Pages

வியாழன், ஏப்ரல் 11, 2013

தமிழனாக ஒன்றுபடு என்பது பித்தலாட்டம்: தமிழன் என்பவன் யார்? தமிழ்தேசியம் என்றால் என்ன?

ஜூனியர் விகடன் 10.4.2013 இதழில் வெளியான ஒரு கேள்வி-பதில்:

கேள்வி: "எனக்கு தெலுங்கு தெரியாது. தமிழ் பேசி தமிழில் எழுதி தமிழனாகவே வாழ்கிறேன். தமிழ் உணர்வால் உந்தப்பட்டு தமிழ் தேசிய இயக்கங்களுக்குள் வந்தேன். ஆனால் சில நேரங்களில் தமிழ் தேசியம் பேசுபவர்களின் பேச்சால் நான் தெலுங்கனோ என்ற உணர்வு எழுகிறது. என் அடையாளத்தைத் தேட வேண்டுமோ என்று நினைக்கிறேன்' - இப்படிக் கேட்கும் எனது நண்பனுக்கு பதில் என்ன?

ஜூ.வி. பதில்: பச்சைத்தமிழராக இருந்துகொண்டு இனத்துரோகம் செய்வதைவிட, தெலுங்கராய் இருந்து தமிழ்ப் பாசத்துடன் இருப்பது மேலானது. இனம், மொழி, மத, சாதி அபிமானத்தைவிட மனிதாபிமானம்தான் முக்கியமானது. (இப்படி பதில் அளித்துள்ளது ஜூ.வி)

இந்த கேள்வி பதிலுக்கு பின்னால் "தமிழன் என்பவன் யார்?" என்கிற விடை தெரியாத கேள்வி ஒளிந்திருக்கிறது. இதற்கு ஜூவி பதில் அளிக்கவில்லை. தமிழ் அறிஞர்களும் இன்னமும் தெளிவான பதிலை அளிக்கவில்லை.

அதைவிட முக்கியமாக - தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவருக்கு எதற்காக தமிழ் மொழிமேல் பாசம் இருக்க வேண்டும்? தெலுங்கு மொழிமேல் பாசம் இருந்தால் அது போதுமானது இல்லையா? 

மாற்று மொழி பேசும் தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழ் நாட்டின் மேல் பாசம் இருக்க வேண்டுமா? அல்லது தமிழ் மொழிமேல் பாசம் இருக்க வேண்டுமா? - இவையெல்லாம் விடை தெரியாத கேள்விகள்.

ஒரு நாட்டின் மக்கள் என்போர் யார்?

நாடு என்பது அதன் எல்லைகளால் மட்டும் அமைவது இல்லை. அந்த நாட்டின் குடிமக்கள் யார் என்பதும் முக்கியமானதாகும். எந்த ஒரு நாட்டிலும் 'இவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள்' என்று பொத்தம் பொதுவாக அடையாளம் காண்பது இல்லை. மக்களை பல்வேறு தொகுப்புகளாகத்தான் அடையாளம் காண்கின்றனர்.

நாட்டு மக்களை தொகுப்புகளாகப் பிரிப்பதிலும் இரண்டு விதமான அடையாளப் படுத்துதல் உண்டு. மக்களை அவ்வளவு எளிதாக பிரிக்க முடியாத நாடுகள், தமது நாட்டின் அடையாளத்தை முதன்மைப் படுத்துகின்றன. மற்ற நாடுகள் நாடு மற்றும் மக்கள் பிரிவுகள் இரண்டையுமே முன்னிலைப் படுத்துகின்றன.

எடுத்துக்காட்டாக அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மக்கள் தெளிவான பிரிவுகளில் இருப்பது இல்லை.

அமெரிக்காவைப் பொறுத்தவரை - ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடியேறியோர் முதன்மையாகவும் ஆப்பிரிக்கா மற்றும் தென்அமெரிக்க பகுதிகளில் இருந்து குடியேறியவர்கள் அடுத்த நிலையிலும் இருக்கும் நிலையில் - பொதுவாக அமெரிக்க மக்கள் "எல்லீஸ் தீவின் பிள்ளைகள்" (படகில் வந்த முன்னோர்கள் நுழைந்த தீவு) என்று பொதுமைப்படுத்தப்படுகின்றனர். அதாவது, சுமார் ஆறு இனங்களாக மக்கள் பிரிவுகள் இருப்பதை ஏற்றாலும், அமெரிக்கன் என்பதே அங்கு பிரதானம்.
அதே போன்று ஸ்பெயின் காலனியாகவும் பின்னர் ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டு ஊடுருவல்களாலும் தனது அடையாளத்தை இழந்த நாடு பிலிப்பைன்ஸ். அங்கு வந்த வெளிநாட்டினர் திருமண உறவினையும் ஏற்படுத்திக் கொண்டதால் - தனிப்பட்ட இனம் என்று இல்லாமல், பல இனங்களின் கலப்பாகவே மக்கள் இருக்கின்றனர்.

எனவே, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நாடே பிரதானம். இனப்பிரிவுகள் அடுத்ததுதான் (இது ஒரு தோராயமான கருத்துதான்).

ஆனால், மற்ற நாடுகள் அப்படி அல்ல. அவை தனது மக்கள் எந்த பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்பதை தெளிவாக வரையறை செய்துள்ளன. எடுத்துக்காட்டாக, மலேசியாவில் மலாய் மக்கள், சீனர்கள், இந்திய வம்சாவழியினர் என்கிற பிரிவு எப்போதும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு - இரண்டும் கெட்டான் நாடு.

இப்படியாக - மக்கள் பிரிவா? நாட்டின் அடையாளமா? என்பதில் ஒரு தெளிவில்லாத இரண்டும் கெட்டானாக காட்சியளிக்கிறது தமிழ்நாடு.

தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாநிலம் என்ற போதிலும் - 'நாடும் அதன் மக்களும்' என்கிற வகையில் தமிழ் நாட்டை வரையறுக்க முடியும். இதில் நாட்டின் எல்லை ஒரு சிக்கலாக இல்லை. ஆனால், நாட்டு மக்கள் யார் என்பதில் ஒருபோதும் தெளிவு இல்லை. இதனால்தான் தெலுங்கு பேசும் ஒருவர் தன்னை தெலுங்கனா? தமிழனா? என்று கேட்கும் நிலை ஏற்படுகிறது.
  • ஒன்று பிலிப்பினோக்களைப் போன்று 'எல்லோரும் ஒன்று கலந்த' தமிழர்கள் என்று நம்மை நாமே அடையாளம் காண வேண்டும். அதாவது 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி உள்ள 7,21,38,958 பேரும் தமிழர்கள். 
  • அல்லது, அமெரிக்காவைப் போன்று உட்பிரிவுகளை ஓரத்தில் வைத்துவிட்டு 7,21,38,958  பேரையும் தமிழ்நாட்டு மக்கள் என்று ஒரே கூட்டமாக கணக்கில் கொள்ள வேண்டும்.
  • மூன்றாவதாக, மலேசியாவில் உள்ளது போன்று - நாங்கள் எல்லோரும் தமிழ் நாட்டு மக்கள், ஆனாலும் - எங்களுக்குள் இத்தனைப் பிரிவுகள் உள்ளன என்பதை வெளிப்படையாக பேச வேண்டும்.
ஏதாவது ஒன்றை செய்து - குழப்பத்தை போக்க தமிழ் தேசியர்கள் முன்வர வேண்டும்.

தமிழனாக ஒன்றுபடு என்பது பித்தலாட்டம்.

"தமிழன்" என்பதற்கோ அல்லது "தமிழ் நாட்டு மக்கள்" என்பதற்கோ  ஒரு தெளிவான வரையறை இல்லாமல் - நாம் எல்லோரும் தமிழனாக ஒன்றுபட வேண்டும் என்பதும், நாம் தமிழர் நலனுக்காக பாடுபட வேண்டும் என்று பேசுவதும் பித்தலாட்டமானதாகும்.

"தேசப்பற்று என்பது அயோக்கியர்களின் கடைசி புகலிடம்"  (Patriotism is the last refuge of scoundrels) என்றார் சாமுவேல் ஜான்சன். தமிழ்தேசியம் என்பதும் அப்படித்தான் ஆகிவிடுமோ?!

17 கருத்துகள்:

புரட்சி தமிழன் சொன்னது…

ஏதாவது ஒருவரை ஆதரிக்க நேரிடும்போது ஒரு தெலுங்கு பேசும் நாய்டுவோ ரெட்டியாரோ ஒரு முன் பின் தெறியாத ஆந்திர மானிலத்தை சார்ந்தவரும் தமிழகத்தை சார்ந்தவரும் கலத்தில் இருக்கும்போது ஆந்திர மானிலத்தவருக்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பார்களாயின் அவர் தெலுங்கர் அவர்களே தமிழ் மானிலத்தை சார்ந்தவரை ஆதரித்தால் அவர்கள் தமிழர்.

அருள் சொன்னது…

@புரட்சி தமிழன் கூறியது...
// //ஆந்திர மானிலத்தவருக்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பார்களாயின் அவர் தெலுங்கர் அவர்களே தமிழ் மானிலத்தை சார்ந்தவரை ஆதரித்தால் அவர்கள் தமிழர்.// //

காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் அந்த மாநிலத்தைதான் ஆதரிக்கிறார்கள். அதற்காக, அவர்கள் கன்னடர்கள் என்று கூறிவிட முடியுமா?

அன்பு துரை சொன்னது…

//** "தேசப்பற்று என்பது அயோக்கியர்களின் கடைசி புகலிடம்" என்றார் சாமுவேல் ஜான்சன். தமிழ்தேசியம் என்பதும் அப்படித்தான் ஆகிவிடுமோ?! **//
சந்தேகமே வேண்டாம் அண்ணா.. அப்படிதான் இருக்கு..
========================

தாய் மொழியாக தெலுங்கை கொண்ட தமிழர்கள்,
தாய் மொழியாக கன்னடத்தை கொண்ட தமிழர்கள்,
தாய் மொழியாக மளையாளத்தை கொண்ட தமிழர்கள்..

இந்த மாதிரி வேணும்னா வகைப்படுத்திக்கலாம்..

ராவணன் சொன்னது…

தமிழ்நாடு என்பது தனிநாடு கிடையாது, அது இந்தியா என்ற நாட்டில் உள்ள ஒரு மாநிலம்.

”ஊரோடு ஒத்துவாழ்” என்பது மூதுரை. அப்படி வாழ்பவர்களை குறை சொல்ல ஏதுமில்லை.

வலுத்தவன் பின்னால் செல்லும் ஆட்டுமந்தை கூட்டம் மனித இனம்.

இதில் மதம், இனம், மொழி என்று எதுவுமே நிலையாக இருக்காது.

பெயரில்லா சொன்னது…

ஒருவர் தமிழரா என்பதை பிறப்பை வைத்து முடிவு செய்ய வேண்டியது இல்லை. பிறப்பால் வருவது நம் கையிலும் இல்லை. எனவே ஒருவர் தான் சார்ந்த சமூகத்துக்கு உண்மையானவராக, அது சார்ந்த பண்பாடுமற்றும் கொள்கை நெரிகளுக்கு மதிப்பு கொடுப்பவராக இருந்தால் அவரை அதனோடு அடையாலபடுத்தலாம்.

மொழி ஒரு சமூக கருவி. அந்த கருவியை பயன்படுத்தும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு அந்த சமூக முன்னேற்றதில் ஒருவர் அக்கறையுடன் இருந்தால் அவரை அந்த மொழியோடு அடையாலபடுத்தாலாம். எனவே வைகோ, MGR போன்றோர் எல்லாம் தமிழர்களே.

பிறப்பால் தமிழ் மொழியை அறிந்து , ஆனால் அந்த சமூகத்துக்கே உழைக்காமல் , துரோகம் செய்து கொண்டு இருப்பவர்கள் தமிழர்கள் அல்ல

சிவா.ஒருவர் தமிழரா என்பதை பிறப்பை வைத்து முடிவு செய்ய வேண்டியது இல்லை. பிறப்பால் வருவது நம் கையிலும் இல்லை. எனவே ஒருவர் தான் சார்ந்த சமூகத்துக்கு உண்மையானவராக, அது சார்ந்த பண்பாடுமற்றும் கொள்கை நெரிகளுக்கு மதிப்பு கொடுப்பவராக இருந்தால் அவரை அதனோடு அடையாலபடுத்தலாம்.

மொழி ஒரு சமூக கருவி. அந்த கருவியை பயன்படுத்தும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு அந்த சமூக முன்னேற்றதில் ஒருவர் அக்கறையுடன் இருந்தால் அவரை அந்த மொழியோடு அடையாலபடுத்தாலாம். எனவே வைகோ, MGR போன்றோர் எல்லாம் தமிழர்களே.

பிறப்பால் தமிழ் மொழியை அறிந்து , ஆனால் அந்த சமூகத்துக்கே உழைக்காமல் , துரோகம் செய்து கொண்டு இருப்பவர்கள் தமிழர்கள் அல்ல

சிவா.

இரா.சுகுமாரன் சொன்னது…

//மலேசியாவில் மலாய் மக்கள், சீனர்கள், இந்திய வம்சாவழியினர் என்கிற பிரிவு எப்போதும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.//

மேலே குறிப்பிட்ட அனைத்தும் நாடுகளை குறியீடாக கொண்டவை. இனத்தை குறிப்பிடுவன அல்ல.

நாடும் இனமும் ஒன்றல்ல.
இராசபக்சே தமிழர் வாழும் பகுதியில் தமிழ் பேசும் சிங்களர்களை குடியமர்த்திவிட்டு இவர்களும் தமிழர்கள் என்று செல்வதற்கும் நீங்கள் சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

பெரும்பான்மை இனம் வாழும் இடத்தில் ஒருவர் குடியேறிவிட்டால் அவர் அந்த இனத்தை சேர்ந்தவர் என்று எப்படி குறிப்பிட முடியும்.

பிழைப்புக்காக அமெரிக்கா, இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த தமிழர்கள் அனைவரும் வெள்ளைக்கார துரைகளாக அந்த நாடு ஏற்றுக் கொண்டுவிட்டதா?

தமிழனா? தெலுங்கனா? மலையாளியா என்பதை பகுத்து பாக்க ஒரு வழி இருக்கிறது. விண்ணப்பத்தில் எதனை தன் தாய்மொழி எது என்று நிரப்புகிறார்களோ அதுவே அவரது இன அடையாளம்.

எங்கு குடியேறினாலும் இது பொருந்தும்.

அருள் சொன்னது…

இரா.சுகுமாரன் சொன்னது…
// //நாடும் இனமும் ஒன்றல்ல. இராசபக்சே தமிழர் வாழும் பகுதியில் தமிழ் பேசும் சிங்களர்களை குடியமர்த்திவிட்டு இவர்களும் தமிழர்கள் என்று செல்வதற்கும் நீங்கள் சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.// //

நாடும் இனமும் ஒன்று என்று நான் கூறவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு தெளிவில்லாத நிலை இருப்பதையே சுட்டிக்காட்டியுள்ளேன்.

தமிழ் பேசும் பகுதியில் சிங்களவர்கள் குடியேறுவதாலோ அல்லது சிங்களப்பகுதியில் தமிழர்கள் குடியேறுவதாலோ ஒரு போதும் இனம் மாறாது.

ஆனால், தமிழ் நாட்டின் நிலை என்ன? ஒருபக்கம் - எல்லோரும் தம்மை தமிழன் என அழைத்துக் கொள்கின்றனர். மறுபுறம் - மொழிச் சிறுபான்மையினரின் பண்பாட்டு அடையாளங்கள், உரிமைகள் போற்றப்படுவது இல்லை என்கிற கருத்தும் உள்ளது.

இதில் "தமிழனாக ஒன்று படுவோம்" என்றால் யாரெல்லாம் ஒன்றுபடுவது? இந்த குழப்பத்தை தமிழ்தேசியர்கள் தீர்க்க வேண்டும்.

இரா.சுகுமாரன் சொன்னது…

தேசிய இனம் என்பது ...

இணையத் தேடலில் கிடைத்தவை..

//தமிழ்த் தேசிய இனத்துக்கு என்று திட்ட வட்டமான நில எல்லைகள் உண்டு. அரசுகள் உண்டு. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை இருக்கிறது. நில எல்லை, அரசு, ஒருபடித்தான வாழ்க்கைத்தன்மை, இலக்கியம், பொதுப் பழக்கவழக்கங்கள், சமூக மரபுநிலை இவை ஆறும் ஒரு தேசிய இன உருவாக்கத்துக்கு அடிப்படை //

// பச்சைத் தமிழ் தேசியம் - சுப. உதயகுமாரன்

தமிழ் நாட்டில் வாழ்கிறவர் எல்லோரும் தமிழரா? தமிழ் மொழி பேசுகிறவர் அனைவரும் தமிழரா? வீட்டிலே தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசினாலும், வெளியே வந்து தமிழ் பேசிவிட்டால் போதுமா என்று பல கேள்விகள் எழுகின்றன. தன்னுடைய அடையாளம் பற்றிக் கருத்து தெரிவித்த பாகிஸ்தானிய தலைவர் அப்துல் வாலி கான் பேசும்போது, “நான் கடந்த ஐம்பது வருடங்களாக பாகிஸ்தானியாக இருக்கிறேன், ஐநூறு வருடங்களாக முஸ்லீமாக இருக்கிறேன், ஆனால் ஐயாயிரம் வருடங்களாக பட்டானாக இருக்கிறேன்” என்றார். அதுபோல நாமும் அறுபது வருடங்களாகத்தான் இந்தியராக இருக்கிறோம். ஆனால் ஆறாயிரம் ஆண்டுகளாக தமிழராக வாழ்கிறோம்.//

rajah சொன்னது…

இது மிகவும் தேவையான விவாதம் ..தமிழன் என்பவன் யார் ? என்னை பொறுத்தவரையில்
வீட்டிலும் ,வெளியிலும் தமிழ் பேசி மனதால் தமிழுக்கு தீங்கு நினைக்காதவர்கள் எல்லாம் தமிழர்களே ஆனால் தமிழ் நாட்டில் வீட்டிற்குள் ஒரு மொழி பேசி வெளியில் தமிழ் பேசும் பல சமூகம் உள்ளது அவர்களை நாம் தமிழர் என்று அங்கீகரித்ததின் விளைவாகவே கருணாநிதி,ஜெயலலிதா போன்றவர்கள் நம்மை ஆள முடிகிறது மேலும் இவர்கள் தமிழர்களுக்காக எதையும் செய்யாமல் அவர்களை அழிபதையே குறிகோளாக செயல்படுபவர்கள். எனவே அனைவரும் தமிழர் என்று நம்பி நம்மை நாமே ஏமாற்றி கொள்ள வேண்டாம்

viyasan சொன்னது…

இத்தாலி பேசுபவனெல்லாம் இத்தாலியன் என்று எந்த் இத்தாலியனும் ஒத்துக் கொள்ள மாட்டான், ஆங்கிலம் பேசும் தமிழர்களும் ஆங்கிலேயர்களல்ல அதே போல் தமிழ் பேசும் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தமிழர்களுமல்ல. ஒரு மொழியை எவரும் கற்றுக் கொள்ளலாம், பேசலாம், ஆனால் ஒருவனது இன அடையாளம் என்பது அவனது பரம்பரையில், அவனது முன்னோர்களின் பாரம்பரியத்தில் தங்கியுள்ளது. அந்த அடிப்படையில் தன்னுடைய இன அடையாளம் தமிழன், அதைத் தவிர வேறெந்த அடையாளமும் இல்லாதவர்கள் மட்டுமே தமிழர்கள். வெளியில் த‌மிழும், வீட்டில் வேறு மொழியையும் பேசுப‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ன் என்ப‌தை விட‌ வேறு ஏதாவ‌து அடையாள‌ங்க‌ளைக் கொண்ட‌வ‌ர்க‌ளும், த‌மிழ்நாட்டில் ஆயிர‌மாண்டுக‌ள் வாழ்ந்தாலும் அவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள‌ல்ல. புல‌ம்பெய‌ர்ந்த‌ இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளின் குழ‌ந்தைக‌ள் ஆங்கில‌ம் அல்ல‌து வேறு ஐரோப்பிய‌ மொழியைப் பேசினாலும் கூட‌ அவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்களே, ஏனென்றால் அவ‌ர்களுக்குள்ள‌ ஒரெயொரு இன‌ அடையாள‌ம் த‌மிழ‌ன் என்ப‌து ம‌ட்டுமே.

அருள் சொன்னது…

viyasan கூறியது...

// //இத்தாலி பேசுபவனெல்லாம் இத்தாலியன் என்று எந்த் இத்தாலியனும் ஒத்துக் கொள்ள மாட்டான், ஆங்கிலம் பேசும் தமிழர்களும் ஆங்கிலேயர்களல்ல அதே போல் தமிழ் பேசும் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தமிழர்களுமல்ல// //

இரா.சுகுமாரன் சொன்னது…

// //தமிழ் நாட்டில் வாழ்கிறவர் எல்லோரும் தமிழரா? தமிழ் மொழி பேசுகிறவர் அனைவரும் தமிழரா? வீட்டிலே தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசினாலும், வெளியே வந்து தமிழ் பேசிவிட்டால் போதுமா என்று பல கேள்விகள் எழுகின்றன.// //

தமிழ் நாட்டில் வாழ்கிறவர் எல்லோரும் தமிழராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி ஒற்றை இனம் மட்டுமே வாழும் நாடு என்று உலகில் எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

தமிழர் அல்லாத வேற்று மொழி பேசுபவரும் தமிழ்நாட்டு மக்கள்தான். அவர்களை அவர்களது மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்களுடன் ஏற்க மறுத்து அவர்களையும் தமிழராக அடையாளப்படுத்தியதுதான் நம்முடைய அடிப்படையான சிக்கல்.

அருள் சொன்னது…

rajah கூறியது...// //அனைவரும் தமிழர் என்று நம்பி நம்மை நாமே ஏமாற்றி கொள்ள வேண்டாம்// //

தமிழர்கள் எதற்காக தமிழரல்லாத மக்களையும் தமிழராக நம்ப விரும்புகிறார்கள்? தமிழரல்லாதவர்கள் எதற்காக தம்மை தமிழராகக் காட்டிக்கொள்கின்றனர்? - இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பது அரிது.

திருவையாறில் இருந்த தியாகராஜர் தனது கீர்த்தனைகளை தெலுங்கில்தான் எழுதியிருக்கிறார். திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் தமிழில் ஒரு மணி நேரம் பேசிய பெரியார், தெலுங்கில் அரை மணி நேரம் பேச வேண்டியிருந்தது என்று சொல்வார்கள் (அவர் தெலுங்கு பகுதியில் இருந்து வந்தவர்களுக்காக பேசியிருந்தாலும் - இப்போது அதுபோல நடக்க வாய்ப்பு இல்லை).

தமிழ் நாட்டிற்குள் வாழ்ந்த தெலுங்கு பேசும் மக்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தெலுங்கு இனத்தவராகவே வாழ்ந்துள்ளனர். அதனை அவர்கள் கைவிடும் சூழல் யாரால் வந்தது? தெலுங்கு இனத்தவர்கள் தமிழ் இனத்துக்கு சமமான உரிமைகளுடன் வாழ முடியாது என்கிற ஆபத்து எப்போதாவது எழுந்ததா?

மொழிவாரி சிறுபான்மை இனத்தவர்களை - அவர்களுக்கான முழு உரிமையுடன் ஏற்காதவரை, தமிழ் வளர்ச்சி அடைய வாய்ப்பு இல்லை.

புரட்சி தமிழன் சொன்னது…

தமிழ் பெண்ணுக்கும் தெலுங்கு ஆணுக்கும் பிறந்தவன் தமிழனா இல்லை தெலுங்கனா? தாய் மொழி என்பதால் தாய் பேசும்மொழியே அவனுடைய தாய்மொழியாகுமா? பிறப்பால் அடையாளப்படுத்துவதைவிட உணர்வால் அடையாளப்படுத்துவதே சிறந்ததாகும் இல்லையெனில் தமிழும் தெலுங்கும் உறவால் பிறந்தவன் தமிலுங்கன் ஆகிவிடமாட்டானா.

அருள் சொன்னது…

புரட்சி தமிழன் சொன்னது…
// //தமிழ் பெண்ணுக்கும் தெலுங்கு ஆணுக்கும் பிறந்தவன் தமிழனா இல்லை தெலுங்கனா?// //

இந்த விடயத்தில் 'தமிழ் பெண்ணுக்கும் தெலுங்கு ஆணுக்கும் பிறந்தவர்' தெலுங்கு இனத்தை சேர்ந்தவராகக் கருதப்படும் வாய்ப்புதான் அதிகம்.

ஏனெனில், தந்தையின் குடும்பத்தின் அடையாளம்தான் அடுத்த தலைமுறைக்கு செல்கிறது. தாய் தந்தையின் சொத்தாக மாறிவிடுகிறார் (சில விதிவிலக்குகள் இருக்கலாம்).

rajah சொன்னது…

Arul கூறியது // தமிழர்கள் எதற்காக தமிழரல்லாத மக்களையும் தமிழராக நம்ப விரும்புகிறார்கள் //

பதில் : அறியாமை
2.தமிழரல்லாதவர்கள் எதற்காக தம்மை தமிழராகக் காட்டிக்கொள்கின்றனர்?

பதில் : அப்போது தானே தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்க முடியும்
உதாரணம் : பச்சை தமிழர் விஜயகாந்த

3.தமிழ் நாட்டிற்குள் வாழ்ந்த தெலுங்கு பேசும் மக்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தெலுங்கு இனத்தவராகவே வாழ்ந்துள்ளனர். அதனை அவர்கள் கைவிடும் சூழல் யாரால் வந்தது?
பதில்: இன்றும் பெரும்பாலானோர் அவர் இனத்தவராகவே வாழ்கின்றனர் வீட்டில் அவர் மொழியே பேசுகின்றனர் பெண் கொடுப்பது ,பெண் எடுப்பது போன்றவற்றை அவர் சார்ந்த சமூகதிலியே வைத்துகொல்கின்றனர் எல்லோரும் மாறிவிட வில்லை

4.தெலுங்கு இனத்தவர்கள் தமிழ் இனத்துக்கு சமமான உரிமைகளுடன் வாழ முடியாது என்கிற ஆபத்து எப்போதாவது எழுந்ததா?

பதில் : இல்லவே இல்லை. அதற்கு மாறாக திராவிடம் என்னும் பெயரில் அவர்கள் அடைந்தது ஏராளம்..தமிழ் நாட்டின் எல்லைகளை இழந்தோம்.கடைசியில் தமிழ்நாட்டையே இழந்தோம்.

சம்பூகன் சொன்னது…

சம்பூகன் கூறியது:-

///அதைவிட முக்கியமாக - தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவருக்கு எதற்காக தமிழ் மொழிமேல் பாசம் இருக்க வேண்டும்? தெலுங்கு மொழிமேல் பாசம் இருந்தால் அது போதுமானது இல்லையா? ///

நண்பர் அருள் அவர்களே...
இது ஒன்றும் விடை தெரியாத கேள்வி அல்ல. இது விடை தெரியும் கேள்வியே. முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்.தமிழ்தான் சமஸ்கிருதக் கலப்பு மிகுதியால் தெலுங்காக,கன்னடமாக,மலையாளமாக மாறியது.அம்மொழியைப் பேசும் மக்களும் ஆதியில் தமிழர்கள்தான்.(டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு:தொகுதி 14,பக்கம் 95 படியுங்கள்) தமிழினத்தை அழிக்க ஆரியம் செய்த முதல் வேலை நமது தாய் மொழியான தமிழைச் சிதைத்தது.பின்னர் சிதைந்த அத் தமிழ் மொழிகளைப் பேசியோர் தமிழர் என்ற வரையறையிலிருந்து தெலுங்கராக,கன்னடராக,மலையாளியாக ஆகினர்.சரி இது ஒருபுறம் இருக்கட்டும்.
இவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் மண் பிடிக்கும் ஆதிக்கப் போர்களாலோ,அல்லது பஞ்சம் பிழைக்கவோ,வணிகம் செய்யவோ தமிழகம் வந்தவர்கள்.
தாங்கள் தெலுங்கர்கள் பற்றிப் பேசியதால் அவர்களை எடுத்துக் கொள்வோம்.அப்படி வந்தவர்கள் தமது தாய் மொழியைத்தான் முதலில் பேசி வந்தனர்.அதுதான் இயல்பு;தவறில்லை.
அக்காலத்தில் கல்விக் கூடங்கள்,எழுத்து ஊடகங்கள் அதிகம் இல்லாததால் தமது மொழியைக் கற்க முடியாமல்,தமிழைக் கற்றனர்(விரும்பிக் கற்றிருக்க முடியாது;வேறு வழியின்றியே கற்றிருப்பார்கள்).தமக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ளும் அக மண முறை இருந்ததால் வீட்டில் வழி வழியாக தமது தாய் மொழியை மட்டுமே பேசிவருகின்றனர்.இதனால்,தெலுங்கை எழுதவோ,படிக்கவோ இவர்களுக்குத் தெரியாமல் போனது.இந்தப் போக்கு நீடித்துவரும் நிலையில் தமது வேர்களை மறந்தனர்;அல்லது விட்டுவிட்டனர்.அதனைத் தேடிச்செல்லவும் இல்லை. ஆந்திராவில் தமது சொந்த ஊர் எது என்பதே தெரியாத நிலை உருவானது.தொடக்க காலத்தில் உடை,உணவு,வழிபாடு,சடங்குகள் ஆகியவற்றில் தெலுங்கு நடைமுறையைகளைக் கடைப்பிடித்திருந்தாலும்,பின்னர் இந்தப் பண்பாட்டிலும் மாற்றம் வந்தது.கிட்டத்தட்ட தமிழர்களின் பண்பாட்டையே தாமும் கடைபிடித்துவருகின்றனர் என்பது வெளிப்படை.
தற்போது ஆந்திரத் தெலுங்கர்கள் அணியும் ஆடைகளைப் போன்று தமிழ்நாட்டுத் தெலுங்கர்கள் ஆடை அணிவதில்லை.(ஆண்கள் வேட்டியும்,பெண்கள் சேலையும் அணியும் முறை) தம்முடன் கொண்டு வந்த கடவுளரை வழிபட்டு வருகின்றனர்.இதற்குக் காரணம் ஜாதிக் கட்டுமானம்.ஆனாலும்,திருப்பதி ஏழுமலையானை விட திருத்தணி,பழனி முருகன்களைக் கும்பிடும் தெலுங்கர்களும் உண்டு.(தமிழர்கள் திருப்பதிக்குப் படையெடுக்கிறார்கள்)
கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக தம் வீட்டுப் பேசும் மொழியாக மட்டுமே தெலுங்கு உள்ளது.அதுவும் தற்போது ஆந்திராவில் பேசும் முழுமையான தெலுங்காக அல்லாமல்,பெரும்பகுதி தமிழ் கலந்த தெலுங்குதான் பேசுகிறார்கள்.தெலுங்கு சினிமாவைப் பார்த்தால்கூட அதனை முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியாது.
தமிழக சமூகப் பண்பாட்டில்,பழக்கவழக்கங்களில்,கடவுள் வழிபாட்டில்,அரசியல் தளத்தில் தமிழர்களோடு இரண்டறக் கலந்து தமிழர்களாகவே வாழ்கின்றனர்.அதனால்,தம்மைத் தமிழர்களாகவே உணர்கின்றனர்.ஆந்திராவில் பல்லாண்டுகளாக உள்ள தெலுங்கானா சிக்கலைப் பற்றி இவர்களுக்குத் தெரியாது.தெரிந்து கொள்ள முயலவுமில்லை.ஆனால்,ஈழச்சிக்கல் பற்றித் தெரியும்.தமிழ் ஈழத்துக்கான போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுக்கின்றனர்.
தமிழ் மொழிக்காகப் பட்டுபட்ட பலர் தெலுங்கைத் தாய் மொழியாக்க் கொண்டவர்கள்.1937 முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளபதி பட்டுக்கோட்டை அழகிரி,உவமைக் கவிஞர் சுரதா,பாவலரேறு பெருஞ்சித்திரனார் இப்படிப் பட்டியல் நீளும்.தமிழ் ஆராய்ச்சி,தமிழ் இலக்கியப் பங்களிப்பு.தமிழ் ஆசிரியர்கள் ஆகியவற்றிலும் ஏராளமானோர் உண்டு.
இத்தகையோர் தம்மைத் தமிழராகவே உணர்வது தவறா?தமிழ் மேல் பாசம் வைத்திருப்பது தவறா? ஒரு தெலுங்கு எழுத்து கூடத் தெரியாதவர்கள் எதற்காகத் தெலுங்கு மேல் பாசம் வைக்கவேண்டும்?தம்மை,தம் தலைமுறையை வாழவைக்கும் மொழியின்மீது,மண்ணின் மீது,மக்களின் மீது பாசம் வைக்காமல் இருந்தால்தான் அது தவறு.

சம்பூகன் சொன்னது…

///மாற்று மொழி பேசும் தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் நாட்டின் மேல் பாசம் இருக்க வேண்டுமா?அல்லது தமிழ் மொழிமேல் பாசம் இருக்க வேண்டுமா? ///
-நண்பர் அருளின் அடுத்த கேள்விஇது.

மாற்று மொழி பேசும் தமிழ்நாட்டு மக்களில் மதுரை,குடந்தை,பரமக்குடி பகுதிகளில் வாழும் நெசவாளர்களான சவுராஸ்டிரர்களும்,சின்னாளப்பட்டி,காரைக்குடி,அருப்புக்கோட்டை,சேலம் பகுதிகளில் வாழும் கன்னடர்களான நெசவாளர்களும்,உத்தமபாளையம்,கம்பம்,போடி பகுதிகளில் வாழும் கன்னடர்களும் தஞ்சைப் பகுதியில் வாழும் மராட்டியர்களும் கிட்டத்தட்ட தெலுங்கர்ளைப் போலத்தான்.இவர்களின் பேச்சு மொழியாக மட்டுமே சவுராஷ்டிரம்,கன்னடம்,மராட்டியம் இருக்கின்றன.எழுதவோ,படிக்கவோ தெரியாது.கடவுள் வழிபாடு தவிர,மற்றவற்றில் தமிழ்ப் பண்பாட்டினையே கடைப்பிடிக்கின்றனர்.பிறப்பால் சவுராஸ்டிரரான டி.எம்.சவுந்தரராசனின் தமிழ்ப் பங்களிப்பை மறக்கமுடியுமா?பிறப்பால் கன்னடரான கவியரசு நா.காமராசனின் கவிதைப் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியுமா?(இவை ஒரு சில உதாரணங்களே)
அடுத்து மலையாளிகள்.இவர்கள் மட்டுமே இன்னும் தம்முடைய கேரளத் தொடர்பில் இருக்கின்றனர்.ஆண்டுக்கு ஒரு முறை தமது சொந்த ஊருக்கு சென்றுவருகின்றனர்.இதற்குக் காரணம்.இவர்களில் பெரும்பகுதியினர் 1920 களில் தமிழகத்தில் தேநீர் புழக்கத்திற்கு வந்தபிறகு பிழைப்புக்காகத் வந்திருக்கவேண்டும்.எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்குப் பிறகு தம்மைத் தமிழராக உணரத் தொடங்கினர்.(இன்னும் முழுமையாக இல்லை என்றாலும்...)இவர்களில் இங்கேயே பிறந்த தலைமுறை மலையாளம் பேசுவதோடு சரி;எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை.பள்ளிகளில் தமிழையே மொழிப் பாடமாக எடுக்கின்றனர்.எனவே,இவர்களுக்கும் தமிழ்ப் பற்று இருப்பது இயல்பே.
அடுத்து சென்னைக்கு வணிகம் செய்ய வந்த மார்வாரிகள்,குஜராத்திகள்,ராஜஸ்தானியர்கள்.இந்தப் பிரிவினரை மேற்படியினருடன் சேர்க்கமுடியாது.இவர்கள் இன்னும் வட இந்தியர்களாக வேற்று மொழியினராகவே வாழ்கின்றனர்.தமிழகத்தில் தொழில் செய்து தமது சொந்த மண்ணில் சொத்து வாங்குபவர்களாகவும்,தொழில் தொடர்பு கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.தமிழைக் கற்க விருப்பம் இல்லாமல் தனித்தே வாழ்கின்றனர்.பள்ளிகளில் மொழிப்பாடமாக இந்தியைத் தேர்வு செய்கின்றனர்.ஆகவே,இவர்களுக்கு தமிழ்ப் பற்று இருக்க வாய்ப்பில்லை.
ஆனால்,கடந்த 15 ஆண்டுகளாக இவர்களும் சென்னை மட்டுமல்லாமல் தமிழ்கத்தின் பிற பகுதிகளில் குடியேறிவருகின்றனர்.தமிழகத்திலேயே சொத்து வாங்கித் தங்கிவிடும் முடிவுக்கு வந்துவிட்டவர்களாகே உணரமுடிகிறது.இனிமேல் இவர்களிடம் மாற்றம் வர வாய்ப்பிருக்கிறது.
தம்மை வாழவைக்கும் தமிழகத்திற்கு எந்தவித உள்நோக்கமும் இன்றி உழைப்பதையும்,தமிழைத் தம் தாய் மொழியாகவே உணர்ந்து கற்பதையும்,ஆரியப் பார்ப்பனர்கள் போல தமிழால் பிழைத்துவிட்டு தமிழைப் பழிக்காமல்,தமிழுக்குச் சிறப்பு செய்வதையும் தம் கடமையாகக் கருதி வாழ்ந்துவரும் எவருக்கும் தமிழ்நாட்டின் மேல் பாசம் இருப்பது,தமிழ் மொழியின் மீது பாசம் இருப்பதும் மனித இயல்பேயன்றி வேறல்ல.