Pages

திங்கள், டிசம்பர் 03, 2012

இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளே சமுதாய கொந்தளிப்புக்கு காரணம்: தீர்வு என்ன?

தமிழ் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் வளரிளம் பருவ (adolescence) இளம்பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை சம்பவங்கள் சமுதாயத்தில் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.  இதன் காரணமாகவே சில இடங்களில் சாதி மோதல்கள் நடந்துள்ளன. இத்தகைய மோதல்கள் இனியும் தொடராமல் தடுக்க "இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை" ஒழிக்கப்பட வேண்டும்.

வன்பேச்சு (Verbal aggression): அவமதிக்கும் பேச்சுக்கள் மூலம் இளம்பெண்கள் அவமதிக்கப்படுகின்றனர். துன்புறுத்தப்படுகின்றனர்.

தாக்குதல் (Physical attacks): அடிக்கப்படலாம் என்கிற பயம், சடையைப் பிடித்து இழுத்தல், வண்டிகள் மூலம் மோதுதல், கையைப் பிடித்து இழுத்தல், மேலே மோதுதல், முட்டையால் அடித்தல் போன்ற பல வடிவங்களிலும் இளம் பெண்கள் தாக்கப்படுகின்றனர்.

பாலியல் தொல்லை (Sexual aggression): ஆபாச பேச்சுக்கள், பாலியல் துன்புறுத்துதல்கள் நடக்கின்றன.

காதல் நாடகம் : ஒரு தெளிவான முடிவெடுக்க இயலாத பதின்வயது பெண்கள் 'சினிமாக் காதல்' வலையில் திட்டமிட்டு வீழ்த்தப்படுகின்றனர். காதல் நாடகம், நாடகத் திருமணம், பணம் பறிப்பு, பாலியல் வன்கொடுமை ஆகிய பல கேடுகளுக்கு நாடகக் காதல் திருமணங்கள் வழிவகுக்கின்றன.

ஆட்கடத்தல் (trafficking): இளம்பெண்கள் கடத்திச் செல்லப்படுகின்றனர்.

- இவ்வாறாக பல்வேறு வடிவங்களில் நடக்கும் "இளம்பெண்களுக்கு எதிரான வன்முறையே" வடக்கு மற்றும் மேற்கு தமிழ்நாட்டின் அண்மைக்கால சாதி மோதல்களுக்கு அடிப்படைக் காரணமாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, பள்ளி, கல்லூரி செல்லும் பதின்வயது பெண்களின் காதலும் அதனால் ஏற்படும் கட்டைப் பஞ்சாயத்தும் சச்சரவும் ஒரு குறிப்பிடத்தக்க சர்ச்சையாக மாறியுள்ளது. வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண்ணை மீட்டுத்தருவதாக சில அமைப்பினர் பேரம் பேசுவதும், அப்படியே பணம் கொடுத்து மீட்பதுமான நிகழ்வுகள் நடந்துள்ளன. இதில் சில இடங்களில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

கொங்கு பேரவையினர் கலப்புத் திருமண எதிர்ப்பு இயக்கம் தொடங்கியதற்கும், வன்னியர் சங்கத் தலைவர் திரு. ஜெ. குரு அவர்கள் மாமல்லபுரம் வன்னியர் மாநாட்டில் காதல் நாடகக் கலப்புத் திருமணத்திற்கு எதிராகப் பேசியதற்கும் அடிப்படைக் காரணம் இதுதான். திட்டமிட்டு காதல் நாடகம் நடக்கிறது. பதின்வயதிலுள்ள பள்ளி, கல்லூரிப் பெண்கள் இதில் பலியாகின்றனர், பணம் பேரம் பேசப்படுகிறது, பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன, திருமணம் ஆன குறுகிய காலத்தில் குழந்தையுடன் பெண் துரத்தப்படுகிறார் - என்றெல்லாம் பரவலாக பேசப்படுகிறது. பாதிக்கப்படுவோர் இளம் பெண்கள் என்பதால், இத்தகைய நிகழ்வுகள் பெரும்பாலும் மூடி மறைக்கப்படுகின்றன.

இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை - மிகப்பெரிய மனித உரிமை மீறல்.

பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களின் கீழ் இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது ஒரு மிகப்பெரிய மனித உரிமை மீறலாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது - பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights), பெண்களுக்கு எதிரான அனைத்து ஒதுக்குதல்களையும் ஒழிப்பதற்கான பன்னாட்டு உடன்படிக்கை (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women - CEDAW), குழந்தைகள் உரிமை குறித்த பன்னாட்டு உடன்படிக்கை (Convention on the Rights of the Child) ஆகிய பன்னாட்டு சட்டங்களுக்கு எதிரானதாகும்.

உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ தீங்கு அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது அவ்வாறு ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ள எந்த ஒரு நடவடிக்கையும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகும். ("violence against women" means any act of gender based violence that results in, or is likely to result in, physical, sexual or psychological harm or suffering to women, including threats of such acts, coercion or arbitrary deprivation of liberty)

ஐக்கிய நாடுகள் அவையின் சார்பில் "இளம்பெண்களின் உரிமைக்கான ஐநா செயல்திட்ட கூட்டமைப்பு" (UN Adolescent Girls Task Force) எனும் அணி 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பிரகடனத்தில், உலகின் அனைத்து நாடுகளும் இளம்பெண்களின் உரிமையைக் காக்கும் வகையில் ஐந்து வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அவற்றில், "இளம்பெண்களை வன்முறையிலிருந்து பாதுகாக்க வேண்டும்" (Keep them free from violence) என்று முதன்மையாக கோரப்பட்டுள்ளது. (இளம் பெண் கல்வி, இளம் பெண் உடல் நலம் உள்ளிட்டவை மற்ற கோரிக்கைகளாகும்)

இளம்பெண்களுக்கு எதிரான வன்முறையின் கொடும் விளைவுகள்

பின் வளரிளம் பருவம் (Late adolescence) எனப்படும் 15 வயது முதல் 19 வயது வரையிலான காலம், மனித வளர்ச்சிக்கான மிக முக்கியமான காலகட்டம் என்று கூறுகிறது யுனிசெஃப் அமைப்பின் "வளிரளம் பருவம் - வாய்ப்புகளின் சகாப்தம்" (Adolescence: An Age of Opportunity) எனும் அறிக்கை. உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி என இரண்டும் உச்சக்கட்டத்தை எட்டும் முக்கியமான காலகட்டம் இதுவாகும்.

பின் வளரிளம் பருவத்தில் ஆண்களை விட பெண்களே அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். உடல், மனம், உணர்ச்சி என அனைத்திலும் ஏற்படும் வேகமான மாற்றம் இளம்பெண்களை ஆபத்தான நிலையில் வைக்கிறது. இந்த பருவத்தை முறையாக பயன்படுத்துவதன் மூலமே அவர்களின் எதிர்காலம் அமையும் என்கிறது அந்த அறிக்கை.

உண்மையில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிக முக்கியமான தருணமாக 15 முதல் 20 வயது வரையிலான காலம் அமைகிறது. இந்த முக்கியமான காலகட்டத்தில் இளம்பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை அவர்களது எதிர்காலத்தை நிரந்தரமாக பாதிக்கிறது. கூடவே, அந்தப் பெண்ணின் குடும்பத்தையும், அவர்சார்ந்த சமுதாயத்தையும் அந்த வன்முறை நிரந்தரமாக பாதிப்படையச் செய்கிறது.

பெண் கல்வி

இளம்பெண்களுக்கு எதிரான வன்முறையால் அதிகம் பாதிப்படைவது பெண் கல்வி ஆகும். தனி நபருக்கும், குடும்பத்துக்கும், ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்துக்கும் இன்றியமையாதது பெண் கல்வி. க்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல், பேறுகால இறப்பைக் குறைத்தல், குழந்தை மரணங்களைத் தடுத்தல், நலவாழ்வு மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி என எண்ணற்றப் பலன்களை பெண் கல்வியால் அடைய முடியும் என்பது மெய்ப்பிக்கப்பட்ட உண்மை. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பெண் கல்வி இளம்பெண்களுக்கு எதிரான வன்முறையால் தடுக்கப்படுகிறது.

குழந்தைத் திருமணம்

குழந்தைத் திருமணம் எனும் பெரும் சமூகக் கேட்டிற்கு இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை வழிசெய்கிறது. பேறுகால மரணம், குழந்தை இறப்பு, வறுமை அதிகரிப்பு, பொருளாதார முன்னேற்றத்திற்குத் தடை எனப்பல கேடுகளுக்கு குழந்தைத் திருமணம் காரணமாக உள்ளது. அத்தகைய கேடான குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பதற்கு இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு முதன்மைக் காரணம் ஆகும்.

இளம் பெண்கள் வன்முறைகளில் சிக்கும் போது, அவர்களது பெற்றோர் குடும்பமானம் காப்பாற்றப்பட வேண்டும் என்று கருதி, சிறுவயதிலேயே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து விடுகின்றனர். ஒரு ஊரில், ஏதேனும் ஒரு இளம்பெண் வன்முறையால் பாதிக்கப்பட்டால், அது அந்த ஊரில் உள்ள மற்றவர்களையும் குழந்தைத் திருமணத்திற்கு தூண்டுகிறது. மறுபுறம் பெரும்பாலான காதல் நாடகத் திருமணங்கள் இளம்வயதில் உரிய வயதாகும் முன்பே நடக்கும் குழந்தைத் திருமணங்களாகவே முடிகின்றன.

ஒட்டுமொத்தத்தில், இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது தனிநபர்கள், சமுதாயம், பொருளாதாரம், பொது அமைதி என எல்லாவற்றிற்கும் பெரும்கேடாக அமைகின்றது.

தீர்வு என்ன?

சமூக நல்லிணக்கத்தை முன்னிட்டும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், அடிப்படை மனித உரிமைகளைக் காக்கும் நோக்கிலும் இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்.

அந்த நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்

1. வெள்ளை அறிக்கை 

காதல் நாடகத் திருமண நிகழ்வுகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு எதிரான அனைத்து வித வன்முறைகள், இத்தகைய நிகழ்வுகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உரிய விசாரணை செய்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

2. இருபத்தோரு வயது முடியாதோர் திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்குக

காதல் நாடகத் திருமணங்களைத் தடுக்க அரசு திருமணச் சட்டவிதிகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும்.

இந்தியக் குழந்தைகள் திருமணச் சட்டம் 2006 இன் கீழ் திருமண வயது வரையறுக்கப்பட்டுள்ளது. ஆண்கள் 21 வயது முடிந்த பின்னரும், பெண்கள் 18 வயது முடிந்த பின்னரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அச்சட்டம் கூறுகிறது. ஆனாலும் அச்சட்டம் முறையாக பின்பற்றப்படுவதில்லை. காதல் நாடகத் திருமணங்களைத் தடுக்க இது போதுமானது அல்ல.

எனவே, உலகின் வேறு சில நாடுகளில் உள்ளது போன்று, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதற்காகன வயது, சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துகொள்ளும் வயது என திருமண வயதை இரண்டு வகையாக வரையறுக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக,
அதுபோன்று, தமிழ் நாட்டில் 21 வயது முழுமை அடையாதவர்கள் திருமணம் செய்துகொள்ள, பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வேண்டும். இதன் மூலம் காதல் நாடகத் திருமணங்களை பெருமளவிற்கு தடுத்துவிட முடியும்.

3. விழிப்புணர்வு

காதல் நாடகத் திருமண நிகழ்வுகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு எதிரான அனைத்து வித வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும்.

4. இளம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத்திட்டம்

இளம் பெண்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கான விரிவான திட்டத்தை அரசு வகுத்து செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, இளம்பெண்கள் கல்வி, இளம்பெண்கள் உடல்நலம், இளம்பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல், குழந்தைத் திருமண ஒழிப்பு, இளம்பெண்களின் திறன், தலைப்பண்பு மேம்பாடு மற்றும் வேலை, தொழில் முன்னேற்ற திட்டங்களை உள்ளடக்கியதாக அத்திட்டம் அமைய வேண்டும்.

காதல் திருமணங்களையும் கலப்புத் திருமணங்களையும் தடை செய்யலாமா?

காதல் திருமணங்களையோ கலப்புத் திருமணங்களையோ தடை செய்வது தேவையில்லாதது. அது சாத்தியமும் இல்லை. உலகின் எந்த மூலையிலும் அப்படிப்பட்ட சட்டம் எதுவும் இல்லை.

இந்திய நாடு உலகின் முதன்மையான பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களில் கையொப்பமிட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் தனிமனித உரிமைகள், அடிப்படை உரிமைகளுக்கு உயரிய இடத்தை அளித்துள்ளது. இதுபோன்ற சூழலில், காதல் திருமணங்களையோ கலப்புத் திருமணங்களையோ தடை செய்யக் கோருவது முற்றிலும் சாத்தியமற்றது ஆகும்.

காதல் திருமணங்கள் கலப்புத் திருமணங்கள் அனுமதிக்கப்படுவதாலேயே, அவை மிகப்பெரிய அளவில் நடக்கும் என்பதும் கற்பனையானதுதான். 

முழுவயதடைந்தவர்கள் சுதந்திரமாகவும், முழு சம்மதத்துடனும் திருமணம் செய்து கொள்ளலாம், இனம், மொழி, தேசியம், மதம் போன்றவை அதற்கு தடையாக இருக்கக் கூடாது என்கிற 'பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனம்' உலக நாடுகளால் 1948 ஆம் ஆண்டில் ஐநாவால் ஏற்கப்பட்டது. அதன் பின்னர் 'திருமண ஒப்புதல், திருமண வயது, திருமணப் பதிவு குறித்த பன்னாட்டு உடன்படிக்கை' 1962 ஆம் ஆண்டு ஏற்கப்பட்டது. இதுவும் "இனம், மொழி, தேசியம், மதம்" என்கிற கட்டுப்பாடுகள் கூடாது என்றது.

இதனாலெல்லாம், உலகில் எந்த மூலையிலும் இனம், மொழி, தேசிய இனம், மதம் கடந்த திருமணங்கள் பெருமளவில் நடக்கவில்லை. மனிதர்கள் எப்போதும் ஏதேனும் ஒரு இனம், ஒரு மொழி, ஒரு தேசிய இனம், ஒரு மதத்துடன் தன்னை இணைத்துக் கொள்கின்றனர். இதனைக் கடந்து விதிவிலக்காக நடக்கும் திருமணங்கள் மறுபடியும் ஏதேனும் ஒரு மொழி, ஒரு தேசிய இனம், ஒரு மதத்துடன் கலந்துவிடுகிறது. புதிய அடையாளத்தை உருவாக்குவதும் இல்லை. இருக்கிற அடையாளத்தை அழிப்பதும் இல்லை.

எனவே, சாதிமாறி திருமணங்கள் பெருமளவில் நடக்கும் என்றோ, அதனால் சாதி ஒழிந்துவிடும் என்றோ நினைப்பது கற்பனையானது. நடைமுறையில் சாத்தியமற்றது. தமிழ் நாட்டில் சாதிமாறி நடக்கும் திருமணங்கள் பெரும்பாலும் தந்தையின் சாதியுடன் கலந்துவிடுகின்றன. கலப்புமண தம்பதிகளின் குழந்தைகள் பெரும்பாலும் தந்தை வழி சாதியில்தான் மணமுடிக்கின்றனர்.

கலப்புத் திருமணங்களை தடை செய்யாமல் - நாடகத் திருமணங்களை கட்டுப்படுத்த முடியுமா?

பதின் வயதில் இருக்கும் பள்ளிக் கல்லூரி மாணவிகள்தான் பெருமளவில் நாடகத் திருமணங்களில் சிக்குகின்றனர். எனவே, இளம் வயது திருமணங்களைத் தடுப்பதன் மூலம், அதற்கு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்குவதன் மூலம் நாடகத் திருமணங்களை ஒழிக்க முடியும்.

அண்மையில் 25.11.2012 அன்று பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் பெரியார் திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட, "மன்றல் 2012 - சாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா" எனும் நிகழ்ச்சிக்கான அறிவிப்பில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:

 "ஆண், பெண் இருவரும் 21 வயது நிரம்பியவர்களாகவும், தனித்து வாழ்க்கை நடத்துவதற்கான பொருளாதார வாய்ப்பும் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். திருமணம் செய்து கொள்ள விரும்புவோரிடம் மருத்துவம், மனவளர்ச்சி சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவர்." (இங்கே காண்க)

இந்த அறிவிப்பை சட்டபூர்வமானதாக ஆக்க, எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். குறிப்பாக, 21 வயது முடியாதோர் திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வேண்டும்.

3 கருத்துகள்:

karuppu சொன்னது…

ஆமா, சிங்கப்பூரு, பிரேசிலு, ஜப்பானு, அமெரிக்கானு வரிசையா சொல்றீகளே, இங்கேயெல்லாம் இந்த சாதி கருமாந்தரம்லாம் இருக்கா?

புரட்சி தமிழன் சொன்னது…

//

பிளாகர் karuppu கூறியது...

ஆமா, சிங்கப்பூரு, பிரேசிலு, ஜப்பானு, அமெரிக்கானு வரிசையா சொல்றீகளே, இங்கேயெல்லாம் இந்த சாதி கருமாந்தரம்லாம் இருக்கா?
//

எல்ல இடத்திலும் வேறுபட்ட சமூக குழுக்கள் இருக்கின்றன அவறின் பெயர் மட்டும் தான் ஜாதி என்று இல்லை. மற்றபடி டைட்டில் , பேமிலி நேம், கம்யூனிடி, சொசைட்டி என்று இருக்கத்தான் செய்கிறது.

karuppu சொன்னது…

//டைட்டில் , பேமிலி நேம், கம்யூனிடி, சொசைட்டி என்று இருக்கத்தான் செய்கிறது.//
சாதி என்பது சமூக குழுக்களாம், மிக அரிய அற்புதமான கண்டுபிடிப்பு. வரிசையாக ஆங்கிலத்தில் அடுக்குகிறீர்களே, பேமிலி நேம் என்பது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரால் உபயோகிகக்கப்படுவது. புஷ் குடும்பத்தின் குடும்பப் பெயரும், கென்னடி குடும்பத்தின் குடும்பப் பெயரும் வெவ்வேறு என்பதால், இவ்விரு குடும்பங்களுக்கும் திருமண சம்பந்தம் இருக்காது என்பது அர்த்தம் அல்ல. திருமண சம்பந்தத்திற்கு எந்தத் தடையும் இல்லை. கம்யூனிட்டி, சொசைட்டி முதலியவை ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களைக் குறிப்பிடவே பயன்படுத்தப்படும் சொல். வேறு பேமிலி நேம் உள்ளவரை, அல்லது வேறு சொசைட்டி அல்லது கம்யூனிட்டியைச் சார்ந்தவரை கல்யாணம் பண்ணிக் கொண்டால் அங்கே கலவரங்கள் எதுவும் நிகழ்வதில்லை. அதற்காகத் தான் கேட்கிறேன். இந்த மாதிரி இழப்புகளுக்குக் காரணமான கருமாந்தரம்பிடித்த சாதி தேவையா?