Pages

சனி, ஜூன் 16, 2012

பாவம் பிரணாப் முகர்ஜி: அவரது ஆசை நிறைவேற இனி வாய்ப்பே இல்லை!

பிரணாப் முகர்ஜி - ஒரு மிகச்சிறந்த ராஜதந்திரவாதி! அவரை இந்தியாவின் மாக்கியவல்லி, அரசியல் சாணக்கியர் என்றெல்லாம் சொல்லலாம் (சாணக்கியரும் மாக்கியவல்லியும் நல்லவர்களா? என்று கேட்காதீர்).

டிசம்பர் 11, 1935 அன்று பிறந்த பிரணாப் முகர்ஜி 1969 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அதுதொடங்கி இந்தியாவின் அதிகாரமிக்க பதவிகள் பலவற்றையும் வகித்த அவர் 2004 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவே இருந்தார். அதாவது ஒருமுறைக் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே அதிகாரத்தின் உச்சத்தில் நீண்ட நாள் இருந்தவர் அவர் எனலாம்.

இப்படி 35 ஆண்டுகள் தேர்தலை சந்திக்காமலேயே நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல உயர்ந்த பதவிகளிலும் இருந்த அவர் 2004 ஆம் ஆண்டு முதன் முதலாக மேற்கு வங்கத்தின் சாங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நிறைவேறாத கனவு - பிரதமர் பதவி!

அதிகாரத்தின் உச்சத்தில் நீண்டநாட்கள் இருந்தாலும் பிரணாப் முகர்ஜியின் நீண்டநாள் கனவென்பது பிரதமர் பதவிதான். 

Troubleshooter Pranab Mukherjee wants to become prime minister

என்றாவது ஒருநாள்  பிரதமர் இருக்கையில் அமரலாம் என்று காத்திருந்தவருக்கு - ஜனாதிபதி பதவியை அளித்ததன் மூலம் நிரந்தரமாக வழியை அடைத்துவிட்டனர் சோனியாவும் மன்மோகன் சிங்கும்.

அதுமட்டுமல்லாமல் - காங்கிரசு கட்சியிலும், அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் பிரணாப் முகர்ஜியின் ஆதிக்கம்தான் நீடித்தது. இன்னும் சொல்லப்போனால், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகிய மூன்று பேரும் யாராவது ஒருவரைக் கண்டு கொஞ்சமாவது பயந்தார்கள் என்றால் அது பிரணாப் மட்டும்தான். இப்போது காங்கிரசு கட்சி, அமைச்சரவை, நாடாளுமன்றம் என்கிற மூன்று இடங்களிலிருந்தும் அவரை வெளியேற்றிவிட்டார்கள்.

அதுமட்டுமல்ல, கட்சிப்பதவிக்கோ, அமைச்சர் பதவிக்கோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இனி ஒருபோதும் அவரால் வரவே முடியாது. ஒருமுறை குடியரசுத் தலைவர் ஆனால் அப்புறம் வேறு பதவிக்கு போவது மரபல்ல. அப்புறம் இனி எங்கே பிரதமர் ஆவது?

புகையிலை எதிர்ப்புக்கு எதிர்ப்பு

முந்தைய ஆட்சியில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் நலவாழ்வு அமைச்சராக இருந்த போது - புகையிலைப் பொருட்கள் மீது மண்டை ஓட்டுடன் கூடிய எச்சரிக்கைப் படத்தை சிகரெட் பெட்டியின் இரண்டு பக்கத்திலும் பாதியளவு இடத்தில் கொண்டுவர ஆணையிட்டார்.
ஆனால், அப்போதுதான் பிரணாப் முகர்ஜி முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். வாய்ப்புக்கேடாக இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான பீடி சுற்றுவோர் பிரணாப் முகர்ஜியின் சாங்கிப்பூர் தொகுதியில் இருந்தார்கள். சிகரெட் கம்பெனிகள் பீடித்தொழிலாளர்களைப் பிடித்தனர். அவர்கள் பிரணாப் முகர்ஜியைப் பிடித்தனர். பிரணாப் மன்மோகனைப் பிடித்தார். மன்மோகன் இந்த சிக்கலில் முடிவெடுக்கும் அமைச்சர்கள் குழுவை அமைத்து அதற்கு பிரணாப் முகர்ஜியைத் தலைவர் ஆக்கினார்.

அப்புறம் என்ன? சிகரெட் பெட்டியின் இரண்டு பக்கத்திலும் எச்சரிக்கை படம் என்பது ஒருபக்கம் ஆனது. பாதி இடம் என்பது 40% ஆக ஆனது. மண்டை ஓடு கைவிடப்பட்டது. கோரமான படம் நீக்கப்பட்டது. ஒன்றுக்கும் தொடர்பில்லாத தேள் படம் எச்சரிக்கைப் படம் ஆனது - பான்பராக போடுவோர் "தேள் படம் இருந்தால் அது 'ஸ்ட்ராங்கானது' என புரிந்து கொண்டனர்".
மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் கொண்டுவந்த எச்சரிக்கைப் படம்
பிரணாப் முகர்ஜி அவர்களால் மாற்றப்பட்ட எச்சரிக்கைப் படம்

தமிழினத்தின் சோகம்

புகையிலைக் கட்டுப்பாட்டிற்கு தடங்கல் ஏற்பட்டது என்பதை, தமிழ் இனத்துக்கு ஏற்பட்ட பேரழிவோடு கொஞ்சமும் ஒப்பிட முடியாது.

தமிழ்நாடு ஈழத்தமிழர்களுக்கு இழைத்த மாபெரும் வரலாற்று குற்றம் என்பது - பிரணாப் முகர்ஜியோடு தொடர்புடையது.

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட பேரிழப்பை தடுக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று வந்தது. அன்றுதான் ஈழத்தமிழர்கள் அழிப்பை இந்தியா இரண்டு வாரங்களில் தடுக்காவிட்டால், தமிழ்நாட்டின் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது என்று அப்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த எல்லா கட்சிகளும் ஒருமனதாக முடிவெடுத்தனர்.

2008 அக்டோபர் 14:
End Lanka war in two weeks, else TN MPs will quit: Karunanidhi

அந்த ஒரு முடிவுமட்டும் நிறைவேற்றப் பட்டிருந்தால் - இலங்கையில் மாபெரும் மனிதப் பேரழிவு நிகழ்ந்திருக்காது.

ஆனால். அக்டோபர் 26 அன்று காலை பிரணாப் முகர்ஜி இலங்கையின் பசில் ராஜபட்சேவுடன் பேச்சு நடத்தினார். பின்னர் சென்னை வந்து கலைஞரிடம் மூன்று மணி நேரம் பேசினார். பின்னர் - திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள் - என்று பிரணாப் முகர்ஜி அறிவித்தார். அதுமட்டுமல்ல, ஈழத்தில் நடக்கும் போரையும் தடுக்க மாட்டோம் என்றும் அவர் அறிவித்தார்.

2008 அக்டோபர் 26:
Karunanidhi will not insist on MPs' resignation: Mukherjee 

DMK resignation threat blows over

ஈழத்தமிழினம் பேரழிவில் இருந்து காப்பாற்றப்படும் கடைசி வாய்ப்பு 'எதற்காகவோ' கைவிடப்பட்டது. இந்த வரலாற்று பெரும்பழி ஒருநாளும் மறையாது.


3 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அருள்

பிரணாப் இந்தியாவின் முதல் குடிமகன் என்ற பொறுப்பில் பெருமையுடன் அமரப் போகிறார். அவரது 44 ஆண்டு கால நாடாளுமன்ற உறுப்பினர் பணியின் நிறைவே இப்பதவிக்கு உரியவராய் ஆவரை ஆக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி அவரை ஒரே பரிந்துரையில் நாடாளுமன்றம், அமைச்சரவை, கட்சி ஆகிய மூன்று அமைப்புகளிலும் இருந்து ஒதுக்கி விட்டது. நல்ல பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

குழலி / Kuzhali சொன்னது…

//2008 அக்டோபர் 14:
End Lanka war in two weeks, else TN MPs will quit: Karunanidhi//
What stops PMK not to quit from government and resign their MPs due to Eelam issue.

பாமகவை அமைச்சரவையிலிருந்து வெளியேறவும், தம் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைக்கவும் செய்யாமல் தடுத்தது எது? பாமக அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தும், ஆறு எம்பிகளை ராஜினாமா செய்தும் இருந்திருந்தால் அது மற்ற கட்சிகளை குறிப்பாக திமுகவை பெரும் நெருக்கடியினுள் தள்ளி போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்க இயலும். இதை செய்யாமல் கடைசி வரை அமைச்சரவையில் குந்திக்கொண்டிருந்துவிட்டு கருணாநிதியை ராஜினாமா செய்ய சொல் நாங்கள் செய்கிறோம் என்று வியாக்கியானம் பேசிவிட்டு இன்று கருணாநிதியை விமர்சித்து இது மட்டும் நடந்திருந்தால் அது மட்டும் நடந்திருந்தால் அழிவை தடுத்திருக்கலாம் என வேறு ஆட்கள் பேசலாம் ஆனால் பாமக காரங்க பேசக்கூடாது. கருணாநிதி ஏ1 என்றால் அமைச்சரவையிலும் கடைசி வரை பங்குவகித்து, எம்பிக்கள் ராஜினாமா நாடகத்தில் கருணாநிதி பின்னால் ஒளிந்து கொண்ட பாமக ஏ2

அருள் சொன்னது…

@குழலி / Kuzhali கூறியது...

பாமக ஏ2'வா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இந்த விடயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒரு குற்றவாளி கட்சி என்பதுதான் எனது கருத்தும்.

அதுமட்டுமல்ல, ஈழத்தமிழர்களைத் தவிர்த்துவிட்டு மற்ற எல்லா தமிழர்களும் குற்றவாளிகளே. குறிப்பாக, தமிழ்நாட்டுத் தமிழர்கள்தான் முதன்மைக் குற்றவாளிகள்.

ஏசுவைக் கொன்றது ரோமானியர்களா? பிலாத்துவா? யூதர்களா? என்பது போல - இறுதிப்போரின் அழிவுக்கு காரணம் சிங்களவர்களா? ராசபட்சேவா? தமிழ்நாட்டுத் தமிழர்களா? என்கிற கேள்வி வரலாற்றில் நீடிக்கும்.