Pages

சனி, அக்டோபர் 02, 2010

அயோத்தி: நடந்தது இதுதான்!

1. இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன். ஆனாலும், இராமனே முதன்மையான நாயகன் என்பதுபோல பிற்காலத்தில் நம்பவைக்கப்பட்டான். (இந்தியவின் பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் இராமன் ஒரு முதன்மை தெய்வம் அல்ல).

2. அயோத்தி இராமர் கோவிலை இசுலாமிய மன்னர்கள் எவரும் இடிக்கவில்லை. இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் வாழ்ந்தவர் துளசி தாசர். அவர் எழுதிய ஆவாதி மொழி இராமாயணத்தில் - கோவில் இடிக்கப்பட்டது பற்றி எந்த குறிப்பும் இல்லை.

3. குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துத்வ சங்கப்பரிவாரம் உருவாக்கிய ஒரு கட்டுக்கதை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

4. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதச்சண்டையை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இசுலாமிய மன்னர்கள் இந்துக்கோவிலை இடித்ததாக கட்டுக்கதைகளை பரப்பினர். அதனை பின்னர் இந்துத்வ தீவிரவாதிகளும் பயன்படுத்தி வருகின்றனர். (ஒருமன்னன் மற்றொரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அங்குள்ள கோவில்களை இடிப்பதோ, எரிப்பதோ, கொள்ளையடிப்பதோ வழக்கம். இதனை பல இந்து மன்னர்களும் செய்துள்ளனர்.)

எனினும், பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

5. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாபர் மசூதிக்குள் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராம் லல்லா சிலைகள் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டன. இந்த அநீதியான செயலை இந்திய அரசு தடுக்கத்தவறியது மட்டுமின்றி, திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தவும் தவறிவிட்டது.

6. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதிச்செயலால், 1992 டிசம்பர் 6 அன்று, இந்திய அரசின் பாதுகாப்பில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

7. அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம் - அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்துத்வ பயங்கரவாதிகளின் அநீதியான செயல்களை அங்கீகரித்துள்ளது.

படிப்பினை: இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல.

ஒரு குற்றச்செயல் தண்டனைக்குரியதா அல்லது போற்றுதலுக்குரியதா என்பது குற்றமிழைப்பவர் சார்ந்திருக்கும் சாதி, மதத்தைப் பொறுத்தது.

அயோத்தி தீர்ப்பு: புளுகும் இந்துத்வ கூட்டம்.

அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் “இராமர் பிறந்த இடம்” என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.
இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.
நீதியரசர் D.V.சர்மா தீர்ப்பு மட்டுமே அது இராமர் பிறந்த இடம் என்கிறது. நீதியரசர் D.V.சர்மாவின் தீர்ப்பு பெரும்பான்மை தீர்ப்பல்ல. மற்ற இரு நீதியரசர்களின் தீர்ப்பே பெரும்பான்மையானது. அதில் “இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது”. அந்த தீர்ப்புகள் இதோ:
GIST OF THE FINDINGS by Justices Sudhir Agarwal:
“The area covered under the central dome of the disputed structure is the birthplace of Lord Rama as per faith and belief of Hindus.”
GIST OF THE FINDINGS by Justices S.U.Khan:
“5. That for a very long time till the construction of the mosque it was treated/believed by Hindus that some where in a very large area of which premises in dispute is a very small part birth place of Lord Ram was situated, however, the belief did not relate to any specified small areawithin that bigger area specifically the premises in dispute.
6. That after some time of construction of the mosque Hindus started identifying the premises in dispute as exact birth place of Lord Ram or a place wherein exact birth place was situated.”
இராமர் அங்குதான் பிறந்தார் என்று நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டதாக பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தினர் பிரச்சாரம் செய்கின்றனர்.
அயோத்தி தீர்ப்புக்கு பின் நீதிமன்ற வாசலில் பேட்டியளித்த பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் இரவிசங்கர் பிரசாத் “இராமர் பிறந்த இடம் இதுதான் என்று நீதிமன்றம் கூறிவிட்டது” என்று திரித்துப்பேசினார். அது தொலைக்காட்சியில் உடனடியாக ஒளிபரப்பப்பட்டது. பல பத்திரிகைகளும் அதே கருத்தை வெளியிட்டு வருகின்றன.
ஏன் இந்த பித்தலாட்டம்?
இராமர் பிறந்த இடம் இதுதானா என்பது வழக்கே அல்ல. அப்புறம் எதற்கு பச்சைப்பொய் புளுகவேண்டும்?

திங்கள், ஆகஸ்ட் 16, 2010

போக்குவரத்து சிக்கல்: பொருத்தமில்லாத இடங்களில் "சுற்றுச்சூழல்" கருத்துகளைப் பேசுதல்.

அரசியலில் ஒரு சுப்ரமணிய சாமி, பத்திரிகை உலகில் ஒரு சோ - இவர்களைப்போன்று, பதிவுலகில் அறியப்பட்டவர் டோண்டு இராகவன். அவரது பதிவில் நான் "சம்பந்தமில்லாமல் போக்குவரத்து சிக்கல் குறித்து" எழுதிய சில பின்னூட்ட விவாதங்கள் இவை:

டோண்டு ராகவன் பதிவு:


மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் டோண்டு ராகவன் குற்றவாளியாக நின்றபோது



 ""1962 செப்டம்பர் 14-ஆம் தேதி இரவு ஏழரை மணியளவில் சென்னை டி-1 போலீஸ் ஸ்டேஷன் போலீசாரால் அப்பக்கம் சைக்கிளில் வந்த நான் வாலாஜா ரோடில் நிறுத்தப்பட்டேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை, சைக்கிள் லைட் எரிந்து கொண்டுதான் இருந்தது. அப்புறம் பார்த்தால் தெருநடுவில் ரேஷ் ட்ரைவிங் என பிடித்திருக்கிறார்கள். பெயரை கேட்டு வயதையும் கேட்டார்கள், எங்கே வேலை செய்கிறேன் என்றும் கேட்டார்கள்.""

என்று ஆரம்பித்து அதற்காக நீதிமன்றத்திற்கு சென்ற கதையெல்லாம் கூறியிருந்தார் டோண்டு ராகவன்.

எனது கருத்து (அருள்):

"மிதிவண்டியில் சென்னையின் வீதிகளில் 'ஹாயாக' போய் வந்திருக்கிறீர்கள். கொடுத்துவைத்தவர் நீங்கள்.
இந்த காலத்தில் சென்னையின் சாலைகளில் மிதிவண்டியில் பாதுகாப்பாக செல்ல வாய்ப்பிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடற்பயிற்சி, மாசுபாடு குறைதல், விபத்து தடுப்பு, வீண் செலவு இல்லாமை - என மிதிவண்டியால் எத்தனையோ நன்மைகள் உண்டு.

அரசங்கம் மேம்பாலங்கள் கட்டுவதைக் கைவிட்டு மிதிவண்டிக்கும், நடப்பதற்கும் வழிவிடவேண்டும். மகிழுந்துகளும் தனியார் வண்டிகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பேருந்துகள் எண்ணிக்கை அதிகமாக வேண்டும்.- இப்படி 'போக்குவரத்தில் ஒரு பொற்காலம்' வரவேண்டும்.

இதற்கெல்லாம் பன்னாட்டு மகிழுந்து நிறுவனத்தினர் விட்டுவிடுவார்களா என்ன?

ஏதோ போங்கள் - டோண்டுசார், மிதிவண்டியில் போனீங்க, அதுஒரு பொற்காலம்தான். பொறாமையா இருக்கு."

டோண்டு ராகவன் பதில்:

 "சைக்கிளை இப்போதும் சென்னை வீதிகளில் ஓட்டலாம். அது அவ்வளவாக பரவலாக தென்படாததற்கு முக்கியக் காரணம் மக்களின் பொருளாதார வசதிகள் பெருகியதால்தான். சைக்கிளில் செல்வது அவமானமாகக் கருதப்படுகிறது என்பது விசனத்துக்குரியது."

எனது கருத்து (அருள்):

 "நம்மைவிட பலமடங்கு அதிக பொருளாதார வசதிகொண்ட ஐரோப்பிய நாடுகளில் மிதிவண்டிகள் கணிசமாக பயன்படுத்தப்படுகின்றன. மிதிவண்டியை ஊக்கப்படுத்த அங்கு ஏராளமான வசதிகள் செய்துதரப்படுகின்றன. குறிப்பாக பாரிஸ் நகரின் வாடகை மிதிவண்டித்திட்டம் இப்போது உலகப்புகழ் பெற்றுவிட்டது.

பாரிஸ் மிதிவண்டித்திட்டம்: http://en.wikipedia.org/wiki/Vélib'

பாரிஸ் நகரைப் பின்பற்றி இப்போது உலகின் சுமார் 125 நகரங்கள் வாடகை மிதிவண்டியைப் பயன்படுத்துகின்றன.

உலகெங்கும் வாடகை மிதிவண்டித்திட்டங்கள்: http://en.wikipedia.org/wiki/Community_bicycle_program

கடந்த ஆண்டு புவி வெப்பமடைதல் குறித்த ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டிற்காக டென்மார்க்கின் கோபன்ஹெகன் நகருக்கு சென்ற போது - அங்கு மிதிவண்டிக்காக செய்யப்பட்டிருந்த வசதிகளையும், ஏராளமானோர் கொட்டும்பனியிலும் மிதிவண்டிகளில் சென்றதையும் கண்டு அசந்துவிட்டேன். அங்கு எல்லோரிடமும் பணம் இருக்கிறது (பணம் இல்லாதவர்களுக்கு அரசாங்கமே இலவச சம்பளம் கொடுப்பது வேறு கதை). எல்லோரிடமும் மகிழுந்து இருக்கிறது. ஆனாலும் பெரும்பாலான மக்கள் மிதிவண்டியில் போகிறார்கள்.

மிதிவண்டிப்பயணத்தைக் கொண்டாட அங்கு ஒரு உலக விழாவே அண்மையில் நடத்தப்பட்டது. காண்க: http://velo-city2010.com

மனதுதான் வேண்டும் என்பது ஓரளவுக்கு உண்மைதான். ஆனால், அரசாங்கம் உரிய வசதிகளை செய்து தராததும், தனியார் வாகன எண்ணிக்கை பலமடங்கு அதிகமானதும், மிதிவண்டிகளை ஏழைகள்தான் ஓட்டுவார்கள் என்பதுபோன்ற மூடநம்பிக்கையும் நமது போக்குவரத்து முறையை சீரழித்துவிட்டன.

மிதிவண்டிகளுக்கு பாதுகாப்பான வழி,மிதிவண்டி நிறுத்திவைக்க தனி இடம், வசதியான நடைபாதைகள், அதிகமான பொதுபோக்குவரத்து வசதிகள் போன்றவையும் மிதிவண்டிப் பயணத்தை ஊக்குவிக்க தேவை"

கோபி கருத்து:

"நானும் சமீபத்தில் (1992 ஆம் ஆண்டு), அண்ணாமலை படத்தில் ரஜினி சைக்கிள் விட்டு பார்த்தது தான்... அதற்கு பிறகு நீங்களோ, ரஜினியோ அல்லது வேறு பிரபலங்களோ சைக்கிளை ஓட்டி பார்த்தத்தில்லை...."


எனது கருத்து (அருள்):


பிரபலங்கள் மிதிவண்டி ஓட்டி பார்க்கவேண்டும் என்கிற உங்கள் ஆசைக்காக:


http://www.gazettenet.com/2009/12/16/carbon-generation-gap


http://www.gazettenet.com/files/images/20091215-202133-pic-683626334.display.jpg


இந்த படத்தில் மிதிவண்டி ஓட்டுபவர் நமது சென்னை நகர மேயர் மா.சுப்பிரமணியன். ஆனால், மிதிவண்டி ஓட்டும் இடம்தான் சென்னை இல்லை. இது கோபன்ஹெகன் நகரம், டென்மார்க் (2009 டிசம்பர்). அவருக்கு அருகில் மிதிவண்டி ஓட்டுபவர் மெக்சிகோ நகர மேயர்.

மறுபடியும் டோண்டு  ராகவன்: 

நவீன கருவிகள் குறித்தும், அது முதலில் அரிதாக இருந்து, பின்னர் எல்லோருக்குமானதாக மாறுவது குறித்தும் ஒரு பதிவை எழுதினார்.


கலர் டிவி, செல்பேசி மற்றும் பல உபகரணங்கள்


http://dondu.blogspot.com/2010/08/blog-post_12.html

அதில் "என்னைப் பொருத்தவரைக்கும் ஏனோ பல உபகரணங்கள் மிக அத்திவாசியத் தேவை என பலமுறை உணர்ந்த பிறக்கே வாங்குவது வழக்கமாகி விட்டது. இந்தப் பழக்கம் டிவி செட் வைத்துக் கொள்வதில் இருந்தே ஆரம்பித்து விட்டது. ஸ்கூட்டர்/பைக்? நோ சான்ஸ், அவற்றை இயக்கவே இன்னும் தெரியாது. காரா? அதுவும்தான் தேவையேயில்லையே!"

என்று குறிப்பிடிருந்தார்.

எனது கருத்து (அருள்):

"// //காரா? அதுவும்தான் தேவையேயில்லையே!// //

நீங்கள் சொன்னதிலேயே இதுதான் மிகச்சிறந்த கருத்து.

நகர்ப்புற போக்குவரத்திற்கு கார் எனப்படும் மகிழுந்துகள் தேவையில்லாதவை மட்டுமல்ல, அவை தொந்தரவானவை, போக்குவரத்தை சிதைப்பவை. பொது மக்கள் போக்குவரத்து முறைகளான பேருந்து, மிதிவண்டி, நடை பயணம் - இவற்றுக்கெல்லாம் இடைஞ்சலாக இருப்பவை.

சென்னையின் முக்கியமான சந்தைப் பகுதிகளில் கார்கள் தடை செய்யப்பட்டு, மற்ற இடங்களில் கார்களைக் கட்டுப்படுத்தும் காலம் வந்தால் தான் போக்குவரத்து நெரிசல் குறையும்."

ராம்ஜி_யாஹூ' வின் கருத்து:

"அருள்-
கள்ளு கடை (Midas, Mallaya group) காசிலே தானே கட்சி கொடி ஏறுது இங்கே
கார் கம்பனி (Hyundai, Ford) காசிலே தானே கட்சி செயல் வீர்கள் கூட்டம் கூடுது இங்கே"

Praveen கருத்து:


"Agrees with Arul on this.

These scientific inventions also constitute greater amount of pollution."


எனது கருத்து (அருள்)


"சில நேரங்களில் அறிவியல் முன்னேற்றம், நவீனம் என்பது "பின்னோக்கி" போவதுபோலவும் தோன்றக்கூடும்.

எடுத்துக்காட்டாக, இப்போது சென்னை போக்குவரத்தில் எது நவீனம் என்று கேட்டால் - மேம்பாலங்கள் கட்டுவதும் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் கட்டுவதும்தான் "முற்போக்கு" என்கிற சிந்தனை நமது ஆட்சியாளர்களிடம் உள்ளது.

ஆனால், எண்ணற்ற மேம்பாலங்களையும் அடுக்குமாடி வாகன நிறுத்தங்களைக் கட்டி முடித்த வளர்ந்த நாடுகளில் இவையெல்லாம் "பிற்போக்காக" ஆகிவிட்டன.

தென்கொரியாவின் சியோல் நகரின் மையமாக இருந்த பிரதான மேம்பாலத்தியே இடித்து ஆற்றுடன் கூடிய பூங்காவாக ஆக்கிவிட்டனர்.

எப்படியிருந்த மேம்பாலம் எப்படி ஆனது என்பதை இங்கே காணவும்:

http://www.streetsblog.org/2006/12/08/seouls-new-heart/


http://www.inhabitat.com/2010/02/22/seoul-recovers-a-lost-stream-transforms-it-into-an-urban-park/

நமது ஊரில் கார் தான் நவீனம், ஆனால் பாரிஸ் நகரில் மிதிவண்டி நவீனமாகிவிட்டது: http://en.wikipedia.org/wiki/Vélib'

Praveen கருத்து


"Arul,

The seoul project link is really good.

More about it here with some more good pics.
http://en.wikipedia.org/wiki/Cheonggyecheon"


வஜ்ரா வின் கருத்து:

"அன்பர் அருள் உங்களை மிகவும் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்.

கால் டாக்ஸி இல்லாமல் நீங்கள் வெளியில் செல்வதில்லை என்பது அவருக்குத் தெரியாது போலும்."

"பிரான்ஸ் நாட்டில் வருடத்தில் 4-5 மாதங்கள் மட்டுமே மக்கள் ரோட்டில் வெகுதூரம் நடப்பது, சைக்கிள் ஓட்டுவது சாத்தியம். குளிர் காலத்தில் -10 டிகிரி குளிரில் சைக்கிள் ஓட்டுவது வாழ்க்கைக்கு நல்லதல்ல. மேலும் 10 செ.மீ பனியில் சைக்கிள் மிதிப்பது மெரீனா பீச் மணலில் சைக்கிள் மிதிப்பதற்கு சமம்.

அங்கெல்லாம் அவர்கள் பொழுதுபோக்குக்காக சைக்கிள் ஓட்டுகிறார்கள். நம்மூரில் பலர் சைக்கிள் ஓட்டுவது வாழ்வாதாரத்துக்காக. அந்த கேவல நிலையில் நாம் இருப்பதற்கு என்ன காரணம் என்று அருள் யோசித்தால் நலம் உண்டாகும்."

எனது கருத்து (அருள்):

"// //குளிர் காலத்தில் -10 டிகிரி குளிரில் சைக்கிள் ஓட்டுவது வாழ்க்கைக்கு நல்லதல்ல....அங்கெல்லாம் அவர்கள் பொழுதுபோக்குக்காக சைக்கிள் ஓட்டுகிறார்கள்.// //

வஜ்ரா தவறான தகவலைத் தருகிறார். -10 டிகிரி குளிரில் சைக்கிள் ஓட்டுவது வாழ்க்கைக்கு நல்லதல்ல என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் மிதிவண்டி ஓட்டுவது தினசரி இயல்பான பயணத்திற்காகத்தான். பொழுதுபோக்கிற்காக அல்ல.

குளிரில் மிதிவண்டி ஓட்டுவது சற்று கடினம் என்றாலும், அதற்கேற்ப முன்னேற்பாடுகளை அவர்கள் செய்து கொள்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஐ.நா.காலநிலை மாநாட்டிற்காக டென்மார்க் நாட்டின் கோபன்ஹெகன் நகருக்கு சென்றிருந்தபோது இதனை நான் நேரில் கண்டிருக்கிறேன். அப்போது, - 15 டிகிரி கடும் குளிர் காலமாக இருந்தது.

பனிகொட்டும் குளிரில் அதற்கேற்ப அரசாங்கம் அதிகாலையிலேயே - மிதிவண்டி பாதையின் பனிக்கட்டிகளை அகற்றி, மேலும் பனி படியாமலிருக்க உப்பை தூவி வைக்கிறது. மக்கள் குளிருக்கேற்ப பிரத்தியோக உடை அணிகின்றனர். பெரும் மழை போன்று பனி கொட்டும் போது மட்டும் ஒரமாக ஒதுங்கி நிற்கின்றனர்.

கடுங்குளிரில் மக்கள் மிதிவண்டி ஓட்டுவதை இங்கே காண்க: http://www.copenhagencyclechic.com/2009/01/cycling-chic-in-winter.html

நம்முடைய ஊரில் மழைக்காலத்தில் மிதிவண்டியில் செல்வது சற்று குறைவது போன்று ஐரோப்பிய நாடுகளிலும் சற்று குறையக்கூடும். மற்றபடி - "குளிரில் சைக்கிள் ஓட்டுவது நல்லதல்ல." "அங்கெல்லாம் அவர்கள் பொழுதுபோக்குக்காக சைக்கிள் ஓட்டுகிறார்கள்." - என்றெல்லாம் அள்ளிவிடுவது ரொம்ப அதிகம்.

ஐரோப்பிய நாடுகளின் மிதிவண்டி கலாச்சாரம் குறித்து மேலும் அறிய:  http://www.copenhagenize.com/

உலகெல்லாம் மிதிவண்டிகள் எப்படி பிரபலமாகி வருகின்றன என்று அறிய, இந்த நூலின் - பக்கம் 24 இல் Bike-Sharing Goes Viral கட்டுரை காண்க: http://www.itdp.org/documents/st_magazine/ST21_Winter09.pdf

வஜ்ரா வின் கருத்து:

"அருள்,

நான் சொல்லவரும் விசயம் இது தான்.

வறுமையின் காரணமாக சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் நாட்டில் சைக்கிள் ஓட்டுவது உடல் நலத்திற்கு நன்மை தரும் என்று பிரச்சாரம் செய்வது ஒருவித cruel joke.

நீங்கள் 10 நாள் மாநாட்டைப் பார்த்துவிட்டுச் சொல்கிறீர்கள்.

நான் கடந்த சில ஆண்டுகளாகவே இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இங்கே சைக்கிளை ரயில் வண்டியில் ஏற்றிக்கொண்டு எந்த ஐரோப்பிய ஊருக்கும் சென்று நீங்கள் ஓட்டலாம். ஆனால், -10 டிகிரி குளிரில் மிக மிக சிலரே ஓட்டுவர். பேருந்து, டிராம், மெட்ரோ வசதியாக இருப்பதால் அதிலேயே பயணிப்பார்கள். சொந்த கார் உள்ளவர்கள் காரில் வருவார்கள்.

இத்தகய choice நமக்கு நம் நாட்டில் இல்லை. அதெல்லாம் நமக்கு கிடைக்கும் போது மிதிவண்டி உடல் நலத்திற்கு சிறந்தது என்று பிரச்சாரம் செய்தால் அர்த்தம் இருக்கும்."

எனது கருத்து (அருள்):

// //வறுமையின் காரணமாக சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் நாட்டில் சைக்கிள் ஓட்டுவது உடல் நலத்திற்கு நன்மை தரும் என்று பிரச்சாரம் செய்வது ஒருவித cruel joke.// //

மன்னிக்கவும்.

நீங்கள் தவறாக புரிந்துகொண்டு பேசுகிறீர்கள். உடல்நலத்திற்கான மிதிவண்டி குறித்து நான் பேசவில்லை, "நகர்ப்புற போக்குவரத்தில் சமூகநீதி" குறித்து பேசுகிறேன்.

எடுத்துக்காட்டாக, சென்னை மக்களில் பெரும்பான்மையானோர் குறைவான வருமானம் உடையவர்கள். இவர்களின் போக்குவரத்து நடைபயணம், மிதிவண்டி, பேருந்து மூலமாக நடக்கிறது. ஆனால், அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு, மகிழுந்து வைத்திருக்கும் சிறுபான்மையோரின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது.

சென்னை நகரின் ஒட்டுமொத்த பயணத்தில் கார் 4 %, மோட்டார் பைக் 18 % என வெறும் 22 % மட்டுமே தனியார் மோட்டார் வாகனங்கள் மூலம் நடக்கிறது (2004 ஆம் ஆண்டு கணிப்பு). ஆனால், சாலையில் 80 % இடத்தை இவை அடைத்துக்கொள்கின்றன.

அதேசமயம் பேருந்து 29 %, மிதிவண்டி 13 % நடை பயணம் 28 % என மொத்தம் 70 % பயணங்களுக்கு காரணமாக இருக்கும் போக்குவரத்து முறைக்கு சாலையில் 2 % இடம் கூட இல்லை.

(காண்க சென்னைMaster Plan 2026  http://www.cmdachennai.gov.in/Volume1_English_PDF/Vol1_Chapter04_Transport.pdf)

"சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுரிமை அளிக்காமல், மக்கள் பயணங்களின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கவேண்டும்" என்கிற இந்திய அரசின் நகர்ப்புற போக்குவரத்து கொள்கைக்கு எதிராகவே அரசாங்கம் நடக்கிறது. http://www.urbanindia.nic.in/policies/TransportPolicy.pdf

மக்களின் முக்கிய போக்குவரத்து வசதிகளான பேருந்துகள், நடைபாதை, மிதிவண்டிக்கு பாதுகாப்பான வழி என்பதை அரசாங்கம் புறக்கணித்துவிட்டு, தனியார் வாகன உரிமையாளர்களின் வசதிக்காக மேம்பாலம் கட்டுவதிலும், அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டுவதிலும் கவனம் செலுத்துகிறது.

1998 ஆம் ஆண்டில் சென்னையில் ஓடிய தனியார் வாகனங்கள் சுமார் 8 லட்சம், பேருந்துகள் 2800. இன்று தனியார் வாகனங்கள் 30 லட்சம் - ஆனால் பேருந்துகள் வெறும் 3000.

இவ்வாறு பெரும்பான்மை மக்களின் போக்குவரத்து தேவைகளைப் புறக்கணிப்பது சமூக நீதிக்கு எதிரானது."

ஆப்பிஸர்  கருத்து:


எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான வஜ்ரா அய்யா!

மத்தவங்க சொல்வதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்பீரோ?

முக்காலமும் அறிந்த ஞானியாகிய தாங்கள் இஸ்ரேலிலேயே தங்கியிருப்பது எமக்கெல்லாம் பேரிழப்பே!



வஜ்ரா வின் கருத்து:

ஆப்பீசர்,

அருள் விளக்கம் கொடுத்துவிட்டார். உனக்கு அதில் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒனக்குத் தேவையில்லாத பிரச்சனையில் மூக்கை நுளைக்காதே.

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

தாய்ப்பால்: பொருத்தமில்லாத இடங்களில் "பொருத்தமானதைப்" பேசுதல்.

அரசியலில் ஒரு சுப்ரமணிய சாமி, பத்திரிகை உலகில் ஒரு சோ - இவர்களைப்போன்று, பதிவுலகில் அறியப்பட்டவர் டோண்டு இராகவன். அவரது பதிவில் நான் "சம்பந்தமில்லாமல் தாய்ப்பால் குறித்து" எழுதிய சில பின்னூட்ட விவாதங்கள் இவை:

டோண்டு ராகவன் -'வயது வந்தோருக்கான' பதிவு:


சராசரி ஆணின் கவனத்தைக் கவரும் ஒரு பெண்ணின் மார்பகங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணால் எவ்வாறு பார்க்கப்படுகின்றன?

http://dondu.blogspot.com/2010/08/blog-post_11.html

இந்தப் பதிவில் எனது பின்னூட்டம் (அருள்): 

"பெண்களின் மார்பகங்கள் குறித்து முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை: 1. தாய்ப்பால், 2. புற்றுநோய்.

தாய்ப்பால்: குழந்தை பிறந்த 6 மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர், உணவு எதுவும் கொடுக்கக்கூடாது.

குழந்தை பிறந்த உடன் சுரக்கும் தாய்ப்பாலை ஆற்றிலோ, குளத்திலோ ஊற்றும் மூடப்பழக்கம் கைவிடப்பட வேண்டும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையும் என்பது மூடநம்பிக்கை. 2 வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

ஆண்டுதோரும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்படுகிறாது. விவரம் இங்கே: http://worldbreastfeedingweek.org/pdf/wbw2010poster.pdf

தாய்ப்பால் கொடுக்கும் அதேசமயம் - கடைகளில் கிடைக்கும் புட்டிப்பால், ஊட்டச்சத்து பானங்களை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. இதுகுறித்த WHO பரிந்துரைகளை இங்கே காண்க: http://whqlibdoc.who.int/publications/2008/9789241594295_eng.pdf

அடுத்ததாக - பெண்கள் தங்களது மார்பகங்களை கவனமாக கவனித்து வருவதன் மூலம் மார்பக புற்று நோயை எளிதில் சரிசெய்ய முடியும். விவரம் இங்கே: http://www.who.int/cancer/detection/breastcancer/en/

Praveen கருத்து:

I agree with Arul on the beauty of the girl and Mothers Milk

Most girls now-a-days does not gives milk to the baby because they think that it ruins their beauty.

To all Pregnant women and new moms, Kindly give Breast milk to your babies.

Powder milk might have more salt content in them which will give more problems to your baby once he grows up (High BP, Heart problems etc). Even Cow Milk have salt content in them.

Only Mothers milk is suitable for babies till 6 months or upto 1 year.

virutcham  கருத்து: 

@arul

Good. I appreciate this responsible response

ஆட்டையாம்பட்டி அம்பி கருத்து:.

///அடுத்ததாக - பெண்கள் தங்களது மார்பகங்களை கவனமாக கவனித்து வருவதன் மூலம்///

அந்த வேலையை செய்யததான் நாட்டில் ஆண்கள் உலாத்துவதாகக் கேள்வி!"

Anonymous  கருத்து;

"Bigger the breasts, bigger the chance of acquiring breast cancer.

Let doctors take care of such subjects, Arul."

எனது கருத்து (அருள்):

தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மருத்துவர்களின் பொறுப்பு என்று விட்டுவிட முடியாது. இதில் மக்கள் அமைப்புகளும், நுகர்வோர் அமைப்புகளும் கவனம் செலுத்துகின்றன.

இந்திய அளவில் அரசுசாரா அமைப்புகள்தான் இந்தப்பணியை செய்து வருகின்றன. காண்க: www.bpni.org Breastfeeding Promotion Network of India (BPNI)

புவி வெப்பமடைதல்: பொருத்தமில்லாத இடங்களில் "சுற்றுச்சூழல்" கருத்துகளைப் பேசுதல்.

அரசியலில் ஒரு சுப்ரமணிய சாமி, பத்திரிகை உலகில் ஒரு சோ - இவர்களைப்போன்று, பதிவுலகில் அறியப்பட்டவர் டோண்டு இராகவன். அவரது பதிவில் நான் "சம்பந்தமில்லாமல் காலநிலை மாற்றம் குறித்து" எழுதிய சில பின்னூட்ட விவாதங்கள் இவை:

டோண்டு ராகவன் பதிவு: அ. முத்துலிங்கத்தின் அமர்க்களமான வலைப்பூ
http://dondu.blogspot.com/2010/07/blog-post_26.html

சூழலியல் விஞ்ஞானி சஞ்சயன் நிகழ்த்திய உரையை அ.முத்துலிங்கம் தனது பதிவில் வெளியிட்டு, அதனை டோண்டுவும் வெளியிட்டிருந்தார். அதில்

"சுற்றுச்சூழல் கேடு பூமியில் உச்சத்தை தொட்டதும் எங்கள் தலைமுறையில்தான். பூமியை காப்பாற்றும் முழுப் பொறுப்பும் எங்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. புதிய அறிவையும் வைத்துக்கொண்டு பூமியை காப்பாற்ற நாங்கள் தவறினால் அடுத்த தலைமுறையினர் அதை நிவர்த்தி செய்வதற்கு அவகாசம் போதாது. எங்களுக்கு இன்னொரு வாய்ப்பும் கிடைக்காது, ஏனென்றால் காலம் கடந்துவிடும்."

எனது கருத்து (அருள்):

வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிக அளவாக, 350 ppm தான் இருக்கலாம். (ppm-பத்துலட்சத்தில் ஒரு பகுதி) ஆனால் அது 392 ppm அளவை எட்டிவிட்டது. (300 ஆண்டுகளுக்கு முன்பு இது 275 ppm தான்.)

புவி வெப்பமடைவதை தடுக்கத் தவறியதால் ஏறக்குறைய நாம் அழிவின் விளிம்புக்கு வந்துவிட்டோம். பூமி காப்பாற்றப்படும் கடைசி வாய்ப்பும் தவறிப் போகுமா என்பது 2010 டிசம்பரில் மெக்சிகோ நாட்டில் கூடும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் தெரிந்துவிடும்."

ராம்ஜி_யாஹூ வின் கருத்து:

"நெடு நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவில் மதம், சாதி சம்பந்தம் இல்லாதா செய்திகள் பார்க்க முடிகிறது., மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
அருளின் பின்னூட்டமும் அருமை. மாற்றத்தை உங்கள் வலைப்பதிவில் இருந்து தொடங்குவோம்."

எனது கருத்து (அருள்):

"புவி வெப்பமடைவதைத் தடுக்க, பூமி அழியாமல் காக்க நீங்கள் செய்யக்கூடிய சில எளிய செயல்கள்:

1. தேவையில்லாமல் இயங்கும் மின்கருவிகளை அணையுங்கள்.

2. எந்த ஒரு மின்கருவியையும் தொலையுணர்வு கருவி மூலம் "standby" இல் வைக்காமல் முற்றிலுமாக அணையுங்கள்.

3. குண்டு மின் விளக்குகளை மாற்றி CFL விளக்குகளைப் பொருத்துங்கள்.

4. மின்கருவிகள் வாங்கும் போது BEE முத்திரை 4 அல்லது 5 நட்சத்திரம் உள்ளதாக வாங்குங்கள்.

5. குப்பையைக் குறையுங்கள். முடிந்தவரை அதிக "Package" உள்ள பொருட்களை தவிருங்கள். கடைக்குப் போகும்போது கையோடு துணிப்பையை எடுத்துச்சென்று நெகிழிப் பைகளை தவிருங்கள்.

6. தண்ணீரை வீணாக்காதீர். முடிந்தவரை பாட்டில் தண்ணீரைப் புறக்கணியுங்கள்.

7. வீட்டில் மழைநீர் சேகரிப்பு முறையை சரியாக அமையுங்கள்.

8. புதிதாக சமைத்த உணவை சாப்பிடுங்கள். பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுகள், இறக்குமதி உணவுகள் போன்றவற்றைத் தவிருங்கள். அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் உள்ளூர் காய்கறிகளையும், பழங்களையும் உண்ணுங்கள்.

9. போக்குவரத்திற்கு பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துங்கள்."

NO என்பவரின் கருத்து:

"நண்பர் அருள் ஒன்றை விட்டு விட்டார், அது - மரங்களை வெட்டாதிருத்தல்!!

அவன்: அட, பிளாட்பாரம் கேசு அந்த ஆளு ஆனா பெயர கேட்டா கோடீஸ்வரன் எண்டு சொல்லுதான்!
இவன்: அடஅதுலே என்னங்க ஆச்சரியம், அவிங்க கூடதான் பசுமை தாயகம் அப்படின்னு ஒண்ணு நடத்துறாங்க, ஆனால் ............"

எனது கருத்து (அருள்):

அடடா...உங்கள் அறியாமையைக் காட்டிவிட்டீரே!

தனிமனிதர்கள் யாரும் வேறு வேலையில்லாமல் மரம் வெட்டிக்கொண்டிருக்கவில்லை. நீங்கள் சொல்லவருவது "காடுகள்" அழிப்பைதான் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.

காடுகள் அழிக்கப்படுவதால் மட்டும் புவிவெப்பமடைவதற்கு காரணமான வாயுக்களில் 20% வெளியாகிறது. காடுகள் அழிக்கப்படுவதைதடுக்க REDD (Reducing Emissions from Deforestation and Forest Degradation) எனும் சிறப்புத் திட்டத்தை ஐ.நா.அவை செயல்படுத்தி வருகிறது. காண்க: http://www.un-redd.org/AboutREDD/tabid/582/language/en-US/Default.aspx

இந்த சிக்கலில் தனிமனிதர்கள் செய்யக்கூடியது பெரிதாக எதுவும் இல்லை. அதிபட்சமாக தாள்கள், காடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட பொருட்களை வாங்கும் போது அதில் FSC எனும் முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்கலாம். காண்க: http://www.fsc.org/about-fsc.html

மற்றபடி தனிமனிதர்கள் மரங்களை நட்டு வளர்க்கலாம். ஆனால், "புவி வெப்பமடைவதைத் தடுக்க, பூமி அழியாமல் காக்க நீங்கள் செய்யக்கூடிய "சில எளிய செயல்கள்" என்றுதான் நான் குறிப்பிட்டுள்ளேன்.

மரம் நட்டு வளர்ப்பது ஒரு "எளிதான செயல் அல்ல" என்பது நீங்கள் முன்பின் மரம் நட்டு வளர்த்திருந்தால் தெரியும். இன்றைய நிலையில் சென்னை போன்ற ஒரு நகரத்தில் ஒரு மரம் நட்டுவளர்க்க குறைந்தது ரூ. 500 தேவைப்படும். கூடவே சிலமாதங்கள் கண்ணும் கருத்துமாக அதனைக் கவனித்து வரவேண்டும்.

அது ஒரு எளிய செயல் அல்ல."

திங்கள், ஜூன் 21, 2010

சரித்திரம் மறக்கலாமா ? - அஞ்சலை அம்மாளின் வரலாறு

சரித்திரம் மறக்கலாமா ? - அஞ்சலை அம்மாளின் வரலாறு
சந்தனமுல்லை




”விடுதலைக்கு மகளிரெல்லாம் 
வேட்கை கொண்டனம்” - என்று பாரதி, பெண் விடுதலைக்கு அறைகூவல் விட்ட காலகட்டத்தில் பெண் விடுதலையை விட தாய்நாட்டின் விடுதலை முக்கியம் என்று களத்தில் குதித்தவர் தென்னார்க்காடு மாவட்டத்தின் தெய்வத்தாய் என்றும் வேலு நாச்சியார் என்றும் போற்றப்படும் திருமதி.அஞ்சலை அம்மாள் அவர்கள். 1921ல் இந்திய சுதந்திரப் போர் அரங்கில் இறங்குகிறார். சாதாரண நெசவு குடும்பத்தில் பிறந்தவர். குறைந்த படிப்பறிவு இருந்தாலும் அறிவும் துணிவும் அனுபவமும் எப்படி வந்திருக்கும்? இவை இந்த சமூகம் பாய்ச்சிய வீர ரத்தத்தின் வெளிப்பாடு அல்லவா! 

”விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை 
வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்” - என்று பாரதி முழங்கிய கனவை நனவாக்கியவர் அல்லவா இவர். சமகால பெண்ணிய எழுத்தாளர் அம்பை மிகவும் ஆதங்கத்துடன் ஒரு கதையில் சொல்வார் -இந்தப் பெண்கள் அறிவையும், திறமையையும், சமையலறையிலே முடக்கி வைத்துக் கொள்கிறார்களே - தோராயமாக ஒரு பெண்ணின் ஆயுள் காலத்தில் 2,92,000 தோசை சுடுபவளாக இருக்கிறாளே! ஆனால், சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மரபு என்னும் விலங்கை உடைத்தெறிந்துவிட்டு வாழ்வு என்பது குடும்ப வாழ்வு மட்டுமல்ல, சமுதாய வாழ்வும்தான் என்று முழங்கி குடும்பத்தினருடான் வீதியில் இறங்கியவர் அஞ்சலை அம்மாள்.

ஆம், இவர் நேருவின் குடும்பம் போல என்று சிலர் சிலாகித்து எழுதுகின்றனர். பேசுகின்றனர். ஆனால், இவர்கள் இன்னும் ஒருபடி மேல் என்று நம்மால் அடித்துச் சொல்ல முடியும். நேருவுக்கு பொருளாதார பலம் இருந்தது. குடும்பமும் சிறிய குடும்பம்தான். ஆனால், இவர் குடும்பமோ பெரிய குடும்பம். பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய குடும்பம். அன்றைய உழைப்புதான் அன்றைய சாப்பாடு என்றிருக்கும் போது எந்த துணிவில் அவர் சுதந்திர போரில் இறங்கியிருப்பார்? அதுவும் அந்த காலத்தைச் சேர்ந்த பெண்! பெண்களை நான்கு சுவர்களுக்குள்ளேயே வைத்து வெட்டி வீரம் பேசும் சமூகம்! ஆய்வுக்குரிய சிந்தனையாக எடுத்துக் கொள்ளவும். அமெரிக்க பெண்கள் விடுதலை போராட்ட வீராங்கனை பெட்டி ஃப்ரைடன் நீண்ட நாள் போராட்ட அனுபவத்திலிருந்து சொல்வது - “ஆண்கள் ஒரு தனி வர்க்கமல்ல. பெண்கள் ஒரு தனிவர்க்கமல்ல. பெண்கள் மட்டும் தனியாக முன்னேறலாம் என்று நினைப்பது தவறு”. தான் மட்டுமல்லாமல், கணவருடன், குழந்தைகளுடன் போராட்டத்தில் இறங்குகிறார்.

கணவர் - முருகப் படையாச்சி
பெண் - லீலாவதி
மகன்கள் - காந்தி,ஜெயில்வீரன்(தற்போது ஜெயவீரன்) 

கர்ப்பிணியாக சிறைபுகுந்து பேறுகாலத்தில் அனுமதியுடன் வெளியே வந்து ஆண் மகவுடன் மறுபடியும் சிறை புகுகிறார், சிறை அதிகாரிகள், ஜெயில் வீரன் என்று குழந்தைக்கு பெயரிட்டு இப்போது ஜெயவீரனாக கடலூரில் வசிக்கிறார். 

எப்படி ஒரு பெண்ணால் இது சாத்தியமாயிற்று?

“நாங்கள் இந்தியப் பெண்மணிகள்
நாங்கள் மலரினும் மென்மையானவர்
நாங்கள் சுட்டெரிக்கும் தீச்சுடர்கள்” - என்ற ஒரு பெண் கவிஞரின் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. இந்திய விடுதலைக்காக தீவிரவாதியாக மாறிய மாடம் காமா, நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்து போராடிய அருணா ஆசிப் அலிக்கும் சற்றும் குறைந்தவரல்லர் அஞ்சலை அம்மாள்.


1921 - சுதந்திர போராட்டத்தில் இறங்குகிறார்.
1927 - நீலன் சிலை அகற்றும் போரில் ஒரு வருடம் சிறை தண்டனை - சென்னையில்
1931 - உப்புக்காய்ச்சல் போராட்டத்தில் ஆறுமாத சிறை தண்டனை - கடலூரில்
1933 - மறியல் போரில் மூன்று மாத சிறை - கடலூரில்
1940 - தனி நபர் சத்தியாகிரகத்தில் முதலில் 6 மாதம்
1940 - 18 மாதங்கள் - வேலூர்
1943 - 8 மாதம் 2 வாரம் - பெல்லாரி

ஆக, நான்கு வருடம் ஐந்தரை மாதம் சிறைவாசம். தமிழ்நாட்டில் முதன் முதலில் சத்தியாகிரகத்தில் சிறை புகுந்த பெண்கள் என்ற பெருமைக்குரியவர்கள் : 

1. அஞ்சலை அம்மாள்
2. மதுரை பத்மாசனி அம்மாள்

கள்ளுக்கடை இருக்குமிடமெல்லாம் அச்சிட்ட (குடியை கைவிடத் தூண்டும்) நோட்டீஸ்களை வழங்கிக் கொண்டே அஞ்சலை அம்மாள் மறியல் செய்வார். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மகாநாட்டுக்கு தலைமை தாங்கி ஒரு பெண்கள் படையுடன் அஞ்சலையம்மாள் கைதானார். பிறகு ஜில்லாபோர்டு உறுப்பினராகவும், சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து 20-06-1961 இல் அமரரானார். 

இவருடைய மகள் அம்மாப்பொண்ணு என்கிற லீலாவதி (காந்தி இட்ட பெயர்) 
தன்னுடைய 9வது வயதில் நீலன் என்ற கொடுங்கோலன் சிலையை அகற்றுவதற்காக தாயுடன் சென்னை வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இவர்களுடன் தந்தையும் போராடும் போது அனைவரும் கைது செய்யப்பட்டு லீலாவதி செனனி சிறுமியர் இல்லத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிடுகிறார். 1931ல் விடுதலையான பிறகு காந்தியின் வார்தா ஆசிரமத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து சேவையில் ஈடுபட்டார். 

இவருடைய கண்வர் திரு.ஜமதக்னி வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கத்தில் உள்ள கடப்பேரி என்ற சிற்றூரில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். காந்தியடிகளில் முதல் இயக்கம் முதல் இறுதி இயக்கம் வரையில் எல்லாவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்தவர். தமிழ்,ஆங்கிலம்,இந்தி, சமஸ்கிருதம் போன்றவற்றில் புலமை பெற்று பல விருதுகளை குவித்தவர். ஜமதக்னி அவர்களின்நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைப் பற்றி ஆர்வியின் தளத்தில் காணலாம். 
இவர்களுடைய புதல்வி திருமதி.சாந்தி பெரியார் சிந்தனையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்று சென்னையில் வசிக்கிறார்.

ஆக, இவ்வளவு தியாகங்கள் செய்த குடும்பம் வரலாற்று ஏடுகளில் எங்கே உள்ளது? இந்த சரித்திர சுவடுகள் பெண்களை ஒதுக்கி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில்/ தென்மாவட்டத்தில் சுதந்திரபோராட்டத்திற்கு பங்களித்த எத்தனை பெண்கள் உடனே நம் நினைவுக்கு வருகின்றனர்? பெண்களின் போராட்டங்களை இந்த சமூகம் மறைக்கிறது அல்லது மறக்கிறது! 

சிறையில் அடைபட்டிருக்கும்போது கடலூரில் அஞ்சலை அம்மாளின் வீடு ஏலத்திற்கு வந்தபோது, ஒரு முஸ்லீம் குடும்ப நண்பர் சமயத்தில் உதவி செய்கிறார். அஞ்சலை அம்மாளின் குழந்தைகளை சரியாக படிக்க வைக்க முடியவில்லை. பொருளாதார பிரச்சினை ஒரு புறம், பாதுகாப்பின்மை ஒரு புறம் - அதன் தாக்கம் அந்த குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்கிறது.

அரசர்களுக்கும், முதலாளித்துவ வர்க்கத்திற்குமே சரித்திரம் சொந்தமானது என்றால் சாதாரண அஞ்சலை அம்மாக்களின் தியாகத்தை யார் சொல்வது? யார் இதை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைப்பது? யார் யாருக்கோ சிலை நிறுவும் அரசாங்கம் அவர்களை எப்படி மறக்கலாம்?இவர்கள் சாதி, மதங்கள் தாண்டி வெளியில் வந்து போராடியவர்கள் ஆயிற்றே! History என்பது his-story மட்டுமல்ல her-storyயையும் உள்ளடக்கியது தானே! அரசு செய்ய மறந்தால் அல்லது மறுத்தால் இந்த சமுதாயமாவது அன்னாருக்கு சிலையெடுத்து சரித்திரத்தை திரும்பி பார்க்க வைக்கட்டும்! 


”போற்றித்தாய்” என்று தாளங்கள் கொட்டடா!
”போற்றித்தாய்” என்று பொற்குழலூதடா!!


நன்றி: சந்தனமுல்லை
http://www.tamilmanam.net/printer_friendly.php?id=565960

விடுதலைப் போரளி கடலூர் அஞ்சலையம்மாள்




இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர்சாதித் தலைவர்களின் தியாகங்கள் போற்றப்பட்டது போல் விளிம்பு நிலைத்தலைவர்களின் தியாகங்கள் வெளிச்சத்திற்கு வராமல் போயின. வரலாற்றுத் தரப்படி நிலையில் இத்தகைய பிழைகள் இன்று வரைத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அத்தகைய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களில் ஒருவர்தான் விடுதலைப் போராட்ட வீரர் கடலூர் அஞ்சலையம்பாள்.


கடலூர் முது நகரில் சுண்ணாம்புக்காரத் தெருவிலுள்ள 38ஆம் எண் இல்லத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த அஞ்சலையம்மாள் திண்ணைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். பெண்ணடிமைத்தனம் முற்றிலும் ஒழிந்து போகாத காலகட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த பெணமணி தன்னை விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டு பல முறை சிறை சென்றதென்பது வரலாற்றுச் சாதனையாகும். 


1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே அஞ்சலையம்மாளின் பொது வாழ்க்கைத் தொடங்கி விட்டது. 1927 ஆம் ஆண்டு நீலன் சிலையகற்றும் போராட்டம், 1930-உப்பு சத்தியாகிரகப்போர், 1933-கள்ளுக் கடை மறியல், 1940- தனிநபர் சத்தியாகிரகம் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டு கடலுர், திருச்சி வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் நானகரை ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றவர். குறிப்பாக வேலுர் பெண்கள் சிறை அவர் அடிக்கடி சென்று வந்த சிறையாகும். 1932 ஆம் ஆண்டு வேலுர் பெண்கள் சிறையில் 727 ஆம் எண் கைதியாக அஞ்சலையம்மாள் இருந்த போது அவர் நிறை மாத கர்ப்பிணி, சிறையிலேயே குழந்தை பிறந்துவிடுமென்பதால் அவரை வெளியில் அனுப்பி குழந்தை பிறந்ததும் மீண்டும் சிறையில் அடைத்தனர். அதனால் சிறையில் குழந்தை பிறந்ததற்கான எவ்வித ஆவணமும் இல்லை.

 அப்போது பிறந்தவர்தான் ஜெயவீரன் இன்றும் கடலூர் முதுநகரில் சின்னஞ்சிறு குடிசையில் வாழ்ந்து வருகிறார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிற்கு அருகிலுள்ள நற்குணம் என்ற சிற்றூரில் முருகப்படையாட்சி என்பவரை அஞ்சலையம்மாள் திருமணம் செய்து கொண்டார். அஞ்சலையம்மாளின் அரசியல் பணிக்கு உறுதுணையாகக் கணவரும் கடலுரிலேயே தங்கி விடுதலைப் போரில் பங்கேற்று அவரும் பல முறை சிறை சென்றுள்ளார். இவர்களின் மூத்த மகள் அம்மாப்பொண்ணு ஒன்பது வயதிலேயே நீலன் சிலையகற்றும் போரில் கலந்து கொண்டு சிறை சென்றவர். அவரை காந்தியடிகள் வார்தாவுக்கு அழைத்துச் சென்று லீலாவதி எனப் பெயர் சூட்டி சபர்மதி ஆசிரமத்தில் வளர்த்தார். அங்கு செவிலியர் படிப்பை முடித்து சென்னை வந்ததும் தன்னைப்போலவே இளம் வயதில் விடுதலைப் போரில் ஈடுபட்ட பன்மொழிப் புலவர் ஜமதக்னியைத் திருமணம் செய்து கொண்டார். 



காங்கிரஸ் வளர்ச்சிக்கும் அஞ்சலையம்மாள் அரும்பாடு பட்டுள்ளார். கடலூரில் அஞ்சலையம்மாளின் இல்லம் எப்போதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந்திருக்கும். அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்த வண்ணமிருக்குமாம். வீட்டையே அடகு வைத்து கட்சிப் பணிக்காக செலவிட்டிருக்கிறார். கடனை அடைக்கமுடியாமல் வீடு ஏலத்திற்கு வந்தது நல்ல உள்ளம் கொண்ட சிலர் வீட்டை மீட்டுத் தந்துள்ளனர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அஞ்சலையம்மாள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.

1946 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை அவைக்குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. "கதர் என்று மகாத்மா கொண்டு வந்தார், கிராமங்களில் நூற்றால் ஒரு சிட்டம் இரண்டரை அணா விற்கிறது. இதை நாம் பலப்படுத்திட பஞ்சு வெளியில் போகாமல் கிராமங்களிலேயே வைத்து நூற்க வேண்டுமென்று அரசாங்கத்திலே சட்டம் இயற்றி விட்டால் துணி பஞ்சமில்லாமல் கவுரவமாய் இருப்போம்... கிராமத்தில் பயிரிடுவோர் காலையில் எழுந்து வயலுக்குப்
போய்விடுவார்கள். பத்து மணிக்கு அவர்களுக்கு சோறு கொண்டு போவார்கள், அதைச் சாப்பிட்டு விட்டு மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வருவார்கள். நாம் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மருத்துவரிடம் செல்கிறோம். அவர்களுக்கு உணவில்லை, துணியில்லை. இங்கே ஒரு கோட்டு இரண்டு கோட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய துணியைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" .(சட்டமன்ற அவைக்குறிபு தொகுதி-1,பக்.317,மே,ஜூன்-1946) ஏழைப் பணக்காரர் நிலையை ஒப்பிட்டு பேசியது அவரின் பொது உடைமைச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. 



உழவு, நெசவு ஆகிய இரு தொழில்களையும் அவர் குடும்பத்தினர் செய்துள்ளனர். இருப்பினும் நெசவுத் தொழிலையே முதன்மையான தொழிலாகச்செய்துள்ளனர். இவர் கணவர் முருகப்படையாட்சி 1932 ஆம் ஆண்டு கடலுர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவருக்கு வயது 56 தொழில் நெசவு என்று சிறைப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஞசலையம்மாளும் அவர் கணவர் முருகப்படையாட்சியும் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தரி நெசவு செய்து நீண்டநாள் கட்சிப்பணி செய்துள்ளனர். நெசவு செய்த கைத்தரி துணிகளைச் சுமந்து கொண்டு தந்தைப் பெரியாரோடு சென்று சிற்றூர்களில் விற்றுள்ளனர். அன்றைய தென்னார்க்காடு மாவட்டக் கழக உறுப்பினராகவும் அஞ்சலையம்மாள் பணியாற்றியுள்ளார். அப்போது அவரின் முயற்சியால் தான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு எக்ஸ் கதிர் கருவி கொண்டுவரப் பட்டுள்ளது. ஒரு முறை கடலூருக்கு காந்தியடிகள் வந்த போது அவரைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அஞ்சலையம்மாள் பர்தா அணிந்து கொண்டு மாறு வேடத்தில் காந்தியடிகளை குதிரை வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார். அதனால் காந்தியடிகள் அஞ்சலையம்மாளை தென்னாட்டின் ஜான்ஸிராணி என அழைத்தாராம்.


பண்ணுருட்டியைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் நல்ல குடி நீர் கிடைக்காமல் மக்கள் நரம்பு சிலந்தி நோயினால் பாதிக்கப் பட்டிருந்தனர். அத்தகைய சிற்றூர்களில் அஞ்சலையம்மாள் விழிப்புணர்வுப் பரப்புரை செய்தார். வீராணம் ஏரியிலிருந்து புவனகிரிக்கு பாசன நீர் செல்லும் பெரிய வாய்க்காலில் ஒரு கிளை வாய்க்காலை ஏற்படுத்தி தீர்த்தாம்பாளையம் என்ற சிற்றூருக்கு பாசன வசதி செய்தார் அவ்வாய்க்கால் இன்றும் அஞ்சலை வாய்க்கால் என்றே குறிப்பிடப் படுகிறது. 


இத்தகைய வரலாற்று நாயகியை நம் வரலாற்றுப் பாட நூல்கள் எப்படி சிறப்பித்துள்ளது தெரியுமா? கடலூர் அஞ்சலையம்மாள் விடுதலை வீரர்களுக்குக் காவல் துறை வளாகத்திலேயே உணவு சமைத்துக் கொடுத்தார் அதனால் அவர் சிறைத் தண்டனைப் பெற்றார் என எழுதப்பட்டுள்ளது அஞ்சலையம்மாளின் வரலாறு. 


பெண் என்பவள் சமைக்கப் பிறந்தவள் என்னும் ஆணாதிக்கப் பொதுப் புத்தியின் வெளிப்பாடுதான் இது.


நன்றி: http://cuddaloreseidhi.blogspot.com/2010/01/blog-post_03.html

செவ்வாய், ஜூன் 15, 2010

ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு அஞ்சுவது யார்?

நடப்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது ஜாதிவாரியான மக்கள் தொகை புள்ளி விவரங்களையும் அரசு திரட்டும் என்று மத்திய அரசு அறிவித்தது முதல், இது நாட்டிற்குக் கேடு பயக்கும் என்றும், ஜாதிச் சண்டைகளை இது பெருமளவில் ஏற்படுத்தும் என்றும் கூறி ஊடகங்கள் ஒரு பெரும் தவறான பரப்புரையை மேற்கொண்டன. தற்போது நிலவும் குழப்பத்தைப் போக்கி, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கும், அவர்களுக்கான நலஉதவித் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கும், ஜாதிவாரி மக்கள் தொகை புள்ளி விவரங்கள் மிகுந்த உதவியாக இருக்கும் என்று ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவாக இருப்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பது என்ற முடிவை அரசு தானாக மேற்கொள்ளவில்லை. நாடு முழுவதிலும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் தலைவர்கள் அதைக் கோரினர். ஜாதிவாரி மக்கள் தொகையின் சரியான புள்ளி விவரங்களைப் பெறுவதற்கு ஏற்றவாறு மக்கள் தொகைக் கணக்-கெடுப்பை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள உச்ச நீதி-மன்றம் ஆணையிட்டு இருந்தது.

2001 ஆம் ஆண்டு நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதும் கூட இவ்வாறு ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வேண்டும் என்ற பலமான கோரிக்கை இருந்தது. இந்தப் புள்ளி விவரங்கள் திரட்டப்படும் என்று உதவிப் பிரதமர் எல்.கே.அத்வானி கூறியது பதிவாகியுள்ளது. ஆனால் வலதுசாரி ஆதிக்க சக்திகள் குறிப்பாக சமூக இயலாளர்கள் மற்றும், மனித-இயல்பு இயலாளர்களின் குழு ஒன்று, அத்தகைய கணக்கெடுப்பு ஆளும் உயர்ஜாதி மற்றும் சமூகங்களின் நலனுக்கு எதிரானது என்பதால், அதை மேற்கொள்ள வேண்டாம் என்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு ஆலோசனை கூறினர்.

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை உயர்ஜாதியினர்தான் எதிர்க்கின்றனர்

அதிகார மய்யங்களை இன்னமும் தங்களின் பிடியில் வைத்திருக்கும் உயர்ஜாதியினரிடமிருந்துதான் ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்-கான எதிர்ப்பு வருகிறது. இதர ஜாதியினர் எப்போதுமே அதை எதிர்த்தது இல்லை. கொள்கை வகுப்பவர்களுக்கும், பொது மக்களுக்கும் ஒவ்வொரு ஜாதியிலும் இருக்கும் மக்கள் தொகை தெரிய வந்தால், சமூகம் மேலும் பிளவுபட்டுப்போகும் என்ற விவாதம் தவறாக வழிகாட்டுவதாகும்.

தங்கள் ஜாதி மக்கள் தொகை அதிகம் என்று ஒவ்வொரு ஜாதியினரும் கூறுவதை எவ்வாறு மறுக்க முடியும்?

ஜாதி கலாச்சாரம் நம்மைச் சுற்றி எங்கு பார்த்தாலும் இருக்கிறது. உயர்ஜாதி மக்கள் மொத்தத்தில் 15 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர் என்று தாழ்த்தப்பட்ட பிரிவினர் கூறுகின்றனர். இது தவறாகவும் கூட இருக்கலாம். கீழ் ஜாதிகள் பலவற்றில் மக்கள் தொகை எண்-ணிக்கை மிகைப்படுத்திக் கூறப்படு-கின்றது. ஒவ்வொரு ஜாதியும் தங்களின் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது என்று உரிமை கோரி தங்களுக்குச் சேரவேண்டிய சரியான பங்கினை அளிக்கக் கேட்கின்றனர். அவர்களின் கோரிக்கை தவறானது என்று அவர்களுக்கு எவ்வாறு கூறுவது? அன்றாட வாழ்க்கை முறையில் ஜாதி என்பது இது போன்ற ஒரு முக்கியமான அம்சமாக விளங்கும் நிலையில், உங்கள் ஜாதியில் இவ்-வளவு மக்கள் தொகைதான் உள்ளது, இதற்கு மேல் நீங்கள் உரிமை கோரமுடியாது என்று அவர்களிடம் சொல்வதற்கு, ஜாதிவாரி மக்கள் தொகைப் புள்ளி விவரங்கள் கையில் தயாராக இருக்க வேண்டும்.

ஜாதியின் அடிப்படையிலேயே அனைத்தையும் விநியோகிக்க நம்மால் முடியாது என்பது உண்மைதான். கல்வி அறிவு பெற்றவர் விகிதாசாரம் மற்றும் பிரதிநிதித்துவ அளவு ஆகியவை குறித்த ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள்தான் சரியான அடிப்படையாக இருக்கும். மக்கள் தொகைக் கணக்கை நாம் ஒரு முறை சொல்லிவிட்டால், அந்த ஆதாரத்திற்கு எந்த எதிர்ப்பும் இருக்க முடியாது.

மேல் ஜாதியினரின் அச்சம்

கீழ் ஜாதி மக்கள் தொகை பற்றிய விரிவான புள்ளி விவரங்கள் ஒரு முறை கிடைத்து விட்டால், கல்வி, வேலை வாய்ப்பு போன்ற துறைகளில் சரியான அளவு விகிதாசார பிரதி-நிதித்துவம் கோருவதற்கான அடிப்படையாக ஆகிவிடுமே என்று உயர்ஜாதியினர் அஞ்சுகின்றனர்.
எடுத்துக்காட்டாக, ஜாதிவாரி மக்கள் தொகைப் புள்ளி விவரங்கள் ஒரு முறை கிடைத்துவிட்டால், இட ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 விழுக்காடு உயர் அளவு பற்றி கேள்வி எழுப்பப் பட-லாம். ஒட்டு மொத்த தாராளமான மக்களாட்சி நடைமுறை நீடித்து நிலைக்க இது உதவும். எண்ணிக்-கையின் அடிப்படையிலான மக்களாட்சி இன்னும் ஆழம் நிறைந்ததாக ஆகிவிடும்.

மக்களாட்சி முறையே எண்ணிக்கையின் அடிப்படையிலானதுதானே?

கம்யூனிசம் போல் அல்லாமல் மக்களாட்சி என்பது உண்மையில் ஓர் எண்ணிக்கை முறையாகும். ஓர் அரசை ஏற்படுத்தும்போது கம்யூனிசம் எண்ணிக்கையைப் பார்ப்பதில்லை. மக்களாட்சி முறையில், அரசு ஒரு தேர்தல் நடைமுறை மூலம் உருவாக்கப்படுகிறது. இது போன்றதொரு நடைமுறையில், பால், இனம், மதம், ஜாதி போன்ற அனைத்து கோணங்களிலும் மக்கள் எண்ணப்படவேண்டும். எண்ணிக்கையின் அடிப்படையிலான மக்களாட்சி முறையில், சமூகத்தின் எந்தப் பிரிவினர் வேண்டுமானாலும் அதிகாரத்துக்கு வரமுடியும்.

மதவாரி கணக்கெடுப்பு இல்லாமல் இந்துக்கள் பெரும்பான்மையினர் என்று எப்படி தெரியவந்தது?

மதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டதால், இந்துக்கள் பெரும்பான்மையானவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் ஆட்சி அதிகாரத்துக்கு அவர்கள் உரிமை கோருகின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்றபோது, நாடு பிரிவதைத் தடுக்க முகம்மது அலி ஜின்னாவை இந்தியாவின் முதல் பிரதமராக ஆக்க வேண்டும் என்று காந்தி கேட்டபோது, இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள ஒரு நாடு இந்தியா என்பதால், ஒரு முஸ்லிம் பிரதமரை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ஜவஹர்லால் நேருவும், சர்தார் படேலும் கூறினர். இந்துக்கள் பெரும்பான்மையானவர்கள் என்ற கண்ணோட்டம் எங்கிருந்து வந்தது? அது எண்ணிக்கையில் இருந்து வந்தது.

எண்ணிக்கை அடிப்படையில் பெண்கள் அதிகாரத்துக்கு வரமுடியாதா?

இதே வாதத்தையே வைத்துக் கொண்டு, மதப் பிரிவினையைக் கடந்து, பெண்கள் தங்களை எண்ணிக்கொண்டு, ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அதிகாரத்துக்கு வந்தால், அதில் என்ன தவறு இருக்க முடியும்? மொத்த மக்கள் தொகையில் பெண்கள் 50 விழுக்காடு இருக்கின்றனர். பாலியல் மக்களாட்சிக்கு போராட அவர்கள் விரும்பினால், அவர்களாலும் அதிகாரத்திற்கு வரமுடியும். அப்படிப் பார்த்தால், பால் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பதை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் எழவேண்டும் அல்லவா?

மக்கள் ஆட்சி முறையில் உயர்ஜாதியினர் தனிமைப்படுத்தப்பட்டு விடவும் கூடும் ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், கீழ் ஜாதி மக்களின் உறுதியான ஆதரவுடன் இந்தியாவின் மக்களாட்சி சிறப்பாக செயல்படும். தங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தங்களின் பங்கைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும். இந்த மாதிரியான ஒரு மாற்றம் ஏற்பட்டால், மக்களாட்சி முறையில் இருந்தே உயர்ஜாதியினர் தனிமைப்படுத்தப்பட்டுவிடக்கூடும். பெண்களால் ஆளப்படும் ஒரு மாநிலத்தையோ அல்லது நாட்டையோ பெண்களாட்சி முறை என்று அவர்களால் அழைக்க முடியுமா?

அனைத்து கோட்பாடுகளுமே, வசதியான இடம் என்று அறியப்பட்டுள்ள ஒரு வசதியின் மீது கட்டமைக்கப்பட்டவைதான் என்று ஆழ்ந்த சிந்தனையின்பால் வெளிப்பட்ட சமூகமனோதத்துவம் கூறுகிறது. சிவப்பு நிறம் கொண்ட உயர்ஜாதியினர் வெள்ளையர் சமூகத்தில் வாழ்ந்தால், அவர்கள் காணும் சிவப்பு நிறத்தின் அடியில் கருப்பு நிறமும் மறைந்து இருப்பதைக் காண்பர். வெள்ளையர் சமூகத்தில் சிவப்பு நிற மனிதர்கள் இணக்கமாக ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. ஆனால், இந்தியாவில் தங்கள் சிவப்பு நிறத்தைப் பெருமையாகக் கருதும் அவர்கள் கருப்பு நிறத்தவர்களை இணக்கமாக ஏற்றுக் கொள்வதில்லை.

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு முன் இந்தியாவில் ஜாதியே இருக்கவில்லையா?

ஆங்கிலேயர் காலனி நாடுகளில் மேற்கொண்ட நடைமுறைதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியைக் கணக்கிடுவது என்று உயர்ஜாதி அறிவாளிகள் பலர் கூறுகின்றனர். ஆங்கி-லேயர் இத்தகைய ஜாதி வாரிக் கணக்கெடுப்பு முறையை நடைமுறைப் படுத்துவதற்கு முன்பு இந்தியாவில் ஜாதியே இல்லாமல் இருந்தது போல அவர்கள் பேசுகின்றனர். இந்த வாதத்தை வைத்துப் பார்த்தால், மதவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தும் முன், இந்தியாவில் மதங்களே இல்லாமல் இருந்திருக்க வேண்டுமே? இது போன்ற கருத்துப் பார்வையற்ற கரும்புள்ளிகள் இந்தியாவில் பல இடங்களில் இருப்ப-தால்தான், நாம் இன்றும் அறிவியல் களத்தில் பின்தங்கியே இருக்கிறோம்.

நமது மக்களாட்சி நடைமுறை பலம் பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் மட்டுமன்றி அனைத்து ஜாதியினருமே கணக்கிடப்பட வேண்டும். எனது கோட்பாடும் கரும்புள்ளியாக இருக்கலாம்; ஆனால் அது தீங்கை நீக்கும் ஓர் எதிர்மறை பாதிப்பாகவும் இருக்கக் கூடும்.

நன்றி: டெக்கான் கிரானிகல்,
11.6.2010 இல்காஞ்சா அய்லய்யா அவர்கள் எழுதிய கட்டுரை
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்--"விடுதலை” 14-6-2010

நன்றி: தமிழ்ஓவியா

http://thamizhoviya.blogspot.com/2010/06/blog-post_15.html