Pages

வெள்ளி, ஜனவரி 04, 2013

ரஜினி ஒரு மாமனிதர் - எனது அனுபவம்!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்த நாள் செய்தியாக "தயவு செய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டு விடுங்கள்" என்று கேட்டுக்கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட்டனர்.

சைதாப்பேட்டையில் ரசிகர்கள் சிகரெட் பாக்கெட்டுகளை எரித்தனர். பொன்னேரி பகுதியில் ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட வற்புறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினார்கள்.இந்த நிலையில் ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் ரஜினி.
ரசிகர்கள் கூறும்போது, "தினமும் ஆறு பாக்கெட் சிகரெட் பிடிப்போம். உங்கள் அறிவுரையை ஏற்று அப்பழக்கத்தை விட்டுவிட்டோம். இதனால் தினமும் ரூ. 300 வரை மிச்சமாகிறது. குடும்பத்தினர் சந்தோஷப்படுகிறார்கள்" என்றனர். ரொம்ப மகிழ்ச்சி என்று கூறிய ரஜினி, இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றார்" என்று செய்திகள் கூறுகின்றன. (இங்கே காண்க: புகைப் பழக்கத்தைக் கைவிட்ட ரசிகர்களை நேரில் பாராட்டிய ரஜினி!)

இந்த நிகழ்வினை கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட ஒரு மாபெரும் மாற்றம் என்று நான் கருதுகிறேன்.

ஓர் நெகிழ்ச்சியான அனுபவம்.

1998 ஆம் ஆண்டு வாக்கில் மருத்துவர் அய்யா அவர்கள், புகையிலை தீமையை எதிர்த்து பசுமைத் தாயகம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆணையிட்டார்கள். அது தொடர்பான வேலைகளில் ஈடுபட்ட காலத்தில் 2000 ஆவது ஆண்டுவாக்கில், 'சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளால் புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாகிறது' என சில அறிவியல் ஆய்வுகள் வெளிவந்ததைக் காண முடிந்தது. எனவே, பசுமைத் தாயகம் சார்பில் 'சினிமாவும் புகைபிடிக்கும் பழக்கமும்' என்கிற கருத்தில் நாட்டம் செலுத்தத் தொடங்கினோம்.

நடிகர் சூர்யா புகைபிடிக்கும் காட்சி - உலகின் முதல் போராட்டம்!

2002 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று நடிகர் சூர்யா நடித்த 'ஸ்ரீ' திரைப்படம் வெளிவர இருந்தது. இதற்கான மிகப்பெரிய விளம்பர பேனர்,  நடிகர் சூர்யா புகைபிடிக்கும் காட்சியுடன் சென்னை அண்ணா சாலையில் தேவி திரையரங்கின் எதிரே மே மாதமே அமைக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து போராட வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் தெரிவித்தார்கள்.
மே 31 உலக புகையில எதிர்ப்பு நாளை முன்னிட்டு அந்த பதாகையை மறைத்து பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் எதிர்ப்பு பதாகையைக் கட்டப்பட்டது. மறுநாள் பத்திரிகைகளில் அது செய்தியாக வெளியானது. உண்மையில் சினிமாவில் புகைபிடிப்பதை எதிர்த்து உலகில் நடந்த முதல் போராட்டம் அதுதான்.

பாபா பட எதிர்ப்பு போராட்டம்

2002 ஆகஸ்ட் 15 அன்று வெளிவர இருந்த பாபா திரைப்படத்தின் முதன்மை விளம்பரம் நடிகர் ரஜினிகாந்த் புகைபிடிக்கும் படத்துடன் வெளிவந்திருந்தது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்களிடம் பசுமைத் தாயகம் சார்பில் கோரப்பட்டது. பாபா திரைப்படத்தின் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் அய்யா அவர்கள் 2002 ஆகஸ்ட் 11 அன்று பூம்புகாரில் நடந்த மாநாட்டில்  பேசினார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய ஒரு அரசியல் சக்தியாக பார்க்கப்பட்ட அக்காலத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக உருவெடுத்தது. மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மருத்துவர் அய்யா அவர்களை சட்ட ரீதியில் எதிர்கொள்வேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
பின்னர், சினிமாவில் புகைபிடிப்பதற்கு எதிரான ஆய்வுகளும் வெளியாயின. புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் புகைபிடிக்க தொடங்கும் இளம் வயதினரில் 52% பேர் திரைப்படங்களை பார்த்து புகைபிடிக்க கற்றுகொள்வதாகக் கூறியது. (Effect of Smoking on Movies - THE LANCET 2003) இந்தியத் திரைப்படங்களில் சிகரெட் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு புகைபிடிக்கும் காட்சிகள் திணிக்கப்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை கூறியது. (“BOLLYWOOD” VICTIM OR ALLY- WHO 2003)
அதே ஆண்டில் (2003) உலக புகையிலை எதிர்ப்பு நாள் முழக்கமாக "புகையில்லா சினிமா" எனும் கருத்தை முன்வைத்தது உலக சுகாதார நிறுவனம். (World No Tobacco Day 2003: Tobacco free film)

அதன் பிறகு, திரைப்படங்களில் புகைபிடிக்கும் எல்லா நடிகர்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பசுமைத் தாயகம் போராடியது. தமிழ் திரைப்பட நடிகர்களில் திரு. கமலஹாசன், திரு. சூர்யா, திரு. விஜய், திரு. விக்ரம் ஆகியோர் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தனர். ஏ.வி.எம் நிறுவனம் புகைபிடிக்கும் காட்சிகளுடன் இனி திரைப்படங்கள் எடுக்க மாட்டோம் என்று அறிவித்தது.
(மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் இந்திய நலவாழ்வுத் துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிராக சட்ட விதிகளை உண்டாக்கினார். பலவிதமான சட்ட போராட்டங்களுக்கு பின்னர் இப்போது - திரைப்படங்களில் புகையிலை எச்சரிக்கை, விழிப்புணர்வு விளம்பரம், புகைபிடிக்கும் காட்சி வரும்போது அதற்குள் எச்சரிக்கை என அந்த விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.)
விஜய் 'துப்பாக்கி' படத்தில் புகைபிடிக்கும் காட்சியுடன் சுவரொட்டி வெளியானதற்கு பசுமைத் தாயகம் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்படத்தில் அக்காட்சி இடம்பெறவில்லை.

ரஜினி - மாபெரும் மனமாற்றம்

மருத்துவர் அய்யா அவர்களின் கட்டளையின் பேரில், சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு எதிராக பசுமைத் தாயகம் அமைப்பு தொடர்ச்சியாக போராடிவரும் நிலையில், தனது 63ஆவது பிறந்த நாள் விழாவில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள் "சிகரெட் பிடித்தனால் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. நுரையீரல் பாதிப்பைத் தொடர்ந்து கிட்னியில் பிரச்சினை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் நான் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது இதுதான். தயவு செய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டுவிடுங்கள்" என்று கோரினார்.

இதே நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள், முன்பு அவர் 'பாபா' படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்தற்கு மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை சூசகமாகக் குறிப்பிட்டு "ஆவர் சொன்ன கருத்து ரொம்ப நல்ல கருத்து. அதற்கு பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை" என்றும் குறிப்பிட்டார்.

மருத்துவர் அய்யா அவர்கள் ரஜினிகாந்த் அவர்களைத் தனிப்பட்ட முறையிலோ, உள்நோக்கத்துடனோ எதிர்க்கவில்லை. ஒரு நியாயமான நோக்கத்திற்காக, ரஜினிகாந்த் எதிர்க்கவே முடியாதவர் என்று கருதப்பட்ட நேரத்தில், இதற்காக பலராலும் தூற்றப்படுவோம் என்று தெரிந்தும் மருத்துவர் அய்யா அவர்கள் ரஜினிகாந்த் புகைபிடிக்கும் காட்சிகளை எதிர்த்தார். அன்று பலரும் மருத்துவர் அய்யாவுக்கு ஏன் இந்த வேலை என்று கேட்டனர். அந்தக் கேள்விக்கு இன்று ரஜினிகாந்த் அவர்களே பதில் சொல்லிவிட்டார்.

ஒருகாலத்தில் புகைபிடிப்பதை ஒரு ஸ்டைலாக அறிமுகப்படுத்திய ரஜினிகாந்த அவர்கள், இன்று புகைபிடிப்பதைக் கைவிடுவதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறார். இந்த மாற்றம் வரவேற்க தக்கதாகும். அதுமட்டுமில்லாமல், தவறான நிலைபாடுகளில் வீம்பாக இருக்கும் சராசரி மனிதர்களைப் போன்று இல்லாமல் - தவறுதான் என தன்னைத் திருத்திக்கொண்டு, தவறு செய்யவேண்டாம் என அடுத்தவருக்கும் போதிக்கும் ரஜினிகாந்த் அவர்கள் மாமனிதர்தான்.
மேலே உள்ள சுவரொட்டி ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்து சென்னையில் ஒட்டப்பட்டது. இதனைப் பார்த்துவிட்டு மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட ரஜினிகாந்த் அவர்கள் 'நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்' என்று கூறினாராம். வாழ்க ரஜினி.

4 கருத்துகள்:

பாண்டியன் சொன்னது…

ரஜினி - துண்டு பீடி, பட்டை சாராயம் போன்றவற்றை விட்ட மாதிரி உங்க அமைப்பு வன்முறை, சாதிய வெறி போன்றவற்றை விட்டொழிச்சா நல்லா இருக்கும்.

Unknown சொன்னது…

புகைப் பழக்கத்தை கைவிட சொன்னதற்கு நன்றி.
ஆனால் திரும்பவும் அரசியல், அதிகாரம் என்று பேசி ரசிகர்களை தவறாக வழிநடுத்துகிறார்.
அதற்கு கண்டனங்கள்.

notyet சொன்னது…

வெறும் ஓட்டுக்காகவும் காசுக்காகவும் மக்களை கொள்ளையடிக்கும் திராவிட கட்சிகளுக்கு உடல் நலத்தை பற்றியேல்லாம் ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகளுக்கு என்ன கவலை ...

மக்கள் நலனில் அக்கறை கொண்ட உங்கள் பசுமை தாயகம் மற்றும் அதன் அரசியல் அமைப்பான பா.ம.க-வுக்கு தமிழக மக்கள் ஒரு முறை வாய்ப்பளிக்க வேண்டும்.

Vanathi Rayar Senthil Nathan சொன்னது…

ரஜினி - துண்டு பீடி, பட்டை சாராயம் போன்றவற்றை விட்ட மாதிரி உங்க அமைப்பு வன்முறை, சாதிய வெறி போன்றவற்றை விட்டொழிச்சா நல்லா இருக்கும்.//நாங்கள் எப்போதும் வன்முறையை கையில் எடுப்பதில்லை, ஆணால் நீங்கள் தான் அதை செய்ய தூண்டுகிறீர்கள்