Pages

வியாழன், ஏப்ரல் 04, 2013

சாதனை முக்கியமல்ல: சாதிதான் முக்கியம் - தமிழ் பத்திரிகைகளால் மறைக்கப்பட்ட மாபெரும் சாதனை

தமிழ் நாட்டில் எந்த ஒரு அரசியல் தலைவரும் 'அவர் எத்தகைய போராட்டங்களை செய்கிறார்? அவர் முன்வைக்கும் கொள்கை என்ன? அவரது தியாகம், உழைப்பு என்ன?' என்கிற வரலாற்றின் அடிப்படையிலோ அல்லது 'அவரால் கிடைத்த நல்ல மாற்றங்களைக் கொண்டோ' அளவிடப்படுவது இல்லை. 

அதிலும் குறிப்பாக - தமிழ்நாட்டு ஊடகங்கள் அத்தகைய பின்னணியையோ சாதனையையோ கருத்தில் கொண்டு செய்திகளை வெளியிடுவது இல்லை. அவர் எந்த அளவுக்கு மக்கள் ஆதரவை பெற்றவர் என்பதைக் கூட கணக்கில் கொள்வது இல்லை.

தமிழ் ஊடகங்களில் கிடைக்கும் வெளிச்சமும், பொதுவானவர்கள் என்று தமக்குத் தாமே சான்று அளித்துக் கொள்கிற 'அருவிகளின்' பாராட்டும் ஒருவருக்கு கிடைக்க வேண்டும் என்றால் - அதற்கு சாதிதான் அடிப்படை.

ஒருவர் பிறந்த சாதியின் அடிப்படையில்தான் இங்கு பொது விளம்பரமும் பொதுவானவர்களின் பாராட்டும் கிடைக்கிறது. குறிப்பிட்ட சில சாதியில் பிறந்தவர்களின் சின்னச்சின்ன நிகழ்ச்சிகளுக்கு கூட அளவுக்கதிகமான விளம்பரம் கிடைக்கும். மற்ற சில சாதிகளில் பிறந்தவர்களின் மாபெரும் சாதனைகள் இருட்டுடடிக்கப்படும். அதற்கான ஒரு உதாரணம் இதோ:

மது ஒழிப்பு: மருத்துவர் இராமதாசு அவர்களின் மாபெரும் சாதனை!

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்டுள்ள 'வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவை' அமைப்பின் சார்பில் அதன் தலைவர் க. பாலு தொடர்ந்த பொதுநல வழக்கில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை பிரப்பித்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.

சாலை விபத்திலும் சாராய விற்பனையிலும் முன்னணியில் உள்ள தமிழ்நாட்டில், மிகப் பெரும்பான்மையான சாலை விபத்துகளுக்கு மதுபானமே காரணமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் நடைபெறும் மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றிருப்பதற்கு நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் தான் காரணம் என்பதால், அவற்றை மூடும்படி ஆணையிடக் கோரி 'வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவை' சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. மதுக்கடைகளை அகற்றுவதற்கு கூடுதல் கால அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள்,  மார்ச் 31 ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 மதுக்கடைகளும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 க்கும் அதிகமான மதுக்கடைகளும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. 

தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன?

உலகிலேயே மதுவைத் திணிக்கும் ஒரே அரசாங்கம் தமிழ்நாடு அரசுதான். 2003 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு மதுவால் கிடைத்த வருமானம் 2,800 கோடி ரூபாய். இப்போது இது 21,000 கோடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் வருவாயில் மதுபான வருவாய் மட்டும் 30% ஆகும்.

உலகிலேயே அதிக சாலை விபத்து நடக்கும் நாடு இந்தியா. இந்தியாவில் அதிக விபத்து நிகழும் மாநிலம் தமிழ்நாடு. 60% சாலை விபத்திற்கு குடிப்பழக்கம் காரணம். தமிழ்நாட்டில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 66,300 பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் மட்டும் விபத்தில் இறந்துள்ளனர். இதில் குடிக்காதோரும் அடக்கம்.
இந்தியாவிலேயே, விதவைகள் மிக அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. மக்கள் தொகையில் 9% பேர் விதவை அல்லது கணவனால் கைவிடப்பட்டவர்கள். இதற்கும் குடியே முதன்மைக் காரணம். தமிழ்நாட்டில் தந்தையின் குடியால் 5 லட்சம் குழந்தைகள் அனாதைகளாகக் கைவிடப்பட்டுள்ளனர்.

உலகிலேயே அதிக தற்கொலை நடக்கும் நாடு இந்தியா, இந்தியாவில் இரண்டாவது இடம் தமிழ்நாட்டிற்கு. தற்கொலைக்கும் குடிப்பழக்கம் முதன்மைக் காரணமாகும்.

இவ்வாறு தீமைகளின் தாயாக இருக்கும் மதுபானக் கேட்டினை எதிர்த்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார் மருத்துவர் அய்யா.

உலக சுகாதார நிறுவனத்தின் கொள்கையை செயலாக்கும் மருத்துவர் அய்யா

2010 ஆம் ஆண்டு மே மாததில் "தீங்கான மதுப்பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தி" (Global strategy to reduce harmful use of alcohol) எனும் தீர்மானத்தை உலக நலவாழ்வு அமைப்பு நிறைவேற்றியது. வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்மானத்தின் மூலமாக மதுபானத் தீமையைக் குறைப்பது என்ற அதிகாரப்பூர்வமான நிலைபாட்டை உலகநாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.

இத்தீர்மானத்தின் படி "குடித்துவிட்டு வாகனம் ஒட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும்"  (drink-driving policies and countermeasures) மற்றும் "மதுபானம் கிடைக்கும் இடங்களைக் குறைக்க வேண்டும்"  (availability of alcohol)  என்பது முதன்மையான நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாபெரும் நோக்கங்களுமே தமிழ்நாட்டில் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் இப்போது சாத்தியமாகியுள்ளது.

ஊடகங்களின் இருட்டடிப்பு

ஆளுக்கு ஏற்ப செய்தி வெளியிடுவதில் தமிழ்நாட்டின் செய்தி ஊடகங்கள் முன்னிலையில் உள்ளன. சாதாரண விடயங்கள் குன்றின் மேல் ஏற்றப்பட்ட விளக்காகும் போது மாபெரும் சாதனைகள் குடத்திலிட்ட விளக்காக மறைக்கப்படுகின்றன. மதுபானத்திற்கு எதிரான சிலரது சாதாரண போராட்டங்கள் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாகும் போது - மருத்துவர் அய்யா அவர்களின் "நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடும் சாதனை" ஊடகங்களில் உரிய இடத்தைப் பிடிக்கவில்லை. குறிப்பாக இதனை இவர்தான் செய்தார் என்பதை இருட்டடிப்பு செய்கின்றனர்.
ஆனாலும், இந்த உத்தரவால் தமிழ் நாட்டின் சாலைகளில் ஒவ்வொரு நாளும் பல உயிரிழப்புகள் தடுக்கப்படும். அவ்வாறு உயிர்தப்பும் அப்பாவிகள் தமிழக குடிமக்களாக இருக்கப்போகிறார்கள். மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் எந்த மக்களுக்காக அயராது நாள்தோரும் உழைக்கிறாரோ, அந்த மக்களின் நலன் காப்பாற்றப்படுகிறது என்பதே அவர் எதிர்பார்த்த உண்மை பலன். அந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடுவோம். முழுமையான மது ஒழிப்பை அடைய உறுதி ஏற்போம்.

5 கருத்துகள்:

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

அருமையான பதிவு அருள். தங்களின் சமூக அக்கறைக்கு என் பாராட்டுகள்.

ALPS AC BASHA சொன்னது…

என் மனதில் உள்ளவை உங்களின் எழுத்தாக உருவெடுத்துள்ளது.அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

தமிழ் உணர்வுள்ளவன். சொன்னது…

மருத்துவர் ராமதாசு பற்றி செய்திவெளியிடும் ஊடகத்துறையினர் யாரும் மருத்துவர் கூறும் கருத்தை விமர்சிப்பது இல்லை. மருத்துவரையே விமர்சிக்கின்றனர். இது அவர்களுக்குள் இருக்கும் சாதி உணர்வே...

chandrasekaran சொன்னது…

நல்ல விஷயம்தான். எதெதுக்கோ பத்திரிகையாளர்களை சந்திக்கும் மருத்துவர், இந்த நல்ல விஷயத்தை பா.ம.க. தான் செய்தது என்று ஏன் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தக் கூடாது? அப்ப மட்டும் செய்தி போடுவாங்களானு கேட்க வேண்டாம். சில ஊடகங்களில் மட்டுமாவது வெளியாகும்தானே. 2. நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளை மாற்றும் போது ஊர் மக்கள் எதிர்ப்பால் பல இடங்களில் மூடப்பட்டுள்ளது. கட்சி சார்பு என்று தெரியப்படுத்தாமல், ஊர் மக்களைத் திரட்டி இப்படி போராடினால் முதல் கட்டமாக சில நூறு கடைகளை மூடிவிடலாமே..

Unknown சொன்னது…

என்றைக்காவது ஒருநாள் ராமதாஸ் என்ற உண்மையான தமிழர் நலம் விரும்பும் தலைவர் ஒருவரை மக்கள் புரிந்து கொள்ள நேரிடும்.பூரண மது ஒழிப்பு என்பது அதிகமான அளவில் உள்ள குடியர்களிடமும் அதைச் சார்ந்து வயிறு பிழைக்கும் அனைவருக்கும் எதிரானதே..நிச்சயமாக பூரண மதுவிலக்கு என்பதை அரசியல் ஒன்றையே வாழ்வாதாரமாகக் கொண்டு ,அரசியல் பிழைக்கும் யாரும் செய்ய துணிய மாட்டார்கள்.குடியர்,மற்றும் குடி சார்ந்த மாக்களின் ஓட்டு இரண்டுமே பாதிக்கும் என்பதால்,ஆனாலும் மதுவிலக்கை வலியுறுத்தும் துணிவும்,அக்கறையும் ராமதாஸ் அவர்களுக்கே உள்ளது.மதுவினால் அரசுக்கு முப்பது சதவீதம் வருமானம் கிடைக்கிறதாம்.ஆகவே அதை நிறுத்த வாய்ப்பில்லை என்கின்றனர்.அரசு குடி என்னும் மோசமான விசயத்தில் வருமானம் ஈட்டுவதற்குப் பதிலாக இவர்களாலேயே ஒழிக்கப்பட்ட லாட்டரி விசயத்தை தனது கையில் எடுத்து தினமும் பவர்பால் லோட்டோ போன்ற விசயங்களை தொலைக்காட்சியில் லைவாக நடத்தினால் அநேகமான லாபம் காணலாம்.அதனால் குடி கெடும் என்பதெல்லாம் சும்மா...அதிர்ஷ்டம் இருப்பவர்களுக்கு பரிசுகள் கிடைக்கலாம்.அரசுக்கும் அன்றாடம் நல்ல முறையில் பெருத்த வருமானம் கிட்டும்.குடி முற்றிலும் ஒழிக்கப்படும்.அரசு தரும் இலவசங்கள் சோம்பேறிகளை உருவாக்குமளவு லாட்டரி ஆக்கிவிடாது என்பது உறுதி.
மது விற்பனை அரசின் வருமானப் பிரச்சினை.மதுவையும் முற்றிலும் ஒழிக்கவேண்டும்,ஆனால் வருமானமும் அதே அளவு ஈட்ட வேண்டும் என்றால் அரசு லாட்டரி ஒன்றே சிறந்த வழி.இதை ஒரு தீர்வாக செயல்படுத்தினால் பல குடும்பங்கள் மதுவிலிருந்து காக்கப்படும்.