Pages

வெள்ளி, நவம்பர் 01, 2013

இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம்: கூட்டாளி ராஜபக்சேவை இந்தியா கைகழுவ வேண்டும்

இசைப்பிரியா இலங்கை ராணுவத்தால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கான ஆதாரத்தை சானல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இசைப்பிரியா உயிருடன் இராணுவத்தினரிடம் பிடிபட்ட காட்சியும் பின்னர் உயிரற்ற சடலமாக சீரழிக்கப்பட்டுக் கிடக்கும் காட்சியும் இந்தக் காணொலியில் காட்டப்படுகிறது.

சானல்4 தொலைக்காட்சி ஆதரம்

ராஜபக்சேவை கைகழுவுவதற்கான நேரம்

இந்திய அரசு தனது கொலைகாரக் கூட்டாளி ராஜபக்சேவை கைகழுவுவதற்கான நேரம் இதுவே. இலங்கையைக் காப்பாற்றும் போக்கில் இந்திய அரசு இனியும் நடக்கக்கூடாது. இலங்கை மீதான பன்னாட்டு விசாரணைக்கு இந்தியா இனிமேலும் எதிர்ப்புக் காட்டக்கூடாது.

'அரசன் அன்று கொல்வான், நீதி நின்று கொல்லும்' என்பார்கள். இந்திய ஆட்சியாளர்கள் இனியும் திருந்த மறுத்தால் 'நீதி அரசனைக் கொல்லும்' காலம் வரும். இனப்படுகொலை - போர்க்குற்ற கொடூரன் இராஜபக்சேவுடன் சேர்த்து இந்திய அட்சியாளர்களும் பன்னாட்டு சமூகத்தால் தண்டிக்கப்படும் காலமாக அது அமைந்துவிடக் கூடும்.

தேவை பன்னாட்டு விசாரணை ஆணையம் - இந்திய அரசே முன்மொழிய வேண்டும்

'பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள், பன்னாட்டு மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமைக் குறித்து தன்னிச்சையான மற்றும் நம்பகத்தன்மையுள்ள வகையில் விசாரணை நடத்தப்பட பன்னாட்டு விசாரணை ஆணையத்தை ஐநா அமைக்க வேண்டும்' என ஜெனீவா ஐநா மனித உரிமைப் பேரவையில் செப்டம்பர் 23 அன்று மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் வலியுறுத்திப் பேசினார்.

அதேபோன்று "ஈழத் தமிழர்களுக்கு சிங்கள அரசு சம உரிமையும், சம அந்தஸ்தும் வழங்காது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு, இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தாது என்பதும் உண்மையாகும். எனவே, இலங்கை மீது தவறான நம்பிக்கை வைப்பதை விடுத்து, அங்கு நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியாவே கொண்டு வரவேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் இந்திய அரசை கேட்டுக்கொண்டார்.

பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டே ஆகவேண்டும் என்கிற கோரிக்கையின் நியாயத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமை.

ஜெனிவா ஐநா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில்  மருத்துவர் அன்புமணி இராமதாசு ஆற்றிய உரை:



உலகில் அனைத்து வகையான இன வெறியையும், அது தொடர்பான சகிப்புத் தன்மையின்மையையும்  பசுமைத் தாயகம் கண்டிக்கிறது. இன வெறியால் அன்றாட ஒடுக்குமுறை முதல் ஒட்டுமொத்த இனப்படுகொலை வரை பலவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன. இவற்றில் இரண்டாவது விளைவான இனப்படுகொலை துரதிருஷ்டவசமாக இன்று இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இனப்படுகொலை என்பது அப்பாவி மக்களைத் திட்டமிட்டு அழிப்பது என்று வரையறுக்கப் பட்டிருக்கிறது.  இனப்படுகொலைக்கு எதிரான இரண்டாவது பிரிவின்படி, ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதும் ஒரு வகையான இனப்படுகொலை ஆகும்.

இலங்கை வடக்கு மாநிலத்தில் செயல்பட்டுவரும் மனித உரிமை அமைப்புகளிடமிருந்து அண்மையில் வெளியாகியுள்ள அறிக்கைகளில், தமிழ்ப் பெண்களை மிரட்டிக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது குறித்து ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வடக்கு மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்களை, அவர்களின் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக, கிளிநொச்சி பகுதியில் உள்ள வேராவில் அரசு மருத்துவமனைக்கு வரும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி அவர்கள் அங்கு சென்ற போது, அவர்களை  மோசடி செய்து நீண்டகாலம் குழந்தை பிறக்காமல் இருப்பதற்கான ஊசியை அவர்களின் கைகளில் செலுத்தியுள்ளனர். கருத்தடை ஊசியைப் போட்டுக் கொள்ளாவிட்டால், அந்த அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் எந்த சிகிச்சையையும் இனி பெற முடியாது என்று அப்பெண்கள் மிரட்டப் பட்டிருக்கின்றனர்.

கட்டாயக் கருத்தடையும், கருக்கலைப்பும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனித நேயச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும். நலிவடைந்த மக்களுக்கு அடிப்படை சுகாதார சேவைகள் மிகவும் முக்கியமாக தேவைப்படும் இந்த நேரத்தில், அவர்கள் அச்சுறுத்தி  கட்டாயக் கருத்தடைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது ஒரு மருத்துவர் என்ற முறையிலும், இந்தியாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற முறையிலும் எனக்கு சீற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் குற்றச்சாற்றுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பால் விசாரிக்கப்பட வேண்டும்.

இந்தக் குற்றங்கள் அனைத்தும், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை வரலாற்றில் அண்மையில் நடைபெற்றவையாகும்.

2009 ஆம் ஆண்டில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் இந்த அட்டூழியங்கள் உச்சக்கட்டத்தை அடைந்தன. வன்னி பகுதி மக்களை பாதுகாப்பு வலயப் பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் அடைத்து வைத்து குண்டு வீசிய பின்னர், சுமார் 1.46 லட்சம் மக்கள் என்ன ஆனார்கள் என்பதே இன்னும் தெரியவில்லை.

ஆட்களைக் கடத்திச் செல்லுதல், தமிழர்கள் வாழும் பகுதிகளை ராணுவமயமாக்குதல், தமிழர்களின் நிலங்களை பறித்தல், அரசியல் எதிர்ப்புகள் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தல் ஆகிய நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபடுவதால் அந்நாட்டில் மனித உரிமை மீறல்கள் இன்னும் தொடர்கின்றன.

எனவே, இலங்கை அரசின் கடந்தகால மற்றும் நிகழ்கால போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் ஆகியவை குறித்து விசாரிக்க சுதந்திரமான, பன்னாட்டு விசாரணை ஆணையத்தை அமைக்கும்படி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

(23 செப்டம்பர் 2013 அன்று ஜெனீவா நகரில் உள்ள ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் பேசியதன் தமிழ் மொழிபெயர்ப்பு)

கருத்துகள் இல்லை: