Pages

திங்கள், பிப்ரவரி 10, 2014

இலங்கை-ஐநா தீர்மானம்: சேவ் தமிழ்சு இயக்கத்தின் அறியாமையா? இருட்டடிப்பா?

'சேவ் தமிழ்சு இயக்கம்' என்கிற அமைப்பு "மார்ச் 2014 ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தொடர் - தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்?" என்கிற ஒரு கருத்தரங்கை சென்னையில் நடத்தியுள்ளது. அக்கூட்டத்தில் ஆகப்பெரிய தமிழ்தேசியப் போராளிகள் பலர் பங்கேற்றுள்ளனர். அந்தக் கூட்டத்திற்கான ஒரு விளக்கக் குறிப்பில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. 

சேவ் தமிழ்சு இயக்கம் சொல்வது என்ன?

ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கை குறித்து விவாதிக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றி, சேவ் தமிழ்சு இயக்க குறிப்பில் விளக்கியுள்ளார்கள். அதில் பின்வரும் வாசகம் இடம்பெற்றுள்ளது:

"மே 2009 ல் இலங்கை குறித்து ஐநா மனித உரிமை மன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், இந்திய அரசின் ஆதரவுடன், இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தின் போது தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் இருந்த தமிழர்கள் எதுவும் செய்யாமல் மவுனித்து இருந்தார்கள். தமிழர்களின் இந்த மவுனம் இலங்கைக்கு ஆதரவாக அமைந்துவிட்டது" என்கிற வகையில் குறிப்பிட்டுள்ளது சேவ் தமிழ்சு இயக்கம்.

UNHRC’s 11th Special session in May 2009 passed a resolution that appreciated Sri Lanka after the genocidal war against Tamils with full support from India. Tamils from diaspora and Tamil Nadu were silent during this session after experiencing and witnessing the Mullivaaikkaal disaster. This silence of Tamils favored many genocidal partners and countries like India to openly support Sri Lankan terror state. (Save-Tamils-Movement - UNHRC What should be the Role of Tamil Nadu?)

சேவ் தமிழ்சு இயக்கம் எதை மறைக்கிறது?

"2009 மே இலங்கை குறித்த ஐநா சிறப்புக் கூட்டத்தின் போது தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் இருந்த தமிழர்கள் எதுவும் செய்யாமல் மவுனித்து இருந்தார்கள்" என்று சேவ் தமிழ்சு இயக்கம் சொல்கிறது. இதன் மூலம் அப்போது நடந்த விவரங்களை சேவ் தமிழ்சு இயக்கம் இருட்டடிப்பு செய்துள்ளது.

மார்ச் 2009 ஐநா கூட்டத்திலேயே தமிழர்களின் கோரிக்கை

2009 ஆம் ஆண்டு மே மாதம்இலங்கை குறித்த ஐநா மனித உரிமைப் பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அதற்கு முன்பாக மார்ச் 2 முதல் 27 வரை ஐநா மனித உரிமைப் பேரவையின் பத்தாவது கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பு ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை சமர்ப்பித்தது. (ஐநா மனித உரிமைப் பேரவையில் அரசாங்கமும், ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளும் மட்டுமே அதிகாரப்பூர்வ அறிக்கைகளை கொடுக்க முடியும். அந்த அறிக்கைகளை மனித உரிமைப் பேரவையே வெளியிடும்). பசுமைத் தாயகம் அமைப்பு அளித்த அறிக்கையை 26.2.2009 அன்று ஐநா மனித உரிமைப் பேரவை வெளியிட்டது.

"Sri Lanka: A Crying Need to Protect the Rights of Civilians in Northern Sri Lanka" என்று தலைப்பிடப்பட்ட அந்த அறிக்கையில், இலங்கை குறித்த ஐநா மனித உரிமைப் பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்றும், இலங்கையில் இனப்படுகொலை நடக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது.
அதாவது, இலங்கையில் உச்சக்கட்ட இன அழிப்பு நடந்த 2009 மே மாதத்திற்கு முன்பாகவே, ஐநா மனித உரிமைப் பேரவையில் தமிழர்களின் கோரிக்கையை முன்வைத்தது பசுமைத் தாயகம் அமைப்பு. பசுமைத் தாயகத்தின் கோரிக்கையில் இலங்கை குறித்த ஐநா மனித உரிமைப் பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

அந்த அறிக்கையை இங்கே காணலாம்: Sri Lanka: A Crying Need to Protect the Rights of Civilians in Northern Sri Lanka

இதன் தொடர்ச்சியாக மே மாதம் 9 ஆம் நாளன்று உலகின் 90 மனித உரிமை அமைப்புகள் சேர்ந்து இலங்கை குறித்து விசாரிப்பதற்காக 'ஐநா மனித உரிமைப் பேரவையின் சிறப்புக்கூட்டத்தை' உடனே கூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த 90 அமைப்புகளில் பசுமைத் தாயகமும் ஒன்று. 

அதனை இங்கே காணலாம்: Sri Lanka: Appeal for a Special Session of the UN Human Rights Council on the Human Rights Situation in Sri Lanka

மே 2009  இலங்கை குறித்த ஐநா சிறப்புக் கூட்டத்திலும் தமிழர்களின் கோரிக்கை 

இலங்கை தொடர்பாக விவாதிக்க சிறப்புக் கூட்டம் 2009 மே மாதம் 26 - 27 தேதிகளில் கூட்டப்பட்ட போது, அதிலும் பசுமைத் தாயகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்தக் கூட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து மொத்தம் நான்கு அமைப்புகள் மட்டுமே கோரிக்கை அறிக்கையை சமர்ப்பித்தன. அதில் பசுமைத் தாயகம் அறிக்கையும் ஒன்று. 


அந்த அறிக்கையில் - இலங்கையின் இனப்படுகொலை அளவிலான கொடூரங்கள் நடந்துள்ளது தொடர்பில் ஐநா சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பசுமைத் தாயகம் கோரியது. மேலும் தமிழர் பகுதியில் பொதுவாக்கெடுப்பு நடத்தி, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் காக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
அந்த அறிக்கையை இங்கே காணலாம்: Sri Lanka: International inquiry into War Crimes – an urgent need

அதுமட்டுமல்லாமல், இக்கூட்டத்தில் பசுமைத் தாயகம் சார்பில் கனடாவைச் சேர்ந்த மருத்துவர் சாந்தகுமார் நேரில் கலந்துகொண்டு பேசினார். 


அதாவது, இலங்கை குறித்த 2009 மே மாத ஐநா சிறப்புக் கூட்டத்தில், இந்திய அரசு இலங்கையை தீவிரமாக ஆதரித்துப் பேசிய அதே இடத்தில் - பசுமைத் தாயகம் சார்பில் இலங்கைக்கு எதிராக உரை நிகழ்த்தப்பட்டது.

இலங்கை மீதான ஐநா சிறப்புக் கூட்டம் குறித்த ஐநா பாதுகாப்புச் சபையின் விரிவான அறிக்கையை இங்கே காணலாம் (10 மற்றும் 14 ஆம் பக்கத்தில் பசுமைத் தாயகத்தின் பங்கேற்பு குறிப்பிடப்பட்டுள்ளது): REPORT OF THE HUMAN RIGHTS COUNCIL ON ITS ELEVENTH SPECIAL SESSION 

உண்மையை மூடி மறைப்பது ஏன்?

ஆக, 2009 ஆம் ஆண்டிலேயே - இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும், இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழர் பகுதிகளில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் பசுமைத் தாயகம் அமைப்பு அதிகாரப்பூர்வ அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது. பசுமைத் தாயகம் சார்பிலான பிரதிநிதிகள் நேரிலும் கலந்துகொண்டு அந்தக் கூட்டத்தில் பேசியும் உள்ளனர்.

ஆனால், இதையெல்லாம் முடி மறைத்துவிட்டு, "மே 2009 ல் இலங்கை குறித்து ஐநா மனித உரிமை மன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், தமிழர்கள் மவுனமாக இருந்துவிட்டனர்" என்று கூறுகிறது சேவ் தமிழ்சு இயக்கம்.

அப்படியானால், பசுமைத் தாயகம் அமைப்பு தமிழர்களின் அமைப்பு இல்லையா? அதனுடைய குரல் தமிழர்களின் குரல் இல்லையா? அல்லது மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களினால் தொடங்கப்பட்ட ஒரு அமைப்பின் பணிகளை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக இதனை மறைக்கிறார்களா?

சேவ் தமிழ்சு இயக்கம் உள்ளிட்ட தமிழ்த்தேசியப் போராளிகளே - ஈழத்தமிழர் விடயத்திலாவது உங்களது சாதிவெறியை மூட்டைக்கட்டி ஓரமாக வையுங்கள்.

குறிப்பு: ஐநா அவையின் அதிகாரப்பூர்வ இணையத்தில், 2009 ஆம் ஆண்டில் ஐநா மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் பங்கேற்றது குறித்த ஆவணங்களை காணலாம்:

1. UN Human Rights Documents HRC/10/NGO/71


2. HUMAN RIGHTS COUNCIL Eleventh special session (Page 10 & 14)

கருத்துகள் இல்லை: