Pages

வியாழன், ஜூலை 18, 2013

இளவரசன் தற்கொலை: பா.ம.க.வை சிலுவையில் அறைந்தவர்கள் பாவங்களைச் சுமப்பார்களா? மருத்துவர் இராமதாசு வினா

"தருமபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனின் இரண்டாவது உடற்கூறு ஆய்வறிக்கையை தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இளவரசன் கொலை செய்யப்படவில்லை என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றும், அவரது உடலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஆல்கஹால் கலந்திருப்பதால், அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருக்கலாம் என்றும்  உடற்கூறு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது"

சர்ச்சைக்குரிய ஒரு மரணம் குறித்த உண்மை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இளவரசனின் மரணம் கொலை அல்ல என்பது எங்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தெளிவாகவே தெரிந்திருந்தது. அதேபோல், இளவரசனின் தற்கொலைக்கு அவரது திடமற்ற மனநிலையும், அவரை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்த தலித் அமைப்புகளின் செயல்பாடுகளால் ஏற்பட்ட மன உளைச்சலும் தான் காரணம் என்பதையும் அனைவரும் நன்றாக அறிந்திருந்தனர்.

ஆனால், அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற எண்ணத்தில், இளவரசன் தற்கொலை குறித்த செய்தி வெளியானதுமே, அதன் பின்னணியில் நடந்தது என்ன? என்பதைப் பற்றியெல்லாம் ஆராயாமல், இதற்கெல்லாம் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தான் என்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் குற்றஞ்சாற்றி சிலுவையில் அறைந்தன. இளவரசன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒரு தரப்பினரும், இளவரசனையும், திவ்யாவையும் பாட்டாளி மக்கள் கட்சியினர்  பிரித்ததால் தான் இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக இன்னொரு தரப்பினரும்  வதந்திகளை பரப்பினர்.

ஆனால், உண்மை இப்போது அம்பலத்திற்கு வந்துவிட்டது. தொடர் வண்டியில் மோதியதால் தான் இளவரசன் உயிரிழந்திருக்கிறார் என்றும், அவர் மீது வேறு எத்தகைய தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தாக்கல் செய்துள்ள உடற்கூறு ஆய்வு அறிக்கையிலும், வேறு சில ஆதாரங்களிலும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

இளவரசனிடம் இருந்து திவ்யாவை பிரித்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சில அமைப்புகள் திட்டமிட்டு பரப்பிய செய்திகளும் பொய்யானவை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இளவரசனும், திவ்யாவும் பிரிந்தது தனிப்பட்ட இருவரின் பிரச்சினை ஆகும். இதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை. இன்னும் கேட்டால், திவ்யாவை இளவரசன் திருமணம் செய்து கொண்ட பின்னர் செலவுக்கு பணம் இல்லை என்றும், இளவரசனுக்கு வேலை கிடைக்காத நிலையில், வேறு சில பிரச்சினைகளும் ஏற்பட்டதால் தான்  அவருடன் தொடர்ந்து வாழ முடியாமல் திவ்யா தாயாரிடம் சென்றார். அதன்பின்னர், நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த ஆணையின்படி தான், திவ்யா அவரது தாயாருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார்.

தற்கொலை மனநிலை

மேலும், இளவரசன் ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்தே தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில்  இருந்திருக்கிறார் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கடந்த மாதம் சென்னை வந்த இளவரசன், ஒரு அரசியல் கட்சித் தலைவரை சந்தித்து தமக்கு வேலை பெற்றுத் தருமாறு கேட்ட போது, அந்தத் தலைவர் வேலை வாங்கித் தர மறுத்துவிட்டதுடன், மனம் நோகும்படியும் பேசியிருக்கிறார். இதனால், மனம் வெறுத்த இளவரசன், அங்கிருந்து தாம் தங்கியிருந்த விடுதியின் அறைக்கு வந்து தமது இடது கை மணிக்கட்டை பிளேடால் கீறிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில் தான் இளவரசன் கடந்த 4-ஆம் தேதியன்று மது அருந்திவிட்டு, தொடர்வண்டியில் மோதி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவரிடமிருந்து சிலரால் திருடிச் செல்லப்பட்டு, பின்னர் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் இருப்பது இளவரசனின் கையெழுத்து தான் என்பது தடய அறிவியல் துறை ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

திடமான மனநிலை இல்லாததும், மது போதையும் தான் இளவரசனின் தற்கொலைக்கு காரணம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டியவை என்ற அடிப்படையில், இளவரசனின் மரணம் மிகுந்த வருத்தமளிக்கும் ஒன்று தான் என்ற போதிலும், அவரது தற்கொலைக்கு காரணம் இதுதான் என்பது மறுக்க முடியாதது ஆகும். உண்மை இவ்வாறு இருக்க, இளவரசனின் மரணத்தில், அரசியல் உள்நோக்கத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியை சிலுவையில் அறைந்தவர்கள் அதற்கான பாவத்தை சுமப்பார்களா? என்பது தான் நான் எழுப்ப விரும்பும் வினா ஆகும்.

தொடர்வண்டியில் மோதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த இளவரசன், தருமபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறத்தில் உள்ள தொடர்வண்டி பாதை அருகே அமர்ந்தபடி தமது முடிவு குறித்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்திருக்கிறார். தற்கொலை திட்டத்தைக் கைவிட்டு விட்டு வீடு திரும்பும்படி, அறிவழகன் என்ற உறவினர் தொலைப்பேசியில் கேட்டுக் கொண்ட போது, தாம் அளவுக்கு அதிகமாக குடித்திருப்பதாகவும், இந்த நிலையில் தம்மால் வீட்டுக்கு வர இயலாது என்றும் கூறியிருக்கிறார்.

அதன்பின்னர், சில மணி நேரங்கள் கழித்து தான், அவர் தொடர்வண்டியில் மோதி தற்கொலை செய்து கொண்டார் என்ற போதிலும், அவரை காப்பாற்ற அவரது உறவினர்களோ, நண்பர்களோ முயற்சி செய்யவில்லை. இளவரசன் ஏற்கனவே ஒருமுறை தற்கொலை செய்ய முயன்றதும், அவர் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்ததும் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் உட்பட பலருக்கு தெரிந்து இருந்திருக்கிறது. இளவரசனையும், அவரது மரணத்தையும் வைத்து ஆதாயம் தேட முயன்றவர்கள், மனசாட்சியுடன் செயல்பட்டு, அவருக்கு கவுன்சலிங் வழங்க ஏற்பாடு செய்திருந்தால், இளவரசனின் மரணத்தை தடுத்திருக்க முடியும். அவ்வாறு செய்யத் தவறியவர்கள் தான் இளவரசனின் சாவுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

விடை காணப்பட வேண்டிய வினாக்கள்

இளவரசன் தற்கொலை தொடர்பான சர்ச்சைகள் இன்னும் தீரவில்லை. இளவரசன் தற்கொலை செய்து கொள்ளப் போவது அவருடன் சம்பந்தப்பட்ட பலருக்கும் முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. இளவரசன் தற்கொலை செய்து கொண்ட பின்னர், அவரது உடல் கிடந்த இடத்திற்குச் சென்ற அவரது உறவினர்கள் சிலர், இளவரசனின் முழுக்கால் சட்டை பையில் இருந்த தற்கொலைக் கடிதத்தை எடுத்துள்ளனர்.

அதை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கைப்பற்றி வைத்துக் கொண்டு, இதுபற்றி யாரிடமும் தகவல் தெரிவிக்கக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறார். அக்கடிதத்தை அவர் பதுக்கி வைத்துக் கொண்டு, இளவரசன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தொடர்ந்து வதந்தி பரப்பி வந்திருக்கிறார். இளவரசன் தற்கொலை செய்து கொண்டதை நன்றாக அறிந்திருந்தவர்களும், அந்த உண்மையை வெளியில் சொல்ல முன்வரவில்லை.

இதன்மூலம் இளவரசனை யாரோ சிலர் படுகொலை செய்து விட்டார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் & சட்டம் ஒழுங்கையும், சமூக நல்லிணக்கத்தை சிதைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. இளவரசனுக்காக குரல் கொடுப்பதாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்டவர்கள், எத்தகைய கொடூரமான எண்ணத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்; இத்தகைய சக்திகளை அடையாளம் கண்டு ஒதுக்கி வைக்க வேண்டும்.

இளவரசன் தற்கொலை தொடர்பான விவகாரத்தில் மருத்துவ ஆய்வு கேலிக் கூத்தாக்கப்பட்டிருப்பதும் மிகவும் வருத்தமளிக்கிறது. இளவரசனின் உடல் முதல்முறையாக தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுக்கு உள்ளாக்கப்படும் போதே பல்வேறு அத்துமீறல்கள் அறங்கேற்றப்பட்டன. மருத்துவர்கள் மட்டுமே இருக்க வேண்டிய உடற்கூறு அரங்கில், சில அரசியல்கட்சிகளையும், ஜாதி அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் நுழைந்து, உடற்கூறு ஆய்வை செல்பேசியில் படம் பிடித்திருக்கிறார்கள்.

உடற்கூறு ஆய்வின் போது , மருத்துவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அவர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடமாடியதும் காவல்துறையின் வீடியோவில் பதிவாகியிருக்கிறது. மருத்துவம் பற்றியும், உடற்கூறு பற்றியும் எதுவுமே தெரியாதவர்கள் உடற்கூறு அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டதன் மூலம் அங்கு வைக்கப்பட்டிருந்த உடல் காட்சிப் பொருளாக்கப்பட்டிருக்கிறது. மருத்துவத் துறையின் எந்த மரபும் இதை அனுமதிக்காது.

தமிழக அரசின் இரட்டை நிலை

இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கும்போது, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயம் தான் ஏற்படுகிறது. மரக்காணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், சில தலித் அமைப்புகளும் திட்டமிட்டு நடத்திய கலவரத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் இருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட போது, அது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், அதை ஏற்காத தமிழக அரசு, நீதி கேட்டு போராடிய என்னையும், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. வன்னியர் சங்கத்தலைவர் ஜெ.குரு உள்ளிட்ட 122 பேரை குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தது.

ஆனால், இளவரசன் தற்கொலை செய்து கொண்டது தெளிவாகத் தெரிந்த பிறகும், அதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. அனைவருக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய அரசு, தலித்துகளின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் ஆட்டுவிக்கும்படியெல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறது. வன்னியர்கள் படுகொலை செய்யப்பட்டால் அதை கண்டு கொள்ள மாட்டோம்; தலித்துகள் தற்கொலை செய்துகொண்டால் கூட நீதிவிசாரணை நடத்துவோம் என்ற இரட்டை நிலையை  அரசு கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது.

நீதியரசர் சிங்காரவேலு தலைமையிலான விசாரணை ஆணையம் அடுத்த மாத தொடக்கத்தில் விசாரணையை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளவரசனின் தற்கொலை முடிவை  தெரிந்து கொண்டவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்யாதது ஏன்?

இளவரசனின் தற்கொலைக் கடிதத்தை கைப்பற்றியவர்கள் யார்? அவர்கள் மீது காவல் துறை இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இளவரசன் தற்கொலை செய்து கொண்ட இடத்திற்கு காவல்துறையினர் செல்வதற்கு முன்பாகவே இவர்கள் சென்றது எப்படி? இதன் பின்னணியில் வேறு ஏதேனும் சதி ஒளிந்திருக்கிறதா? என்பது குறித்தும் விசாரித்து உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டும்; கலவரத்தை தூண்ட முயன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" -  இவ்வாறு மருத்துவர் இராமதாசு அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No evidence of torture on Ilavarasan’s body - The Hindu
Mobile conversations reveal Ilavarasan’s intention to end life - The Hindu

தொடர்புடைய சுட்டிகள்:

1. தர்மபுரி இளவரசன் மரணம் தற்கொலையே: அதிர்ச்சியளிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை!

2. அம்பலமாகிப் போன கவின்மலரின் அண்டப்புளுகு: தற்கொலைக் கடிதம் இளவரசன் எழுதியதுதான்.

3. தருமபுரி: முற்போக்கு வேடதாரிகளே! இதையும் கொஞ்சம் படிச்சுப்பாருங்க: மூன்று லட்சம் கேட்டதே கலவரத்துக்கு காரணமா?


4. தர்மபுரி தற்கொலையும் வன்னியர்களுக்கு எதிரான சதிச்செயலும்.

1 கருத்து:

Aruna சொன்னது…

சொல்லுவது யார்க்கும் எளிது அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

எனும் குறள் வழியே தன் வாழ்நாள் உள்ளளவும் உண்மை ஒன்றையே பேசி என்றும் தான் பிறருக்கும் கூறும் அறிவுரைகள் யாவற்றையும் முதற்கண் தான் கடைபிடித்து தன் வாழ்க்கையே பிறரது வாழ்க்கைக்கு நல்லதொரு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டுபவர் மருத்துவர் இராமதாசு
நேர்மையின் வடிவமாக நெறி தவறாத பொதுவாழ்வை ஒரு தவம் போல் நடத்தியவர் மருத்துவர் இராமதாசு
உரிமைக்கு இணைந்து குரல் கொடுப்போம். உறவுக்க துணிந்து கைகொடுப்போம்
ஒன்றுபட்டுச் செயற்படுவோம்