Pages

செவ்வாய், ஏப்ரல் 30, 2013

மரக்காணம்: காவல்துறையின் கட்டுக்கதையை நம்ப வேண்டாம் - தமிழக அரசே, நீதி விசாரணை நடத்து!

காவல்துறையின் கட்டுக்கதையை நம்ப வேண்டாம்: நீதி விசாரணை நடத்துக! - மருத்துவர் இராமதாசு அறிக்கை: "மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்க வந்த பா.ம.க. தொண்டர்கள் மீது மரக்காணம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு நடத்திய கொலைவெறித் தாக்குதல் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவனஈர்ப்புதீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன்மீது விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் அவர்கள் மரக்காணம் பகுதியில் நடந்தது என்ன? என்பதை அறியாமல் நடந்த வன்முறைகளுக்கு எல்லாம் வன்னிய சமுதாயத்தினர் தான் காரணம் என்பதைப் போல குற்றஞ்சாற்றியிருக்கிறார்.

மரக்காணத்தில் நடந்தது என்ன? வன்முறையை தூண்டி, அரங்கேற்றியவர்கள் யார்? என்பதை எல்லாம் விசாரித்து உண்மை என்ன என்பதைக் கண்டறிந்து, அதை சட்டப்பேரவை மூலமாக மாநில மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய முதலமைச்சர் அவர்கள், காவல்துறையினர் அளித்த கட்டுக்கதை களின் தொகுப்பான அறிக்கையை அப்படியே வாசித்திருப்பது மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

மரக்காணம் வன்முறைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் முதல் காரணம் என்றால், அவர்களுக்கு துணை போன விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் தான் அடுத்த காரணம் என்று ஆரம்பத்திலிருந்தே நான் கூறி வருகிறேன். மாநாட்டிற்கு வரும் வன்னியர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்த வேண்டும் என்று மரக்காணத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், மற்ற கட்சிகளைச் சேர்ந்த தலித் நிர்வாகிகளும் சதித் திட்டம் தீட்டியிருந்தனர். 

இதை அறிந்த அப்பகுதி பா.ம.க.வினர், தாக்குதலைத் தடுக்க பாதுகாப்பை வலுப்படுத்தும்படி காவல்துறை உயரதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்திருந்தால் சிறு வன்முறை கூட ஏற்படாமல் தடுத்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறி விட்ட காவல்துறையினர் வெறும் 2 காவலர்களை மட்டுமே பாதுகாப்புக்கு நிறுத்தியது தான் வன்முறைக்கு வழி ஏற்படுத்தியது.

மரக்காணத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது, அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி, மாநாட்டிற்கு வந்த வாகனங்களை தொடர்ந்து செல்ல அனுமதித்து இருந்தால் நிலைமை சீரடைந்திருக்கும். ஆனால் காவல் துறை கண்காணிப்பாளரோ தலித்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டு,  மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை திருப்பி அனுப்பினார்.

அது தான் வன்னியர்களின் வாகனங்கள் அதிக அளவில் தாக்கப்படுவதற்கும், அரசு பேரூந்துகள் விடுதலை சிறுத்தைகளால் தீயிட்டு எரிக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்தது. கும்பகோணம் விவேக், அரியலூர் செல்வராஜ் ஆகிய இரு வன்னியர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் செல்வராஜ் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்த போதும், அவர்களின் மரணத்தை கொலை என்று பதிவு செய்யாமல், விபத்து என காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் கூறியவாறு, மரக்காணத்தில் 200&க்கும் மேற்பட்ட தலித்துகள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர் - சாலையில் கற்களையும், கட்டைகளையும் போட்டு பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். மரக்காணம் கலவரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எண்ணற்ற குற்றங்களை செய்திருக்கும்போதிலும்,  முதலமைச்சர் அவர்களே ஒப்புக்கொண்டுள்ள இந்த குற்றத்திற்காகக் கூட அவர்கள் மீது வழக்குத் தொடரப்படவில்லை; ஆனால், எந்தத் தவறும் செய்யாத வன்னியர்கள் மீது 1500 க்கும் அதிகமான வழக்குகள் தொடரப் பட்டுள்ளன.

இதற்கெல்லாம் மரக்காணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பணியாற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் துணை போயிருக்கினறனர். இவ்வாறு தொடக்கம் முதலே விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு சாதகமாகவும், கடமை தவறியும் செயல்பட்ட காவல்துறையினர் தான் தங்களது தவறுகளை மறைப்பதற்காக முழுக்க முழுக்க வன்னிய மக்கள் மீது பழிசுமத்தி அறிக்கை தயாரித்துக் கொடுத்துள்ளனர்.  காவல்துறை அளித்த அறிக்கையை முதலமைச்சர் அவர்களும் அப்படியே படித்திருக்கிறார்.  மரக்காணம் வன்முறைக்கு காவல்துறையினரும் ஒரு முக்கிய காரணம் என்று நான் குற்றம் சாட்டி வரும் நிலையில், அவர்கள் தரப்பு வாதத்தையே பொது நியாயமாக முன்வைக்க முதலமைச்சர் முயல்வது சரியல்ல.
மரக்காணம் பகுதியில் நடந்தது என்ன என்பதை நடுநிலையான காவல்துறை உயரதிகாரிகளைக் கொண்டோ அல்லது வேறு ஆதாரங்களின் மூலமாகவோ முதலமைச்சர் அவர்கள் விசாரித்திருந்தால் உண்மை வெளிவந்திருக்கும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியதன் மூலம் வன்னிய மக்கள் மீது அவரையும் அறியாமலேயே பெரும் பழியை சுமத்தியிருக்கிறார். இப்போதும் காலம் கடந்து விடவில்லை. நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போன்று மரக்காணம் கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கும், கலவரத்தின் பின்னணி குறித்து பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணைக்கும் ஆணையிட்டால், அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வர முடியும். 

மரக்காணம் கலவரத்தில் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், நிவாரணமும் கிடைக்க வேண்டும் என்ற அக்கறை முதலமைச்சர் அவர்களுக்கு இருந்தால், உடனடியாக இதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

கருத்துகள் இல்லை: