Pages

சனி, ஜூலை 13, 2013

சமூக மோதலாக மாற்றியது விடுதலை சிறுத்தைகள்தான்! - வன்னியர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

பாட்டாளி மக்கள் கட்சியிலோ வன்னியர் சங்கத்திலோ தற்போது உறுப்பினராக இல்லாதவர் திரு. சி.ஆர்.பாஸ்கரன். ஒருகாலத்தில் மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தவர். தற்போது நடந்துவரும் வன்னியர் எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு எதிராக அவர் ஜூனியர் விகடன் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு குணம் இருப்பதாக பரவலாக நம்பப்படுவது உண்டு. அதுபோல், வன்னியர்கள் எல்லா காலத்திலும் தமக்குள் ஒற்றுமை இல்லாத ஒரு சமூகமாகவே இருந்து வருகின்றனர். இதனை 'நண்டு நாற்காலி ஏறுமா?' என்று வன்னிய எதிரிகள் கேலி செய்வது வழக்கம்.

ஆனாலும், சமூதாயத்திற்கு ஒரு நெருக்கடி வரும்போது வன்னியர்கள் தமக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றுகூடுவார்கள் என்பது வரலாறு. இதனை 'பள்ளிக்கொடியா அல்லிக்கொடியா' என்று குறிப்பிடுவார்கள் (பள்ளி = வன்னியர்). குளத்திற்கு மேலே தனியாக இருப்பது போல தெரியும் ஒரு அல்லிக்கொடியை பிடித்து இழுத்தால் - அது நீருக்கு கீழே அந்த குளத்தில் உள்ள எல்லா கொடியுடனும் பிணைப்பில் இருப்பது தெரியும். அதுபோல, இப்போது எல்லா வன்னியர்களும் பாமகவிற்கு ஆதரவான நிலை எடுப்பதை வெளிக்காட்டும் வகையிலான ஒரு பேட்டி (ஜூனியர் விகடன் 17.7.13 நாளிட்ட இதழ்):
தர்மபுரி இளவரசன் மரணம், பா.ம.க-வுக்கு எதிரான கடும் விமர்சனங்களை விதைத்துவருகிறது. 'இதையே சிலர் வன்னியர்களுக்கு எதிரான அவதூறாகவும் கிளப்பிவருகிறார்கள்’ என்று வன்னிய அமைப்புகள் குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளன. இதுதொடர்பாக அனைத்து வன்னியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சி.ஆர்.பாஸ்கரனைச் சந்தித்துக் கேட்டோம்.

''தர்மபுரி இளவரசன் மரணம் பா.ம.க-வினர் மீது கடுமையான தாக்குதலைக் கிளப்பிவருகிறதே?''

''இளவரசன் - திவ்யா திருமணம், பொருந்தாத திருமணம் என்று அப்போதே சொன்னோம். வயது வரம்பு, மன வளர்ச்சி முழுமை அடையாத சிறுவன் இளவரசன். ஆரம்பத்திலேயே திருமண வயதைக் காரணம் காட்டி இந்தப் பிரச்னையை சமாதானத்துக்கு கொண்டுவந்திருக்கலாம். ஆனால், இந்தத் திருமணத்தை இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலாகவே விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் தூண்டிவிட்டனர்.
சி.ஆர்.பாஸ்கரன்
நீதிமன்ற உத்தரவுப்படிதான் இளவரசன்-திவ்யா ஆகிய இருவரும் பிரிந்துசென்றனர். அதற்குப் பிறகு, அரசியல் ஆதாயத்துக்காக இளவரசன் மனம் நோகும்படி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் நடந்துகொண்டனர். எனவே, இளவரசன் மரணத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர்தான் காரணம். வன்னியர்களை சாதி வெறியர்கள் என்றும் இளவரசன் தற்கொலைக்கு வன்னியர்கள்தான் காரணம் என்பதையும் வன்மையாக மறுக்கிறோம்.''

''இந்த மரணத்துக்கு ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குரு ஆகியோர்தான் காரணம் என்றும் அவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்களே?''

''சில தலித் தலைவர்கள், சமீப காலமாக வன்னியர்களுக்கு எதிராக புறப்பட்டுள்ளனர். இது உள்நோக்கம் கொண்டது.இளவரசன் தற்கொலைதான் செய்துகொண்டார் என்பதற்கு ஆதாரமாக கடிதம் சிக்கிய பிறகும், வன்னியர்கள் மீது பழிபோடுவது தவறு. ஒரு சில தலித் அமைப்புகளுக்கு அரசியல் எதிர்காலம் சூன்யம் ஆகிவிட்டதால், இளவரசன் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். அதற்காக வன்னியர்களைத் தலித்களின் எதிரிபோல சித்திரிக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, தமிழக அரசும் எதிர்க் கட்சிகளும் வன்னியர் விரோதப் போக்கை கடைப்பிடிக்கின்றன. வடமாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, அதற்கு வன்னிய சமூகமே காரணம் என்று பழிபோடும் முயற்சி நடக்கிறது. மரக்காணம் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள வன்னியர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. அதற்குள் அடுத்த அஸ்திரத்தை எடுத்துவிட்டனர்.

திவ்யாவின் தாயார்தான் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டார். தற்காலிகமாக தனது தாயாருடன் செல்ல திவ்யா தீர்மானித்தார். இது அவர்களது குடும்பப் பிரச்னை. பொறுமையுடன் பிரச்னையை அலசி ஆராயும் மனப்பக்குவம் இல்லாத இளவரசன், தற்கொலை முடிவை மேற்கொண்டுள்ளார். அவருடைய தற்கொலை முடிவு வருந்தத்தக்கது. இளவரசனின் தற்கொலைக்கு இளவரசன்தான் காரணமே தவிர, வன்னியர்களை எப்படி குற்றம் சாட்ட முடியும்.

காதல் கல்யாணம் செய்துகொண்டதில் இருந்து இப்போதுவரை இளவரசன் குடும்பத்தினர், விடுதலைச் சிறுத்தைகளின் கையில்தான் உள்ளனர். அவர்கள் ஆட்டுவிப்பதுபோல இளவரசன் குடும்பத்தினர் செயல்படுகின்றனர். உண்மையிலேயே இளவரசனுக்குத் தைரியத்தைக் கொடுத்து மனப்பக்குவத்தை ஏற்படுத்தி உறுதுணையாக இல்லாமல், வெறும் அரசியல் லாப கண்ணோட்டத்தில் அணுகிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பே, இளவரசன் தற்கொலைக்கு முழுப்பொறுப்பு.''

''ராமதாஸ் கைதுக்குப் பின் நடந்த சேதத்துக்கு பா.ம.க-விடம் இழப்பீடு கேட்கப்பட்டுள்ளதே?''

''மரக்காணம் கலவரத்தில் இரண்டு வன்னியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. கலவரத்துக்கு நீதிவிசாரணை கேட்டு போராட்டம் நடத்திய மருத்துவர் ராமதாஸை கைதுசெய்து சிறையில் அடைத்ததால், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக 87 வழக்குகளை வன்னியர்கள் மீது பதிவுசெய்துள்ளனர். 150 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டுள்ளனர். இது, ஆளும் கட்சியின் அரசியல் காழ்ப்புஉணர்ச்சியை காட்டுகிறது.

ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டபோது அ.தி.மு.க-வினர் தர்மபுரியில் நடத்திய வன்முறை, கருணாநிதி கைதின்போது தி.மு.க-வினர் ஏற்படுத்திய சேதம், பல்வேறு போராட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஏற்படுத்திய இழப்புகள்.. இவை எல்லாவற்றுக்கும் இழப்பீடு பெறப்படுமா? யாரைத் திருப்திப்படுத்த வன்னியர்களை பழிவாங்க துடிக்கிறார்கள்?

'தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்தது செல்லாது: விடுதலை செய்யுங்கள்’ என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கூறிய பிறகும், ஜெ.குரு எம்.எல்.ஏ. உள்ளிட்ட 22 வன்னியர்களை மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்துள்ளனர். இது எந்த வகையில் நியாயம். வன்னியர்களின் கோரிக்கையை ஏற்காத முதல்வர் ஜெயலலிதா, தலித் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இளவரசன் மரணத்துக்கு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் ஜெயலலிதாவின் நடவடிக்கையால், மூன்று கோடி வன்னியர்களும் கொதிப்படைந்துள்ளனர். வன்னியர் அமைப்புகளுக்குள் சில பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இன்றைய அரசின் போக்கால் ஒருங்கிணைந்து செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தலித் வாக்கு வங்கியை மனதில் வைத்துக்கொண்டு வன்னியர்கள் மீது ஆளும் கட்சி அடக்குமுறையை ஏவுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வன்னியர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும். தனி இடஒதுக்கீடு உள்ளிட்ட வன்னியர்களின் கோரிக்கைகளை ஏற்காத ஆட்சியாளர்களுக்குத் தேர்தல் களத்தில் பாடம் புகட்டுவோம்''.

நன்றி: ஜூனியர் விகடன்

கருத்துகள் இல்லை: