Pages

சனி, செப்டம்பர் 15, 2012

வன்னியர் வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு - எங்கள் போராட்டம் எதற்காக?


இந்திய விடுதலைப்போரில் வன்னியர்களின் பங்களிப்பு மகத்தானது. மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டத்தில் முதன்முதலில் உயிர்ப்பலியானவர் சாமி நாகப்பன் படையாட்சி. அதன்பின்னர் ஆதிகேசவ நாயக்கர், அர்த்தநாரீச வர்மா, ஜமதக்னி, கடலூர் அஞ்சலையம்மாள் என எண்ணற்ற தியாகிகளை இந்திய விடுதலைப் போருக்கு தந்த சமூகம் வன்னிய சமூகமாகும்.

ஆனால், விடுதலை அடைந்த இந்தியாவில் வன்னியர் சமூகம் வஞ்சிக்கப்பட்ட சமூகமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிகவும் அடித்தட்டில் வாழும் சமுதாயமாகக் கருதப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை விட, வன்னியர்களின் நிலை மோசமாகிவிட்டது என்பதே இன்றைய உண்மை நிலை.

வன்னியர் - தமிழ்நாட்டின் மிகப்பெரிய தனிப்பெரும் சமுதாயம்

மக்கள்தொகை அடிப்படையில் வன்னியர் சமுதாயம்தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமுதாயமாகும். வடதமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றியைத் தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாக வன்னியர்களே உள்ளனர்.

வரலாற்றில் வன்னியர்கள் அரசர்களாகவும், போர் வீரர்களாகவும் இருந்துள்ளனர். வேளாண்மையிலும் வன்னியர்களின் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு வடதமிழ்நாடு முழுவதும் வன்னிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. தமிழ்நாட்டின் வட பகுதியின் ஏராளமான கிராமங்கள் வன்னியரின் உடைமையாகவே இருந்தன. இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

வன்னியர்கள் - உரிமை இழந்த சமுதாயம்

தமிழ்நாட்டின் பொருளாதார நிலையில் இப்போது மிக மிக பின் தங்கியுள்ள சமுதாயம் வன்னியர் சமுதாயம்தான். வறுமை நிலையில் முதலிடத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் வன்னியர் பகுதிகளே. வன்னியர் சமுதாயத்தினர் வாழும் வடக்கு மாவட்டங்கள் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியை விட மோசமான நிலையில் உள்ளன.

அதிக எண்ணிக்கையில் குடிசை வீடுகள் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் வன்னியர் பகுதிகள்தான். வன்னியர் பகுதிகளில் மக்கள்தொகையில் முக்கால் பங்கினர் கிராமங்களில் வசிக்கின்றனர். மற்ற பகுதிகளில் மக்கள்தொகையில் பாதியளவினர் மட்டுமே கிராமங்களில் உள்ளனர்.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு மற்ற தொழில்களுக்கு மாறிவிட்டனர். ஆனால், ஆணும், பெண்ணும் அன்றாடம் வயலில் உழைத்து இன்னமும் உணவு உற்பத்தியில் ஈடுபடும் சமுதாயம் வன்னியர் சமுதாயம் ஒன்றுதான்.

தமிழ்நாட்டில் கல்வி நிலையில் மிக மிக பின்தங்கியுள்ள சமுதாயம் வன்னியர் சமுதாயம்தான். விடுதலைக்குப் பின்னால் வந்த ஐம்பது ஆண்டு காலத்தில், வன்னியர் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் அதிகம் தொடங்கப்படவில்லை. பள்ளிகள் தனியார்மயமானதால் பாதிக்கப்பட்டதும் வன்னியர் சமுதாயம்தான். வன்னியர் வாழும் வடக்குப்பகுதிகளில் ஒரு பல்கலைக் கழகத்தைக் கூட அரசாங்கம் தொடங்கவில்லை.

இப்போது எழுத்தறிவிலும் கல்லாமையிலும் தமிழ்நாட்டின் மிக மிக பின்தங்கிய பகுதிகளாக வன்னியர் பகுதிகளே உள்ளன. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் கடைசி இடம் பிடிக்கும் மாவட்டங்கள் அனைத்தும் வன்னியர் பகுதிகளே.

தமிழ்நாடு அரசாங்கத்தின் உயர்பதவிகளில் இடம்பெறாத சமுதாயமாக வன்னியர்களே உள்ளனர். அரசு செயலாளர்கள், துறைத்தலைவர்கள், காவல்துறை உயர்பதவிகள் என எதிலும் வன்னியர்கள் உரிய எண்ணிக்கையில் இடம்பெறவில்லை.

நீதிமன்றப் பதவிகளில் வன்னியர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டுள்ளனர். சென்னை உயர்நீதி மன்றத்தின் 52 நீதிபதிகளில் 9 பேர் தேவர் வகுப்பினர், 9 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், 5  பேர் வெள்ளாளக் கவுண்டர்கள், 5 பேர் பிள்ளைமார் வகுப்பினர், 4 பேர் முதலியார் வகுப்பினர், 4 பேர் பார்ப்பன வகுப்பினர் உள்ளனர். ஆனால், தமிழ்நாட்டின் மிகப்பெரிய தனிப்பெரும் சமுதாயமான வன்னியர் சமுதாயத்தவர் ஒரே ஒருவர் மட்டுமே நீதிபதியாக உள்ளார்.

தமிழ்நாட்டின் 92 ஆண்டுகால வரலாற்றில் முதலமைச்சர்களாக 35 பேர் பதவி ஏற்றுள்ளனர். மலையாள மேனன் மூன்று முறையும், நாடார் மூன்று முறையும், இசை வேளாளர், அய்யங்கார் ஆகிய சமூகத்தவர் தலா ஐந்து முறையும் முதலமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். ஆனால், தனிப்பெரும் சமுதாயமான வன்னியர் ஒருவர் முதலமைச்சராக ஒரே ஒருமுறைக் கூட வரமுடியவில்லை. 

வன்னியர் - இடஒதுக்கீட்டு உரிமையை ஒருபோதும் பெறாத சமுதாயமும்

வன்னியர் சமுதாயத்தினருக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கை மிக நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. 1936 ஆம் ஆண்டு சென்னை இராஜதானி சட்டமன்ற கூட்டத்தில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று வன்னியர்கள் கோரிக்கை வைத்தனர். 1969 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட  தமிழ்நாடு அரசின் முதல் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு (சட்டநாதன் குழு) வன்னியர்களின் தனி இடஒதுக்கீட்டு கோரிக்கையை சுட்டிக்காட்டியது.

ஆனால், 1971 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவீதமாக கருணாநிதி உயர்த்தினார். 1980 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் அதனை 50 சதவீதமாக அதிகரித்தார். அப்போதெல்லாம் வன்னியர் தனி இடஒதுக்கீடு கோரிக்கையை அவர்கள் புறக்கணித்தனர்.
மருத்துவர் அய்யா அவர்கள் 1980 ஆம் ஆண்டு அமைத்த வன்னியர் சங்கம் ஒருநாள் சாலை மறியல், ஒருநாள் இரயில் மறியல் எனப்பல போராட்டங்களை நடத்தியது. அதையெல்லாம் அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. எனவே, 1987இல் 'ஒரு வாரகால சாலைமறியல் அறப்போராட்டம்' அறிவிக்கப்பட்டது. போராட்டத்தின் போது 21 பேர் காவல்துறையால் கொலை செய்யப்பட்டனர். ஒரு லட்சம் பேர் சிறை சென்றனர். பல்லாயிரம் பேர் வழக்குகளை சந்தித்தனர்.
வன்னிய சமுதாயத்தின் இந்த தியாகங்களின் விளைவாக 1989 ஆம் ஆண்டு 'மிகவும் பிற்படுத்தப்பட்டோர்' எனும் பிரிவு உருவாக்கப்பட்டது. அப்போதும் கூட வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்க மறுத்தார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. வன்னியர் சமுதாயத்துடன் சேர்த்து 107 சாதிகளுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. வன்னியர்களை விட வசதி வாய்ப்புகளில் முன்னேறியிருந்த பல சாதியினர் இப்பட்டியலில் திட்டமிட்டு சேர்க்கப்பட்டனர்.

மிகவும் பிற்பட்டோர் இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் வஞ்சிக்கப்பட்டதால், 20 சதவீத இடஒதுக்கீட்டில் பெரும்பகுதி மற்ற சாதிகளுக்கே போய்விடுகிறது. இன்றைய நிலையில் வெறும் 8 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே வன்னியர்களுக்கு கிடைக்கிறது.

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு இல்லாததால் வன்னியர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். தமிழ்நாட்டின் மற்ற எல்லா சாதியினரும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். ஒருசில சாதிகள் மிகப்பெரிய வளர்ச்சியையும் அடைந்துள்ளனர். ஆனால், வன்னியர் சமூகத்தினர் மட்டுமே கடைநிலையில் வறுமையிலும் கல்லாமையிலும் அதிகாரமற்ற நிலையிலும் உழன்று வருகின்றனர். இந்த அநீதி நிலை இனி ஒருகணமும் நீடிக்கக் கூடாது.

வன்னியர் தனி இடஒதுக்கீடு - ஓர் உடனடித் தேவை

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 15 (4), 16 (4) ஆகிய பிரிவுகளில் சமூக பொருளாதார நிலைகளில் பின்தங்கிய எந்த ஒரு வகுப்பினருக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் போதுமான இடஒதுக்கீட்டினை அளிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை ஒரே தொகுப்பாக பார்க்காமல், பின்தங்கிய நிலைக்கு ஏற்ப தனி இடஒதுக்கீடு அளிக்கலாம் என மண்டல் குழு வழக்கில் இந்திய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் நாட்டில் அருந்ததியினர் வகுப்பினருக்கும், இசுலாமிய வகுப்பினருக்கும் தனி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாட்டின் மற்ற எல்லா வகுப்பினரை விடவும் வன்னியர்கள் அதிகம் பின்தங்கி இருப்பதாலும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய தனிப்பெரும் சமுதாயமாக இருப்பதாலும் - இனியும் தாமதிக்காமல் வன்னியர் வகுப்பினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு உடனடியாக அளிக்கப்பட்டாக வேண்டும்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமுதாயமான வன்னியர்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லாதவரை தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக ஆகமுடியாது. தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக மாறவேண்டும் என்றால், தமிழ்நாட்டில் சமூகநீதி, ஜனநாயகம், மனித உரிமைகள் எல்லாம் காக்கப்பட வேண்டும் என்றால், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கட்டாயமாக அளிக்கப்பட்டே ஆகவேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியே செப்டம்பர் 17, 2012 அன்று "வன்னியர் தனி இடஒதுக்கீடு போராட்டம்" நடத்தப்படுகிறது.

வன்னியர் தனி இடஒதுக்கீடு எதற்காக? 12 பக்க கையேடு (இங்கே சொடுக்கவும்)

வன்னியர் தனி இடஒதுக்கீடு எதற்காக? 4 பக்க துண்டுப்பிரசுரம் (இங்கே சொடுக்கவும்)

1 கருத்து:

நன்னயம் சொன்னது…

அது சரி ஒடுக்கப்பட்ட வகுப்பினர் தான் வன்னியர் என்று நீங்கள் கதறுவதை கேட்கும் போது நமக்கும் பரிதாபமாக தான் இருக்கிறது. ஆனால் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தான் சாதி வெறி பிடித்து தறி கெட்டு அலைகிறார்கள்.
"சேலம் மாவட்டம் காடையாம் பட்டி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் சத்துணவுக்கூடங்களில் சமையல் பணியில் ஈடுபடும் தலித் பெண்கள், சாதி வெறியர் களால் சமூகப்புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். வன்னியர் ஆதிக்கம் நிறைந்த இந்த கிராமத்தில் தலித்பெண் சமைத்த மதிய உணவை சாப்பிடுவதை அவமானமாகக் கருதுகிறார்கள்."