Pages

ஞாயிறு, மார்ச் 23, 2014

மே 17 இயக்கத்துக்கு ஒரு சவால்: சர்வதேச விசாரணை எங்கே இருக்கிறது?

//ஐநாவால் கொண்டு வரப்படவுள்ள சர்வதேச விசாரணையை தடுக்க உள்நாட்டு விசாரணையை கொண்டு வந்து இலங்கையை காப்பாற்றும் அமெரிக்காதான் ஈழத்திற்க்கான தீர்வை தர போகிறதா?//

- இப்படி ஒரு கருத்தை மே 17 இயக்கம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

"ஐநாவால் கொண்டு வரப்படவுள்ள சர்வதேச விசாரணை" என்று மே 17 இயக்கம் எதைச் சொல்கிறது? அப்படி ஒரு விசாரணை எங்கே இருக்கிறது? அதை யார் கொண்டு வரப்போகிறார்கள்? அந்த விசாரணை எப்படி சாத்தியமாகும்? அதற்கான வழிமுறைகள் என்ன?

தானாக எந்த விசாரணையையும் ஐ.நா நடத்த வாய்ப்பே இல்லை. இல்லாத ஒன்றைக்காட்டி தமிழர்களை எதற்காக இவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்?

இலங்கை இனப்படுகொலை: ஐநா விதிமுறை எனும் மாயமான்

ஐநா விதிமுறையின் கீழ் இலங்கையை ஐநா தானாகவே விசாரிக்க வேண்டும். அதனை அமெரிக்காதான் தடுக்கிறது என்று சொல்லி, மக்களைக் குழப்பி, பூச்சாண்டிக் காட்டிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். ஆனால், அப்படி ஒரு விசாரணை வாய்ப்பு இல்லவே இல்லை என்பதுதான் உண்மை நிலை!

ஐநா விதி 99 என்பது 'உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் விடயங்களை ஐநா பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு ஐநா பொதுச்செயலர் கொண்டுவரும் அதிகாரம்' ஆகும். இது அரிதிலும் அரிதான தருணங்களில் பயன்படுத்தக் கூடிய அதிகாரம். ஐநா அவையின் வரலாற்றில் மூன்று முறை மட்டுமே இந்த அதிகாரம் வெளிப்படையாக பயன்படுத்தப்பட்டது.

ஐநா விதி 99 இல் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ், வருமுன் காக்கும் நடவடிக்கையாக, உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் சூழலை ஆராய ஒரு விசாரணைக் குழுவை ஐநா பொதுச்செயலர் அமைக்கலாம். இதன்படி 2008 ஆம் ஆண்டின் கடைசியிலோ, 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ, இத்தகைய ஒரு விசாரணையை ஐநா பொதுச் செயலர் நியமித்திருக்க வேண்டும். ஆனால், பான் கி மூன் இந்தக் கடமையில் இருந்து தவறிவிட்டார்.

(பான் கி மூன் கடமைத் தவறியது ஏன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஐநாவின் விஜய் நம்பியாருடைய தம்பி சதீஷ் நம்பியார் ராஜபக்சேவின் ஆலோசகராக இருந்தார். பான் கி மூனுடைய உறவினரான இந்தியர் ஒருவரே ராஜபக்சேவின் கையாளாக இருந்தார் என்று கூறப்பட்டுகிறது. பான் கி மூனே தனிப்பட்ட முறையில் ராஜபக்சேவுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கருதினார். அவர் ராஜபக்சேவுக்கு இணக்கமாகவே இருந்தார்).

பான் கி மூன் கடமை தவறினார் என்பதற்காக, அவரைக் கேள்வி கேட்கவோ தண்டிக்கவோ எந்த வழியும் இல்லை. ஐநா அவையே சார்லஸ் பெட்ரி குழு அறிக்கையின் மூலம் "ஆமாம், ஐநா அவை கடமை தவறியதுதான்" என்று ஒப்புக்கொண்டது. இலங்கையில் நாங்கள் கடமைத் தவறிவிட்டோம். இனி மற்ற நாடுகளில் இதுபோல நடக்காமல் எச்சரிக்கையாக செயல்படுவோம் என்று ஐநா கூறுகிறது.

இப்போது, இலங்கையின் நிலைமை பன்னாட்டு பாதுகாப்புக்கோ, பன்னாட்டு அமைதிக்கோ அச்சுறுத்தலாக இல்லை. எனவே, இனிமேல் ஐநா விதி 99 ஐ பயன்படுத்த வாய்ப்பே இல்லை.

ஐநாவும் ஐநா பொதுச் செயலரும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை நேரடியாக மேற்கொள்ள வாய்ப்பு இல்லை. அந்த அமைப்பு ராஜதந்திர வழிகளில்தான் செயல்படும். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கலகங்களில் தலையிட்டுள்ள ஐநா அவை - மூன்று நிகழ்வுகளில் மட்டுமே ஐநா விதியை வெளிப்படையாக பயன்படுத்தியது.

அவ்வாறு விதி 99 இன் கீழ் விசாரணை நடத்தியிருந்தாலும் - அந்த அறிக்கை மீண்டும் ஐநா பாதுகாப்பு அவைக்குதான் போகும். அங்கு இலங்கையின் நட்புநாடுகளான சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்துடன் உள்ளன. அவர்கள் இலங்கை மீதான விதி 99 அறிக்கையைக் குப்பைக்கு அனுப்பிவிடுவார்கள்.

ஐநா அவையில் உச்ச அதிகாரம் படைத்தவர் அதன் பொதுச்செயலர் அல்ல. மாறாக, ஐநா பாதுகாப்பு அவையும், ஐநா பொதுச்சபையும்தான் அதிகாரத்துடன் உள்ளன. அங்கு உறுப்பு நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஐநாவில் நடக்கும் விடயங்கள் முழுக்க முழுக்க சர்வதேச அரசியல் சார்ந்தவையே ஆகும். அங்கு போய் 'ஐ.நாவின் விதிமுறைப்படி விசாரணை' என்று கேட்டுக் கொண்டிருந்தால் - அது காணல் நீராகவே முடியும்.

தொடர்புடைய சுட்டிகள்: 

ஐநா தீர்மானம்: குழப்பத்தின் சிகரம் மே 17 இயக்கம்!

1. மே 17 இயக்கத்திற்கு ஒரு பதில்: அமெரிக்கா தமிழ்த்தேசியர்களின் ஏவல் நாடா?!

2. ஐநா மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் பேச்சு: இனப்படுகொலை விசாரணை நடத்த நேரடியாகக் கோரிக்கை!

3. ஐநா தீர்மானம்: குழப்பவாதிகளிடம் இருந்து தப்புவார்களா ஈழத்தமிழர்கள்?!

4. இலங்கை: இனப்படுகொலையா? போர்க்குற்றமா? - கட்டுக்கதைகளும் உண்மையும்!

5. ராஜபக்சேவை காப்பாற்றும் தமிழ்த்தேசியப் போராளிகள்?!


6. இலங்கை மீது இனப்படுகொலை விசாரணை: ஐ.நா.வில் பசுமைத் தாயகம் வலியுறுத்தல்

கருத்துகள் இல்லை: