Pages

திங்கள், செப்டம்பர் 26, 2016

தலித் கொடுமைக்கு எதிர்ப்பு: புனே நகரில் 25 லட்சம் பேர் பேரணி

மராத்தா சாதியினர் நேற்று (26.09.2016) புனே நகரில் நடத்திய பேரணியில் 25 லட்சம் பேர் திரண்டுள்ளனர். அரசியல் கட்சிகள் ஆதரவு இல்லாமல், தன்னிச்சையாக லட்சக்கணக்கில் மராத்தா சாதியினர் ஒன்று திரண்டு அமைதி பேரணி நடத்துவதால் மராட்டிய மாநிலத்தின் அனைத்து கட்சிகளும் கதிகலங்கி போயுள்ளன.

பின்னணி என்ன?

2016 ஏப்ரல் மாதத்தில், 'சைரத்' (Sairat) எனும் மராத்தி மொழி திரைப்படம் வெளியானது. தாழ்த்தப்பட்ட சாதி இளைஞனும், மராத்தா சாதி இளம்பெண்ணும் காதலித்து திருமணம் செய்வது போலவும் - அவர்களை மராத்தா சாதியினர் கௌரவக் கொலை செய்வதாகவும் இப்படம் காட்டியது.
Sairat Movie

'சாதி வெறியர்களாகவும், சாதிமாறி காதலிப்பவர்களை கொலை செய்யும் கூட்டமாகவும்' மராத்தா சாதியினர் காட்டப்பட்டதற்கு - அப்போதே மராத்தா சாதி அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதையும் மீறி, அந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. இந்த நிகழ்வு மராத்தா சாதியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பின்னர், 2016 ஜூலை மாதத்தில் தலித் இளைஞர்கள் மூன்றுபேர், புதிதாக மோட்டார் பைக் வாங்கியதை குடித்துக் கொண்டாடும் போது, 15 வயது மராத்தா சாதி பெண்ணை கற்பழித்து கொடூரமான முறையில் கொலையும் செய்தார்கள். இந்த நிகழ்வுதான் பெரும் போராட்டமாக மாறியது.

பேரணிகளின் கோரிக்கை

"மராத்தா சாதி பெண்ணை கற்பழித்து கொலை செய்த மூன்று தலித் இளைஞர்களை தூக்கில் போட வேண்டும். SC/ST வன்கொடுமை சட்டத்தை ஒழிக்க வேண்டும், மராத்தா சாதியினருக்கு இடஒதுக்கீடு வேண்டும்" - என்கிற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பேரணிகளை மராத்தா சாதியினர் நடத்தி வருகின்றனர்.

சிவாஜி மகராஜ், சாகு மகராஜ் என்கிற மாபெரும் மன்னர் பரம்பரையை அடையாளப்படுத்தும் மராத்தா சாதியினர் "இதுவரை மண்ணைக் காக்க போராடினோம், இனி நம் சாதியை காக்கப் போராடுவோம்" என்கிற முழக்கத்தை முன்வைத்து அணிதிரளுகின்றனர். (Till now we have fought for the soil, let’s once fight for our caste.)

முதலில் அவுரங்காபத்தில் 5 லட்சம் பேர் பேரணியில் திரண்டனர். அடுத்ததாக முறையே ஒஸ்மனாபாத் 4 லட்சம் பேர், ஜல்கான் 4.5 லட்சம் பேர், பீட் 4 லட்சம் பேர், அகோலா 5 லட்சம் பேர், லாத்தூர் 4.5 லட்சம் பேர், பல்தான் 2 லட்சம் பேர், பர்பானி 4 லட்சம் பேர், ஹிங்கோலி 4 லட்சம் பேர், நான்தேட் 10 லட்சம் பேர், ஜல்னா 3 லட்சம் பேர், சோலாப்பூர் 10 லட்சம் பேர், நவிமும்பை 4 லட்சம் பேர், அகமத்நகர் 11 லட்சம் பேர், நாசிக் 7 லட்சம் பேர் - என பெரும் கூட்டம் திரண்டனர்.
இந்த வரிசையில் நேற்று புனே நகரில் நடத்தப்பட்ட பேரணியில் - 25 லட்சம் பேர் திரண்டு மராட்டிய மாநிலத்தை திகைக்க வைத்துள்ளனர். (20 லட்சம் பேர் திரண்டதாக, காவல்துறையினர் கூறுவதாக - தி இந்து ஆங்கில நாளிதழ் கூறுகிறது - Over 20 lakh turn up at Maratha rally in Pune). இன்னும் நான்கு நகரங்களில் பேரணி நடத்தி, அதன் பின்னர் மிகப்பெரிய பேரணியை மும்பை நகரில் நடத்த உள்ளனர்.

அரசியல் கட்சிகளின் கருத்து என்ன? 

மராட்டிய மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த பேரணியை ஆதரிக்கின்றன. ஆனால், எந்தக் கட்சித்தலைவரையும் கட்சி அடையாளத்துடன் போராட்டத்தில் பங்கேற்க மராத்தா சாதினர் அனுமதிக்கவில்லை. பாஜக, சரத் பவார் கட்சி (NCP), காங்கிரஸ் கட்சி, சிவசேனா, மராட்டியா நவநிர்மாண் ஆகிய முதன்மையான கட்சிகள், தங்களது கட்சி மராத்தா சாதி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை இப்பேரணியில் சாதாரண தொண்டர்களாக பங்கேற்க செய்துள்ளன.
பேரணிகளில் மராத்தா சாதி இளம் பெண்கள்தான் முன்னணி வகிக்கின்றனர். பேரணிகளின் முடிவில் மனு அளிப்பதும் அவர்கள்தான்.

தலித் அமைப்புகளின் கருத்து என்ன?

மராட்டிய மாநிலத்தின் முதன்மை தலித் கட்சியான இந்திய குடியரசு கட்சி (அத்வாலே), மராத்தா சாதியினரின் போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அதில் திருத்தம் தேவை என்றும் அக்கட்சி ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, மராத்தா சாதியினரின் போராட்டத்தை ஆதரித்து 'தலித்துகளின் பேரணியை' நடத்த இருப்பதாகக் அக்கட்சி கூறுகிறது.

எனினும் வேறு சில தலித் அமைப்புகள், மராத்தா சாதி பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இது குறித்து எச்சரித்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், "மராத்தா சாதி பேரணிக்கு எதிராக தலித் மக்களை உசுப்பி விடும் வேலையை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு செய்கிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சதிக்கு பலியாகி, தலித்துகள் எதிர்ப்பு பேரணி நடத்த வேண்டாம்" என்று கேட்டுள்ளார்.

இது காலத்தின் கோலம்

தலித் உரிமையின் அடையாளம் மராட்டிய மாநிலம் ஆகும். மகாத்மா ஜோதிபா புலேவும், அண்ணல் அம்பேத்கரும் பெரும் ஆதரவு பெற்றிருந்த அதே புனே நகரில் - தலித்துகளால் நேரும் கொடுமைக்கு முடிவுகட்டக் கோரி, 25 லட்சம் பெர் திரள்வது - மாபெரும் மாற்றத்தின் அடையாளமே ஆகும்.

தலித்துகள் உரிமைக்காக அகில இந்தியாவும் குரல் கொடுத்தது. அதிலும் மராட்டிய மண்தான் மிக அதிகம் பாடுபட்டது.  மகாத்மா ஜோதிபா புலேவும் அண்ணல் அம்பேத்கரும் மராட்டிய மாநிலத்தவர்கள்தான். ஆனால், அந்த தலித் ஆதரவு என்பது அவர்களின் உரிமைக்கும், மேம்பாட்டுக்கும் தானே தவிர, மற்ற சாதியினருக்கு எதிரான தலித்துகளின் 'எதிர்க்கலகத்துக்கு அல்ல'.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பதை வரலாறு மீண்டும் மெய்ப்பிக்கிறது.

மராத்தா பேரணியில் குடிநீர் அளிக்கும் முஸ்லிம் அமைப்பினர்

(குறிப்பு: மராத்தா சாதி போராட்டத்தில் பயன்படுத்தப்படும் காவிக் கொடி, இந்துமத அமைப்புகளின் கொடி அல்ல. அது மாமன்னர் வீர சிவாஜியின் அடையாளம்)

கருத்துகள் இல்லை: