Pages

புதன், ஆகஸ்ட் 24, 2016

சாதி அங்கீகாரத்துக்காக தமிழக கோடீஸ்வரர்கள் சண்டை: முற்போக்கு கும்பலின் கருத்து என்ன?

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள், பல ஆயிரம் கோடி சொத்துக்கு சொந்தக்காரர்களான, ஏ.சி. முத்தையா செட்டியார் மற்றும் ராஜா அண்ணாமலை செட்டியார் குடும்பத்தின் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா உள்ளிட்டோர், இப்போது வெறும் 25 ரூபாய் தொடர்புடைய சாதிப்பெருமிதத்துக்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்

செட்டிநாட்டு நகரத்தார் சமூகம்

சோழர்கள் ஆட்சியின் கீழ், கிழக்காசியா முழுவதும் வணிகம் செய்தவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார்களும், முஸ்லிம்களும் ஆகும்.

வெளிநாடுகளில் கிடைக்கும் கல்வெட்டுகளில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் "ஆயிரத்தைநூற்றுவர்" என்றும், முஸ்லிம்கள் "அஞ்சுவண்ணம்" என்றும் குறிப்பிடப்படுகின்றனர். சோழ மன்னர்கள் பெரும்படை கொண்டு கிழக்காசிய நாடுகளுக்கு சென்றது இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கத்தான்.

நகரத்தார் சமூகத்தினர் காஞ்சிபுரத்திலிருந்து பூம்புகாருக்கு வந்தனர் என்பதும், பூம்புகாரிலிருந்து செட்டிநாட்டுக்கு சென்றனர் என்பதும் இவர்களின் இடப்பெயர்வு வரலாறு ஆகும். உலகின் வங்கித்தொழிலுக்கு வழிகாட்டி, செட்டிநாடு சமூகம்தான்.

நகரத்தார் மக்கள் தொகை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சுற்றியுள்ள 96 கிராமங்கள் செட்டி நாடு என்று அழைக்கப்பட்டாலும், இப்போது சுமார் 75 கிராமங்களில் வசிக்கின்றனர்.

நகரத்தார் சமூகத்தின் ஒவ்வொரு குடும்பமும், அதாவது திருமணம் ஆன ஒவ்வொரு தம்பதியும் அவர்களின் குழந்தைகளும் ஒரு 'புள்ளி' ஆகும். இதன்படி, உலகம் முழுவதுமாக சுமார் 35,000 புள்ளிகள் உள்ளனர். நகரத்தார் சமூக மொத்த மக்கள் தொகை சுமார் ஒன்றரை லட்சம் பேர்.

நகரத்தார் திருமணம்

நகரத்தார் சமூகத்தில் புள்ளி என்பது மிக முக்கியமான அங்கீகாரம் ஆகும். திருமணம் ஆன குடும்பத்தின் ஆண் தலைவர் புள்ளியாகக் கருதப்படுவார். பொதுக்காரியங்களுக்கும் கோவிலுக்கும் அவர் வரிக்கட்ட வேண்டும். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அவருக்கே அழைப்பிதழ் வரும். கணவர் இல்லாத குடும்பத்தில், பெண் அரைப்புள்ளியாகக் கருதப்படுவார். அவர் அரை வரிக்கட்ட வேண்டும்.

நகரத்தார் சமூகத்தின் புள்ளியாக உள்ளவர்கள் மட்டுமே, நகரத்தார் சமூகத்தில் திருமணம் செய்ய முடியும்.

ஒவ்வொரு புள்ளியும் அவர்களின் ஒன்பது கோவில்களில் ஏதேனும் ஒன்றில் இணைக்கப்பட்டிருக்கும். திருமணத்தின்போது மணமகன், மணமகள் சம்பந்தப்பட்ட கோயில்களில் இருந்து கோயில் மாலை அனுப்பப்பட்டால்தான் அந்த திருமணம் முறைப்படி அங்கீகரிக்கப் பட்டு அவர்கள் புள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

சாதி மாறி திருமணம் செய்வோரை நகரத்தார் புள்ளியில் சேர்க்கக் கூடாது என்பது இவர்கள் சமூகத்தின் விதியாகும்.

தமிழக கோடீஸ்வரர்களின் சண்டை

செட்டிநாட்டு அரசர் எம்.ஏ.எம். ராமசாமி அவர்கள் தத்துப்பிள்ளையான எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை தனது மகன் அல்ல என விலக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, எம்.ஏ.எம்.ராமசாமியின் கோரிக்கையை ஏற்று, 2015 ஜனவரி மாதம், கானாடுகாத்தான் நகரத்தார்கள் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை நகரத்தார் புள்ளியில் இருந்து (சமுதாய தலைக்கட்டு) விலக்கி வைப்பதாக அறிவித்தார்கள். எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவின் திருமணத்தின் போது, கோவில் மாலைக்காக கொடுக்கப்பட்ட 25 ரூபாய் பணத்தை திருப்பி அளிப்பதாகவும் அறிவித்தார்கள்.  (செய்தி: தி இந்து தமிழ் 11.01.2015)
இந்நிலையில், எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவுடைய குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அவரை மீண்டும் புள்ளியில் சேர்த்துக்கொள்வதாக, கானாடுகாத்தான் நகரத்தார்கள் இப்போது 2016 ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்திருக்கிறார்கள்

“புள்ளியில் சேர்ப்பது என்பது நகரத்தார் சமூகத்தில் மிக முக்கியமான அங்கீகாரம். முத்தையா புள்ளியில் சேராமல் இருந்தால் அவரது பிள்ளைகளுக்கு நகரத்தார் சமூகத்தில் திருமணம் முடிக்க முடியாது. அதை கருத்தில்கொண்டுதான் அவரை மீண்டும் கானாடுகாத்தான் நகரத்தார்கள் புள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்" - என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை நகரத்தார் புள்ளியில் சேர்த்தது தவறு என்றும், அவரை நீக்க வேண்டும் என்றும் ஏ.சி. முத்தையா முயற்சிப்பதாக செய்திகள் கூறுகின்றன. (செய்தி: தி இந்து தமிழ் 24.8.2016)

திராவிட, கம்யூனிச, போலித் தமிழ்த்தேசிய கும்பலின் கருத்து என்ன?

சைவத்துக்காகவும், தமிழுக்காகவும், திராவிட அரசியலுக்காகவும் பெரும் உதவிகளை செய்த செட்டிநாட்டு குடும்பத்தினர், இப்போது சாதி அங்கீகாரத்துக்காக சண்டைப் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாட்டின் திராவிட, கம்யூனிச, போலித் தமிழ்த்தேசிய கும்பலின் கருத்து என்ன?

பணபலத்தில் பலவீனமான சமூகத்தினரின் சாதி விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் இந்த கும்பல் - பணபலத்தில் வலிமையாக உள்ள சமூகத்தினரின் சாதி பிரச்சினைகளில் கருத்து கூற முன்வருவார்களா?

(குறிப்பு: நகரத்தார் சமூகத்தின் பண்பாட்டுக்கு நாம் மதிப்பளிக்கிறோம். அதில் நாம் தலையிடவில்லை. இந்தப்பதிவு முற்போக்கு கும்பலின் நிலைப்பாடு குறித்து மட்டுமே)

1 கருத்து:

PV சொன்னது…

முற்போக்கு வாதிகள் கருத்து சொன்னால் உங்கள் பதிவில் போடுவீர்களா? மாட்டீர்கள். இல்லையா? அப்படியிருக்க அவர்கள் கருத்தென்ன என்பது எப்படி சரி?