Pages

புதன், நவம்பர் 06, 2013

கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது: வரவேற்போம்!

'அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதற்காக திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு வரவேற்க வேண்டிய நிகழ்வாகும்.

சேலத்தில் மத்திய அரசு அலுவலகமான வருமானவரித்துறை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெட்ரோல் குண்டு வீசத்தூண்டியதாக திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டார். பின்னர் சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.'

தடுப்புக்காவல் சட்டம் நீதிக்கு எதிரானது.

தடுப்புக்காவல் சட்டம் என்பது நீதிக்கு எதிரானது. குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்றத்தில் நிறுத்தி, உரிய விசாரணை நடத்தி, குற்றத்தை நிரூபித்து தண்டனை வழங்குவத்தான் சரியான நீதிபரிபாலன முறையாகும். ஆனால், எந்த விசாரணையும் இன்றி அரசாஙகமே தன்னிச்சையாக யாரை வேண்டுமானாலும் ஓராண்டுகாலம் சிறைவைக்கும் கொடூரமான சட்டம் இதுவாகும்.

முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாடுகள் எதிலும் தடுப்புக்காவல் தண்டனைச் சட்டங்கள் இல்லை.

தடுப்புக்காவலில் அப்பாவி வன்னியர்கள்.

மாமல்லபுரம் வன்னியர் சங்க மாநாட்டில் பேசினார், அதனால் கலவரம் வரக்கூடும் என்கிற நிரூபிக்க முடியாத 'கற்பனையான' குற்றச்சாட்டில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு கைது செய்யப்பட்டார்.

மரக்காணம் வன்னியர் படுகொலைக்கு நீதி வேண்டும் என போராட்டம் நடத்திய  மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் உட்பட அமைதி வழியில் போராட்டம் நடத்திய சுமார் 7500 பேர் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, பாட்டாளி மக்கள் கட்சி நிருவாகிகள், உறுப்பினர்கள், அனுதாபிகள் என 134 வன்னியர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் குண்டர் சட்டத்தின் கீழும் ஒரு ஆண்டு 'தடுப்புக்காவல்' சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவை அனைத்தும் ஒருமாத காலத்திற்குள் அவசரம் அவசரமாக நடத்தப்பட்டது.

இந்திய வரலாற்றிலேயே ஒரே மாதத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த, ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் இவ்வளவு பேர் தடுப்புக்காவல் சட்டங்களின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டது இதுதான் முதல் முறை.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டவர்களை மத்திய அரசு விடுதலைச் செய்ய ஆணையிட்டது. ஆனால், சட்டத்தையும் மனித உரிமைகளையும் காலில் போட்டு மிதிக்கும் தமிழக அரசு அத்தனை பேர் மீதும் இரண்டாவது முறையாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தினை திணித்தது.

ஒரு நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின்பு, ஓராண்டு தடுப்புக்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 134 பேரில், 133 பேரை சிறையில் இருந்து மீட்டது பாட்டாளி மக்கள் கட்சி. அவர்கள் அவ்வளவு பேரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு அவர்கள் மீது மட்டும் மீண்டும் மீண்டும் நான்கு முறை தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டு - இப்போது நீதி மன்றத்தில் தீர்ப்பு காத்திருக்கிறது. இந்திய வரலாற்றில் நான்கு முறை தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்ட ஒரே நபர் ஜெ. குரு அவர்கள் மட்டும்தான்.

நேற்று நான் - இன்று நீ

தனது கருத்துரிமையை ஜனநாயக வழியில் பயன்படுத்தியதற்காக 124 பேர் கொடூரமான தடுப்புக்காவல் சாட்டங்களின் கீழ் சிறையில் அடைக்கப்படும் நாட்டில் - மத்திய அரசு அலுவலகத்தின் மீது குண்டு வீசி, அரசுக்கு எதிராக போர்த்தொடுப்பவர்கள் அதே கொடூரமான தடுப்புக்காவல் சாட்டங்களின் கீழ் சிறையில் அடைக்கப்படுதல் நியாயம் தானே.

இன்று கொளத்தூர் மணி கைதுக்காக கொந்தளிக்கும் மனித உரிமைப் போராளிகள் பலரும் அன்று 134 வன்னியர்கள் இதேபோன்று தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது அதனை மவுனமாக, மகிழ்ச்சியாக வரவேற்றார்கள் என்பதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது.

வன்னியர்களுக்கு வந்தால் அது 'தக்காளி சட்னி', மற்றவர்களுக்கு வந்தால் அது 'ரத்தம்' என்பதுதான் தமிழ்நாட்டின் மனித உரிமை நீதி போலிருக்கிறது!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

"கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை கண்டிக்கத் தக்கது"

சேலத்தில் நடந்த நிகழ்வு தொடர்பாக கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்திருக்கிறது. தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் உரிமைகளுக்காகவோ அல்லது இன விடுதலைக்காகவோ எவரும் போராடவேக் கூடாது என்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு நினைக்கிறது. அதனால் தான் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு  எதிராக தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், போராடுபவர்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் தான் கொளத்தூர் மணி மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அரசு பாய்ச்சியிருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பிற்காக அரிதிலும் அரிதாக பயன்படுத்த வேண்டிய தடுப்புக்காவல் சட்டங்களை, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்துவதையே இந்த அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. மரக்காணம் கலவரத்தில் அப்பாவி வன்னியர்கள் இருவர் வன்முறைக் கும்பலால் படுகொலை செய்யப் பட்டதற்காக நீதி கேட்டு போராடிய என்னையும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி தலைவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் பேரையும் கைது செய்த தமிழக அரசு, எந்தத் தவறும் செய்யாத பா.ம.க. தொண்டர்கள் 134 பேரை குண்டர் சட்டத்திலும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்து வரலாறு காணாத அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. 

அதிலும் குறிப்பாக பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ. குருவை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் 4 மாதங்களில்   4 முறை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து கொடுமைப் படுத்தியது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளை கண்டிக்க எந்தக் கட்சியும் முன்வரவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி தான் சட்டம் மற்றும் நீதியின் துணையுடன் போராடி 133 பேரை நீதிமன்றத்தின் மூலமாக மீட்டதுடன் தமிழக அரசு மேற்கொண்டது பழிவாங்கும் நடவடிக்கை என்பதை நிரூபித்தது.

பா.ம.க.வினர் மீது தடுப்புக்காவல் சட்டங்கள் பாய்ச்சப்பட்டபோது அதைக் கண்டித்து மற்றக் கட்சிகள் குரல் கொடுத்திருந்தால் இப்போது  கொளத்தூர் மணி மீது இத்தகைய நடவடிக்கையை எடுக்கும் துணிச்சல் அரசுக்கு வந்திருக்காது. விரைவில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காகவும், மக்களின் உணர்வுகளைத் தூண்டும் போராட்டங்களை ஒடுக்கவும் மேலும் பல தலைவர்களை கைது செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.

எனவே, அரசின் ஒடுக்குமுறைகளுக்கு  எதிராக அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசும் ஈழத் தமிழர் போராட்டங்களுக்கு எதிரான உணர்வைக் கைவிட்டு, கொளத்தூர் மணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்."

கருத்துகள் இல்லை: