Pages

திங்கள், பிப்ரவரி 17, 2014

இலங்கை: இனப்படுகொலையா? போர்க்குற்றமா? - கட்டுக்கதைகளும் உண்மையும்!

ஈழத்தில் ராஜபக்சே அரசால் நடத்தப்பட்ட கொடூரங்களுக்கு நீதிகேட்டு நடக்கும் போராட்டங்கள் ஓரளவுக்கேனும் பயன்தரும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் 'தவறான பாதையில் வேகமாக ஓடுவது' போன்று ஒரு தவறான பிரச்சாரம் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படுகிறது. இது நீதிக்கான பாதையில் போடப்படும் முட்டுக்கட்டையாக மாறக்கூடும்.

தமிழர்கள் மத்தியில் 'இனப்படுகொலை', 'பொதுவாக்கெடுப்பு' என்கிற வார்த்தைகள் பேசப்படுகின்றன. இவை முக்கியமான வார்த்தைகள்தான். ஆனால், இன்றைய தருணத்தில், இவற்றைவிட மிக முக்கியமான வார்த்தை 'சர்வதேச விசாரணை' என்பதுதான். அதிலும் 'சர்வதேச விசாரணைக்கு இந்திய அரசு துணை நிற்க வேண்டும்' என்பதே இப்போது மிகமிக முதன்மையான தேவை ஆகும்.

ஆனால், 'போர்க்குற்றம் என்று சொல்வதே குற்றம். இனப்படுகொலை என்றுதான் சொல்ல வேண்டும்', 'போர்க்குற்றம் என்று சொல்வது சர்வதேசம் தமிழர்களை வஞ்சிக்கும் செயல்' என்றெல்லாம் இப்போது பேசுகிறார்கள். இந்தப் பிரச்சாரங்களுக்கு என்ன அடிப்படை, என்ன நோக்கம், என்பதெல்லாம் விளங்கவில்லை.

இனப்படுகொலையா? போர்க்குற்றமா?

இந்தக் கேள்வியே முட்டாள் தனமானது. ஏனெனில், இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. இனப்படுகொலை, போர்க்குற்றம் இரண்டும் ஒரே வகையான சர்வதேச சட்டங்களில் அடங்குகின்றன. இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. சர்வதேச சட்டம் என்கிற வரையறைக்குள் போர்க்குற்றம் (war crimes), மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் (crimes against humanity), இனப்படுகொலை (genocide) என எல்லாமும் அடங்கும்.
"போர்க்குற்றம் என்று சொல்வதே குற்றமாம்"
சர்வதேச சட்டங்கள், குறிப்பாக - சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும் (investigate the alleged violations of international human rights and humanitarian law) என ஐநா மனித உரிமைகள் ஆணையர் கோரிக்கை வைத்துள்ள நிலையில் - இனப்படுகொலை குறித்த விசாரணையை யாரும் கேட்கவில்லை என்று பேசுவது குதர்க்கமானது.

ஐநா தீர்மானத்தில் இனப்படுகொலை விசாரணைக்கு வாய்ப்பு இருக்கிறதா?

இப்போதைய நிலவரப்படி ஐநாவில் வரவுள்ள தீர்மானத்தில் இனப்படுகொலை விசாரணைக்கு வாய்ப்பு இல்லவே இல்லை என்று கூறிவிட முடியாது. மாறாக, இனப்படுகொலை என்று நேரடியான சொல் இடம்பெறாமல் போனாலும், அதையும் சேர்த்து விசாரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஐநா மனித உரிமை ஆணையர் வெளியிட இருக்கும் அறிக்கையில் "சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும்" என்கிற வாசகம் இருப்பதாக செய்திகள் கூருகின்றன (establish an international inquiry mechanism to further investigate the alleged violations of international human rights and humanitarian law).

இதே கோரிக்கை 2012 மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தில் 'இதற்கான தேவை இருப்பதைக் கவனத்தில் கொள்வதாக' ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது (Noting the High Commissioner’s call for an independent and credible international investigation into alleged violations of international human rights law and international humanitarian law).

பிப்ரவரி 6 ஆம் நாள் அமெரிக்க செனட்டில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்திலும் போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இதர மனித உரிமைக் குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது (international accountability mechanism to evaluate reports of war crimes, crimes against humanity, and other human rights violations).

பிப்ரவரி 10 ஆம் நாள் பிரிட்டன் அரசு அளித்த தகவலிலும் பன்னாட்டு விசாரணைக்கான தீர்மானத்தை முன்வைக்க இருப்பதாகக் கூறியுள்ளது.

எனவே, இப்போதைய நிலவரப்படி - ஒரு சர்வதேச விசாரணைக்கான தீர்மானம் ஐநா மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்படுமானால் அதில் பின்வரும் வாசங்களில் ஏதேனும் ஒன்று இடம்பெறக் கூடும்:

"சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் (international human rights and humanitarian law) மீறப்பட்டது குறித்து விசாரணை"

(அல்லது)

"போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இதர மனித உரிமைக் குற்றங்கள் (war crimes, crimes against humanity, and other human rights violations) குறித்த பன்னாட்டு விசாரணை"

- இந்த இரண்டு வாசகங்களிலும் இனப்படுகொலையும் சேர்த்தே விசாரிக்கப்படும் என்பது உள்ளடங்கி இருக்கிறது.

போர்க்குற்றம் என்று சொல்லாதே - என்பதில் என்ன தவறு?

சர்வதேச குற்றவியல் சட்டங்கள் என்றால் - போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்கிற மூன்றுவிதமான குற்றங்களை அவை முதன்மையாகக் குறிக்கின்றன.

பன்னாட்டு நீதிவிசாரணை அமைப்புகள் இந்த மூன்றுவிதமானக் குற்றங்களையுமே மிகத் தீவிரமான குற்றங்களாக  வரையறுக்கின்றன. எனவே, இவற்றில் ஒன்று இலேசானக் குற்றம் என்றோ, மற்றொன்று தீவிரமான குற்றம் என்றோ சொல்ல முடியாது. இவை எல்லாமும் மிகக் கொடூரமானக் குற்றங்களே ஆகும்.

மேலும், ஒரு சர்வதேசக் குற்றமானது எந்த வகையானக் குற்றம் என்பது நீதிவிசாரணையின் முடிவிலேயே தெரிய வரும். எடுத்துக்காட்டாக 'ஒரு படுகொலை நிகழ்வை' - போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என மூன்று நிலைகளிலும் குற்றமாக வகைப்படுத்த முடியும்.

1. போர்க்காலத்தில் ஆயுதமற்ற குடிமக்கள் கொலை செய்யப்பட்டால், அது போர்க்குற்றம். 2. அதுவே பரவலாகவோ திட்டமிட்டோ செய்யப்பட்டால் அது மனித குலத்துக்கு எதிரான குற்றம். இவை போரிலோ போரில்லாமலோ நடந்திருக்கலாம். 3. மேற்கண்ட குற்றங்களில் 'ஒரு இனத்தை அல்லது குழுவை அழிக்க வேண்டும்' என்கிற உள்நோக்கம் இருந்திருந்தால் அது இனப்படுகொலை.

- இந்த மூன்றுவகைக் குற்றங்களில் - போர்க்குற்றத்தை நிரூபிப்பது எளிது. மனித குலத்துக்கு எதிரான குற்றத்தை நிரூபிப்பது கடினம். இனப்படுகொலையை நிரூபிப்பது மிகக் கடினம்.

அதாவது, ஒரே சம்பவத்துக்காக மூன்று வகை குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தால் - இனப்படுகொலையை நிரூபிக்க முடியாத தருணத்தில்,  மனித குலத்துக்கு எதிரான குற்றத்தில் தண்டிக்க முடியும். இவை இரண்டையும் நிரூபிக்க இயலாவிட்டாலும் - போர்க்குற்றத்தில் தண்டிக்க முடியும்.
'போர்க்குற்றம் என்று சொல்கிறவர்களுக்கு எதிர்ப்பு'
சர்வதேச குற்றவழக்கு விசாரணை என்பது ஒவ்வொரு குற்ற நிகழ்வையும் தனித்தனியாக விசாரிக்கக் கூடியது என்பதால் 'இனப்படுகொலை' என்கிற ஒற்றைக் குற்றச்சாட்டை மட்டுமே வைத்தால், அதன்மூலம் பெரும்பாலான குற்றங்களை நிரூபிக்க முடியாமல் போய்விட வாய்ப்பு உள்ளது.

இலங்கையில் நடந்த சர்வதேசக் குற்றங்களில் ராஜபக்சேவைக் குற்றவாளியாக ஆக்கினால் - போர்க்குற்றத்தின் கீழ் அவரைத் தண்டிப்பது மிக எளிது. மனித குலத்துக்கு எதிரான குற்றத்திலும் தண்டிக்க முடியும். இனப்படுகொலை குற்றச்சாட்டில் தண்டிப்பது கடினமாக இருக்கும்.

மூன்றுவகையான குற்றச்சாண்டிலும் தண்டனை அதிகம் உண்டு. ஒரே குற்றவாளியை முன்று குற்றச்சாட்டுகளில் கீழும் தண்டிக்க முடியும். அதாவது - குற்றம் ஒன்றுதான் என்றாலும், அதற்கு மூன்றுவிதமான குற்றப் பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்க முடியும்.

இதில் - மிக எளிதாக நிரூபிக்கக் கூடிய குற்றச்சாட்டை எழுப்பக்கூடாது. ஆனால், நிரூபிப்பதற்கு மிகக் கடினமாக இருக்கும் குற்றச்சாட்டை மட்டுமே எழுப்ப வேண்டும் என தமிழ்நாட்டில் விசித்திரமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

'போர்க்குற்றம் என்று சொல்லாதே' என்பதில் உள்ள ஆபத்து என்ன?

போர்க்குற்றம் என்பது தனிப்பட்ட அளவிலேயே மிகப்பெரிய கொடுங்குற்றம். இதனை மிகச் சாதாரணமான குற்றமாகக் காட்டுவது மக்களைக் குழப்பும் செயல். அடுத்ததாக - போர்க்குற்றம் என்று பேசும் எல்லோரும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் (crimes against humanity) என்பதையும் சேர்த்தே பேசுகின்றனர். மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் என்பதும் கிட்டத்தட்ட இனப்படுகொலைக்கு இணையான குற்றச்சாட்டாகும்.

இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் இலங்கை மீது சர்வதேச சமூகம் முன்வைக்கிறது. அதுமட்டுமல்லாமல், 'பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள்' என்று கூறுவதன் மூலம் இனப்படுகொலை நடந்ததா என்று பார்ப்பதற்கான வாய்ப்புகளையும் உள்ளடக்கிதான் சர்வதேச சமூகம் பேசுகிறது. 

அதாவது, இன்றைய நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐநா உள்ளிட்ட எல்லோரும் தமிழர்களுக்கு ஆதரவாகவே உள்ளனர். 'போர்க்குற்றம் என்று சொல்லாதே' என்பன் மூலம் இன்று தமிழர்களுக்கு நண்பர்களாக இருப்பவர்களையே எதிரிகளாக சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது.
போர்க்குற்றம் என்று சொல்வதே குற்றமாம்"
இவ்வாறு, தமிழர்களுக்கு நீதிகிடைக்க குரல் கொடுப்பவர்களையே - நீதிக்கு எதிராக நடப்பவர்கள் போல குற்றம் சாட்டுவது நியாயம் இல்லை.

போர்க்குற்ற விசாரணையக் கேட்பவர்கள் தமிழர்களின் எதிரிகள் என்றால், உலகில் தமிழனுக்கு ஆதரவாக ஒரே ஒரு நாடும் இருக்காது. எனவே, 'போர்க்குற்றம் என்று சொல்லாதே' என்று கூறுகிறவர்கள் ராசபக்சேவுக்கு ஆள் சேர்ப்பதாகவே கருத முடியும்.

இனப்படுகொலை விசாரணைத் தேவை இல்லையா?

இனப்படுகொலை விசாரணை கட்டாயம் தேவை. ஆனால், அதற்கு நேரடியாக உடன்படும் நிலையில் இன்றைய சர்வதேச நிலை இல்லை. 'எல்லா சர்வதேச சட்ட மீறல்களையும் விசாரிக்க' ஒரு சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் இனப்படுகொலை நடந்ததற்கான முகாந்திரங்களை வெளியிடுமானால் - அதன் பின்னர் இனப்படுகொலை குறித்த விசாரணைக்கும் வாய்ப்பு உண்டு.

மாறாக, இப்போதே ஒரு இனப்படுகொலை விசாரணை தேவை (whether or not acts of genocide have occurred) என்றால் - அதனை முன்வைக்க தகுதி வாய்ந்த ஒரே நாடு இந்தியா மட்டுமே.

உலகில் மூன்று குற்றங்களும் விசாரிக்கப்பட்டுள்ளனவா?

உலகில் இதுவரை அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நீதிவிசாரணை அமைப்புகள் பலவற்றிலும் இந்த மூன்றுக் குற்றச்சாட்டுகளும் ஒரே நேரத்தில் விசாரிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் யூகோசுலோவியா, ருவாண்டா, கம்போடியா, கிழக்கு திமோர் உள்ளிட்ட உள்நாட்டுப் படுகொலை நடந்த இடங்கள் அனைத்திற்காகவும் அமைக்கப்பட்ட நீதி மன்றங்கள் 'போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை' என இவை மூன்றையும் விசாரித்துள்ளன.

உண்மையில் விசாரணைக்கு பின்னரே ஒரு குற்றச்செயலை 'போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை' என ஏதேனும் ஒன்றிலோ, ஒன்றுக்கு மேற்பட்டோ வகைப்படுத்துகின்றனர்.

உலகிலேயே முதன் முறையாக - எங்கும் இல்லாத அதிசயமாக - 'போர்க்குற்றத்தை விசாரிக்காதே, இனப்படுகொலையை மட்டும் விசாரி' என்று கோருகிறவர்கள் தமிழர்களாக மட்டுமே இருக்கும்!

போர்க்குற்றம் என்றால் ஒரு சிலர் தண்டிக்கப்படுவதோடு முடிந்துவிடுமா?

இது ஒரு தவறான பிரச்சாரம். தண்டனையைப் பொருத்தவரை 'போர்க்குற்றம், இனப்படுகொலை' இரண்டுக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை. தண்டனைக் காலம் வேண்டுமானால் மாறுபடலாம்.

போர்க்குற்றம் என்றால் ஒரு சிலர் மட்டுமே தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவது உண்மை என எடுத்துக்கொண்டால் - இனப்படுகொலை என்று சொன்னாலும் அதுதான் நடக்கும்.

இரண்டிலுமே தனிநபர்கள்தான் தண்டிக்கப்படுவார்கள். குற்றம் இழைத்தவர்கள் மட்டுமின்றி அதற்கு காரணமானவர்களும் குற்றம் சாட்டப்படுவார்கள். எனவே, கீழ்நிலை இராணுவத்தில் தொடங்கி, ராஜபக்சே வரை எல்லோரும் குற்றம் சாட்டப்படுவார்கள்.

பிரேமன் மக்கள் தீர்ப்பாயம் இனப்படுகொலை என்று தீர்ப்பளித்துள்ளதே?

நிரந்த மக்கள் தீர்ப்பாயம் என்பது ஒரு நீதிமன்றமோ, அரசுகள் பங்கேற்கும் ஒரு பன்னாட்டு அமைப்போ அல்ல. அந்த அமைப்புக்கு சட்டரீதியான எந்த வலிமையும் இல்லை. அங்கீகாரமும் இல்லை. ஐக்கிய நாடுகள் அவையில் நேரடியாக பங்கேற்று கருத்துகளை முன்வைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஐநா ஆலோசனை அமைப்பும் அது அல்ல.

ஒரு அரசு சாரா மக்கள் அமைப்பின் கருத்து என்கிற அளவுக்கு மட்டுமே நிரந்த மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எடுத்துக்கொள்ள முடியும். ஆனாலும், அந்த மக்கள் தீர்ப்பாய முயற்சிகள் வரவேற்கத் தக்கவை.

நிரந்த மக்கள் தீர்ப்பாயமும் கூட - அதன் டப்ளின் விசாரணையில் 'போர்க்குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரானக் குற்றங்கள்' நடந்தன என்று கூறி, பின்னர் இந்தக் குற்றச்சாட்டுகளுடன் 'இனப்படுகொலை' குற்றத்தையும் சேர்க்க வேண்டும் என்று கூறி பிரேமன் தீர்ப்பாய விசாரணை நடத்தப்பட்டது.

எனவே, நிரந்த மக்கள் தீர்ப்பாயமும் கூட 'போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரானக் குற்றங்கள், இனப்படுகொலை' என மூன்று வகையான குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கிறது.

இப்போதைய தேவை என்ன?

ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்து சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்பதே இப்போதைய கோரிக்கையாக இருக்க வேண்டும். 

சர்வதேச சட்ட மீறல்கள் எனும் போது 'போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை' அனைத்தையும் விசாரிக்க வேண்டும் என்பதே சரியான கோரிக்கையாக இருக்க முடியும்.

எனவே இன்றைய உடனடி கோரிக்கையாக இருக்க வேண்டியது 'சர்வதேச விசாரணை' என்பதுதான். இந்தக் கோரிக்கைக்கு தடையாக இருக்கக் கூடிய முதன்மை நாடு இந்தியா என்பதால் - தமிழ்நாட்டு தமிழர்களின் போராட்டமும் இந்திய அரசை நோக்கியே இருக்க வேண்டும்.

'சர்வதேச விசாரணைக்கு இந்திய அரசு துணை நிற்க வேண்டும்' என்பதே இப்போது முதன்மையான தேவை ஆகும். அதை விடுத்து, ஐநா அவையையும் அமெரிக்காவையும் குறிவைத்து போராட இது நேரம் அல்ல.

தொடர்புடைய சுட்டிகள்:





6 கருத்துகள்:

viyasan சொன்னது…

///இன்றைய நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐநா உள்ளிட்ட எல்லோரும் தமிழர்களுக்கு ஆதரவாகவே உள்ளனர். 'போர்க்குற்றம் என்று சொல்லாதே' என்பன் மூலம் இன்று தமிழர்களுக்கு நண்பர்களாக இருப்பவர்களையே எதிரிகளாக சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது.///

நன்றி. தமிழ்நாட்டில் சில இயக்கங்களுக்கு மேலை நாடுகளை எதிர்த்தால் தான் கூட்டம் சேரும் என்ற நிலை. அதனால் தான் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற மேலைநாடுகளின் நோக்கம் எதுவாக இருந்தாலும் கூட, இன்றைய நிலையில் அவர்கள் எங்களின் நிலையைப் புரிந்து கண்டிருக்கிறார்கள். அல்லது ஈழத்தமிழர்களின் போராட்டங்களை யாரும் கணக்கிலெடுக்க மாட்டார்கள். அதனால், தமிழ்நாட்டு ஈழ ஆதரவு இயக்கங்களின், சோசலிசம், அமெரிக்க எதிர்ப்பு, இஸ்லாமிய ஆதரவு என்ற அடிப்படையில் மேலை நாடுகளுக்கெதிரான எந்தப் போராட்டமும், ஈழத்தமிழர்களுக்கு உதவாது.

நீங்கள் கூறுவது போல், இந்தியாவைத் துணை நிற்குமாறு தான் கேட்க வேண்டும். இந்திய அரசு மீண்டும், மூன்றாவது தீர்மானத்தையும் நீர்த்துப் போகச் செய்யாதிருக்க வேண்டும். ஆனால், இந்தியாவுக்கெதிராகப் போராட அவர்களுக்குப் பயம் ஏனென்றால், இந்திய சனநாயகக் குடியரசில் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்பவர்களைக் கூட, ஏதாவது சட்டத்தின் கீழே, தூக்கி உள்ளே போட்டு விடுவார்கள். :-)

Unknown சொன்னது…

இன்னபடுகொலை என்று நிரூபணம் ஆன பின் எதற்கு பின் நோக்கி சென்று போர்குற்றம் என்று கூறுவானேன்.

அருள் சொன்னது…

Muthu Kumaran சொன்னது… //இனப்படுகொலை என்று நிரூபணம் ஆன பின் எதற்கு பின் நோக்கி சென்று போர்குற்றம் என்று கூறுவானேன்.//

1. இனப்படுகொலை, போர்க்குற்றம், மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் எதுவும் இலங்கையில் நடந்ததாக இன்னமும் சட்டரீதியாக மெய்ப்பிக்கப்படவில்லை. ஐநா விசாரணையைக் கோருவதே அதை நிரூபிப்பதற்காகத்தான்.

2. பின்னோக்கி - முன்னோக்கி என்றெல்லாம் எதுவும் இல்லை. போர்க்குற்றம், இனப்படுகொலை என்பவை இரண்டும் இருவேறு விதமான குற்ற வகைப்படுத்தல் மட்டுமே.

Unknown சொன்னது…

@ Arul ஜெர்மனி நகரில் நடந்த மக்கள் தீர்ப்பாயம் இத்தனை விசாரித்து ஆதாரத்துடன் கூறி இருகிறது இனப்படுகொலை என்று. ஒரு இனத்தையே அழித்தார்கள் அதை போற்குற்றதின் மூலமாக சாத்திய படுத்தினார்கள் என்று வேணுமானால் சொல்லாம். மக்கள் தீர்ப்பாயம் எடுத்து கொண்ட கால அளவு வெகு நீண்டது... வெறும் எட்டு மாத போரை குற்றம் சாட்டுவது போர்குற்றம்... தமிழர்கள் இனபடுகொலைக்கு உள் ஆனார்கள் அதில் போர் குற்றங்களும் அடங்கும் என்று கூறுவதே சரியான வாதமாக நான் பார்கிறேன்.

Nakkeran சொன்னது…

மே 17 போன்ற இயக்கங்கள் அடிப்படையில் அமெரிக்க எதிர்ப்பு, முஸ்லிம் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவை. இதன் காரணமாக அமெரிக்கா முன்மொழியும் தீர்மானங்களை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கின்றன. தமிழர்களுக்க துரோகம் செய்வதாக கூக்குரல் இடுகின்றன. இதனால் இப்படியான இயக்கங்கள் தங்களை வளர்த்துக் கொள்ள ஈழச் சிக்கலை கையில் எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்ற அய்யம் நியாயமாவே எழுகிறது. இன்றைய காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளோடு நாம் பகைத்துக் கொள்ளக் கூடாது. அமெரிக்கா சிறீலங்கா எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருக்காவிட்டால் எந்தத் தீர்மானமும் அய்நாமனித உரிமைப் பேரவையில் நிறைவேறியிருக்காது. எமது கோப்பு அனைத்துலக மட்டத்தில் மூடப்பட்டிருக்கும். கடந்த காலத்தில் அனைத்துநாட்டு அரசியலோடு ஒத்துப் போக மறுத்ததே (Positioning ourselves wth geo-political interests and political actors) எமது தோல்விக்குக் காரணம். போர்க்குற்றம், மனித இனத்துக்கான குற்றம் இவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இனப்படுகொலையை மட்டும் முன்னுக்குத் தள்ளி அதனை வற்புறுத்துவது மாட்டுக்கு முன்னால் வண்டிலைக் கட்டுவது போன்றது. அரசியல் என்பது அறிவியல் அல்ல. அது ஒரு கலை. சாதிக்க முடிந்ததை முதலில் செய்ய வேண்டும். சாதிக்க முடியாததையிட்டு நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்கக் கூடாது.Forty years ago most thought that Nelson Mandela would die in prison in apartheid South Africa and no black person would become U.S. president in their lifetime. But both became a reality some forty years later. இந்தக் கட்டுரை பலரது கண்களைத் திறக்கும் என நம்புகிறேன்.

பெயரில்லா சொன்னது…

மிகச் சிறந்த படைப்பு இலங்கையில் நடந்து வருவது இன அழிப்பே. இன அழிப்பின் அங்கமாகவே போர் குற்றம் இருக்கின்றது. இலங்கையில் 1948 முதல் 2009 வரை நிகழ்த்தப்பட்ட அனைத்து இன அழிப்பு மற்றும் வன்முறைகளையும் விசாரித்து அம்பலப்படுத்த வேண்டும். இலங்கை அரசு முதல் விடுதலைப் புலிகள் வரை அனைவர் செய்த போர்குற்றங்கள் இன அழிப்பையும் விசாரிக்க வேண்டும்.