ஒரு நாடு குறித்து எண்ணெற்ற தகவல்கள் இப்போது இணையத்தின் மூலம் கிடைத்தாலும் -
நேரில் காணும் அனுபவம் புதுமையாகவே அமையும். அந்த வகையில்
தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் குறித்த எனது பயண அனுபவத்தை இங்கே பகிர விரும்புகிறேன்.
தைப்பே 101
தைப்பே 101 முன்பு நான்
தைப்பே - தைவான்.
தைவான் ஒரு சின்னஞ்சிறு நாடு. புத்த மதத்தை பின்பற்றும் நாடு. அதன் தலைநகர் தைப்பே அழகிய ஊர்.
தைவான் நாட்டினர் தம்மை அதிகாரப்பூர்வமாக "சீனக் குடியரசு" என்று அழைத்துக் கொள்கின்றனர் (சீனா தன்னை மக்கள் குடியரசு என்று அழைத்துக்கொள்கிறது).
தனிநாடாக இருப்பினும் சீனாவால் தமது மாநிலம் என்று அழைக்கப்படும் தைவான் நாட்டு மக்கள் சீனாவை எதிர்த்து நிற்பது ஆச்சர்யமானது. ஒரே நாளில் தைவானை சீனாவால் நசுக்கி விட முடியும். ஆனாலும், சீனாவை அவர்கள் எதிர்த்து நிற்கின்றனர். அவர்களது
மிக முக்கிய கனவு ஐ.நா. அவையில் ஒரு உறுப்பினர் ஆவதுதான் (அது நடக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி).
தைவான் ஐ.நா. உறுப்பினர் கனவு
தைவான் நாட்டில் மக்களின் பொது ஒழுங்கு
உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டடம் தைப்பே 101 அங்கு உள்ளது. ஒரு வளர்ந்த நாட்டுக்கு இணையான பொருளாதார முன்னேற்றம், கட்டமைப்பு வசதிகள் என வளமாக வாழும்
தைவான் நாட்டில் மக்களின் பொது ஒழுங்குதான் அங்கு கவரக்கூடிய முக்கிய அம்சம் என நான் கருதுகிறேன்.
எந்த ஒரு இடத்திலும் எவரும் முண்டியடித்து ஓடியதை பார்க்கவே முடியவில்லை. பேருந்து நிறுத்தம். கடைகள் என எந்த ஒரு இடத்திலும் மக்கள் வரிசையாக நின்றே எதையும் வாங்குகிறார்கள்.
சாலையோரங்களில் உள்ள சின்னஞ்சிறு கடைகளில் கூட வெறும் 2 அல்லது 3 பேர் இருந்தால் கூட அவர்களும் வரிசையில்தான் நிற்கின்றனர்.
மெட்ரோ நகரும் படிக்கட்டுகளில் 1
மெட்ரோ நகரும் படிக்கட்டுகளில் 2
மெட்ரோ தொடர்வண்டிகளிலிருந்து இறங்கி நகரும் படிக்கட்டுகளில் அவர்கள் பயணிக்கும் ஒழுங்கை ஒர் பாடமாகவே கருதலாம். சுரங்கப்பாதையில் இயங்கும் மெட்ரோவிலிருந்து இறங்கும் மக்கள் மேலே செல்லும் நகரும் படிகளுக்கு வரும் போது வரிசையாக வருகின்றனர்.
இரண்டுபேர் செல்லும் அளவுள்ள நகரும் படிக்கட்டில் ஒரு ஆள் வரிசையில் மட்டுமே மக்கள் நிற்கின்றனர். இன்னொரு ஆள் செல்லும் இடத்தை காலியாக விட்டுள்ளனர்.
இதன் காரணமாக,
ஏதேனும் அவசர பணிக்காச செல்ல வேண்டியவர்கள் ஒன்றிரண்டுபேர் மட்டும் அந்த காலி இடத்தில் வேகமாக ஓடி முன்னதாக செல்கின்றனர்.
தைவானிடம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பழக்கம் அவர்களது ஒழுங்கு முறைகள் தான்.
பிலிப்பைன்ஸ் - ஒரு வலிமிகுந்த வரலாறு.
தனக்கென்ற ஒரு அடையாளத்தை இழந்துநிற்கும் மக்களுக்கு பிலிப்பைன்ஸ் ஒரு எடுத்துக்காட்டு
(எதிர்கால தமிழ்நாடு இப்படித்தான் ஆகுமோ?!). பிலிப்பைன்ஸ் என்கிற பெயரே காலனியாதிக்க நாடான ஸ்பெயின் நாட்டு அரசன் இரண்டாம் பிலிப் பெயரைக் குறிப்பதாகும்.
ஸ்பெயினை எதிர்த்து போராடிய விடுதலை வீரர்கள் நினைவுத்தூண் முன்பு நான்
சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்பு போர்த்துகீசியர்கள் மற்றும் மெக்சிகோ நாட்டினர் மூலம் ஸ்பெயின் அரசருக்கு காலனி நாடாக ஆக்கப்பட்டதுதான் பிலிப்பைன்ஸ். எனினும் தொடர்ந்து ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்குமான மோதலில் பாதிக்கப்பட்டது. கடைசியில் 1898 இல் தனக்குத்தானே விடுதலையை அறிவித்த போது 2 கோடி டாலருக்கு ஸ்பெயினால் அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது. பல ஆண்டுகளாக ஸ்பெயினோடு மோதி பின்னர் அமெரிக்காவுடன் சண்டையிட்டனர் பிலிப்பைன்ஸ் மக்கள்.
1935 ஆம் ஆண்டிற்கு பின் மீண்டும் விடுதலைபெரும் தருணத்தில் ஜப்பானால் கைப்பற்றப்பட்டது பிலிப்பைன்ஸ். 1945 இல் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான மோதலில் சிக்கி சின்னாபின்னமானார்கள் பிலிப்பைன்ஸ் நாட்டினர். ஐரோப்பிய வார்சா நகருக்கு அடுத்ததாக பிலிப்பைசின் மணிலா நகர மக்கள் தான் அதிகமாகக் கொல்லப்பட்டனர்.
உலகப்போரில் இறந்த அமெரிக்க வீரர்கள் நினைவிடம் முன்பு நான்
இரண்டாம் உலகப்போர் ஐரோப்பிய நாடுகளை மையமாக வைத்து நடந்த நிலையில், எங்கோ மூலையில் கிடந்த மணிலா நகரில் ஒரு லட்சம் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டனர். எல்லாவிதமான ஊடுருவலுக்கும் காலனியாதிக்கத்துக்கும் ஆளான பிலிப்பைன்ஸ் இன்றும் அமெரிக்க அரசின் இராணுவ ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அமெரிக்க இராணுவ தளம் பிலிப்பைன்சில் உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டு சட்டம் அங்குள்ள அமெரிக்க வீரர்களைக் கட்டுப்படுத்தாது! (உலகப்போரின் போது அதிக அமெரிக்க போர்வீரர்கள் கொல்லப்பட்ட நாடு பிலிப்பைன்ஸ் தான்.)
காலனியாதிக்கத்தின் விளைவுகளை இன்றும் பிலிப்பின்சில் காணலாம். மக்களின் தாய் மொழி தகலோக் பொதுவாக பேசப்படுவது இல்லை. ஸ்பானிஷ், ஆங்கிலம் இரண்டையுமே சரளமாக பேசுகின்றன். இவை எல்லாவற்றையும் கலந்து பிலிப்பினோ மொழிதான் ஆட்சிமொழி என்கின்றனர். மொழி மட்டுமல்ல இனமும் கலப்பினம் தான். பெரும்பாலானோரின் தாத்தா பாட்டிகளின் பட்டியலில் சீனர், ஸ்பானியர், அமெரிக்கர் ஆகியோர் உள்ளனர். அதாவது காலனியாதிக்கம் அரசியல் அதிகாரத்தோடு நிற்கவில்லை. சகட்டுமேனிக்கு எல்லோரும் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களோடு திருமண உறவும் கொண்டிருக்கின்றனர். எனவே, இன்றைய மக்கள் எல்லாம் கலந்த இனமாக காட்சியளிக்கின்றனர்.
இன்றைய மணிலா.
இன்றைய மணிலா நகரம் ஒரு எழில்மிகு நகரம்தான். உலகப்போரின் போது விமான ஓடுபாதையாக இருந்த இடம்தான் இப்போது நகரின் பிரதான வீதியாக இருக்கிறது.
மணிலா நகரின் நடைபாதைத் திட்டம் அவர்களைப் பார்த்து பொறாமைப் படவைக்கும் ஒரு திட்டமாக இருக்கிறது.
மணிலா பெருநகரின் முக்கிய பகுதி மக்காட்டி நகரம். இங்குதான் மணிலா நகரின் முக்கிய அலுவலகங்கள், வணிகப்பகுதிகள் உள்ளன. இந்த நகரின் அலுவலகங்களுக்கும் கடைகளுக்கும் செல்லும் மக்களில் மிகப்பெருமளவினர் நடந்தே செல்கின்றனர். இதற்கான அற்புத திட்டத்தை அந்நாட்டு அரசு வடிவமைத்துள்ளது.
மணிலா நகரின் நடைபாதை.
மக்காட்டி நகரின் நடைபாதை திட்டம் நகரின் எல்லா முக்கிய இடங்களையும் இணைக்கிறது. இது சுரங்கப்பாதை - தரை அளவு - முதல் தளம் என்கிற மூன்று தள அளவுகளில் இடத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையின் சிறப்பம்சம் -
எந்த இடத்திலும் சாலைமீது நடக்கத்தேவை இல்லை என்பதுதான்.
முக்கிய இடங்களை இணைக்கும் சுரங்க நடைபாதை
மணிலா நகர நடைபாதையில் நான்
அகலமான நடைபாதை, வெய்யிலோ மழையோ பாதிக்காத மேற்க்கூரை, மேலே ஏற - கீழே இறங்க நகரும் படிக்கட்டுகள் என தனிவழியாக நடபாதைகள் உள்ளன. இந்த நடைபாதை மூலமாக நகரின் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், அங்காடிகளுக்கு அவற்றின் முதல் மாடிக்குள் நேராக செல்ல முடியும்.
முக்கிய இடங்களை முதல் மாடி உயரத்தில் இணைக்கும் நடைபாதைகள்
முக்கிய இடங்களை முதல் மாடி உயரத்தில் இணைக்கும் நடைபாதைகள்
ஒரு எடுத்துக்காட்டுக்கு சென்னையை எடுத்துக்கொண்டால் -
சத்யம் திரையரங்கம், எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்பென்சர் பிளாசா ஆகிய மூன்றுக்கும் செல்ல வேண்டுமானால் - சாலையில் இறங்கவே தேவை இல்லை. இவை ஒவ்வொன்றின் முதல் மாடியில் இருந்தும் அதே முதல் மாடி உயரத்தில் உள்ள நடைபாதையில் நடந்து அனைத்து இடங்களுக்கும் எளிதில் செல்லலாம்.
திநகர் என்றால், அங்குள்ள எல்லா கடைகளுக்கும் முதல் தளத்துக்கு இணையாக உள்ள நடைபாதைகள் மூலம் எல்லா கடைகளுக்கும் நடந்தே செல்ல முடியும். கீழே சாலையில் இறங்கி நடக்க வேண்டாம்.
இந்த வசதியான நடைபாதையால் மக்கள் மிக எளிதாக நகரின் முக்கிய இடங்களுக்கு நடந்து செல்கிறார்கள். இதுபோன்ற திட்டங்கள் சென்னைக்கு அவசியம்.