Pages

சனி, ஜனவரி 26, 2013

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடையை நீக்க வேண்டும் - மருத்துவர் இராமதாசு அய்யா

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடையை நீக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளார்:

"தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் நேற்று வெளியிடப்படுவதாக இருந்த நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு திடீரென தடை விதித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் இப்படத்தை வெளியிடுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினரின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக பல்வேறு அமைப்புகள் புகார் அளித்திருப்பதாகவும், அதனால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்பதால் தான் இப்படத்திற்கு தற்காலிக தடை விதிக்கப் பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தின் கதை பற்றியோ அல்லது காட்சி அமைப்புகள் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது என்பதாலும், இது குறித்த வழக்கு  நீதிமன்றத்தில் இருப்பதாலும் இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

ஆனால், நடிகர் கமலஹாசன் மதங்களைக் கடந்த கலைஞர். எந்த மதத்தினர் எந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர். 1992 -ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அதை கடுமையாக கண்டித்ததுடன், அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவை நேரில் சந்தித்து , இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தியவர். 
இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் முக்கியப் பொறுப்பில் இருந்து பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இப்படிப்பட்ட கமலஹாசன் இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் திரைப்படம் எடுத்திருக்க மாட்டார் என்று நம்பலாம். அதுமட்டுமின்றி , விஸ்வரூபம் திரைப்படம்  நடுநிலையான இஸ்லாமியர்களை பெருமையடையச் செய்யும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கமலஹாசன் கூறியுள்ள நிலையில், இதை பொதுவான இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ரசிகர்களின் முடிவுக்கே விட்டுவிடுவது தான் சரியானதாக இருக்கும். மாறாக படத்தை முடக்க முயல்வது எதிர்மறையான எண்ணத்தையே ஏற்படுத்தும்.
இத்திரைப்படத்திற்கு தமிழக அரசு திடீரென தடைவிதித்ததன் பின்னணியில் அரசியலும் கலந்திருப்பதாக கருதுகிறேன். விஸ்வரூபம் படத்திற்கு தணிக்கை வாரியம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் , தமிழக அரசு தலையிட்டு, யாருடைய கருத்தையும் கேட்காமல் தடை விதித்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும். 

அண்மைக்காலமாகவே தமிழக அரசு கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுவருகிறது. சட்டம் - ஒழுங்கிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்றால், அதை சமாளிக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்; இதற்காக திரைப்படத்திற்கு தடை விதிப்பது முறையல்ல.

எனவே, விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு உடனடியாக நீக்கவேண்டும். எனது அன்பிற்குரிய இஸ்லாமிய அமைப்புகளும் இந்தப் பிரச்சினையை உணர்ச்சி வேகத்தில் அணுகாமல் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி யதார்த்தமான தீர்வை எட்ட முன்வரவேண்டும்."

- என மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளார்:

வெள்ளி, ஜனவரி 25, 2013

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சட்டவிரோத விளம்பரம்: சமூக அக்கறையின் லட்சணம் இதுதானா?

புகையிலை விளம்பரங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி புதிய தலைமுறைத் தொலைக்காட்சி புற்றுநோயை ஏற்படுத்தும் புகையிலைப் பொருளை விளம்பரம் செய்கிறது. சமூக அக்கறையுடன் நடப்பதாகக் கூறிக்கொள்ளும் புதிய தலைமுறை "நேர்பட பேசு" எனும் நிகழ்ச்சியின் இடையே 'சைனி கைனி' எனும் கொடிய மெல்லும் வகைப் புகையிலைப் பொருள் விளம்பரப்படுத்தப்படுகிறது. இக்கொடுமை உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.
சமூக அக்கறை இதுதானா?
புதிய தலைமுறை 'சைனி கைனி' விளம்பரம்
புகையிலைப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் ஆண்டுக்கு பத்துலட்சம் இந்தியர்களைக் கொலை செய்கின்றன. இதனைத் தடுக்கும் நோக்கில் இந்திய அரசின் புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவு "நேரடியாகவோ மறைமுகமாகவோ புகையிலைப் பொருட்கள் எதுவும் விளம்பரப்படுத்தப்படக் கூடாது" என தடை விதித்துள்ளது. இந்தத் தடையை புதிய தலைமுறைத் தொலைக்காட்சி மீறியுள்ளது.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் முன் உதாரணம்.

இதே போன்று, முன்பு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) இதே 'சைனி கைனி' புகையிலைப் பொருளை விளம்பரப்படுத்தியது. அதுகுறித்து பசுமைத் தாயகம் புகார் அளித்த பின்னர் - மாநகரப் போக்குவரத்துக் கழகம் 'இனி இத்தகையை விளம்பரங்களை ஏற்கமாட்டோம்' என உறுதி அளித்ததுடன், உடனடியாக புகையிலை விளம்பரங்களை நீக்கியது.
MTC பேருந்தில் நீக்கப்பட்ட  'சைனி கைனி' விளம்பரம்
அரசின் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் முன்னுதாரணத்தை புதிய தலைமுறை தொலைக்காட்சி பின்பற்றுமா? மரணத்தை விற்கும் அநியாய விளம்பரத்தை நிறுத்துமா? பொருத்திருந்து பார்ப்போம்.

வியாழன், ஜனவரி 24, 2013

கடலூர்: மருத்துவர் இராமதாசு அய்யா மீதான தடைநீக்கம் - இனியாவது பாடம் கற்குமா தமிழக அரசு?

கடலூர் மாவட்டத்தில் நுழைவதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு ஜனவரி 21 ஆம் நாள் தடைவிதிக்கப்பட்டது. மூன்றே நாட்களில் இந்தத் தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

"பதட்டமான சூழ்நிலையினை கருத்திற்கொண்டும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டும் தடைவிதிக்கப்படுவதாக" அந்த மாவட்ட ஆட்சியர் கூறினார். குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு இரண்டு மாதக் காலத்திற்கு ஆணையிடப்படுகிறது என்று அவர் கூறினார்.

கடலூர் முற்றுகை - மோதல்: மண்டை உடைப்பு!

இன்று 24.01.2013 காலை எட்டு மணி முதல் ஆயிரக்கணக்கான பாமகவினர் கடலூரில் குவிந்தனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 'மருத்துவர் அய்யா அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு, அவர் கடலூருக்கு வந்த பின்புதான் நாங்கள் வீடுதிரும்புவோம்' என அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதே நேரத்தில் அதிமுகவினர் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அதிமுக போராட்டத்தை விட பல மடங்கு அதிக கூட்டத்தினர் பாமக சார்பில் கூடியிருந்தனர். இதனால் கோபம் அடைந்த காட்டுமன்னார்கோவில் தனித்தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் போராட்டத்தில் பேசும்போது பாமகவினரை தரக்குறைவாக பேசியாதாகவும், அதனால் கோபம் அடைந்த பாமகவினர் செருப்பை வீசியதாகவும் கூறப்படுகிறது. (அதிமுக பாமக திடீர் மோதல் : கல்வீச்சு; தடியடியால் பதற்றம்)

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அதிமுகவினைரை விட்டுவிட்டு பாமகவினர் மீது மட்டும் தாக்குதல் நடத்தினர். ஏராளமானோர் தக்கப்பட்டனர். ஐந்து பேருக்கு மண்டை உடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தடையை நீக்கும் அறிவிப்பு
இதன் பிறகும் பாமகவினர் கலைந்து செல்ல மறுத்தனர். பின்னர் ஆட்சியர் மருத்துவர் அய்யாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக பிற்பகலில் அறிவித்தார். (ராமதாஸ் மீதான தடை நீக்கம்)

கடலூரில் மருத்துவர் அய்யா

தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மாலை நான்கு மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த மாபெரும் கூட்டத்தில் மருத்துவர் அய்யா உரையாற்றினார்.  காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களை சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
ஜனநாயக விரோதமான இந்தத் தடையை விதிக்காமலேயே இருந்திருக்கலாம், அல்லது இன்று காலை மண்டையை உடைப்பதற்கு முன்பே தடையை நீக்கி இருக்கலாம். தமிழக அரசுக்கு ஏன் இந்த வெட்டிவேலை என்று தெரியவில்லை.

முற்போக்கு வேடதாரிகள் தடையை வரவேற்காதது ஏன்?

வன்னிய சாதிவெறி எதிர்ப்பு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள், மருத்துவர் அய்யா அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடியவர்கள் அவருக்கு கடலூர் மாவட்டத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டதை எதற்காவோ வரவேற்கவில்லை.

திமுக தலைவர் கலைஞர் பல்டி அடித்து தடையைக் கண்டித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடை தடையை வரவேற்றது. ஆனால் மற்றவர்கள் ஏன் எதுவும் பேசவில்லை?

மற்ற இடதுசாரியினர், தமிழ்த்தேசியவாதிகள், மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் கடலூர் மாவட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதைக் கண்டித்து இப்போதாவது அறிக்கை வெளியிட முன்வர வேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள்:

வன்னியப் பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டால் மருத்துவர் அய்யாவுக்குத் தடையா? மானம் காக்க கடைசிவரைப் போராடுவோம்.

மருத்துவர் அய்யா கடலூர் மாவட்டத்தில் நுழையத் தடை: வன்னிய சாதிவெறியை எதிர்ப்போர் இதனை வரவேற்காதது ஏன்?

புதன், ஜனவரி 23, 2013

வன்னியப் பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டால் மருத்துவர் அய்யாவுக்குத் தடையா? மானம் காக்க கடைசிவரைப் போராடுவோம்.

"வன்னியப் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அனைத்து சமுதாயப் பெண்களும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று சொல்வது ஜனநாயக நாட்டில் ஒரு குற்றமா? இதற்காக கடலூர் மாவட்டத்தில் நுழைய மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்களும் வன்னியர்களும் அண்ணன் தம்பிகள் ஆகலாம், மாமன் மச்சான் ஆகக் கூடாதா? என்கிறார்கள். கலப்புத் திருமணம்தான் சாதியை ஒழிக்க ஒரே வழி. எனவே, திட்டமிட்டு மாற்று சாதிப் பெண்களை கலப்புத் திருமணம் செய்யுங்கள் என்று பிரச்சாரம் செய்கின்றனர் (மாற்று சாதி ஆண்களைத் திருமணம் செய்யுங்கள் என்கிற பிரச்சாரம் இல்லை).

இந்த கோஷங்கள் தீவிரமாக்கப்பட்டு, "மாற்று சாதிப் பெண்களின் வயிற்றில் உனது கரு வளர வேண்டும்". "கவுண்டனக் கண்டா வெட்டு, கவுண்டன் பெண்ணைக் கட்டு". "வன்னியன் பொண்டாட்டி எங்களுக்கு வைப்பாட்டி" என்று நீள்கிறது.
பண்ருட்டியை அடுத்த முத்தண்டிக்குப்பம் -காவல் நிலைய சுற்றுசுவர்:" வன்னியரின் பொண்டாட்டி எங்கள் வப்பாட்டி " 


"கவுண்டனக் கண்டா வெட்டு, கவுண்டன் பெண்ணைக் கட்டு"

"கவுண்டனக் கண்டா வெட்டு, கவுண்டன் பெண்ணைக் கட்டு"

இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்து, 'வாங்க மாப்பிள்ளை' என்று அழைத்து விருந்து வைக்க வேண்டுமா?

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு உண்டா?

தமிழகம் இன்றைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சமூகமாகத்தான் இருக்கிறது. கல்லூரியில் படிக்கும் ஆண் நண்பர்கள் இரவுக் காட்சி இரண்டாம் ஆட்டம் சினிமாவுக்கு சென்று வருவது சாதாரணமான செயல். ஆனால், பெண்கள் தனியாக இரவுக் காட்சி சினிமாவுக்கு போக முடிகிறதா?
இதைச் சொன்னால், இதற்கு முன்பு மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்ததா? எல்லா காலங்களிலும் இளம்பெண்கள் மீதான வன்முறைகள் நடந்துகொண்டுதானே இருக்கிறது என்கின்றனர்.

ஆம். எல்லா காலங்களிலும் பெண்கள் மீதான வன்முறைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், சாதி ஒழிப்புக்காக குறிப்பிட்ட சமூகத்துப் பெண்களை ஏமாற்றுங்கள், கடத்துங்கள், பணப்பறிப்பு நடத்துங்கள் - என சீரழிவு நோக்கத்துடன் முன்பெல்லாம் பிரச்சாரம் எதுவும் நடக்கவில்லை. 

தன்னிச்சையாக சிலர் சமூக விரோத செயலில் ஈடுபடுவதற்கும் - சமூக விரோதச் செயல்களைத் திட்டமிட்டு ஒரு இயக்கமாக செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறது.

'நாம் பள்ளி செல்லும் மாணவிகளை கேலி செய்யலாம், சடையைப் பிடித்து இழுக்கலாம். மார்பில் முட்டையை மோதி உடைக்கலாம். அதனை தட்டிக்கேட்க யாராவது வந்தால் நமக்கு பாதுகாப்பாக ஒரு இயக்கம் இருக்கிறது, சட்டம் இருக்கிறது' என்கிற துணிச்சல் முன்பெல்லாம் இருந்ததில்லை. இப்போது இருக்கிறது. இத்தகைய அத்து மீறலகள் எங்கெங்கும் நடக்கின்றன.

பள்ளி, கல்லூரி மாணவிகளை காதல் நாடகம் நடத்திக் கடத்திச் சென்றால் - அந்தக் கடத்தல்காரர்களுக்கு ஆதரவு அளிக்க, ஆலோசனை அளிக்க, ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு மூளைச் சலவைச் செய்ய, காவல் நிலையத்தில் கட்டைப் பஞ்சாயத்து நடத்த, பணபேரம் பேச என்று தமிழ் நாட்டில் ஒரு தொழில்முறைக் கூட்டம் உருவாகியுள்ளது. 

'இதுதான் சாதி மறுப்புத் திருமணப் புரட்சி' என்று மருத்துவர் அய்யா இதனை வரவேற்று 'வாழ்த்துப் பா' பாட வேண்டுமா?

காதல் நாடகம் நடத்துகிறார்கள். கட்டைப் பஞ்சாயத்து நடத்துகிறார்கள். தட்டிக் கேட்டால் வன்கொடுமை சட்டத்தைக் காட்டி மிரட்டுகிறார்கள். இதையெல்லாம் எதிர்த்துக் கேட்டால் எங்கள் மண்ணில் நாங்கள் நடமாடக் கூடாதா?

வன்னியர்களும் பெண்களின் மானமும்

மனிதன் உணவில்லாமல் இருப்பான், ஆடையில்லாமல் இருக்க மாட்டான். மானம் பெரிதென போராடிச் சாவதைப் பெருமையாக நினைப்பவர்கள் வன்னியர்கள். இதற்கு வரலாற்று ரீதியிலான காரணங்கள் உள்ளன.
துரியோதனன் தன்னை அவமானப்படுத்தினான் என்பதற்காக திரௌபதி தனது கூந்தலை முடிய மறுத்து "துரியோதனன் கொல்லப்பட்ட பின்பு அவனது குருதியை எடுத்து எண்ணெயாகப் பூசி, எலும்பை சீப்பாக்கி தலைவாரி, குடலைப் பூவாகச் சூடி குழல் முடிப்பேன்" என்று சபதம் செய்ததை ஆயிரம் வருடங்களாகப் படித்தும் கேட்டும் நாடகமாக நடித்தும் வருபவர்கள் வன்னியர்கள். நெருப்பிலே தோன்றிய தெய்வம் திரௌபதி என்று இந்தியாவிலேயே ஊருக்கு ஊர் கோவில் அமைத்து வழிபட்டு வரும் ஒரே சமூகம் வன்னியர்கள்தான்.

திரௌபதியின் கதையை ஆண்டுதோரும் பாரதமாகப் படிக்கவும் பாரதக் கூத்தாக நடத்தவும் நரசிம்மவர்மன் காலத்தில் தொடங்கி, பல்லவர்களும், சோழர்களும், காடவராயர்களும் இதற்காகவே பல மானியங்களை வன்னியர் பகுதிகளில் வழங்கி வைத்துள்ளார்கள். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற வில்லிபுத்தூரார் பாரதம் வன்னியர்களுக்காக எழுதப்பட்டதுதான். இன்றைக்கும் பாரதம் படிப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. (இங்கே காண்க)
மாமல்லபுரம் சிற்பங்களில் திரௌபதி
மருத்துவர் அய்யா அவர்கள் காதல் நாடக ஏமாற்றுக் கூட்டத்துக்கு எதிராக ஏன் இவ்வளவு தீவிரமாக இருக்கிறார்? என்று பலருக்கும் வியப்பு இருக்கலாம். ஆனால், அதுதான் அவர் இயல்பு. அதுதான் அவர் மரபு. 

இந்த சிக்கலுக்கு தீர்வு என்ன?

மருத்துவர் அய்யா பேசுவது அபாண்டம் என்று சொல்லி, இந்த சிக்கலை மூடிவிட ஒருவராலும் முடியாது. உண்மையிலேயே சமூக அமைதியின் மீது அக்கறை இருந்தால் -
  • சாதிமறுப்புத் திருமணம் என்கிற கட்டுக்கதைகளை நிறுத்துங்கள். சாதிமறுப்பு திருமணங்களால் எந்த ஊரில், எந்த தெருவில், எந்த வீட்டில் சாதி ஒழிந்தது? திருணங்கள் மூலம் ஒரு காலத்திலும் சாதி ஒழியாது. இல்லாத ஒரு தீர்வை கற்பனையாகத் திணிக்காதீர்.
  • பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களின் படிப்பையும், வாழ்வையும் தன் மூலம் அவர்கள் குடும்பத்தையும் சீரழிக்கும் காதல் நாடகச் சதிக்கு முடிவுகட்ட முன்வாருங்கள் (படித்து முடித்து வேலைக்கு போன பின்பு காதலர்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாதா? கல்லூரியிலிருந்து கடத்திப்போய் தான் காதல் திருமணம் நடக்க வேண்டுமா?)
  • வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தினை முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதற்கு முடிவு கட்டுங்கள்.
  • பிரேசில், சிங்கப்பூர், ஜப்பானில் இருப்பது போன்று 21 வயதுக்குள் திருமணம் என்றால் அதற்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயம் ஆக்குங்கள்.
- இதையெல்லாம் விட்டுவிட்டு 'சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும்' என்கிற நினைப்பில் மருத்துவர் அய்யாவுக்கு தடை விதிக்காதீர். (தடையைத் தூளாக்க சில நிமிடங்கள் ஆகாது. ஆனால், நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், அதனை சட்டப்படியே எதிர்கொள்வோம்).

செவ்வாய், ஜனவரி 22, 2013

மருத்துவர் அய்யா கடலூர் மாவட்டத்தில் நுழையத் தடை: வன்னிய சாதிவெறியை எதிர்ப்போர் இதனை வரவேற்காதது ஏன்?


அனைத்து சமுதாயப் பேரியக்கம் - சமூக அமைதிக்கான ஒரு முன்முயற்சி

மருத்துவர் அய்யா அவர்கள் மாவட்டம் தோரும் நடத்திவரும் "அனைத்து சமுதாயப் பேரியக்கக் கூட்டம்" சமூக அமைதிக்கான ஒரு உன்னத இயக்கமாகும். 

பள்ளி, கல்லூரி செல்லும் பதின்வயது பெண்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் ஒரு அமைப்பினரின் சதிச்செயல்களை முறியடிக்கவும், சாதி ஒழிப்பு என்கிற பெயரில் பெண்களின் கல்வி உரிமையை பறிப்போருக்கு எதிராகவும், இளம்பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்தால் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஏவப்படுவதை கண்டித்தும் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

தருமபுரியில் கலவரம் நடந்த சூழலில், தமிழ்நாட்டில் இனி எங்குமே அத்தகைய நிகழ்வுகள் நடக்கக் கூடாது. காதல் நாடகம், கடத்தல், பணப்பறிப்பு, வன்கொடுமைச் சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுதல் - இதுபோன்ற செயல்களை சில அமைப்பினர் திட்டமிட்டு அரங்கேற்றும் நிலையில், கலவரத்துக்கு காரணமான இப்பிரச்சனைக்கு சனநாயக முறையில் பேச்சுவார்த்தை, அமைதிவழி போராட்டம் மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே அனைத்து சமுதாயப் பேரியக்கத்தின் நோக்கம் ஆகும்.
ஆனால், சனநாயகம் என்பதன் பொருள் புரியாத சர்வாதிகார கூட்டத்தினர் இதனால் "சமூக அமைதிக்கு பங்கம் விளையும்" என்கின்றனர். மதுரை மாவட்டத்திலும் கடலூர் மாவட்டத்திலும் நுழைவதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. "பதட்டமான சூழ்நிலையினை கருத்திற்கொண்டும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டும் தடைவிதிக்கப்படுவதாக" அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கூறியுள்ளனர்.

வன்னிய சாதிவெறியை எதிர்ப்போர் மௌனம் காப்பது ஏன்?

வன்னிய சாதிவெறி எதிர்ப்பு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள், மருத்துவர் அய்யா அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடியவர்கள் இந்தத் தடை குறித்து மௌனம் சாதிப்பது வியப்பளிக்கிறது.

வன்னிய சாதிவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தினீர்கள், உண்மை அறியும் அறிக்கைகளை வெளியிட்டீர்கள் - ஆனால், இப்போது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போது எதற்காக மௌனம் சாதிக்கிறீர்கள்?
குறிப்பாக திமுக, இடதுசாரியினர், தமிழ்தேசிய வாதிகள், மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் மதுரை மாவட்டத்திலும் கடலூர் மாவட்டத்திலும் நுழைவதற்கு மருத்துவர் அய்யா அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை வரவேற்று அறிக்கை வெளியிடாதது ஏன்?

திராவிடக் கட்சிகளே, திராவிட அமைப்புகளே, தமிழ்தேசியர்களே, பொதுவுடைமை இயக்கங்களே, மனித உரிமைப் போராளிகளே - எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தப் பக்கத்தில் நீங்கள் இல்லை. அந்தப்பக்கத்தில் நில்லுங்கள்.

ஞாயிறு, ஜனவரி 20, 2013

ஐநா மனிதஉரிமை ஆணையத்தின் 22ஆம் கூட்டம்: இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை தீர்மானத்தை இந்தியா கொண்டுவரவேண்டும்!


ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 22 ஆவது கூட்டம் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெற உள்ளது. தமிழ் மக்களுக்கு எதிரான போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாற்றுகள் மீது கடந்த ஓராண்டு காலத்தில் இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது.

"போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து இலங்கை அரசு முறையாக விசாரணை நடத்தாததால், இது குறித்து சர்வதேச விசாரணைக்கு ஆணையிடக்கோரும் தீர்மானத்தை இந்தியா கொண்டுவரவேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் வலியுறுத்தவேண்டும்" என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். அந்த அறிக்கை:

ஐநா மனிதஉரிமை ஆணையத்தின் 22ஆம் கூட்டம் - இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை தீர்மானத்தை இந்தியா கொண்டுவரவேண்டும்: மருத்துவர் இராமதாசு அறிக்கை

"இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில்,  ஒரு லட்சத்திற்கும் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இன்று வரை நீதி வழங்கப்படவில்லை. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கைகளை இலங்கை அரசு தட்டிக் கழித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அரசே விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன்பின் ஓராண்டாகிவிட்ட நிலையில், இலங்கையின் மனித உரிமைச் சூழலில் எந்த ஒரு முன்னேற்றமும் தென்படவில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணையக்குழு இலங்கை சென்ற போது, அதன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த ராஜபக்சே அரசு, மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளையின் இலங்கைப் பயணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தர மறுத்து வருகிறது.

அதுமட்டுமின்றி, போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவும், மனித உரிமைகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய இலங்கை அரசு, அதை செய்யாமல்  மனித உரிமைகளுக்கு எதிரான செயல்களிலும், தமிழர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைதியான முறையில் மாவீரர்நாள் நிகழ்ச்சிகளை நடத்திய தமிழ் மாணவர்களை கைது செய்து கொடுமைப்படுத்துதல், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துதல், தமிழ் பெண்களை கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்த்து அடிமைகளைப் போல நடத்துதல், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் 10 மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற விகிதத்தில் படையினரை நிறுத்தி தமிழர்களின் சுதந்திரத்தைப் பறித்தல், தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் சட்டத்திற்கு அனுமதி மறுத்ததற்காக இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்தது, தமிழர்கள் வாழும் பகுதிகளை சிங்களமயமாக்குவது என இலங்கை அரசு தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.

இலங்கை அரசின் இந்த போக்கை ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளையும், மற்ற உலகத் தலைவர்களும் கடுமையாக கண்டித்திருக்கின்றனர். ஆனால், இந்திய அரசு இதை இன்று வரை கண்டிக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது.
நவநீதம்பிள்ளை
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 22 ஆவது கூட்டத்தில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் , இந்தக் குற்றச்சாற்றுகள் மீது கடந்த ஓராண்டு காலத்தில் இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும்  விவாதிக்கப்படவிருக்கிறது. அப்போது போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து இலங்கை அரசு முறையாக விசாரணை நடத்தாததால், இது குறித்து சர்வதேச விசாரணைக்கு ஆணையிடக்கோரும் தீர்மானத்தை இந்தியா கொண்டுவரவேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் வலியுறுத்தவேண்டும். 
கடந்த ஆண்டு மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்க மத்திய அரசு தயங்கியது.அப்போது, தமிழக அரசியல் கட்சிகள் கொடுத்த நெருக்கடியால் தான், வேறுவழியின்றி தீர்மானத்தை ஆதரிக்க ஒப்புக்கொண்டது. அதேபோல், இப்போதும் மத்திய அரசை  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படவைக்க தமிழக கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்"  என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்

வியாழன், ஜனவரி 10, 2013

பாவத்தைக் கழுவியதா ஆனந்த விகடன்: சமந்தாவுக்கு சிறந்த நடிகை விருது!

நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் குறித்து அநியாயமாக எதிர்ப்பு விமர்சனத்தை பத்திரிகைகளும் வலைப்பூ விமர்சகர்களும் எழுதினர். கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று வள்ளலார் சொன்னது போல, கௌதம் மேனனின் படத்தை உள்வாங்கும் திறன் விமர்சர்களுக்கு இல்லை என்பதை இப்படம் மெய்ப்பித்தது. 

ஆனால், தாமதமாக வந்த பல வலைப்பூ விமர்சனங்கள் நீதானே என் பொன்வசந்தம் மிகச்சிறந்த திரைப்படம் என எடுத்துக்கூறின. (1. வீடு திரும்பல்,  2. யுவகிருஷ்ணா, 3. நீதானே என் பொன்வசந்தம்: 2012-ன் மிகச்சிறந்த காவியம்!)
மிகச்சிறந்த இப்படத்திற்கு 40 மதிப்பெண்கள் மட்டுமே கொடுத்து பாவம் தேடிக்கொண்டது ஆனந்த விகடன். ஆனால், நல்ல வேலையாக 2012 ஆம் ஆண்டின் சிறந்த நடிகை என்று "நீதானே என் பொன்வசந்தம்" கதாநாயகி சமந்தாவிற்கு விருது வழங்கியுள்ளது ஆனந்த விகடன்.

"வீடு திரும்பல்" வலைப்பூவிலிருந்து ஒரு பின்னூட்டம்:

"வெளியேதெரியாமல் அமுங்கிப்போன சில நல்ல படங்களை தேடிப்பிடித்து பார்க்கவைத்தவர்கள் நம் இணையதள விமர்சகர்கள் இவர்கள் விமர்சனம் தரமானது, உண்மையானது. ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகள் தரமான படங்களுக்கு 45 மதிப்பெண்னும், குப்பை படங்களுக்கு 42 மதிப்பெண்னும் வாரி வழங்கும் வருமான விசுவாசம் இங்கே இருக்காது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருந்த நீதானே என் பொன் வசந்தத்திற்கு இவர்களின் எதிர்மறையான விமர்சனம் படத்தின் மீதான எனது ஆர்வத்தை குறைத்துவிட்டது. 
"அம் மனநிலையிலேயே படத்தை பார்த்தேன். ஆனால் படம் ஓட ஓட என்னை முழுதும் ஆக்ரமித்துவிட்டது. படம் முடிந்தும் அதில் இருந்து வெளிவர முடியவில்லை. சமந்தா- சமகால நடிகைகளிடம் இல்லாத ஒரு ஈர்ப்பு. கணகள் முழுவதும் காதல். காதலை வெளிப்படுத்தும் பொழுதும், பிரியும்பொழுதும் அவரின் துடிப்பு அழகு. கடைசி 30 நிமிடம் fentastic. 
ஜீவாவின் திருமண வரவேர்ப்பிற்கு சென்று அங்கு அவரின் துடிப்பு மனதை பிசைகிறது. இங்கே இளையராஜா வேறு... ஐயோ...பூங்காவில் ஜீவா திருமணத்தை பற்றி பேசும்போது...அது உன்னை பத்தி பேசுனது, கல்யாணத்த பத்தி இல்ல என்று கூறும் காட்சி...இன்னும் திரும்ப திரும்ப இப்படத்தை பார்த்துகொண்டே இருக்கின்றேன். கௌதமின் படைப்புகளில் மிகத்தரமான படைப்பும் இதுதான் என்பது என் இரசனையின் முடிவு, விண்ணைதாண்டி வருவாயாவை விட. I hate web reviewers. என்ன ஆச்சி உங்களுக்கு. சறுக்கியது கௌதம் அல்ல.- ரசிகர்கள்தான்." என்று அந்த வலைப்பூவில் கூறப்பட்டிருந்தது.

கொஞ்சமாவது பாவத்தைக் கழுவிய ஆனந்த விகடனுக்கு நன்றி.