Pages

வெள்ளி, ஏப்ரல் 26, 2013

"மரக்காணம் துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம்: கொலையாளிகளை கைது செய்ய வேண்டும்"  

"மரக்காணம் துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம்: கொலையாளிகளை கைது செய்ய வேண்டும்" - மருத்துவர் இராமதாசு அறிக்கை

"மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்ற வந்தவர்கள் மீது கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள மரக்காணம் என்ற இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கும்பல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது. இத் தாக்குதலில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர். இதுதவிர, காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

சித்திரை முழுநிலவு பெருவிழா வன்னியர்களின் வலிமையை பறைசாற்றும் வகையில் அமையும் என்பதால், இந்த விழாவை நடத்த விடக் கூடாது என்பதற்காக பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. வன்முறையை நடத்துவதையே பிழைப்பாகக் கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கும்பலின் தலைவரும் இந்த மாநாட்டிற்கு வரும் வன்னிய மக்கள் மீது தாக்குதல் நடத்தும்படி கடந்த ஒரு வாரமாக அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் மூலமாக தூண்டி வந்தார். இந்த பின்னணியில் தான் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் மரக்காணம் பகுதியில் வன்னியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

மாமல்லபுரம் விழாவில் பங்கேற்பதற்காக வந்த மத்திய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மரக்காணம் அருகே சாலையோர நிழலில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அந்தப்பகுதியில் தாழ்த்தப் பட்ட மக்கள் அதிகம் வாழ்கிறார்கள் என்பதோ அல்லது கடந்த 2002-ஆம் ஆண்டில் அந்த பகுதியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையில் வன்னியர் இருவர் படுகொலை செய்யப்பட்டனர் என்ற உண்மையோ வெளியூரிலிருந்து வந்த அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர், அவர்களை வம்புக்கு இழுத்து தாக்கியுள்ளனர்.

அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த இன்னொரு கும்பலும் உருட்டுக்கட்டை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொடூரமான தாக்குதலை நடத்தியதுடன், அந்த வழியே வந்து கொண்டிருந்த வன்னியர்களின் வாகனங்களையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். அதேபோல் டி.என் 33- ஜே 9966 என்ற பதிவு எண் கொண்ட இரு சக்கர ஊர்தியில் வந்த சிலர் புதுப்பட்டு அய்யனார் கோவில் அருகே மாநாட்டுக்கு வந்தவர்களின் வாகனங்களை மறித்து, மரக்காணம் அருகே தாக்குதல் நடத்தப்போவதாக கூறியுள்ளனர்.

அந்த கும்பலை சேர்ந்தவர்களில் இன்னொரு பிரிவினர் அரசுப் பேரூந்துகள் உள்ளிட்ட 6 வாகனங்களை, பத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகளையும் தீயிட்டு கொளுத்தி விட்டு, அந்தப் பழியை மாநாட்டிற்கு வந்த அப்பாவிகள் மீது போட்டுள்ளனர். அவ்வழியே வந்தவர்கள் அனைவரும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு மரக்காணம் பகுதியை பற்றியோ, அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளைப் பற்றியோ எதுவுமே தெரியாது. அவ்வாறு தெரிந்திருந்தால் அவர்கள் அங்கு நின்றிருக்கவும் மாட்டார்கள்; வன்முறை கும்பலின் தாக்குதலுக்கும் ஆளாகியிருக்க மாட்டார்கள். 

ஆனால், திட்டமிட்டு தாக்குதலை நடத்திய கும்பல் பழியை அப்பாவிகள் மீது போட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலைமறியலிலும் ஈடுபட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலைமை கட்டுப்படுத்தாமல், வெளியூரிலிருந்து மாநாட்டிற்காக வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் வீரமணி, ஞானவேலு, சீனு, ஏகாம்பரம் ஆகிய 4 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, வன்முறை கும்பலின் கொலைவெறித் தாக்குதலில் கூனிமேடு என்ற இடத்தில் காயமடைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விவேக் என்ற இளைஞரும், கழிக்குப்பம் என்ற இடத்தில் காயமுற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற இளைஞரும் உயிரிழந்துவிட்டனர். ஆனால், இவர்கள் விபத்தில் இறந்ததாகக் கூறி வழக்கை முடித்து, வன்முறையாளர்களைக் காப்பாற்ற காவல்துறை முயல்கிறது.

இந்த வன்முறைகள் அனைத்தும் விடுதலைச் சிறுத்தைகள் கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருகிறது. அந்த கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமஜெயம் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தான் இதற்கான சதித்திட்டம் கடந்த சில நாட்களாக தீட்டப்பட்டிருக்கிறது. கடந்த 2002-ஆம் ஆண்டிலும் இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சதித் திட்டம் தீட்டப்பட்டு , அதன் அடிப்படையில் மாமல்லபுரம் விழாவுக்கு வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மகிழுந்து ஒன்று கொளுத்தப்பட்டு, அதிலிருந்த இருவர் கொல்லப்பட்டனர்.

இப்போதும் அங்கு தயாரிக்கப்பட்ட பெட்ரோல் குண்டுகளைக் கொண்டு தான் வாகனங்களும், குடிசைகளும் எரிக்கப்பட்டிருக்கின்றன. வன்முறை கும்பல் சதித் திட்டம் தீட்டுவதை அறிந்த அப்பகுதி பா.ம.க. நிர்வாகிகள் இதுபற்றி காவல்துறை உயரதிகாரிகளிடம் கூறி போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி கோரியுள்ளனர்.

அதனடிப்படையில் காவல் துறை நடவடிக்கை எடுத்திருந்தால் மரக்காணம் பகுதியில் சிறு சலசலப்பு கூட ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம். ஆனால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டிருக்கிறார். பதற்றமான அந்தப் பகுதியில் வெறும் இரண்டு காவலர்களை மட்டுமே பாதுகாப்புக்கு நிறுத்தியிருக்கிறார். 10 பேருக்கும் குறைவான கும்பல் சாலை மறியலில் ஈடுபட்டபோது கூட , காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, அவர்களை அப்புறப்படுத்தி காவல்துறை பாதுகாப்புடன் மாநாட்டு வாகனங்களை தொடர்ந்து செல்ல அனுமதித்திருந்தால், பெரிய அளவில் வன்முறையோ அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலையோ ஏற்பட்டிருக்காது. 

ஆனால், அவ்வாறு செய்யாமல் காவிரி பாசன மாவட்டங்களில் இருந்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பியதும், நிலைமையை சரியாக கையாளாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் கடுமையாக கண்டிக்கத் தக்கது.

சுருக்கமாக சொல்லவேண்டுமானால், மரக்காணம் கலவரத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கும்பல் ஒரு காரணம் என்றால், அதுபற்றி தெரிந்திருந்தும் அதை தடுக்காமலும், நிலைமையை சரியாக கையாளாமலும் துணை போன விழுப்புரம் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் தான் இன்னொரு காரணம் . இந்த வன்முறைகள் குறித்தும், இதை காவல்துறை கையாண்ட விதம் குறித்தும் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநாட்டிற்கு வந்த அப்பாவிகள் இருவரை அடித்துக் கொன்றதுடன், பொதுச்சொத்துக்களுக்கும், குடிசை வீடுகளுக்கும் தீ வைத்து, அப்பழியை பா.ம.க.வினர் மீது போட்ட விடுதலை சிறுத்தைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக, எந்த தவறும் செய்யாத பா.ம.க.வினர் 1050 பேர் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."

2 கருத்துகள்:

rajah சொன்னது…

அணைத்து பத்திரிகைகளிலும் பாமக வினர் தான் வன்முறை செய்தது போன்றும் அதையெல்லாம் இவர்கள் நேரில் பார்த்தது போன்றும் கட்டுரை எழுது கின்றனர் .நாம் வன்முறையை தூண்டினால் நமக்கு எப்படி உயிரிழப்பு வரும் வன்னியர்களின் பொறுமையை சோதிக்கிரார்கள் வேண்டாம் விட்டுவிடுங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு..

rajah சொன்னது…

உயிரளந்தவர்களின் குடும்பதிற்கு தயவு செய்து உங்களால் முடிந்த இழப்பீடு தருமாறு கெட்டு கொள்கிறேன் ..உயிர் விலைமதிப்பற்றது .