Pages

செவ்வாய், பிப்ரவரி 16, 2016

சென்னை ஆரிய கௌடா சாலை: ஒரு மாபெரும் வரலாற்று மோசடி!

சென்னை மாம்பலம் பகுதியில் ஆரிய கௌடா சாலை என்கிற பெயரில் ஒரு சாலை அமைந்துள்ளது. சென்னையில் பார்ப்பனர்கள் ஆன்மீக மற்றும் சமுதாய ரீதியில் ஒன்று கூடும் 'அயோத்தியா மண்டபம்' எனும் அரங்கம் இங்குதான் இருக்கிறது.
ஆரிய கௌடா சாலை
பார்ப்பனர்கள் முக்கியமாக கருதும் பகுதியில், 'ஆரிய' என்கிற பெயருடன் சாலை இருந்தால், அது ஆரிய இனத்துடன் தொடர்புபடுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால், உண்மை அதுவல்ல.

திராவிட இயக்கத்தின் உயர்சாதி ஆதிக்கம் 

தமிழ்நாட்டின் அரசியலில் திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆங்கிலேயர்களின் தேவைக்காகவும், பார்ப்பனரல்லாத உயர்சாதியினரின் நலனுக்காகவும் உருவான இயக்கம் அதுவாகும். 1912 - 17 ஆம் ஆண்டுகளில் மாவட்ட துணை ஆட்சியர்களில் 55% பேர், துணை நீதிபதிகளில் 83% பேர், மாவட்ட முன்சீஃப் பதவிகளில் 73%, உயர் அரசாங்க பதவிகளில் 65% பேர் என ஆங்கிலேயர்களுக்கு அடுத்த இடத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே இருந்தனர்.  ஒரு சாதியை மட்டுமே நம்பி ஆங்கிலேய ஆரசாங்கம் நடப்பதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.

இந்நிலையில், பார்ப்பனர்கள் பெற்றிருந்த அதிகார நிலையை தாம் பிடிக்க வேண்டும் என பார்ப்பனரல்லாத உயர்சாதிகளில் இருந்து புதிதாக படிக்கத் தொடங்கியவர்கள் விரும்பினார்கள். 1916 ஆம் ஆண்டில் தெலுங்கு, தமிழ், மலையாளம் பேசும் பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் ஒன்றிணைந்து பார்ப்பனர் அல்லாதார் அறிக்கையை சென்னையில் வெளியிட்டனர். இப்படியாக பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனரல்லாத உயர் சாதியினருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியின் காரணமாகவே தமிழ்நாட்டில் திராவிட இயக்க அரசியல் உருவானது. 

திராவிட இயக்கத்தின் ஆட்சியில் கம்யூனல் ஜீஓ எனும் இடஒதுக்கீடு அரசாணை 1927 ஆம் ஆண்டில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இது பார்ப்பனர் அல்லாத உயர் சாதிகளின் வெற்றியாக பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டின் 72% மக்களை பார்ப்பனர் அல்லாதோர் என்கிற ஒற்றை குழுவாக வகைப்படுத்தி, பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினருக்கு சாதகமாக திராவிட இயக்கம் இடஒதுக்கீட்டை செயலாக்கியது. 

பிற்பட்டோர் வகுப்பின் உதயம்

பார்ப்பனரல்லாத உயர் சாதி ஆதிக்கத்தை எதிர்த்து பிற்பட்டோர் பேரவை Madras Provincial Backward Classes League எனும் அமைப்பு 1934 ஆம் ஆண்டில் உருவானது. எம்.ஏ. மாணிக்கவேல் நாயகர், எஸ்.ஏ. நஞ்சப்பா, பி.கே. ராமச்சந்திர படையாட்சி, எச். ஆரி கௌடர் ஆகியோர் சேர்ந்து இந்த அமைப்பை உருவாக்கினார்கள் (முதல் மூவரும் வன்னியர்கள், மற்றவர் படுகர் இனத்தவர்). இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு என்று தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரினர். எச். ஆரி கௌடர் Madras Provincial Backward Classes League அமைப்புக்கு  தலைமை வகித்தார்.
எச். ஆரி கௌடர்
பார்ப்பனர்கள் அரசுப் பதவிகளில் பார்ப்பனரல்லாத உயர் சாதியினர் அதிக இடங்களை எடுத்துக்கொள்கிறார்கள் என்று இடஒதுக்கீட்டை கொண்டுவந்த நீதிக்கட்சி ஆட்சியில், பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினரே பலனடைந்திருப்பதை இவர்கள் சுட்டிக்காட்டினர். 

1944 ஆம் ஆண்டில், மக்கள் தொகையில் 50% ஆக உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு, அரசின் 2100 கெசட் அலுவலர் பதவிகளில் 2% மட்டுமே கிடைத்திருப்பதையும்; அதே நேரத்தில் 22% மட்டுமே இருக்கும் பார்ப்பனரல்லாத உயர்சாதியினருக்கு 27% இடம் கிடைத்திருப்பதையும் இவர்கள் ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டினர்.

இந்த போராட்டங்களின் விளைவாக 1947 ஆம் ஆண்டில், பார்ப்பனர் அல்லாதவர்கள் தனிப்பிரிவு என்றும், பிற்படுத்தப்பட்டவர்கள் தனிப்பிரிவு என்றும் உருவானது. இவ்வாறாக, இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் 'இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்' Other Backward Classes (OBC) எனும் வகுப்பு உருவாகக் காரணமாக இருந்த நால்வரில் ஒருவர்தான் ஆரி கௌடர். 

ஆரி கௌடர்

நீலகிரி மலை ரெயில் என்று இன்று போற்றப்படும் புகழ்பெற்ற ரயில் பாதையை அமைத்த, படுகர் இனத்தைச் சேர்ந்த பெல்லி கௌடர் என்பவரின் மகனாக 1893 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஆரி கௌடர்.

சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில்தான் எம்.ஏ. மாணிக்கவேல் நாயகர், எஸ்.ஏ. நஞ்சப்பா, பி.கே. ராமச்சந்திர படையாட்சி ஆகிய சக சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து Madras Provincial Backward Classes League அமைப்பை ஏற்படுத்தினார். இவர் 1971 ஆம் ஆண்டில் மறைந்தார்.
ஆரி கௌடர் பாலம்
நீலகிரி பகுதி வளர்ச்சிக்கு பாடுபட்ட இவரது பெயரில்தான், தமிழ்நாட்டையும் கர்நாடகாவையும் இணைக்கும் மசினக்குடி பாலம் அமைந்துள்ளது.

சென்னை மாம்பலம் பகுதியில் இவருக்கு சொந்தமாக இருந்த ஏராளமான நிலத்தை தியாகராய நகருக்காக அரசிடம் இலவசமாக அளித்தார். இதற்காக அதே பகுதியில் உள்ள சாலைக்கு ஆரி கௌடர் சாலை என்று பெயர் வைத்தார்கள். இப்போது ஆரிய கௌடா சாலை ஆக்கிவிட்டார்கள்.

எதிர்காலத்தில், அங்குதான் ஆரியர்கள் வந்து குடியேரினார்கள் என்று கதைக்கட்டி, ஆரி கௌடர் பெயரையே மறைத்துவிடுவார்கள்.

வரலாற்று மோசடி தடுக்கப்பட வேண்டும்

இந்திய வரலாற்றில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) எழுச்சி மிக முதன்மையான அரசியல் நிகழ்வாகும். மண்டல் குழுவில் தொடங்கி, இன்று தமிழ்நாட்டில் உள்ள பாமகவும், வட இந்தியாவில் உள்ள லாலு, நிதீஷ், முலாயம் சிங் போன்ற அரசியல் எழுச்சிகளும் - இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சமூக நீதி அரசியலின் வடிவம் ஆகும்.

இந்த மாபெரும் வரலாற்றின் தொடக்கமாக இருக்கும் - Madras Provincial Backward Classes League அமைப்பையும் எம்.ஏ. மாணிக்கவேல் நாயகர், எஸ்.ஏ. நஞ்சப்பா, பி.கே. ராமச்சந்திர படையாட்சி, (மூவரும் வன்னியர்கள்), எச். ஆரி கௌடர்  (படுகர்) ஆகியோரை வரலாற்றில் இருந்து மறைப்பதை ஏற்க முடியாது.

'ஆரிய கௌடா' சாலை என்பது 'ஆரி கௌடர்' சாலை ஆக வேண்டும்.

2 கருத்துகள்:

syedabthayar721 சொன்னது…

நல்ல பதிவு. தங்கள் கட்சி மூலம் இதற்க்கு நடவடிக்கை எடுக்கலாமே நண்பரே !!

M. செய்யது
Dubai

chandrasekaran சொன்னது…

நல்ல கட்டுரை.