Pages

திங்கள், பிப்ரவரி 15, 2016

திமுகவிடம் மண்டியிட்டு மானம் இழந்தும் வாய்க்கொழுப்பு அடங்காத இளங்கோவன்

முனிவர்கள் கோபத்தில் வாய் திறந்தால் சாபம் வரும்... சில அரசியல் கட்சித் தலைவர்கள் வாயைத் திறந்தால் கூவம் தான் வரும். அத்தகையத் தலைவர்களில் முதன்மையானவர் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன். வாய் மட்டும் இல்லை என்றால் நாய் தூக்கிச் சென்று விடும் என்று சிலரைப் பார்த்து வேடிக்கையாகக் கூறுவது உண்டு. ஆனால், இன்னும் சிலர் வாய் பேசுவதைப் பார்த்தால் நாய்கள் கூட திரும்பிப் பார்க்காது. அத்தகையவர்களிலும் இவருக்கு இடம் உண்டு.
இத்தகைய பெருமைகளுக்கு உரிய இளங்கோவனிடம் நேற்று செய்தியாளர்கள் ஒரு வினா எழுப்பினார். ‘‘பலம் இல்லாத கட்சிகள் தான் கூட்டணி அமைக்கும். பா.ம.க. பலம் உள்ள கட்சி. 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறாரே? இதுபற்றிய உங்கள் கருத்து என்ன?’’ என்று கேட்டார். பா.ம.க.வின் நிலைப்பாடு பற்றிய மருத்துவர் அய்யாவின் கருத்துக்கு இளங்கோவன் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. அது அவர்கள் கட்சியின் கருத்து என்று கூறி ஒதுங்கியிருக்கலாம்.

உண்மையாகவே தமிழக நலனில் அக்கறை இருந்திருந்தால், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தனித்து போட்டியிடும் பா.ம.க.வின் நிலைப்பாட்டை பாராட்டியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல், ‘‘ரொம்ப சந்தோஷம்... அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் போட்டியிடட்டும்’’ என்று நக்கல் செய்திருக்கிறார். வாய்க்கொழுப்புக்காரர்களிடம் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

ஆனால், இந்த இளங்கோவன் கடந்த காலங்களில் பேசிய பேச்சுக்கள் என்ன தெரியுமா? 

சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் பற்றி கலைஞர் ஏதோ கூற, அதற்கு பதிலளித்த இளங்கோவன், ‘‘எதையும் ஊதி ஊதிப் பெரிதாக்குவது தான் கலைஞரின் தொழில்’’ என்று அவரது குலத்தொழிலை இழுத்து கொச்சைப்படுத்தினார்.

2013 ஆம் ஆண்டில் தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணி உடைந்த போது,‘‘கூட்டணி கிடையாது என்ற, கருணாநிதியின் அறிவிப்பால், பெரிய சுமை நீங்கி விட்டதாகக் கருதுகிறோம்; அவர்களால், எங்களுக்கு ஏற்பட்ட கறை நீக்கப்பட்டதாக உணருகிறோம். மறுபடி சமரசம் கிடையாது. காங்கிரசுக்கு சுயமரியாதை இருக்கிறது. தி.மு.க., தான் எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் மைனாரிட்டி தி.மு.க., அரசு, ஐந்து ஆண்டு காலம் ஆட்சி நடத்தியது.  சி.பி.ஐ.,யை தவறாக பயன்படுத்தவில்லை. சி.பி.ஐ., என்பது தனி ஆளுமை நிறுவனம். காங்கிரசை குற்றம் சொல்வது, பா.ஜ.,வுக்கு ஒத்து ஊதுவது போல் உள்ளது. இந்த அழுக்கு மூட்டையை, முதுகில் சுமக்க, பா.ஜ., தயாராக இருக்காது. ஊழல் கறை படிந்த, தி.மு.க.,வை, பா.ஜ., சேர்ப்பது சந்தேகம் தான்’’ என்று இளங்கோவன் கூறினார். இப்போது அதே அழுக்கு மூட்டையான திமுகவைத் தான் கோபாலபுரத்துக்குச் சென்று தோளில் சுமந்து கொண்டிருக்கிறார் இவர்.
நடிகர் தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் ஆந்திர தாதா சுமனும், தமிழகத்திலிருந்து சென்று தாதா போல நடிக்கும் விவேக்கும் பேசிக் கொள்வது போல ஒரு டயலாக் வரும்.‘‘ ஹைதராபாத்  உன்னுது... செகந்திராபாத் என்னுது. குண்டூர் உன்னுது... நெல்லூர் என்னுது. கடப்பா உன்னுது... மடப்பா என்னுது. காக்கிநாடா உன்னுது... பாவாடை நாடா என்னுது. ஓ.கேன்னா டீலு. இல்லன்னா  பிரியாணி சாப்பிட்டு பெட்ரோல் கன்வேயன்ஸ் வாங்கிட்டு போய்க்கிட்டே இருப்பான் இந்த கேங் லீடர்’’ என்று வீர வசனம் பேசுவார் விவேக். இறுதியில் தன்நிலை உணர்ந்து ஆந்திர தாதாவின் கால்களை அமுக்கி விடுவார்.

கிட்டத்தட்ட அதே பாணியில் தான் இளங்கோவனும் பேசினார். ‘தமிழகத்தில் ஆட்சியில் பங்கு தந்தால் மட்டும் தான் திமுகவுடன் கூட்டணி அமைப்போம். திமுகவுக்கு முதலமைச்சர் பதவி என்றால் எங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வேண்டும். அவர்களுக்கு பொதுப்பணித்துறை என்றால் எங்களுக்கு போக்குவரத்துத் துறை... அவர்களுக்கு உள்துறை என்றால் எங்களுக்கு உள்ளாட்சித் துறை. இதற்கு ஒப்புக்கொண்டால் திமுகவுடன் கூட்டணி.. இல்லாவிட்டால் தனித்து போட்டி’’ என்று  வீர வசனம் பேசினார் இளங்கோவன்.
ஆனால், நடிகர் விவேக் செய்வதைப் போலவே கலைஞரின் கால்களை அமுக்கி விட்டு  கூட்டணி ஆட்சியும் வேண்டாம்... ஒன்றும் வேண்டாம். நீங்க கொடுக்கும் சீட்டுகளைக் கொடுங்க வாங்கிக் கொள்கிறோம் என்று சரணாகதி அடைந்திருக்கிறார் இளங்கோவன். இரு மாதங்களுக்கு முன்பு வரை பெரியாரின் பேரனாக இருந்த இளங்கோவன் இப்போது ஓ.பி.எஸ் நண்பராக மாறி முழங்கால் வரை குனிந்து கலைஞருக்கு வணக்கம் வைக்கிறார்.

இவ்வளவு நாள் காமராஜர் ஆட்சி என்று பேசி வந்த இளங்கோவனும் அவரது கூட்டாளிகளும் இப்போது கலைஞர் ஆட்சி என்று முழங்குகிறார். ஏன் என்று கேட்டால் ‘‘குஷ்புவின் உருவத்தில் அன்னை இந்திராவை காண்கிறேன்" என்று கூறியதைப் போல கலைஞரின் வடிவில் காமராஜரை காண்பதாக கூறினாலும் கூறக்கூடும். 

எனவே, நமது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் இது போன்ற இழிபிறவிகளிடம் எல்லாம் வைத்துக் கொள்ளக்கூடாது. தொடரட்டும் இளங்கோவனின் உளறல்கள். அவற்றுக்கு சரியான பதிலடி தருவார்கள் தமிழ்நாட்டு வாக்காள பெருமக்கள்!

கருத்துகள் இல்லை: