினையும், தீர்வுகள் குறித்த கருத்துக்களையும் கொண்டிருக்க வேண்டும். நடிகர் ரஜினி காந்திற்கு அப்படி ஏதாவது கருத்தோ, தீர்வோ இருக்கிறதா?

தமிழர்களை பாதிக்கும் பிரச்சினைகளில் ரஜினியின் நிலைப்பாடு என்ன?

காவிரியில் தண்ணீர் விடாத கர்நாடக மாநிலத்தின் அடாவடி குறித்து ரஜினியின் கருத்து என்ன? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் தமிழினத் துரோகம் குறித்து ரஜினி என்ன சொல்கிறார்? ரஜினிக்கு தமிழ்நாட்டின் நலன் முக்கியமா அல்லது கர்நாடகத்தில் உள்ள அவரது கோடிக்கணக்கான முதலீடுகள் முக்கியமா - என தினத்தந்தி கேட்குமா?

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டாரா ரஜினி காந்த்? தமிழ் இனமே அழித்து ஒழிக்கப்பட்ட அந்நாட்களில் அவர் தானாக முன்வந்து குரல் எழுப்பினாரா? தெருவுக்கு வந்து போராடினாரா? இதுகுறித்தெல்லாம் அவரிடம் கேள்வி கேட்டதா தினத்தந்தி?
மீனவர் படுகொலை, கச்சத்தீவு மீட்பு, முல்லைப்பெரியாறு அணை உயர்த்துதல், தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டுக்கு நேர்ந்துள்ள ஆபத்து, நீட் தேர்வு திணிப்பு, இந்திய அரசின் இந்தி திணிப்பு - இவற்றுக்கெல்லாம் ரஜினி காந்த் என்ன சொல்கிறார் என்பதை தினத்தந்தி ஒருமுறையாவது கேட்டிருக்குமா?

2015 ஆம் ஆண்டில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கிய போது, வெள்ள நிவாரணத்துக்காக நடிகை ஹன்சிகா 15 லட்சம் ரூபாய் கொடுத்தார். நடிகை சமந்தா 30 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால், பலகோடி சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் 10 லட்சம் ரூபாய் தான் கொடுத்தார். தமிழர்கள் மீதான அக்கறையில் 'ஹன்சிகா - சமந்தா' வை விட கீழானவராகவே ரஜினிகாந்த் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார். இந்த உண்மையை இப்போது பேசுமா தினத்தந்தி?

தலித் தலைவர் ரஜினி - உணவு உரிமைக்காக குரல்கொடுக்காதது ஏன்?

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். அதே மகர் சமூகத்தை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் அனைத்து சமூகங்களை போன்று, தலித்துகள் அரசியலில் ஈடுபடுவதை நாம் வரவேற்கிறோம். ஆனால், தனது தலித் அடையாளத்தை முன்னிறுத்தும் ரஜினி காந்த் - மாட்டிறைச்சிக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மௌனம் காப்பது ஏன்?

அண்ணல் அம்பேத்கரையும், அவரது "Maharashtra BR Ambedkar 1956" புரட்சியையும், தனது தலித் அடையாளத்தையும் மட்டும் ரஜினி காந்த் முன்னிறுத்தினால் போதாது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மட்டிறைச்சிக்கு எதிரான கருத்துகளை எதிர்த்தது போன்று ரஜினி காந்தும் எதிர்க்க வேண்டாமா? இது குறித்து எதுவும் கேட்காமல் தினத்தந்தி மவுனம் சாதிப்பது ஏன்?

காமராஜருக்கு இணையாக ரஜினியை முன்னிறுத்தியதற்காக தினத்தந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும். 

கருத்துகள் இல்லை: