Pages

வெள்ளி, நவம்பர் 26, 2010

பீகார் தேர்தல்: கேலிக்கூத்தாகும் சனநாயகம்!

மக்களாட்சி என்பது என்னதங்களை தாங்களே ஆளும் உரிமையை தமது சார்பாக வேறொருவருக்கு விட்டுக்கொடுப்பதுதான் மக்களாட்சி. மக்களின் பிரதிநிதிகள் மூலமாக ஆளப்படும் நாடுதான் சனநாயக நாடு. ஆனால், இந்தியாவின் தேர்தல் முறை சனநாயகத்தை வெளிப்படுத்துவதாக இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துள்ளது பீகார் தேர்தல்.

மக்களாட்சி முறை என்றால், அது மக்கள் அனைவரது விருப்பங்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அல்லது, பெரும்பான்மை மக்களது விருப்பத்தையாவது எதிரொலிக்க வேண்டும். இவை இரண்டுமே நமது தேர்தல் முறையில் இல்லை.

பீகார் தேர்தலில் 23 % வாக்குகளை வாங்கிய ஐக்கிய சனத தளம் 115 இடங்களை பிடித்துள்ளது. அதாவது 47 % இடங்கள்.  16 % வாக்குகளைப் பெற்ற பாரதீய சனதா கட்சி 91 இடங்களைப் பிடித்துள்ளது. அதாவது 37 % இடங்கள்.

ஆக மொத்தம் 39 % வாக்குகளைப் பெற்ற ஆளும் கூட்டணி 85 % இடங்களை பிடித்துள்ளது.

அதேசமயம் 26 % வாக்குகளைப் பெற்ற ராஷ்ட்ரீய சனதா தளம் + லோக் சன சக்தி கூட்டணி 25 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. அதாவது வெறும் 10 % இடங்கள்.

39 % வாக்குகளுக்கு 85 % இடங்கள், ஆனால், 26 % வாக்குகளுக்கு 10 % இடங்கள் என்பது என்ன விதமான சனநாயகம்? இதில் ஏதாவது நீதி இருக்கிறதா?

"ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்கிற்கு ஒரு மதிப்பு" என்பது வேட்டிப்பேச்சுதானா?

பீகாரில் மொத்தம் பதிவான வாக்குகள் 53 % மட்டுமே. இதையும் கணக்கில் கொண்டால், ஆளும் கூட்டணி உண்மையில் பெற்றுள்ள வாக்குகள் மொத்த வாக்காளர்களில் 20 % மட்டுமே. (வாக்களிக்காதவர்கள் வாக்களித்தால் அது இரு அணிக்கும் போகலாம்).

ஆக, மொத்த வாக்காளர்களில் 20 % மட்டுமே தமது அதிகாரத்தை ஐக்கிய சனதா தளம் + பாரதீய சனதா கட்சி கூட்டணிக்கு அளித்துள்ள நிலையில், இதனை மக்களாட்சி அரசாக எப்படி ஏற்க முடியும்? (மொத்த மக்கள் தொகையில் அல்ல - அதில் வாக்காளர் பட்டியலில் இல்லாதோரும், 18 வயதுக்கு கீழானோரும் உள்ளனர்)

சனநாயகத்திற்கு எதிரான தேர்தல் முறை

"முதலில் வெற்றிக் கம்பத்தை கடப்பவரே வெற்றியாளர்" - First Past The Post (FPTP) - என்கிற நமது தேர்தல் முறையே இந்த சிக்கலுக்கு காரணமாகும். இது ஒரு பழமையான முறை. காலமாற்றத்திற்கு ஏற்ப பல புதிய தேர்தல் முறைகள் இப்போது வந்துவிட்டன.

நமது தேர்தல் முறையில் பல குறைபாடுகள் உள்ளன. இது வாக்கிற்கு சம மதிப்பளிக்காமல், பெரும்பான்மை மக்களை புறக்கணிக்கிறது. அதாவது, வெற்றி பெற்றவரைத் தவிர மற்றவர்களுக்கு விழும் வாக்குகள் அதிகமாக உள்ளன.

சிறுபான்மையினரும் மாற்று கருத்துள்ளோரும் ஒருநாளும் தமது விருப்பத்தை வெளிப்படுத்த முடியாத நிலையை இந்த தேர்தல் முறை உருவாக்கியுள்ளது.

இந்த தேர்தல் முறை சாதி முறையை வளர்க்கிறது. ஒரு தொகுதியில் எந்த சாதியினர் அதிகமோ, அந்த சாதியினர் மட்டுமே வேட்பாளராக நிறுத்தப்பட இது வழி செய்கிறது.

இந்த முறையில் பெண்கள் வேட்பாளராக நிறுத்தப்படும் வாய்ப்பு குறைகிறது.

இந்த முறையில் வாக்குகள் வீணடிக்கப் படுகின்றன. அதாவது, தமது வாக்கால் தாம் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெற மாட்டார் என்று பலரையும் அவநம்பிக்கை கொள்ள செய்கிறது. இதனால், தீவிரவாதம் வளரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே, "முதலில் வெற்றிக் கம்பத்தை கடப்பவரே வெற்றியாளர்" - First Past The Post (FPTP) - என்கிற முறையைக் கைவிட்டு "விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு" - Proportional Representation System (PR) - மாற வேண்டும் - அதாவது வாக்குகளின் விழுக்காட்டிற்கு ஏற்ப வேட்பாளர்கள் வெற்றி பெறும் முறைக்கு மாறினால் மட்டுமே மக்களாட்சி முறை சிறக்கும். அப்போதுதான் எல்லா வாக்கிற்கும் சம மதிப்பு கிடைக்கும்.

வியாழன், நவம்பர் 25, 2010

சாதியும் முதல்வர் பதவியும்: காப்பாற்றப்பட்ட முதல்வர், பதவியிழந்த முதல்வர், பதவிபெற்ற முதல்வர்.

1. காப்பாற்றப்பட்ட முதல்வர் - எட்டியூரப்பா

லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எட்டியூரப்பாவின் பதவியை பறிக்க அவரது கட்சித்தலைமை (BJP) வெளிப்படையாக முயற்சி செய்தது. அவர் பதவி விலகுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். பத்திரிகைகளும் அவ்வாறே சத்தியம் செய்தன. ஒரு கட்டத்தில் பதவி விலகல் கடிதத்தை அவர் கொடுத்துவிட்டதாகவும் கூறினர்.

இந்த நேரத்தில் அவரைக்காப்பாற்ற முன்வந்தது அவரின் லிங்காயத் சாதி. லிங்காயத் சமூகத்தினரின் ஆன்மீகத் தலைவரான பேஜாவர் மடத்தின் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி எட்டியூரப்பாவை பதவி நீக்கக் கூடாது என்று போர்க்கொடி தூக்கினார். அவருடன் இன்னும் இரண்டு லிங்காயத் மடாதிபதிகளும் எட்டியூரப்பாவை ஆதரித்தனர். எந்த கட்சியையும் சாராத இவர்களது கோரிக்கையைப் போலவே, பாரதீய சனதா கட்சியின் லிங்காயத் சாதி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் எட்டியூரப்பாவை ஆதரித்தனர்.

இன்னுமொரு வேடிக்கையாக - எட்டியூரப்பாவை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு தலைமையேற்றவர் ரேணுகாச்சார்யா. அவரும் ஒரு லிங்காயத் என்பதால் - சாதிப்பாசத்தால் அல்லது தனது சாதிக்கு பயந்து - கடைசி நேரத்தில் எட்டியூரப்பாவுக்கு ஆதரவாளராக மாறினார்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளதால், லிங்காயத்துகளை பகைக்க மனமின்றி பி.ஜே.பி'யும் சாதிக்கு அடிபணிந்தது.

எட்டியூரப்பா முதல்வராகத் தொடர காரணம் - சாதி

2. பதவியிழந்த முதல்வர் - ரோசையா

ஆந்திர முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்ததை அடுத்து ரோசையா என்கிற குனிசெட்டி ரோசையா ஆந்திர மாநிலத்தில் 15ஆவது முதலமைச்சர் ஆனார். ஆனால், ஜகன் மோகன் ரெட்டியை முதலமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இதனை காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்ததால், ஜகன் மோகன் ரெட்டி தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆறுதல் யாத்திரை என்கிற பெயரில் அவர் மக்களைத் திரட்டுகிறார். எனவே, மீண்டும் ஒரு ரெட்டி சமூகத்தவரை அட்சியில் அமர்த்த, ரோசையா காங்கிரஸ் கட்சியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ரோசையா முதல்வர் பதவி இழக்க காரணம் - சாதி

3. பதவிபெற்ற முதல்வர் - கிரண் குமார் ரெட்டி

ஆந்திராவில் ஜகன் மோகன் ரெட்டி மீது ரெட்டி சமூகத்தினரிடையே பெருகி வரும் அபிமானத்தைத் தடுத்து நிறுத்த மீண்டும் காங்கிரஸ் தலைமை ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த கிரண் குமாரை முதல்வராக்கியிருக்கிறது.

கிரண் குமார் ரெட்டி முதல்வர் பதவி பெற காரணம் - சாதி

பத்திரிகைகளின் பித்தலாட்டம்: பீகாரில் சாதி தோற்றதா?

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய சனதாதளத்தின் நிதீஷ் குமாரின் தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. உடனே, "சாதி தோற்றது, வளர்ச்சி வென்றது" என்று பத்திரிகைகள் பிரச்சாரம் செய்யத்தொடங்கியுள்ளன.


இது உண்மையை மூடிமறைக்கும் மேல்சாதி சதியே அன்றி வேறல்ல!


1. நிதீஷ் குமாரின் ஐக்கிய சனதாதளம் சாதிக்கு அப்பாற்பட்ட கட்சி அல்ல. மாறாக, குர்மி, கோரி போன்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரை முன்னிலைப்படுத்தும் கட்சி அது.


தேசிய அளவில் -ஐக்கிய சனதாதளம் கட்சியின் தேசியத்தலைவர் சரத் யாதவ் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் போராடும் தலைவராக அடையாளம் காணப்படுள்ளார் . சாதிவாரிக்கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு ஆகியவற்றுக்காக முன்னின்று போராடும் போராளி சரத் யாதவ்.


எனவே, ஐக்கிய சனதாதளத்தின் வெற்றியை "சாதியின் தோல்வி" என்று பேசுவது பித்தலாட்டம்.


2. "சாதி தோற்றது, வளர்ச்சி வென்றது" என்று பேசுவதன் மூலம் - சாதியை முன்னிறுத்துவது வளர்ச்சிக்கு எதிரானது என்று கட்டுக்கதைகளை அள்ளிவிடுவது ஆதிக்க சாதியினரின் ஒருவகையான தந்திரமே ஆகும்.


உண்மையில் வளர்ச்சி என்பது ஒருசிலருக்காக, அல்லது, ஒருசில சாதிகளுக்காக - என்று இருப்பதை மாற்றி வளர்ச்சியை பரவலாக்கவேண்டும். வளர்ச்சியின் பயன் எல்லோருக்கும் செல்ல வேண்டும். மக்கள் தொகை அளவிற்கு ஏற்ப அனைத்து பிரிவினருக்கும் வளர்ச்சியின் பயன் சென்றடைய வேண்டும் என்பதுதான் சாதி அரசியலின் அடிப்படை.


எனவே, சாதி பேசுவது வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. அதுவே, நீதியான வளர்ச்சிக்கு ஆதாரம்.

வெள்ளி, நவம்பர் 05, 2010

தீபாவளிப் பண்டிகையின் பலன்கள் - தந்தை பெரியார்

""தீபாவளிப் பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது.  அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன்.  தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும்.  அதாவது, விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விஷ்ணுக் கடவுள் நரகாசுரனைக் கொன்றாராம்.  இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள்! விஷ்ணுக் கடவுள் பூமியைப் புணர முடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள்!  இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு கஷ்டம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு பிரயாசை என்பதை நம் மக்கள் நினைப்பதே இல்லை.  அப் பண்டிகையைக் கொண்டாட ஒவ்வொருவனும் தேவைக்குமேல் செலவுசெய்து துன்பப்படுகிறான்.  தன்னிடம் இல்லாவிட்டாலும், கடன்வாங்கியாவது - கடன் என்றால் ஒன்றுக்கு ஒன்றரைப் பங்கு வட்டி ஏற்பட்டுவிடுகின்றது. 

பட்டாசு கொளுத்துவது எவ்வளவு துன்பம் என்றும், இதனால் பலவித அபாயங்கள் தோன்றி உபாதைகள் ஏற்பட்டு விடுவதும், துணியில் நெருப்புப் பிடித்து உயிர்போதலும், பட்டாசு சுடும்போது திடீரென வெடிப்பதால் உடல் கருகி, கண், மூக்கு, கை, கால் ஊனம்வருவதும் அல்லாமல், இந்தப் பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவோ பேர்கள் சாராயம் குடித்து மயங்கித் தெருவில் விழுந்து புரண்டு மானம்கெடுவதும், மேலும் இதற்காக இனாம் என்று எத்தனைப் பாமரர் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்து பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களினால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு அறிவு செலவாகின்றது என்றும் எண்ணிப் பாருங்கள்!

இவைகளை எந்த இந்திய பொருளாதார - தேசிய நிபுணர்களாவது கவனித்தார்களா என்று கேட்கிறேன்""

தந்தை பெரியார், "குடிஅரசு' 20.10.1929

'நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா'  - தீபாவளியின் உண்மை பின்னணியைக் கூறுகிறார் தொ. பரமசிவன்.

""இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கோண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, எண்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் 'தேசியத் திருவிழா' போலக் காட்டப்படுகிறது.

ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவேதான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில்கூடத் தைப்பொங்கல் கொண்டாடப் பெறுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் 'இந்து'க்களின் திருவிழாவாக அமைகிறது.

தமிழர் திருவிழா - இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே தமிழர்களின் பழைய மதங்களாகும்.

இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலைபெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டன.

தீபாவளி, தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா.  பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை.  தீபாவளியின் அடையாளமான வெடி, அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டுவரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். 

விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீ + ஆவளி) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை.  தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருக்கார்த்திகைத் திருவிழாவே.

நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப் பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று.  இந்த நாளே பிராமணிய சார்பாக எழுந்த கதையாகும். 

இந்த நாளே பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் இருபத்து நாலாம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும்.  தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக்கொண்டார்.  ஆகவே, பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.  எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும்.

விசயநகரப் பேரரசான, 'இந்து சாம்ராஜ்ஜியம்', தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.  இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பிராமணர்களைவிட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் 'பக்தி சிறத்தை'யுடன் கொண்டாடுகின்றனர். 

வட நாட்டு இந்துக்களிடமும் சமணர்களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர்.  எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ்நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும் சடங்காகும்.  தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இத்திரு விழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல 'கங்கா ஸ்நானம்' செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.  ஆகவே உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

'நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா' என்று பாரதிதாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.""

நன்றி: "பண்பாட்டு அசைவுகள்" நூல்.

திங்கள், அக்டோபர் 25, 2010

எது ஆதிக்க சாதி? ஒரு எளிய விளக்கம்!

தமிழ்நாட்டளவில் "பார்ப்பனர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சாதி, அருந்ததிய இனத்தவர் மற்றவர்களால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதி" -  இப்படி விளக்கம் கொடுப்பது எளிது. ஏனெனில் பார்ப்பனர்களை விட உயர்ந்தவர் என்று கூறிக்கொள்கிற சாதியோ, அருந்ததியினரைவிட தாழ்ந்தவர் என்று சுட்டப்படுகிற சாதியோ இருப்பதாகத் தெரியவில்லை.


நல்லவேளையாக மலைவாழ் பழங்குடிமக்கள் சாதியில் சிக்கவில்லை. (ஒரு சாதி உயர்ந்தது மற்றொரு சாதி தாழ்ந்தது என்பது எனது தனிப்பட்ட கருத்து அல்ல - மனிதர் அனைவரும் சரிசமமே.)


இந்த இரு பிரிவினர் தவிர வேறு எந்த ஒரு சாதியைப் பற்றி பேசினாலும் - அந்த சாதியை ஒருசிலர் "மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சாதி" எனவும், வேறு சிலர் "மற்றவர்களால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதி" எனவும் ஏட்டிக்குப் போட்டியான விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. 


எனவே, ஆதிக்க சாதி என்பது எது? என்பதற்கு விளக்கம் தேவைப்படுகிறது.


ஆதிக்கம் என்பது 'நீ தாழ்ந்தவன் - நான் உயர்ந்தவன்' என்பது மட்டுமல்ல. கூடவே கல்வி, வேலை, பொருளாதாரம், அதிகாரம் என அனைத்து நிலைகளிலும் வளம், வாய்ப்பு, அதிகாரத்தில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதே உண்மையான ஆதிக்கம்.


இன்றைய நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி - தமிழ்நாட்டின் "வளம், வாய்ப்பு, அதிகாரம்" அனைத்தும் அவரவர் சாதி மக்கள் தொகைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.


இந்த நிலைபாட்டை ஏற்று, சாதிவாரிக் கணக்கெடுப்பையும் வகுப்புவாரிப் பங்கீட்டையும் வரவேற்கும் சாதிகள் ஆதிக்கத்திற்கு எதிரான சாதிகள்.


சாதிவாரிக் கணக்கெடுப்பையும் வகுப்புவாரிப் பங்கீட்டையும் எதிற்கும் சாதிகள் ஆதிக்க சாதிகள், என்று அடையாளம் காண்பதே சரியாக இருக்கும்.

திங்கள், அக்டோபர் 04, 2010

ராமர் பிறந்த இடம்: அடிப்படை ஆதாரம் யாருக்கு வேண்டும்?

ராமர் பிறந்த இடம் - தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களின் கருத்து:

""நீதிபதி டி.வி.சர்மா வழங்கிய தீர்ப்பில 'சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம்தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டடம் எழுப்பப்பட்டது. அந்த இடம் ராமர் பிறந்த இடமாகக் கருதி இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளிலிருந்தே, அதை ஆன்மீகப் புனிதத் தலமாகக் கருதி ஆன்மிகப் பயணம் சென்று வருகிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.


ராமர் கிருத யுகத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும். இப்படி கற்பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.


இந்தத் தீர்ப்பைப் பார்க்கும்போது, சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது; ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, தென்னகத்தையே ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்காக நினைவுத்தூண் அமைந்த இடத்தையோ அறியமுடியவில்லையே என அகம் நொந்து வருந்ததானே வேண்டியுள்ளது.""

அய்யோ பாவம் முதல்வர். இதெல்லாம் ஒரு பெரிய வேலையா?


ஏதாவது ஒரு பிடிக்காதவரின் இடத்தக்காட்டி அங்குதான் ராஜராஜன் இறந்தான் என்று கட்டுக்கதையை கட்டிவிட்டால் போதாதா?


அப்புறம் இருக்கவே இருக்கு நீதிமன்றம் - மக்கள் நம்புகிறார்கள் என்று தீர்ப்பளித்துவிடாதா?


ஆனால் அவர் ஆதாரங்கள் குறித்து பேசுகிறார்:


""ஆராய்ச்சிகள் மூலமாக தொல்லியல் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் திராவிட நாகரீகம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்துத்தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றினைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரீகம் அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூடநம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாக செயல்பட்டிருக்கிறது.""

என்கிறார் முதலமைச்சர் கருணாநிதி.

தமிழனின் நிலை பரிதாபகரமானது. வரலாற்று ஆதாரங்களின்படி தமிழனுக்கு 3 ஆயிரம் ஆண்டு நாகரீகம் உண்டு. ஆனால், மூடநம்பிக்கை, கட்டுக்கதைகளின் படி ஆரியர்கள் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையவர்கள்.

3 ஆயிரம் பெரிதா? 17 லட்சம் பெரிதா?

அடிப்படை ஆதாரம் யாருக்கு வேண்டும்? அதுதான் மூட நம்பிக்கையே போதுமானது என்று "நீதிமன்றமே" சொல்லிவிட்டதே!