Pages

சனி, பிப்ரவரி 13, 2016

காதலர் தினம்: தமிழகப் பெண்களுக்கு எதிரான சதி!

காதல் திருமணங்களை நாம் ஆதிரிக்கிறோமா என்று கேட்டால் - ஆம், நிச்சயமாக ஆதரிக்கிறோம். ஆனால், காதல் என்பது கட்டுப்பாடற்றது, நிபந்தனையற்றது என்கிற கருத்துகளை நாம் ஏற்கவில்லை. 

'இனக்கவர்ச்சி அடிப்படையில் ஆண் பெண் இருவரிடையே ஏற்படும் அன்பு, நேசம் தான் காதல்' என்கிறது க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி. அதற்காக, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனும் மாணவியும் காதலிப்பதாகக் கூறினால், அதனை இந்தச் சமூகம் ஏற்காது.

ஒவ்வொரு உடன்பாட்டுக்கும் அதற்கென்று சில தகுதிகள் இருக்கின்றன. சீதையை மணமுடிக்கும் முன்பு இராமன்  சிவனது வில்லை உடைக்க வேண்டும் என்கிற நிபந்தனையை நிறைவேற்ற வேண்டியிருந்தது. அதுபோல - இன்றைய நவீன யுகத்திலும் காதலுக்கு என்று சில கட்டுப்பாடுகள் உள்ளன.

கட்டற்ற காதல் எனும் சதி

காதலுக்கு கட்டுப்பாடுகள் இல்லை, யாரையும் யாரும் காதலிக்கலாம், யாரும் எந்த வயதிலும் காதலிக்கலாம் என்கிற மோசடியான கருத்துகளை சிலர் திட்டமிட்டு பரப்புகின்றனர். அதற்கான ஆயுதமாக காதலர் தினக் கொண்டாட்டங்களை பயன்படுத்துகின்றனர். இந்த தவறான பிரச்சாரத்தில் தமிழ் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்பட அனுமதிக்கக் கூடாது.

சினிமா, தொலைக்காட்சி, ஊடகம் எனும் பொழுதுபோக்கு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், நகை, முகப்பூச்சு, வாசனைத் திரவியங்கள் போன்ற ஆடம்பரப் பொருட்களை மக்கள் மீது திணிக்கும் நிறுவனங்களும் காதலர் தினக் கொண்டாட்டங்களை ஊக்குவிக்கின்றனர். அதே போன்று, காதல் திருமணங்களால் சாதி ஒழியும் என்கிற பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மோசடிக் கும்பலும் காதலர் தினத்தை கொண்டாடுகிறது.
நியாயமான காதல் ஏற்கத்தக்கதே. ஆனால், பொழுதுபோக்கு, ஆடம்பரம், சாதி ஒழிப்பு போர்வையில் முன்வைக்கப்படும் காதல் அயோக்கியத்தனமானது. அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்கால நலனுக்கு தீங்கானது. இந்த சதிகள் முறியடிக்கப்பட வேண்டும்.

நியாயமான காதல் என்பது எது?

1. காதல் என்பது திருமணத்தை நோக்கியது.

வெறும் இனக்கவர்ச்சிக்காக மட்டுமே காதல் இல்லை. தமிழர் பண்பாட்டில் காதல் என்பது திருமணத்தை நோக்கியது. ஆணோ, பெண்ணோ திருமணத்திற்கு முன்பாகவே சேர்ந்து வாழ்ந்து, பின்னர் பிரிந்து செல்வதை நமது பண்பாடு ஏற்கவில்லை (தமிழர் இலக்கியங்களில் களவு என்பது பின்னர் திருமணத்தில் முடிவதாகவே கொள்ளப்பட்டுள்ளது). எனவே, காதல் என்பது திருமணத்தை நோக்கியதாக இருக்க வேண்டும். 

2. திருமணம் என்பது வயது வந்தவர்களுக்கானது.

திருமணம் கட்டுப்பாடற்றது அல்ல. அது மிகத் தெளிவான சூழ்நிலையில், சரியான மனநிலையில், அனைத்தும் அறிந்து செய்துகொள்ளப்படும் உடன்படிக்கை ஆகும். வயது குறைவானவர்களின் காதலோ, திருமணமோ ஏற்புடையது அல்ல. 

'எந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்' என்கிற கேள்வி எழும் நிலையில், பெண்களுக்கு எதிரான ஒதுக்குதல்களை ஒழிப்பதற்கான ஐநா குழு (CEDAW Committee) அதற்கு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

"திருமணம் செய்துகொள்ளும் ஆணும் பெண்ணும் மிக முக்கியமான பொறுப்புகளை ஏற்கிறார்கள். எனவே, அவர்கள் முழுமையாக பக்குவம் அடையாத நிலையிலும், செயல்திறனை அடையாத நிலையிலும் திருமணங்கள் அனுமதிக்கப்படக் கூடாது.

பெண்கள் உரிய வயதை அடையாது திருமணம் செய்துகொள்ளும் போது குழந்தை பெற்றுக்கொள்ள நேருதல், உடல்நலம் பாதிக்கப்படுதல், கல்வியை தவற விடுதல் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களது பொருளாதார சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.
உரிய வயதை அடையாமல் நடக்கும் திருமணங்கள் பெண்களை மட்டும் பாதிப்பதில்லை. அதனால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது. பெண்களின் திறன் மேம்பாடு தடைபடுகிறது, பெண்களின் தற்சார்பு பாதிக்கப்படுகிறது, வேலை கிடைக்கும் வாய்ப்பு குறைகிறது. இவற்றால், குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன, சமுதாயமும் பாதிப்படைகிறது" - என்கிறது ஐக்கிய நாடுகள் அவை.

(When men and women marry, they assume important responsibilities. Consequently, marriage should not be permitted before they have attained full maturity and capacity to act. According to the World Health Organization, when minors, particularly girls, marry and have children, their health can be adversely affected and their education is impeded. As a result their economic autonomy is restricted.

This not only affects women personally but also limits the development of their skills and independence and reduces access to employment, thereby detrimentally affecting their families and communities.

- CEDAW General Recommendations 21 on marriage and family)
ஐநா பெண்கள் உரிமை உடன்படிக்கை The Convention on the Elimination of All Forms of Discrimination against Women (CEDAW) பிரிவு 16-ன் கீழ், திருமணத்திற்கு பெண்களின் முழுமையான, சுதந்திரமான, விபரமறிந்து இசைவு தெரிவித்தல் கட்டாயம் ஆகும். அதாவது, திருமணத்திற்கு பின்னாலான பொறுப்புகள் குறித்த முழுமையான புரிதலும், யாரை திருமணம் செய்கிறோம், அவரது குணநலன்கள், பின்னணிகள் குறித்து புரிந்துகொள்ளும் திறனும் அவசியம் ஆகும்.

எனவே, முழுமையான புரிதலுக்கு ஏற்ற வயதை அடையாத பெண்களின் காதலோ, திருமணமோ சமூகத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

3. திருமண வயது வந்தவர்கள் யார்?

திருமணம் குறித்த முடிவை எடுப்பதற்கான குறைந்த பட்ச வயது 18 வயதாக இருக்க வேண்டும் என்பது ஐநா பெண்கள் உடன்படிக்கை (CEDAW) மற்றும் ஐநா குழந்தைகள் உடன்படிக்கை (CRC) ஆகியவற்றின் இலக்கு ஆகும். எனினும் அந்தந்த நாடுகளின் சூழலுக்கு ஏற்ப இதில் சிறிதளவு மாறுபாடுகள் உள்ளன.

எடுத்துக்காட்டாக, சிங்கப்பூர், பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில், 21 வயதுக்கு முன்பு - மணமக்கள் தாமாக திருமணம் செய்ய அனுமதிப்பது இல்லை. 18 முதல் 21 வயது வரையிலான மணமக்களின் திருமணத்துக்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் ஆகும்.(இந்தியாவில் பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் சட்டப்பூர்வமான வயதாக உள்ளது. இந்திய அரசின் ஆளுக்கொரு வயந்து வரம்பு, ஆண் பெண் சமத்துவத்துக்கு எதிரான விதியாக உள்ளது.)

இந்தியாவில் திருமணம் குறித்த தன்னிச்சையான முடிவை எட்டும் வயது 21 வயதாக இருக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏனெனில், இந்தியாவில் வயதுக்கு வந்தோர் என்பது 21 ஆக உள்ளதால் (Indian Majority Act, 1875), திருமணத்திற்கும் அதுவே சரியானதாக இருக்கும் என்று தீர்ப்பளித்தது.

(ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 18 வயது என்பது போதுமானது. ஏனெனில், அந்த நாடுகளில், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, குழந்தை வளர்ப்பு, மாத வருமானம், சமூகப் பாதுகாப்பு என அனைத்து தேவைகளுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்கிறது. இந்தியாவில் குடும்பத்தினரின் பொறுப்பாக உள்ள பெரும்பாலான கடமைகளை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அரசாங்கமே எடுத்துக்கொள்வதால், அங்கு திருமணத்துக்கு பின்னாலான தனி மனித பொறுப்புகள் குறைவாகும்.)

பெண் கல்வி, வேலை, உடல்நலம் - காதலை விட மேலானது

ஐநா குழந்தைகள் உடன்படிக்கை மற்றும் ஐநா பெண்கள் உடன்படிக்கை ஆகியவற்றின் படி, கல்வி மிக முக்கியமான உரிமை ஆகும். பதின்வயதில் திருமணம் நடந்தால், அதனால் பெண்களின் கல்வி வாய்ப்புகளும் திறன்மேம்பாடும் கடுமையாக பாதிப்படைகிறது 

(Many studies have shown that early marriage is universally associated with low levels of schooling and thus in violation of girls’ right to education as guaranteed by the CRC and CEDAW. A lack of education further denies girls’ their right to personal development as guaranteed in the CRC, which is crucial for them to prepare for adulthood and effectively contribute to the future wellbeing of their families and society - UNICEF 2008)

அவ்வாறே, வேலையும் பெண்களின் உரிமையாகக் கருதப்படுகிறது. முழுமையாக கல்வியை முடித்தல், வேலையை அடையும் அளவிற்கான திறன் மேம்பாடு - ஆகியவற்றுக்கான வயதை அடையும் முன்பாக திருமணம் நடைபெற அனுமதிக்கக் கூடாது.

சிறு வயது திருமணங்களினால், பெண்களின் உடல் நலன் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, 21 வயதுக்கு முன்பாக குழந்தை பெறுவது பெண்களையும் பாதிக்கிறது, பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கிறது.
எனவே, கல்வி, வேலை, உடல்நலம் ஆகியவை காதலை விட மேலானது என்பதை உணர்ந்து - திருமண வயதை 21 வயதாக நிருணயிப்பதே சரியானதாகும்.

காதல் - சாதியை ஒழிக்கும் என்பது பித்தலாட்டம்.

காதல் திருமணங்கள் அகமண முறையை ஒழிக்கும். இதனால், சாதி ஒழியும் என்று ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இது முட்டாள்தனமான, ஆபத்தான பிரச்சாரம் ஆகும். ஏனெனில், காதல் திருமணங்களால் சாதி ஒழிவது இல்லை.

சாதி மறுப்புத் திருமணங்கள் என்பவை,  ஒடுக்கப்பட்ட சாதிகளில் பொருளாதார நிலையில் முன்னேறிய தனி நபர்களை திசை திருப்புவதற்காக - கம்யூனிச பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சாரம் என்கிறார் தலித் வாய்ஸ் பத்திரிகை ஆசிரியரும், மூத்த தலித் சிந்தனையாளருமான வி.டி. ராஜ்சேகர். 
Dalit Voice விடி ராஜ்சேகர் அவர்களின் கலப்பு திருமணக் கருத்து 
(Caste - a nation with in the nation, VT Rajshekar, Editor, Dalit Voice)
ஒடுக்கப்பட்ட சாதி ஆண்கள் - அவர்களுக்கு மேலாக கருதப்படும் சாதி பெண்களை மணமுடிக்கும் வகையிலேயே இந்த பிரச்சாரம் இருப்பதையும், இதற்கு மாறாக, ஒடுக்கப்பட்ட சாதி பெண்கள் - அவர்களுக்கு மேலாக கருதப்படும் சாதி ஆண்களை மணமுடிக்கும் வகையில் இந்த பிரச்சாரம் இல்லாததையும் - வி.டி. ராஜ்சேகர் சுட்டிக்காட்டுகிறார். எனவே, சாதி கலப்புத் திருமணம் என்கிற பிரச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார் அவர். (Caste - a nation with in the nation, VT Rajshekar, Editor, Dalit Voice)

காதல் திருமணங்களால் சாதி ஒழிவது இல்லை. இதற்கு மாறாக, இளம் வயது திருமணங்களை இந்தப் பிரச்சாரம் ஊக்குவிப்பதால் - பெண் கல்வி பாதிக்கப்படுதல், பொருளாதார தற்சார்பு பாதிக்கப்படுதல், இளம்வயது திருமணத்தால், உடல்நலம் கெடுதல் என ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் நிலையையே இந்த பிரச்சாரம் ஏற்படுத்துகிறது.

21 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்ய 'சாதி ஒழிப்பு காதல் பிரச்சாரம்' தூண்டுகிறது. இது பெண்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டை தடுக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

பதின்வயது எனப்படுகிற 20 வயதுக்கு கீழான காலம் மனித வாழ்வில் மிக முக்கியமான காலம் ஆகும். ஐநா குழந்தைகள் அமைப்பு யூனிசெப் இதனை 'வாய்ப்புகளின் காலம்' என அழைக்கிறது. இந்த வயதுதான் கல்வி, தொழில்திறமைகள் உள்ளிட்ட எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அடித்தளத்தை அமைக்கும் வயதாகும்.

காதல் திருமணங்கள் குறித்த குழப்பமான, திசை திருப்பும் பிரச்சாரங்கள் தடுக்கப்பட வேண்டும். கல்வி, வேலை, உடல்நலம் ஆகிய பெண்களின் உரிமைகளே முதன்மையானவை. இவற்றுக்கு பின்னரே திருமணம் முன்னிறுத்தப்பட வேண்டும்.

இந்த நிலையை அடைய ஆணுக்கு இணையாக பெண்களின் திருமண வயதையும் 21 வயது என மாற்ற வேண்டும். அல்லது, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உள்ளது போன்று, 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வேண்டும்.

ஐநா அவை 2015 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டுள்ள 2015 - 2030 நீடித்திருக்கும் வளர்ச்சிக்கான லட்சியங்களில் (UN Sustainable development goals) 'குறைந்த வயது திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும்' என்பதும் ஒன்றாகும். அந்த லட்சியம் தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட பதின்வயது திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும்.
பொழுதுபோக்கு, ஆடம்பரம், சாதி ஒழிப்பு போர்வையில் முன்வைக்கப்படும் - அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான, ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்கால நலனுக்கு தீங்கான, கட்டற்ற காதல் பிரச்சாரம் முறியடிக்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை: