Pages

புதன், பிப்ரவரி 19, 2014

ஏழு பேர் விடுதலைக்கு வரவேற்பு: 20 ஆண்டு சிறையில் வாடும் வீரப்பனின் சகோதரர் மாதையனை விடுதலை செய்ய வேண்டும்

ஏழு பேர் விடுதலைக்கு வரவேற்பு: 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் சகோதரர் மாதையனை விடுதலை செய்ய மருத்துவர் இராமதாசு அய்யா கோரிக்கை

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

"பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அத்துடன், இவர்கள் ஆயுள் தண்டனைக் காலத்தை கழித்து விட்டதால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432, 433 ஆகிய பிரிவுகளின்படி  அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் மட்டுமின்றி, இதே வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகும் சிறையில் வாடும் நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரையும் சேர்த்து விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை நான் வலியுறுத்தியிருந்தேன்.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தை இன்று கூட்டிய முதலமைச்சர் ஜெயலலிதா, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில்  அறிவித்திருக்கிறார். இவர்களின் விடுதலைக்கான சட்டபூர்வ நடைமுறைகள் தொடங்கப்பட்டிருப்பதால் அடுத்த சில நாட்களில் இவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் விடுதலை காலம் தாழ்த்தப்பட்ட ஒன்று  என்றபோதிலும் வரவேற்கப்பட வேண்டியதாகும்.

செய்யாத குற்றத்திற்காக 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, தங்களது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டத்தை இழந்துவிட்ட இவர்கள், விரைவில் விடுதலை ஆவார்கள் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விடுவிக்கப்பட்ட பின்னர் இவர்கள் 7 பேரும்  அவர்கள் விரும்பியவாறு, தொல்லையில்லாத, அமைதியான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும்  தமிழக அரசே செய்து தர வேண்டும் .

மாதையனை விடுவிக்க வேண்டும்

நளினி உள்ளிட்டோரைப் போன்றே தண்டனைக் காலம் முடிவடைந்தும் ஏராளமானோர் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். பல்வேறு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்ட வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.  

அவர் மீது தொடரப்பட்டுள்ள எந்த வழக்கிலும் அவருக்கு தொடர்பு இல்லை. ஒரு வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தண்டனைக் காலம் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகியும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. 65 வயதைக் கடந்த மாதையன் நீரிழிவு நோய், அதிக இரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்.

அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவரைப் போலவே தண்டனைக் காலம் முடிந்த பிறகும் சிறையில் வாடும் அனைத்துக் கைதிகளையும் கருணை அடிப்படையில் அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."

கருத்துகள் இல்லை: