ஏனேனில், நாம் ஒரு ஜனநாயக அமைப்பில் வாழ்கிறோம். இங்கு வாழ்வின் மிக அடிப்படையான அம்சம் அரசியல்தான். எப்படி மனிதன் காற்றும் நீரும் உணவும் இன்றி உயிர் வாழமுடியாதோ, அப்படியே அரசியல் இல்லாமல் ஜனநாயக நாடுகள் இருக்க முடியாது. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களது எண்ணம், கருத்து, நம்பிக்கை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அரசியல் இல்லாமல் நீங்கள் உயிர்வாழ இயலாது. 'நான் உண்டு, என் வேலை உண்டு' என்பதால் மட்டும் உங்கள் வாழ்க்கை நடந்து விடாது.
ஒருவினாடி கண்ணை மூடி சிந்தித்து பாருங்கள். தினமும் உணவு, தண்ணீர், மின்சாரம், வேலைக்கு போக போக்குவரத்து என வாழ்க்கையில் பலவிதமான தேவைகள் இருக்கின்றன. பிள்ளைகள் பள்ளிக்கு போகின்றனர். உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவ மனைகளுக்கு செல்கின்றீர். வீடு, சொத்து என்கிற வசதிகளை காத்து வைக்கிறீர்கள். வங்கிகளின் சேவைகளை பயன்படுத்துகின்றீர்கள். உங்களுக்கும் உடமைகளுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பு இருக்கும் என்று நம்புகிறீர்கள் - இப்படியாக அன்றாட வாழ்க்கை பலவிதமான சேவைகள் மற்றும் தேவைகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது அரசியல்தான்.
அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை. நாடு, அரசாங்கம், பொருளாதாரம், பாதுகாப்பு, அடிப்படை உரிமைகள் என எல்லாமும் அரசியல் கட்சிகள் எனும் அச்சாணியின் மீதுதான் இயங்குகின்றன. இந்த உணமையை உணராமல் எல்லோரும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்கிறோம். அரசியல் என்பது சாக்கடை என்று சொல்வீர்கள் என்றால், அதையே நம்பி வாழும் மானிட சமுதாயத்தை என்னவென்று சொல்வது?
அரசியலே உலகின் மிக உன்னதமான கண்டுபிடிப்பு
மனிதன் உருவாக்கிய எல்லாவிதமான கருத்துகளிலும் மிக உன்னதமானது, உயர்வானது அரசியல்தான். அரசியல் வாழ்வில் பங்கெடுக்கும் போதுதான் மனிதன் முழுமை அடைகிறான் என்று சொன்னார் அறிஞர் அரிஸ்டாட்டில்.
முட்டாள் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்லான 'இடியட்' (idiot) என்பதன் பொருள் 'பொதுநலனில் அக்கறை இல்லாதவர், அரசியலில் அக்கறை இல்லாதவர்' என்பதாகும் (having bad judgment in public and political matters). பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் 'யார் ஆட்சி செய்தால் எனக்கென்ன?' என்று அரசியலில் ஆர்வம் இல்லாதவர்களாகவும் அரசியல்வாதிகளைக் குறைசொல்பவர்களாகவும் மட்டுமே இருப்பது உண்மையானால், இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது! இந்த அவலநிலை 2013 ஆம் ஆண்டில் மாற வேண்டும்.
அரசியல் கனவுகள் மிகப்பெரியவை
தமிழ்நாட்டின் அரசியல் நலமாக அமைந்தால்தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். பெற்றோர் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்க நினைப்பதை விட, தமிழ்நாட்டு அரசியல் சூழல் நலமாக அமைய வேண்டும் என்று நினைக்க வேண்டியது மிகமிக முக்கியமாகும்.
சராசரி மனிதர்களை விட அரசியல் கட்சிகளில் பங்கெடுப்போர் ஒரு படி மேலானவர்களே. ஏனெனில், அவர்கள் 'தான், தனது' என்கிற சிந்தனை ஒருபக்கம் இருக்கும் போது - அதையும் தாண்டி 'நாம், நமது' என்கிற நிலைபாட்டுக்கு வருகின்றனர். அரசியல் இயக்கங்கள் என்பவை அடிப்படையில் மிக உன்னதமானவை. ஏனெனில், அவை பல்லாயிரக்கணக்கான தனிநபர்களின் 'நாம், நமது' என்கிற பொது சிந்தனைக்கு செயல் வடிவம் அளிக்கின்றன.
ஆனால், எங்கோ ஒரு தடுமாற்றம், ஏதோ ஒரு குளறுபடி இத்தகைய நல்ல நோக்கத்தை சிதைத்து விடுகிறது. புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் விபத்தில் சிக்கி உயிரழப்பது போன்று உன்னதமான அரசியலே சில நேரத்தில் சீரழிவுக்கும் காரணமாகிவிடுகிறது. இந்த அவலச் சூழலுக்கு முடிவு கட்ட முயற்சிக்க வேண்டும்.
தமிழக அரசியலில் தேவைப்படும் மாபெரும் மாற்றம்.
தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியலை உருவாக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும். அதற்காக 1. அரசியலில் கட்சிகளுக்கிடையே நல்லுறவு, 2. கட்சிகளுக்குள் ஜனநாயகம், 3. அரசியலில் பண ஆதிக்கத்தை ஒழித்தல் ஆகிய குறைந்தபட்ச தேவைகளை அரசியல் கட்சிகள் ஏற்பதும், அதனை தமிழக மக்கள் வலியுறுத்துவதும் அவசியமாகும்.
1. அரசியலில் கட்சிகளுக்கிடையே நல்லுறவு
ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது என்பது கட்சிகளின் ஒற்றை இலக்காக இருந்தாலும் அதைவிட மேலானதாக நாட்டின் நலனும் நாட்டு மக்களின் நலனும் இருக்கிறது. நாட்டிற்கும் மக்களுக்கும் என்ன தேவை என்பதை மக்கள் தாமாகத் தீர்மானிப்பது இல்லை. கட்சிகளுக்கு இடையேயான போட்டி மற்றும் கருத்து மோதல்களின் விளைவாகவே சட்டங்கள் உருவாகின்றன, செயல்படுத்தப்படுகின்றன.
போட்டியும் கருத்து மோதலும் ஜனநாயகத்தின் அடிப்படை. ஒவ்வொரு கட்சிக்கு பின்னாலும் ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது. ஒவ்வொரு குழுவுக்கு என்றும் தனிப்பட்ட கருத்து, விருப்பம், நம்பிக்கை இருக்க முடியும். அந்த உணர்வுகளுக்கும் உரிமைக்கும் மதிப்பளிக்க வேண்டும். வேறுபாடுகள் பகையாக மாறக்கூடாது. கட்சிகள் ஒன்றை ஒன்று எதிரிகளாகப் பார்க்கும் மனோநிலை முற்றிலுமாக மாற வேண்டும்.
மாறுபட்ட கருத்துகள் வெளிப்படையாகவும் பயமின்றியும் விவாதிக்கப்படுவதற்கான சூழல் இருந்தால் மட்டுமே நல்லுறவு சாத்தியமாகும். ஒருவரின் அடிமையாக இன்னொருவர் இருப்பதோ, ஒருவரைக் கண்டு மற்றவர் பயம்கொண்டு வாழ்வதோ நல்லிணக்கம் ஆகாது - உன்னுடையக கருத்தை நான் ஏற்காவிட்டாலும் அந்தக் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை நான் ஏற்கிறேன் என்கிற நிலையில் மட்டுமே நல்லிணக்கம் சாத்தியமாகும்.
அரசியல் விமர்சனங்கள் தனிநபர் தாக்குதலாக மாறக்கூடாது. அத்தகைய ஒரு நல்லசூழல் தமிழ் நாட்டில் வரவேண்டும். அதற்கு முதற்படியாக பிறந்தநாள், திருமணம், முக்கிய நாட்கள் போன்ற நிகழ்வுகளின் அடிப்படையிலாவது, எதிர் எதிர் நிலைகளில் உள்ள தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, கலந்து பேச முன்வர வேண்டும். மக்களிடையே உள்ள அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு கட்சிகளுக்கிடையேயான கருத்து பரிமாற்றங்கள் மூலம் தீர்வு காண முடியும்.
2. கட்சிகளுக்குள் ஜனநாயகம்
"எல்லா கட்சிகளிலும் தலைவர் வைத்ததே சட்டம். தொண்டர்கள் கருத்துக்கோ, பொதுமக்கள் விருப்பத்திற்கோ இடமே இல்லை" என்கிற ஒரு நிலை தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் முதலாளித்துவக் கட்சிகள் என்று விமர்சிக்கப்படுகின்றன. இன்னும் ஒருபடி மேலே போய், மன்னராட்சி மனோபாவத்திலிருந்து தமிழகக் கட்சிகள் மாறவில்லை என்கிற கருத்து உள்ளது.
இதற்கு கட்சித் தலைமையை மட்டும் குறை சொல்ல முடியாது. மக்களும் தொண்டர்களும் அப்படித்தான் உள்ளனர். இங்கு யாரும் கட்சி என்கிற அமைப்பையோ, கொள்கையையோ பார்ப்பது இல்லை. தலைவரைத்தான் பார்க்கின்றனர். அதுவும் முற்காலத்தின் மன்னர்களின் வழியிலும் தற்போது திரைப்பட கதாநாயகர்கள் வடிவிலும் தலைவர்கள் பார்க்கப்படுகின்றனர்.
ஈழப்போரில் தேசியத்தலைவர் பிரபாகரனை யாரும் தலைவராகப் பார்க்கவில்லை. கதாநாயகராகத்தான் பார்த்தனர். எனவேதான், இறுதிப் போரின் போது 'கதாநாயகன்தான் வெற்றி பெறப்போகிறார், நாம் நம் வேலையைப் பார்ப்போம்' என்று இருந்துவிட்டனர். உண்மையான போராட்டத்திற்கும் திரைப்படத்துக்குமான வேறுபாடு கூட தமிழ் சமூகத்திற்கு தெரியவில்லை.
தமிழ்நாட்டில் கட்சிகளின் கொள்கைகளை தீர்மானிப்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. பொதுமக்களோ அல்லது பொதுமக்கள் சார்பிலான குடிமைச்சமூக அமைப்புகளோ மக்களின் வாழ்வை பாதிக்கும் சிக்கல்கள் குறித்த விவாதங்களை, ஆலோசனைகளை முன்வைக்கின்றனரா என்றால் இல்லவே இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.
எனவே, மிகச்சில அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டின் எல்லா மக்களுக்காகவும் யோசிக்கவும், தமது வட்டாரத்திற்குள் விவாதிக்கவும், முடிவெடுக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்றே கருத வேண்டியுள்ளது. தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து தீர்மானிப்பதில் மக்களுக்கு அக்கறையில்லாத சூழலில் - கட்சிகளும் ஜனநாயகமற்ற அமைப்புகளாக விளங்குவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
இந்த நிலை மாற வேண்டும். அரசியல் கட்சிகளுக்குள் கீழிருந்து மேலாக - முழுமையான சனநாயக முறையில் படிப்படியாக கட்சி நிருவாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவதும், கட்சியின் அனைத்து மட்டத்திலும் கட்சியின் கொள்கைகள் விவாதிக்கப்படுவதும் அவசியமானதாகும். அவ்வாறே, கட்சிகளின் நிலைபாடுகள் குறித்து பொதுமக்களும் அக்கறை காட்டும் ஒரு வளர்ந்த சமூகமாக தமிழ்நாடு மாற வேண்டும்.
3. அரசியலில் பண ஆதிக்கத்தை ஒழித்தல்
இந்திய அரசியலிலும் தமிழ்நாட்டு அரசியலிலும் ஊழல் முக்கியமான சிக்கலாகப் பார்க்கப்படுகிறது. பிரதானக் கட்சிகளின் தேர்தல் தோல்விகளுக்கு ஊழல் முக்கியக் காரணமாக உள்ளது. ஆனாலும், அரசியல் கட்சிகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையேயான பண உறவுதான் ஊழலுக்கான மிகப்பெரிய பின்னணி என்பதை முன்வைத்துப் போராட ஒருவரும் முன்வரவில்லை. குறிப்பாக "அரசியல் நிதியளிப்பு" குறித்துப் பேச எவரும் தயாராக இல்லை.
அரசியலில் பணம் என்பதுதான் இந்தியாவின் புற்றுநோய். ஊழல், நிருவாகச் சீர்கேடு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு, வளர்ச்சியின்மை, சுற்றுச்சூழல் பாதிப்பு, வறுமை என எந்தக் கேட்டினை எடுத்துக்கொண்டாலும் அதன் ஆரம்பமாக இருப்பது அரசியலுக்கும் பணத்துக்குமான உறவுதான். குறிப்பாக, பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையேயான கள்ள உறவுதான் நாட்டைப் பாதிக்கும் பெரும் கேடு. இதற்கு முடிவு கட்டாவிட்டால் நாட்டின் எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வு காண்பது சாத்தியமே இல்லை.
எனவே, பணத்தின் அடிப்படையில் சட்டங்கள் உருவாவதும், செயலாக்கப்படுவதும், நிருவாக இயந்திரம் பணத்திற்காக பணிந்து போவதும் ஒரேயடியாக ஒழித்துக்கட்டப்பட வேண்டும். அரசியல் கட்சிகளுக்கான வருமானம் மற்றும் செலவுகள் குறித்து வெளிப்படைத் தன்மை வேண்டும். இதுவே, நாட்டுக்கும் சனநாயகத்துக்கும் மிக முக்கியமானத் தேவை ஆகும். கூடவே, தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், கட்சித் தொண்டர்களுக்கு பூத் செலவுக்காக பணம் கொடுப்பதும் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்பட வேண்டும்.
- ஆக, 2013 ஆம் ஆண்டில் ஜனநாயகத்தின் குறைந்தபட்ச தேவைகளான - அரசியலில் கட்சிகளுக்கிடையே நல்லுறவு, கட்சிகளுக்குள் ஜனநாயகம், அரசியலில் பண ஆதிக்கத்தை ஒழித்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு சிறிதளவாவது முன்னேற வேண்டும் என்பதே நமது புத்தாண்டுக் கனவாக இருக்கட்டும்.
இது சாத்தியம் தானா என்று நீங்கள் நினைக்கலாம். மாபெரும் சாதனைகள், அவை சாதிக்கப்படும் வரை சாத்தியமற்றவை என்றே கருதப்படுகின்றன.
5 கருத்துகள்:
"இது சாத்தியம் தானா என்று நீங்கள் நினைக்கலாம். மாபெரும் சாதனைகள், அவை சாதிக்கப்படும் வரை சாத்தியமற்றவை என்றே கருதப்படுகின்றன"
உண்மை நீங்கள் கூறியிருக்கும் சிந்தனைகள் யாவும் நிதர்சனமான உண்மை!
அரசியலின்றி நாட்டில் எந்த பொதுநல அமைப்பும் செய்லபடமுடியாது! பிறகு எப்படி மக்கள் பலன் பெறுவார்கள்? ஆதலால் அரசியல் சாக்கடை என்பது தவறான மற்றும் முட்டாள்தனமான கருத்தென்பதில் எந்தவித மாற்றமுமில்லை!
வழமான தமிழகம் காண ஏங்குகிறேன்...
கனவு மெய்பட உழைப்போம்...
இது சாத்தியம் தானா என்று நீங்கள் நினைக்கலாம். மாபெரும் சாதனைகள், அவை சாதிக்கப்படும் வரை சாத்தியமற்றவை என்றே கருதப்படுகின்றன.
உண்மை..
கண்டிப்பா நம் அனைவரின் கனவும் நிச்சயம் நிறைவேறும் என நம்புவோம்......
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
மக்களை அரசியல்மய படுத்தும் வரை இது சாத்தியமற்றது.மக்களை அரசியலுக்கு கொண்டு வருவது சாத்தியம், அது முதல் படியில் உள்ள பொறுப்பாளர்கள் தொடங்கி மேல்மட்ட தலைவர்கள் வரை தங்களின் கொள்கைகளில் ஒருமித்த சரியான புரிதலை கொண்டுள்ளதை பொறுத்தே அமையும்
கருத்துரையிடுக