மனிதன் சுற்றுச்சூழலில் கணிசமான பாதிப்பினை ஏற்படுத்தும்போது இயற்கை மனிதனை திருப்பித்தாக்குகிறது. மனிதத் தவறுகளுக்கு இயற்கை சீற்றங்கள் ஒருவிதமான தண்டனை என்றால், பேரழிவாக மாறும் தொற்றுநோய்கள் மறுவிதமான தண்டனையாக மாறிவருகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டை இப்போது அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் மனித தவறுகளுக்கு இயற்கை தரும் தண்டனையாகவே அமைந்துள்ளது.
சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதனை தொந்தரவு செய்யாமல் ஆப்பிரிக்கக் காடுகளில் இருந்தது 'ஏடீஸ் எகிப்தி' (Aedes aegypti) எனும் கொசு. ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்ந்தோர் தண்ணீரை வீடுகளில் பிடித்து வைத்த போது அந்த கொசு வீட்டுக்குள் வாழப்புகுந்தது. மனிதர்களோடு வாழக் கற்றுக்கொண்ட பின்னர் மனித ரத்தமே தனது முதன்மை உணவு என்ற நிலையை அடைந்தது.
ஆப்பிரிக்க கருப்பின மக்கள் அமெரிக்காவுக்கு அடிமைகளாக விற்கப்பட்ட போது அவர்களுடன் ஏடீஸ் எகிப்தி கொசுவும் அங்கு சென்றது. கடல் பயணங்கள் அதிகரித்ததன் விளைவாக அது உலகின் பல்வேறு துறைமுக நகரங்களுக்கும் அங்கிருந்து உள்நாடுகளுக்கும் பரவியது. இதுதான் டெங்கு பரவியதன் தொடக்கமாகும். பின்னர் இரண்டாம் உலகப்போரின் போது இராணுவ நடமாட்டத்தால் மீண்டும் டெங்கு பரவியது. குறிப்பாக தெற்காசிய பகுதிகளை பெருமளவு தாக்கியது.
இப்படியாக, காட்டில் இருந்த சாதாரண கொசுவை மனித நடவடிக்கைகளே டெங்குவாக மாற்றின. மனிதனால் ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் இப்போது டெங்குவை மீண்டும் ஒரு பேராபத்தாக வளர்த்துள்ளன.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் டெங்கு மீண்டும் புதிய வடிவம் எடுப்பதற்கு இரண்டு சுற்றுச்சூழல் சிக்கல்களே முதன்மைக் காரணமாக உள்ளன. ஒன்று, புவி வெப்பமடைவதால் டெங்கு தாக்குதல் அதிகரிக்கிறது. இரண்டாவதாக, மனிதர்கள் குப்பையைக் கையாளுவதில் காட்டும் அக்கறையின்மை டெங்குவை தீவிரமாக்குகின்றது. ஆக, இயற்கைக்கு துரோகமிழைத்துவிட்டு மனிதன் நிம்மதியாக வாழமுடியாது என்பதை டெங்கு மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துள்ளது.
டெங்கு என்றால் என்ன?
டெங்கு காய்ச்சல் என்பது மனிதனிடமிருந்து கொசுவுக்கும் கொசுவிலிருந்து மனிதனுக்குமாக பரவும் ஒரு தொற்று நோயாகும். டெங்கு வைரஸ் எனப்படும் தீநுண்மத்தால் இந்நோய் தாக்குகிறது. டெங்கு வைரசில் நான்கு வகைகள் உள்ளன. இவற்றை மனிதர்களிடையே பரப்பும் ஊடகமாக செயல்பட்டு ஏடீஸ் வகைக் கொசுக்கள் நோயைப் பரப்புகின்றன. டெங்கு வைரஸ் நேரடியாக ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு தொற்றுவதில்லை.
இந்நோய் வந்தால் கடுமையான காய்ச்சலுடன் கடுமையான மூட்டுவலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்றவை ஏற்படும். மிகுந்த வலி ஏற்படுத்துவதால் இது எலும்பை முறிக்கும் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது.
டெங்கு நோயின் தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலோர் அறிகுறிகளின்றிக் காணப்படுவர், அல்லது சாதாரண காய்ச்சல் மட்டுமே இருக்கும். மற்றவர்களுக்கு திடீரென அதிகரித்துச் செல்லும் கடுமையான காய்ச்சல், தலைவலி, கண் பின்பகுதி வலி, உடல்வலி, எலும்பு வலி, களைப்பு, வாந்தி, குமட்டல், தொண்டைப்புண், சுவையில் மாற்றம், தோல் தடித்து சிவப்படைதல் - இப்படிப் பல பாதிப்புகள் ஏற்படும்.
டெங்கு காய்ச்சல் தீவிரமடையும் போது அது டெங்கு குருதிப்போக்கு காய்ச்சல் (Dengue Haemorrhagic Fever - DHF) எனும் நிலையை அடையும். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும். இந்த தீவிர நிலையின் போது கடுமையான காய்ச்சலுடன் தோலின் சில பகுதிகள் இரத்தமாக மாறுதல், ஈறுகளில் இரத்தக்கசிவு, மூக்கில் இரத்தக்கசிவு, இரத்தத்துடன் வாந்தி எனும் கடுமையான நிலை ஏற்படும்.
மிக அரிதாக டெங்கு அதிர்ச்சி நோய் (Dengue Shock Syndrome - DSS) என்பதும் தாக்கக்கூடும். இது மிகக்கடுமையானது என்றாலும் ஏற்படும் வாய்ப்பு மிகமிகக் குறைவுதான்.
டெங்கு ஆபத்தானதாகக் கருதப்படுவது ஏன்?
உலகின் வெப்பமண்டல நாடுகளில் கொசுவால் ஏற்படும் தொற்று நோய்களில் டெங்குதான் மிகப்பெரிய தொற்று நோயாகக் கருதப்படுகிறது. டெங்குவின் தாக்குதலும் அதனால் ஏற்படும் இழப்பும் அதிகமாகி வருவதால் அதுகுறித்த அச்சம் அதிகமாக்கியுள்ளது. புவி வெப்பமடைவதால் டெங்கு தாக்கும் பகுதிகள் அதிகரித்து வருகின்றன. அதன் வீரியமும் அதிகமாகி வருகிறது.
டெங்கு காய்ச்சலால் (Dengue Fever) பாதிப்படைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. 1955 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் ஆயிரம் பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்திடம் பதிவு செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டில் 22 லட்சம் பேராக அதிகரித்துவிட்டது.
இப்போது உலகம் முழுவது 128 நாடுகளில் சுமார் 397 கோடி பேர் டெங்குவால் பாதிக்கப்படும் வாய்ப்புடன் வாழ்கின்றனர். இவர்களில் 5 கோடி முதல் 10 கோடி பேர் வரை ஒவ்வொரு ஆண்டும் டெங்குவால் தாக்கப்படுகின்றன்ர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் டெங்கு தாக்குதல் 30 மடங்கு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
டெங்குவின் தீவிர நிலையான டெங்கு குருதிப்போக்கு காய்ச்சலால் (Dengue Haemorrhagic Fever) பதிப்படைந்து ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் மருத்துவ மனைகளில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களில் 95 விழுக்காட்டினர் 15 வயதுக்கு கீழான குழந்தைகளாகும். அதாவது டெங்குவால் அதிக அளவில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.
டெங்கு குருதிப்போக்கு காய்ச்சலால் பாதிப்படைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரில் ஆயிரம் பேரில் 25 பேர் இறக்கும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை மருத்துவமனைகளில் சேர்க்காமல் விட்டுவிட்டால் ஆயிரம் பேரில் 200 பேர் வரை இறக்கும் ஆபத்து உள்ளது.
இத்தனைக் கொடிய நோயாக இருந்த போதிலும், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க உரிய மருந்து எதுவும் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதுபோல டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசியும் எதுவும் இல்லை.
டெங்கு பரவுவது எப்படி?
ஏடீஸ் எகிப்தி (Aedes aegypti) மற்றும் ஏடீஸ் அல்போபிக்டஸ் (Aedes albopictus) எனும் இரண்டு கொசுக்கள்தான் டெங்குவைப் பரப்புகின்றன. அதிலும் ஏடீஸ் எகிப்தி கொசுதான் மிகப்பெருமளவில் டெங்குவைப் பரப்புகிறது. ஏடீஸ் கொசுக்களுக்கு புலிக்கொசு என்ற பெயரும் உண்டு. ஏடீஸ் வகைக் கொசு பொதுவாக பகலில் மட்டுமே கடிக்கிறது. அதிலும் குறிப்பாக சூரிய உதயத்தில் தொடங்கி காலை வேளையிலும், மாலையில் சூரியன் மறைவதற்கு சிலமணி நேரம் முன்பிருந்தும், சூரியன் மறைந்த பின் இரண்டு மணி நேரம் வரையிலும் வரையிலும் கடிக்கிறது. அதன் பிறகு வெளிச்சம் இல்லாத இரவில் டெங்கு கொசு கடிப்பது இல்லை. இதனால் ஏடீஸ் கொசுக்களை ஆங்கிலத்தில் Day Biter என்றும் அழைக்கின்றனர்.
டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் நல்ல நீரில்தான் உற்பத்தியாகின்றன. கழிவு நீர், சாக்கடைப் போன்ற இடங்களில் இவை உற்பத்தியாவது இல்லை. இந்த வகைக் கொசுக்கள் பெரும்பாலும் வீடுகளுக்கு உள்ளே மறைவான பகுதிகளிலும், கட்டடங்களுக்கு உள்ளேயும் வசிக்கின்றன. சுமார் நான்கு வார காலம் மட்டுமே உயிர்வாழும் இவை உற்பத்தியான இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு மட்டுமே செல்கின்றன.
ஏடீஸ் வகைக் கொசுக்களில் ஆண் கொசு மனிதனைக் கடிப்பதில்லை. பெண் கொசு மட்டுமே கடிக்கிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட மனிதர்களைக் கடிக்கும் கொசுவிற்கு டெங்கு வைரஸ் தொற்றுகிறது. அந்தக் கொசு மற்ற மனிதர்களைக் கடிப்பதால் டெங்கு மற்றவர்களுக்கு பரவுகிறது. ஒரே கொசு ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்களைக் கடிப்பதால், பலருக்கும் நோய்த்தொற்றுகிறது.
டெங்குவைப் பரப்பும் சுற்றுச்சூழல் சீர்கேடு!
டெங்குவைப் பரப்புவதில் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான் முதன்மைக் காரணமாக உள்ளன. குறிப்பாக குப்பை மற்றும் துப்புரவினை முறையாகக் கையாளாதக் காரணத்தினாலேயே டெங்கு பரவுகிறது.
கொசுவின் வாழ்க்கைச் சுழற்சியில் முட்டை, லார்வா, கூட்டுப்புழு, வளர்ந்த கொசு எனும் நான்கு நிலைகள் உள்ளன. இவற்றில் ஏடீஸ் எகிப்தி கொசுவின் முதல் மூன்று நிலைகளின் வளர்ச்சிக்கு மனிதனே காரணம்.
ஏடீஸ் எகிப்தி கொசு முட்டையிடுவதும், இனப்பெருகமடைவதும் முழுக்க முழுக்க மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களில்தான். அதாவது ஆறு, குளம், ஏரி, மரம் என இயற்கையான எந்த இடத்திலும் டெங்குவைப் பரப்பும் கொசு உற்பத்தியாவது இல்லை.இதற்கு மாறாக செயற்கையான பொருட்களில் மட்டுமே இக்கொசு உற்பத்தியாகிறது.
பூந்தொட்டி, தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் குவளை எனப்படும் நெகிழிக் குவளை, காகிதக் குவளை, வாகன டயர் எனப்படும் வட்டகை, பலவிதமான டப்பாக்கள், குளிர்பான புட்டி, கேன் எனப்படும் தகரக்குவளை, கண்ணாடிக் குவளை, தேங்காய் சிரட்டை, தண்ணீர் வாளி - இப்படி மனிதர்களால் பயன்படுத்தப்படும் பொருட்களில் மட்டுமே ஏடீஸ் எகிப்தி கொசு முட்டையிட்டு உற்பத்தியாகிறது. குறிப்பாக வீடுகளுக்கு உள்ளேயும் வீடுகளைச் சுற்றிலும் கவனிக்காமல் விடப்படும் இத்தகையப் பொருட்களில் தண்ணீர் தேங்கும் போது அதில் ஏடீஸ் எகிப்தி கொசு உற்பத்தியாகியாது.
நகர்ப்புறங்களில் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தாமல் விட்டுவிடுவதும், வீடுகளில் குப்பைகளைக் கண்டு கொள்ளாமல் விடுவதும், பள்ளி, அரசு அலுவலகம் போன்ற இடங்களில் குப்பை தேங்குவதும் டெங்கு பரவுவதற்கு மிக முக்கியமான காரணம் ஆகும்.
இங்கெல்லாம் தேங்கிக் கிடக்கும் குப்பைகளில் பிளாஸ்டிக் குவளை, காகிதக் குவளை, வாகன டயர், டப்பாக்கள், குளிர்பான பாட்டில், கேன், கண்ணாடிக் குவளை என தண்ணீர் தேங்கும் பொருட்கள் மிகுதியாக உள்ளன. ஒரு சிறிய மழையின் போது இவற்றில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இப்படி தேங்கும் நன்னீரில்தான் ஏடீஸ் எகிப்தி கொசு முட்டையிட்டு, பெருமளவில் கொசு உற்பத்தியாகிறது.
எனவேதான், நகரங்கள், சிறு நகரங்கள், நகர்ப்புறங்களை ஒட்டியிருக்கும் கிராமங்கள் - என நகரம் சார்ந்த பகுதிகளையே டெங்கு அதிகமாக தாக்குகிறது.
நகரமயமாதலின் கேடு
திட்டமிடாத, கட்டுப்பாடற்ற நகர்ப்புற வளர்ச்சியினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குப்பை மேலாண்மை, துப்புரவு வசதிகள், தண்ணிர் வழங்குதல், வடிகால் வசதிகள் என எல்லாமும் முறையாக இயங்காமல் போய்விடுகின்றன. அரசாங்கங்கள் இக்குறைபாடுகளைக் களைவதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை. இந்த சூழல்தான் டெங்கு உருவாக முதன்மைக் காரணம் ஆகும்.
குழாய் மூலம் வீட்டிற்கே நேரடியாக தண்ணீர் வழங்கப்படும் நாடுகளில் குடிநீர் தேங்கி அதில் கொசு உற்பத்தியாகும் சிக்கல் இல்லை. இதற்கு மாறாக, முறையாக தண்ணீர் வழங்கப்படாத இந்திய சூழலில் - மக்கள் திறந்த பாத்திரங்களில் தண்ணீரை சேமிக்கின்றனர். நகர்ப்புறங்களில் தண்ணீர் வழங்கப்படும் இடத்திலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனாலெல்லாம் டெங்கு கொசு பெருக்கமடைகிறது. அவ்வாறே, வீடுகளில் முறையாக மூடப்படாத மேல்நிலைத் தொட்டிகளும் கொசு வளர வழிசெய்கின்றன.
நகர்ப்புறங்களில் குப்பை தூக்கி எறியப்படக்கூடாது. அவை உள்ளாட்சி அமைப்புகளால் முறையாக சேகரிக்கப் பட்டு - முறையாக மறுசுழற்சி செய்யப்படவும், கழித்துக்கட்டப்படவும் வேண்டும் என்று இந்திய சட்டம் சொல்கிறது. ஆனால், அவ்வாறு ஒரு இடத்திலும் நடப்பது இல்லை. வீடுகளில் உருவாகும் குப்பை வீடுவீடாக சேகரிக்கப்பட்டு, மக்கும் குப்பை உரமாகவும் மக்காத குப்பையில் பயனுள்ள பகுதிகள் மறுசுழற்சிக்கும் அனுப்பபட வேண்டும். எஞ்சிய குப்பை அறிவியல் ரீதியில் கழித்துக்கட்டப்பட வேண்டும் - இப்படியாக நகரங்கள் குப்பையில்லாத பகுதிகளாக சுத்தமாக இருக்க வேண்டும் என்கிற நியாயமான நிலை ஒரு இடத்திலும் நடைமுறையில் இல்லை. டெங்கு பெருங்கேடாக மாறுவதற்கு இது ஒரு முதன்மைக் காரணம் ஆகும்.
குப்பை அகற்றப்படாமல் இருப்பது டெங்கு மீண்டும் மீண்டும் தாக்குவதற்கு காரணமாக இருக்கிறது. எவ்வாறெனில், ஏடீஸ் எகிப்தி கொசு ஒரு நேரத்தில் 120 முட்டைகள் வரை இடுகிறது. முட்டைகளை தண்ணீர் வரம்பிற்கு சற்று மேலாக இட்டு வைக்கிறது. இவை 48 மணி நேரத்தில் கருவுறு நிலையை அடைகின்றன. அதன் பிறகு எப்போது தண்ணீரில் முட்டை மூழ்குகின்றதோ, அப்போதுதான் அவற்றிலிருந்து புதிய கொசு வெளியே வருகிறது. இவ்வாறு தண்ணீருக்காக கொசு முட்டைகள் சுமார் இரண்டு ஆண்டுகள் வரைக்கூட காத்திருக்கின்றன. ஆக, தெருவோரத்தில் கிடக்கும் குப்பையில் இருக்கும் முட்டை பல மாதங்களாக அப்படியே இருந்து அந்த குப்பை மழைக்காலத்தில் தண்ணீரில் மூழ்கும்போது கொசு உற்பத்தியாகிறது.
நகர்ப்புறங்களில் குப்பை சேகரிக்கப்பட்டு அவை முறையாகக் கழித்துக்கட்டப்பட்டால் இவ்வாறு டெங்கு கொசு மீண்டும் மீண்டும் உற்பத்தியாவதைக் குறைக்க முடியும்.
சுற்றுச்சூழலுக்கு எதிரான ஊதாரித்தனமான நுகர்வுப் பழக்கமும் டெங்குவை உருவாக்குவதில் ஒரு காரணமாக இருக்கிறது. குறிப்பாக, மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் பலவும் பிளாஸ்டிக் டப்பாக்களில் வருகின்றன. குளிர்பானங்கள் பிளாஸ்டிக் புட்டிகளில் வருகின்றன. தண்ணீர் கூட பிளாஸ்டிக் புட்டிகளில் விற்கப்படுகின்றன. இவை எல்லாமும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட பின்பு - டெங்கு உருவாகும் இடமாக மாறி விடுகின்றன. அவ்வாறே, கழற்றி வீசப்படும் கார்களின் டயர்கள் ஒரு மிக ஆபத்தான டெங்கு உற்பத்தி மையமாக இருக்கின்றன.
மொத்தத்தில், சுற்றுச்சூழலுக்கு எதிரான மனிதனின் நடவடிக்கைகளே டெங்குவை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்றால் அது மிகையல்ல.
டெங்குவை ஒழிப்பது எப்படி?
தனிமனிதர்களுக்கு டெங்கு தொற்றாமல் தடுக்க தடுப்பு மருந்து எதுவும் இல்லை. அவ்வாறே, டெங்கு தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மருந்து ஏதும் இல்ல. எனவே, டெங்குவை ஒழிக்க ஒரே வழி, அதற்கு காரணமான ஏடீஸ் எகிப்தி கொசுவை ஒழிப்பதுதான்! டெங்கு பரவும் காலங்களில் மட்டும் மேம்போக்கான நடவடிக்கைகளை எடுப்பது கொசுவை ஒழிக்க போதுமானது அல்ல. திட்டமிட்ட நீண்டகால நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது அவசியமாகும்.
ஏடீஸ் எகிப்தி கொசுவை ஒழித்துக்கட்டி உலகில் ஏற்கனவே சில நாடுகள் சாதித்துள்ளன. சிங்கப்பூர் நாடு 1973 இல் தொடங்கி 1989க்குள் இக்கொசுவை ஒழித்துள்ளது. கியூபா நாடு 1982 இல் தொடங்கி 1997க்குள் இக்கொசுவை ஒழித்துள்ளது. அதே போன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் ஏடீஸ் எகிப்தி கொசுவை ஒழிப்பதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் வியூகம் 2012 - 2020
டெங்குவை 2012 - 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடையே கட்டுப்படுத்துவதற்கான ஒரு வியூகத்தை உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ளது (Global strategy for dengue prevention and control 2012 - 2020). இந்த வியூகத்தின்படி அனைத்து துறையினரும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கூட்டாக செயலாற்றுவதன் மூலம் டெங்குவைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டும், எல்லா நிலைகளிலும் ஒருங்கிணந்த முறையில் ஏடீஸ் எகிப்தி கொசுவை ஒழிப்பது மற்றும் நீடித்திருக்கும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வியூகத்தின் நுட்பங்களாக ஐந்து நடவடிக்கைகளை முன்வைக்கிறது உலக சுகாதார நிறுவனம். அவை:
1. நோய் அறிதல் மற்றும் நோயர் மேலாண்மை - அதாவது, டெங்கு தொற்றியதை உடனுக்குடன் கண்டறிந்து, உடனுக்குடன் உடல் வறட்சி ஏற்படாமல் தடுத்தல் உள்ளிட்ட முறையான சிகிச்சை தொடங்கப்பட்டால் டெங்கு உயிரிழப்பை முற்றிலுமாக தடுத்துவிட முடியும். (தமிழ்நாட்டில் இதுவே உயிரழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. டெங்கு தாக்குதலை உடனுக்குடன் கண்டறிய போதுமான வசதிகள் இல்லை).
2. ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் தீடிர் நிகழ்வு தயார்நிலை - அதாவது டெங்கு தொற்றுவதற்கான அறிகுறிகள் எங்காவது தென்படுகிறதா என்பதை தொடர்ச்சியாகக் கண்காணித்து வரவேண்டும். அவ்வாறே, டெங்கு ஒர் தீடிர் நிகழ்வாக மாறினால் அதனை சமாளிப்பதற்கான முன்னேற்படுகள் தயார்நிலையில் இருக்க வேண்டும் (தமிழ்நாட்டின் நிலை இதற்கு நேர் மாறானது. இங்கு டெங்கு இல்லை என்று மறுப்பதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர்).
3.ஒருங்கிணந்த முறையில் ஏடீஸ் எகிப்தி கொசுவை ஒழித்தல் - டெங்குவை ஒழிப்பதில் மிக முதன்மையான நடவடிக்கை இதுதான். நீண்ட கால நோக்கில் முற்றிலுமாக டெங்கு கொசுவை ஒழிக்கத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
4. தடுப்பூசிக் கண்டறிதல் - டெங்கு ஒரு தீவிரமான தொற்று நோயாகக் கருதப்பட்டு அறுபது ஆண்டுகள் கடந்த பின்னரும் அதற்கு தடுப்பூசி எதுவும் கண்டறியப்படவில்லை. விரைவில் ஒரு தடுப்பு மருந்தை கண்டறியும் உலகளாவிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5. மேற்கண்ட நான்கு நிலைகள் குறித்தும், தேவையான நுட்பங்கள் குறித்தும் அடிப்படை மற்றும் செயல்பாட்டு ரீதியான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- மேற்கண்ட ஐந்து வகையான நுட்பங்களையும் முறையே பிரச்சாரம் மற்றும் நிதிவள ஆதாரங்களைத் திரட்டுதல், எல்லா தரப்பினரும் எல்லா துறையினரும் ஒன்றிணைந்து செயலாற்றுதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பயிற்சி அளித்தல் ஆகிய வழிகளில் செயல்பட்டு நிறைவேற்ற வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
தமிழ்நாட்டின் தேவை
உலக சுகாதார நிறுவனம் முன்வைத்துள்ள வியூகத்தில் 'தடுப்பூசிக் கண்டறிதல்' என்கிற ஒன்றைத்தவிர மற்ற நான்கு நுட்பங்களும் தமிழ்நாடளவில் முழுவேகத்தில் செயல்படுத்தப்பட வேண்டியனவாகும். குறிப்பாக, 'ஒருங்கிணந்த முறையில் ஏடீஸ் எகிப்தி கொசுவை ஒழித்தல்' என்பதில் தமிழ்நாட்டு மக்கள் அதிக கவனம் செலுத்தியாக வேண்டும்.
அந்த வகையில், தமிழ்நாட்டை டெங்கு இல்லாத மாநிலமாக ஆக்கும் வகையிலான ஒரு உடனடி திட்டத்தை மக்கள் பங்கேற்புடன் உருவாக்க வேண்டும். அதனை அனைத்து துறையினர், அனைத்து தரப்பினர் ஒத்துழைப்புடனும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அதுவே இப்போதைய உடனடித் தேவை ஆகும்.
ஆதாரம்:
1. Global Strategy for Dengue Prevention and Control 2012-2020, , World Health Organization , Geneva 2012
2. Comprehensive Guidelines for Prevention and Control of Dengue and Dengue Haemorrhagic Fever, World Health Organization, Geneva 2011
3. Dengue Guidelines for Diagnosis, Treatment, Prevention and Control, WHO & the Special Programme for Research and Training in Tropical Diseases, Geneva 2009
4. Lessons Learned during Dengue Outbreaks in the United States, 2001–2011, Emerging Infectious Diseases, CDC, USA 2012
5. Dengue Prevention and 35 Years of Vector Control in Singapore, Emerging Infectious Diseases, CDC, USA 2006
6. Prevention and Control of Aedes aegypti-borne Diseases: Lesson Learned from Past Successes and Failures, Asia Pacific Journal of Molecular Biology and Biotechnology, Malaysia 2011
7. Refining the Global Spatial Limits of Dengue Virus Transmission by Evidence-Based Consensus,PLOS Neglected Tropical Diseases, USA 2012
8. ASEAN Dengue Day: One Year On, WHO & ASIAN, Jakarta, Indonesia 2012

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக