Pages

ஞாயிறு, மார்ச் 23, 2014

மே 17 இயக்கத்திற்கு ஒரு பதில்: அமெரிக்கா தமிழ்த்தேசியர்களின் ஏவல் நாடா?!

'ஐநா அவை மூலமாக இலங்கையில் நடைபெற்ற சர்வதேச குற்றங்கள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் சமமானவர்களாக, அனைத்து அடிப்படை உரிமைகளுடனும் வாழும் நிலை வர வேண்டும்' - இதுதான் இன்றைய சர்வதேசத்தின் மனித உரிமை சார் அடிப்படை கோரிக்கை ஆகும்.

ஐநா அவை என்பது ஒரு அரசியல் அமைப்பு. அங்கு எல்லா முடிவுகளையும் தீர்மானிப்பவை உறுப்பு நாடுகளாகும். உலக நாடுகளின் வெளியுறவுக் கொள்கை என்பது அந்தந்த நாடுகளின் புவிசார் நலனை முன்னிறுத்திதான் இருக்கிறது. நீதியும் மனித உரிமையும் ஒரு கருவியாக மட்டுமே உள்ளது. தமது நாடுகளுக்கு நன்மையாகவோ, அல்லது தமக்கு பாதிப்பில்லாத நிலையிலோ தான் அடுத்த நாடுகளின் விவகாரங்களில் உலகநாடுகள் தலையிடும்.

ஒரு கருப்பின குழுவோ, அரேபிய இனமோ பாதிக்கப்பட்டால் அதற்காகப் பேச பல நாடுகள் இருக்கின்றன. ஆனால், தமிழர்களுக்காக பேச உலகில் ஒரே ஒரு நாடு கூட இல்லை.

வெறும் 839 நபர்கள் மட்டுமே குடிமக்களாக உள்ள 'ஹோலி சீ (வாட்டிகன்)' என்பது ஒரு நாடு. வெறும் 36 ஆயிரம் பேர் வாழும் 'லிச்டின்ஸ்டெய்ன்' என்பதும் ஒரு தனி நாடு. அவர்கள் எல்லாம் ஐநா அவையில் பேச முடியும். தீர்மானங்களை முன்வைக்க முடியும். இப்போது அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை மீதான தீர்மானத்தை முன்வைத்துள்ள 'மான்டநீக்ரோ' நாட்டின் மொத்த மக்கள்தொகை வெறும் 6 லட்சம் பேர்தான்.

ஆனால், ஒன்பது கோடி பேருக்கு மேல் மக்களைக் கொண்ட தமிழினத்துக்காக ஐநாவில் பேச ஒரு நாடும் இல்லை. இதுதான் இன்றைய எதார்த்த நிலை. உலக நாடுகளில் தமிழனுக்காக பேச ஒரு நாடும் இல்லை. பேசவேண்டிய ஒரே நாடான இந்தியா - எதிரி நிலையில் இருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளை 'தமிழர்களின் ஏவலாட்கள்' என்பது போல நினைத்து 'அவர்களுக்கு கட்டளையிடும் தொனியில்' சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் மே 17 இயக்கத்தின் திரு. திருமுருகன் காந்தி அளித்துள்ள கேள்விகளும், அதுகுறித்த எனது கருத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

மே17 இயக்கத்தின் திரு. திருமுருகன் காந்தி அவர்கள் அமெரிக்கா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் தெற்காசிய பிராந்தியக் கொள்கைகள் என சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். "இதில் தமிழருக்கு ஆதரவான கொள்கைகள் , நிலைப்பாடுகள் எப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கின்றன? அல்லது மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன? என்று யாரேனும் தெரியப்படுத்தினால் மகிழ்ச்சி." என்றும் அவர் கேட்டுள்ளார்.

அவரது கருத்துகேள்விகளுக்கு என்னாலான பதிலை கீழே அளித்துள்ளேன்:

கேள்வி 1: "அமெரிக்கா- இந்தியா இரண்டின் இலங்கை ஆதரவு அரசியலை சுருக்கமாக புரிந்து கொள்ளுதல் அவசியம். இந்தியா - 13 வது சட்ட திருத்தத்தினை தமிழர்களுக்கு அரசியல் தீர்வாக முன்வைக்கிறது. அமெரிக்கா 13வது சட்ட திருத்ததினை இந்தியாவின் சார்பாக பேசவும் செய்கிறது".

எனது பதில்: ஆம். 13 ஆவது சட்டத்திருத்தம் மற்றும் வடக்கு மாகாணத்திற்கு அதிகாரப்பகிர்வு என்பதை தீர்மானம் ஒரு கோரிக்கையாக முன்வைக்கிறது. இதற்கு மாறான கருத்து கொண்ட நாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பன்னாட்டு விசாரணை என்கிற முதன்மைக் கோரிக்கையுடன் இதனை இணைத்துப் பார்க்கத் தேவை இல்லை. இந்த ஒரு கோரிக்கைக்காக அமெரிக்காவை எதிர்ப்பதானால் - உலகின் 193 நாடுகளையும் சேர்த்தே எதிர்க்க வேண்டும். மேலும் 13 ஆவது சட்டத்திருத்தக் கோரிக்கையை ஆதரிக்கும் தமிழர்களும் இருக்கிறார்கள்.

கேள்வி 2: "அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளும் ஈழ விடுதலையை எதிர்க்கின்றன. இரண்டு நாடுகளும் புலிகளை ஒடுக்க விரும்புகிறார்கள்".

எனது பதில்: உலகின் எந்த நாடும் ஈழ விடுதலையை ஏற்கவில்லை. புலிகளை ஒழிக்கக் கூடாது என்று சொன்ன நாடும் எதுவும் இல்லை. ஈழ விடுதலையை ஏற்கும், புலிகளை அங்கீகரிக்கும் நாடுதான் பன்னாட்டு விசாரணைக்கு வழிசெய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் - அப்படி ஒரு நாடு இல்லவே இல்லை.

கேள்வி 3: "அமெரிக்கா புலம்பெயர் ஆற்றல்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயலுகிறது".

எனது பதில்: இது அடிப்படை ஆதாரமற்றக் குற்றச்சாட்டு

கேள்வி 4: "அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளும் இலங்கையினை தமது பங்காளிகளாக பார்க்கிறார்கள்."

எனது பதில்: அமெரிக்கா மட்டுமல்ல - சீனா, ரஷ்யா, வியட்னாம், கியூபா, பாலஸ்தீனம், இஸ்ரேல் என எல்லா இஸ்லாமிய நாடுகளும், எல்லா கம்யூனிச நாடுகளும் இலங்கையை பங்காளியாகத்தான் பார்க்கின்றன. இலங்கையை எதிரியாக பார்க்கும் நாடு என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா? அப்படி எந்த நாடும் இல்லை. இலங்கையை நட்பு நாடாக பார்க்காதே என்று எந்த நாட்டுக்கும் கட்டளையிடும் நிலையில் தமிழர்கள் இல்லை.

கேள்வி 5: "அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளும் ராஜபக்சே ஆட்சியில் இருந்து நீக்கப்படுவதை விரும்புகிறார்கள். ரணிலும், சந்திரிகாவும் ஆட்சிக்கு கொண்டு வரப்பட விரும்புகிறார்கள்."

எனது பதில்: ராஜபக்சே ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால் அதனால் தமிழர்களுக்கு மகிழ்ச்சியே. இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?

கேள்வி 6: "அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளும் ’இனப்படுகொலை’ என்பதை மறுக்கிறார்கள்".

எனது பதில்: அமெரிக்கா மட்டுமா இனப்படுகொலையை மறுக்கிறது? இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்று உலகின் எந்த நாடும் ஏற்கவில்லை. ஐநா மூலமாக ஒரு பன்னாட்டு விசாரணை நடத்தப்பட்டு - இனப்படுகொலை நடந்ததை நிரூபித்தால் மட்டுமே உலக நாடுகள் இனப்படுகொலை நடந்தது என்பதை ஏற்கும்.

கேள்வி 7: "அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளும் ‘புலிகளை’ விசாரிக்கவேண்டும், புலிகள் தமிழர்களை கொலை செய்தனர் என்கிறார்கள்."

எனது பதில்: போர் குறித்த விசாரணை என்றால் - இரண்டு தரப்பின் குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படுவது இயற்கையே. ஒரு தரப்பை மட்டும்தான் விசாரிக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை அல்ல. மிக அதிகமான குற்றங்களை இழைத்தவர்கள் அரசப்படையினர். அடுத்ததாக கருணா அணியினர். மூன்றாவதாக புலிகளும் சர்வதேச விதிகளை மீறினார்கள் என்று பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இலங்கையில் நடந்த குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றால், இவை அனைத்தையும் விசாரிக்க வேண்டும் என்பது இயல்பானதுதான். ஒரு தரப்பை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்பது நீதி அல்ல.

கேள்வி 8: "அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளும் சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை நாட்டினை காக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்".

எனது பதில்: இது கேலிக்கூத்தான குற்றச்சாட்டு. 'இலங்கை நாட்டினை காக்க வேண்டும் என்று அமெரிக்க நாடு விரும்புகிறது' என்றால் - யாரிடம் இருந்து இலங்கையைக் காக்க விரும்புகிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தவிர இலங்கையை அச்சுறுத்தவோ தண்டிக்கவோ உலகில் இப்போது யாரும் இல்லை. இனி புதிதாக யாரும் வருவதற்கும் வாய்ப்பு இல்லை. எனவே இலங்கையை யாரிடம் இருந்து அமெரிக்கா காப்பாற்ற முயற்சிக்கிறது என்று திரு. திருமுருகன் காந்தி விளக்க வேண்டும்.

கேள்வி 9: "அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளும் “ஒன்று பட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு” என்கிறார்கள். இந்தியா, தமிழ்தேசிய கூட்டமைப்பின் மூலமாக மாகாண அரசியல் தீர்வு என்கிறது. அமெரிக்கா, நல்லிணக்கத்தின் அடிப்படையில் தமிழர்கள் - சிங்களவர்கள் என அனைவரும் ‘இலங்கையர்களாக’ வாழவேண்டும் என்கிறது."

எனது பதில்: அமெரிக்கா மட்டுமல்ல. உலகின் எல்லா நாடுகளுமே ஒன்று பட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்றுதான் கோருகிறார்கள். பிரதேச ஒருமைப்பாட்டைக் காப்பது என்பது உலகம் ஏற்றுக்கொண்ட விதி. எனவே, இலங்கையை துண்டாட வேண்டும் என்கிற நோக்கத்துடன் உலகில் ஒரு நாடும் இல்லை. அப்படி ஏதாவது ஒரு நாட்டிடம் தான் நீதி கேட்க வேண்டும் என்று காத்திருந்தால் - காலாகாலத்துக்கும் தமிழர்கள் காத்துக்கிடக்க வேண்டியதுதான்.

கேள்வி 10: "அமெரிக்கா, இந்தியா இவை இரண்டும் இலங்கையில் பொருளாதார முதலீடுகள் செய்கின்றன. இரண்டு நாடுகளும் இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தங்கள் போடுகின்றன. "

எனது பதில்: அமெரிக்கா மட்டுமல்ல. சீன நாடுதான் மிக அதிக முதலீட்டைச் செய்கிறது. இலங்கையின் குற்றங்கள் பன்னாட்டு விசாரணை மூலம் நிரூபிக்கப்பட்ட பின்னர்தான் பொருளாதார தடையைக் கோர முடியும். அதற்கு முன்பாக பொருளாதார முதலீட்டை தடைசெய்யக் கோருவது சாத்தியம் அல்ல. இராணுவ ஒப்பந்தங்களுக்கும் இது பொருந்தும்.

கேள்வி 11: "சர்வதேச அரங்கினை அமெரிக்கா பயன்படுத்துகிறது. மனித உரிமை என்கிற ஆயுதத்தினைக் கொண்டு ராஜபக்சேவினை-புலிகளை மட்டும் குறிவைக்கிறது."

எனது பதில்: சர்வதேச அரங்கினைப் பயன்படுத்தி அமெரிக்கா ராஜபக்சேவைக் குறிவைத்தால் அது சரிதான். அதில் எந்தத் தவறும் இல்லை. அதேநேரத்தில் அமெரிக்கா புலிகளைக் குறிவைக்கிறார்கள் என்றால் - இப்போது யார் புலிகளைப் பிரதிநிதத்துவப் படுத்துகிறார்கள்? சாதாரண ஈழக் குடிமக்களைப் புலிகளாக குற்றம் சாட்ட முடியாது.

கேள்வி 12: "அமெரிக்கா, இந்தியா இவர்கள் இருவரும் இனப்படுகொலைக்கு உதவி செய்ததை உலகிற்கு எடுத்துச் சொல்வது தமிழர்களின் கடமை. இவர்களிடத்தில் இருந்து தமிழீழத்திற்கு விடிவு கிடைக்காது."

எனது பதில்: அமெரிக்கா இலங்கையின் போருக்கு உதவி செய்தது என்பது உண்மை. அவர்கள் தமிழீழம் அமைய உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் மடைமை. இப்போது தமிழீழம் அமையப்போகிறதா இல்லையா என்பது கேள்வியே அல்ல. மாறாக, ஈழத்தில் நடந்த கொடும் குற்றங்கள் குறித்த உண்மை வெளிவர வேண்டும். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழர்கள் சரிசமமான குடிமக்களாக வாழ வேண்டும் என்பதே சர்வதேசத்தின் கோரிக்கை. அந்தக் கோரிக்கையில் எந்த தவறும் இல்லை.

முடிவாக எனது பதில்: 

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தமிழீழம் என்கிற கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே, தமிழீழம் அமைய வேண்டும் என்கிற நோக்கில் ஒரு தீர்மானத்தை அவர்களிடம் கோருவது ஏமாற்று வித்தை.

மனித உரிமைகளை முன்னிறுத்துவோர் - இலங்கையில் நடந்தக் கொடூரங்கள் வெளிக்கொண்டுவரப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். அதே கோரிக்கை தமிழர்களிடமும் உள்ளது.

அதனடிப்படையில் அமெரிக்காவின் கோரிக்கையும் தமிழர்களின் கோரிக்கையும் ஒன்றுதான்.

இனப்படுகொலை என்கிற முன்நிபந்தனையுடன் விசாரணை நடந்தால் தமிழீழம் அமையும் என்று சிலர் பேசுகின்றனர். அதற்கு என்ன ஆதாரம் என்று தெரியவில்லை. அப்படி ஒரு அடிப்படை இருப்பதாக வைத்துக்கொண்டாலும், தமிழ் ஈழம் என்பது உலக நாடுகளின் கோரிக்கை இல்லை என்பதால் - தமிழீழம் அமையும் நோக்கிலான ஒரு தீர்மானத்தை உலக நாடுகள் கொண்டுவர வேண்டியக் கட்டாயம் ஏதும் இல்லை.

மேலும் தமிழ் ஈழம் வேண்டும் என்கிற அரசியல் கோரிக்கையை எழுப்ப வேண்டிய இடம் ஜெனீவா இல்லை. இதுபோன்ற அரசியல் கோரிக்கைகளை நியூயார்க்கில் உள்ள ஐநா பாதுகாப்பு அவையோ பொதுச் சபையோதான் விவாதிக்க முடியும்.

ஜெனீவாவில் பன்னாட்டு குற்றங்களுக்கு நீதி கேட்பதுதான் நடக்கும். தனி நாட்டை கோரும் இடம் அதுவல்ல. நாம் கதவைத் தட்டலாம். சுவற்றைத் தட்டிக்கொண்டிருப்பது மூடத்தனம்.

கருத்துகள் இல்லை: