புகையிலைக் கண்டுபிடிப்பு
புகையிலை புதிய பொருள் அல்ல. கி.மு. 6000 ஆண்டுகள் வாக்கிலேயே தென் அமெரிக்க கண்டத்தில் புகையிலை காணப்பட்டதாகக் கருதப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்கள் புகையிலையை மெல்லுவது, உடலின் மீது பூசிக்கொள்வது, புகைப்பது என பலவழிகளிலும் பயன்படுத்தக் கற்றிருந்தனர்.
"பூமி வறண்டு, மனிதர்கள் பசியால் துடித்த போது கடவுள் ஒரு தேவதையை பூமிக்கு அனுப்பினார். அந்த தேவதையின் வலது கரங்கள் பட்ட இடங்களில் எல்லாம் உருளைக் கிழங்கு விளைந்தது. இடது கரங்கள் பட்ட இடங்களில் எல்லாம் சோளம் விளைந்தது. எங்கெல்லாம் தேவதை உட்கார்ந்து எழுந்தாளோ அங்கெல்லாம் புகையிலை விளைந்தது" என்பது தென்அமெரிக்க பழங்குடிகளின் பழங்கதை.
மதுப்பழக்கத்தை சாடும் புத்த, இசுலாமிய, கிறித்தவ மதநூல்கள் புகையிலைப் பழக்கத்தை நேரடியாக சாடுவதில்லை. இதற்காக அந்த மதங்கள் புகையிலையை ஆதரிக்கின்றன என்று கூறிவிட முடியாது. மாறாக இந்த மதங்கள் உருவான காலத்தில் உருவான நாடுகளில் புகையிலை என்கிற பொருளே இல்லை.
பதினைந்தாம் நூற்றாண்டில் அமெரிக்காவை கண்டறிந்த கொலம்பஸ் தான் முதன்முதலில் புகையிலைச் செடியை 1492 இல் ஐரோப்பிய கண்டத்திற்கு கொண்டுவந்தார். அதன்பிறகே புகையிலை உலகின் இதர பகுதிகளுக்கு பரவியது.
இந்தியாவில் புகையிலை
இந்தியாவிற்கு புகையிலையை அறிமுகப்படுத்தியது ஐரோப்பியர்கள் தான். 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அக்பரின் ஆட்சி காலத்தின் போது, போர்த்துகீசியர்கள் இந்தியாவுக்கு புகையிலைச் செடியைக் கொண்டுவந்தனர். 1618 ஆம் ஆண்டளவில் பீஜப்பூர் கோல்கொண்டா பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு புகையிலைப் பயிரிடப்பட்டதாக அறியப்படுகிறது.
"பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் இரு ஆண்டுகளில் சென்னையிலிருந்து மைசூர் கர்நாடகம், மலபார் ஆகிய பகுதிகளில் பயணம் மேற்கொண்ட பிரான்சிஸ் புக்கானன் கர்நாடகத்திலும், மலபார், கோயமுத்தூ பகுதிகளிலும் மைசூர் சமஸ்தானத்திலும் பரந்த அளவில் புகையிலை பயிர் செய்யப்பட்டு வந்ததாக குறிப்பிடுகிறார்.
மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய பகுதிகளிலும் புகையிலை சிறப்பாக பயிர் செய்யப்பட்டு வந்தது. அழகன்குளம், பரத்தை வயல். காங்கேயம், யாழ்ப்பாணம் ஆகியவற்றை புகையிலை சிறப்பாக விளையும் இடங்களால 'புகையிலை விடு தூது' ஆசிரியர் குறிப்பார்" என்கிறார் ஆய்வாளர் ஆ.இரா. வெங்கடாசலபதி.
புகையிலையும் புராணமும்
எல்லாவற்றுக்கும் புராணக்கதைகள் உள்ளது போல புகையிலைக்கும் புராணக்கதை இருந்துள்ளது. "சிவபெருமான், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் இடையே தம்முள் யார் பெரியவர் என்ற வாதம் எழுந்ததாம். அதைத் தீர்க்க வழக்கம்போல் அவர்கள் தேவர் அவைக்கு சென்றனராம். அங்கே வழக்கை பின்பு தீர்க்கலாம், முதலில் ஒவ்வொருவருக்கும் ஒரு பத்திர பொருள் தருவோம் என்று கூறி சிவனுக்கு வில்வமும், திருமாலுக்கு துளசியும், பிரமனுக்கு புகையிலையும் கொடுத்தனராம்.
சிவனிடம் கொடுத்த வில்வத்தை கங்கை கொண்டுபோக, திருமாலிடம் கொடுத்த துளசி பார்க்கடலில் அமிழ்ந்து போனதாம். தேவர்கள் பத்திரப் பொருளை திருப்பிக்கேட்ட போது சிவனும் திருமாலும் அவற்றை திருப்பித்தர இயலவில்லை, பிரமன் மட்டும் 'நமது பத்திரம் போகவில்லை என்று கூறினாராம்". இவ்வாறு போகவில்லை என்று பிரமன் கூறியது புகையிலை என்று மறுவியதாக புராணக்கதை கூறுகிறதாம்.
ஆக, பதினைந்தாம் நூற்றாண்டில் கொலம்பசால் கண்டறியப்பட்ட புகையிலைக்கும் நம்மவர்கள் கட்டுக்கதையை அள்ளி விட்டுள்ளனர்.
புகையில மூடநம்பிக்கைகள்
16 ஆம் நூற்றாண்டுவாக்கில் புகையிலை ஒரு மருந்து பொருளாக கருதப்பட்டது. தலைவலி, நோய்த்தடுப்பு என பலவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டது. ஞாபக மறதிக்கு கூட புகையிலை பரிந்துரைக்கப்பட்டது. 1865 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் பிளேக் நோய் தாக்கிய போது புகையிலையும் மருந்தாக கொடுக்கப்பட்டது. இங்கிலாந்தின் கல்லூரிகளில் புகைபிடிக்காத மாணவர்களுக்கு கசையடி தண்டனைக்கூட அளிக்கப்பட்டது.
அக்காலத்தில் தமிழ்நாட்டிலும் புகைலை குறித்த மூடநம்பிக்கைகள் நிலவின. இசிவு நோய், வீக்கம், கரப்பான், கட்டி, பல்வலி, சொறி சிரங்கு, மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு புகையிலை பயன்படுத்தலாம் என்ற கருத்து இருந்துள்ளது.
புகையிலையின் தீமை கண்டுபிடிப்பு
சுமார் எட்டாயிரம் ஆண்டுகளாக தென் அமெரிக்க கண்டத்தில் மட்டுமே இருந்த புகையிலையை உலகின் மற்ற பகுதிகளுக்கு கொலம்பஸ் தான் அறிமுகப்படுத்தினார். அந்த வகையில் அவர் உலக மக்களுக்கு செய்த இரண்டாவது பெரும் கேடு என்று இதனை அழைக்கலாம் (முதலாவது பெரும்கேடு அமெரிக்காவை கண்டறிந்தது). கொலபஸ் ஐரோப்பாவுக்கு புகையிலையைக் கொண்டுவந்து 500 ஆண்டுகளில் அது உலகையே அடிமைப் படுத்திவிட்டது.
புகையிலை தீமையானதுதான் என்று பழங்காலத்திலேயே ஓரளவு உணர்ந்திருந்தனர். டச்சுக்காரர்கள் புகையிலையால் ஆண்மைக்குறைவு நேரும் எனக்கூறினர்.
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன அறிஞர் ஃபங்யாஷி என்பவர் புகையிலை நுரையீரலை சுரண்டும் என்று கூறினார்.
தமிழ்நாட்டிலும் புகையிலைக்கு எதிரான கருத்துகள் இருந்தன.
"மருந்தை முறித்து விடும் வாய் வறளச்செய்யும்
திருந்து பலவீனம் சேர்க்கும் - பொருந்து பித்தம்
உண்டாக்கும் விந்தழிக்கும் ஓது புகையிலைக்
கண்டார்க்கும் ஆகாது காண்"
எனும் அகத்தியர் குணபாட சூத்திரம் புகையிலைத் தீமையை விளக்குகிறது.
"புகையிலை காட்டுத்தீ போல் பரவி பாரத தேசத்தில் குமரி முதல் இமயம் வரை எங்கும் பரவிவிட்டது. இந்தியர்களின் ஆயுளையும், ஊக்கத்தையும், இரத்தத்தையும் கூற்றைப் போல உறிஞ்சி, ஆண்மையில்லாப் பேடிகளைப் போல் ஆட்டுவிக்கிறது. ஐயோ! பட்டணங்களில் பகலிலும் கொள்ளிவாய்ப் பிசாசு ஞாபகம் வந்துவிடுகிறது. நாட்டுப்புறத்திலும் இது புகுந்துவிட்டது. ஆங்கிலம் பயிலும் மாணவர்கள் 100 பேருக்கு 90 பேர் பையில் சிகரெட் பெட்டியும் நெருப்புப் பெட்டியும் இல்லாமலிரார். இதுதான் நாகரீகம், தற்கால அநாகரீகம்" என்கிறது 1926 ஆம் ஆண்டு வெளியான மாருதி எனும் இதழ்.
இப்படியெல்லம் இருந்தாலும் 1950 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் மருத்துவ அறிஞர் ரிச்சர்ட் டால் என்பவர்தான் முதன் முதலாக புகைப் பிடிப்பதால் நுரையீரல் புற்று நோய் வரும் என்பதை அறிவியல் பூர்வமாக மெய்ப்பித்தார்.
இப்போது புகையிலை தீமைகள் ஐயத்துக்கு இடமின்றி தெளிவாக்கப்பட்டுள்ளன. இது ஒவ்வொரு நாளும் 2500 இந்தியர்களைக் கொலை செய்கிறது.
2 கருத்துகள்:
good one
//கி.மு. 6000 ஆண்டுகள் வாக்கிலேயே தென் அமெரிக்க கண்டத்தில் புகையிலை காணப்பட்டதாகக் கருதப்படுகிறது//
"காணப்பட்டது"- என்பதிலும் பயன்பாடு அறியப்பட்டது எனக் கொள்ளலாமே!
பல அரிய தகவல்கள் நிரம்பிய பதிவு.
புகையிலை வகையில் " யாழ்ப்பணம்" என ஒரு வகை குறிப்பிட்டுள்ளீர்கள். இது இலங்கை யாழ்ப்பாண
வகையா? நாஞ்சில் நாடானின் கதையொன்றிலும் யாழ்ப்பாணப் புகையிலை எனக் குறிப்பிட்டு எழுதியதைப் படித்துள்ளேன்.யாழ்பாணத்திலும் "தாவடி" எனும் இடத்துப் புகையிலைக்கு மவுசு கூட.
இலங்கையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் , புகையிலை மென்னும் பழக்கமுடையோர் காரணம் இரத்தம் குடிக்கும் அட்டை தோட்டங்களில் அதிகம்; அவை கடித்தால் இலகுவில் அகற்றமுடியாது, ஆனால் அவற்றின் மேல் புகையிலை சப்பி உமிந்த எச்சிலைத் துப்பனால்
கழன்று விடும். இதற்கானவென புகையிலை மென்று பின் அதில் இருந்து விடுபடாமல் வாழ்வோர் அதிகம்.
இக் கேடு விளைவிக்கும் பழக்கத்தை நம் இளைஞர்கள் நாகரீகமெனும் போர்வையில் பின்பற்றுவது மிக வேடிக்கை.
கருத்துரையிடுக