Pages

ஞாயிறு, ஜூன் 08, 2014

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி குழுவுடன் பிரதமரை சந்திக்க வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் பிரதமரை சந்திக்க வேண்டும்

-  மருத்துவர் அன்புமணி இராமதாசு அறிக்கை -

"மத்திய உரம் மற்றும் இரசாயனத் துறை அமைச்சரும், பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அனந்தகுமார் பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் உணமையல்ல என்றும் அவை முழுக்க முழுக்க வதந்தி தான் என்றும் கூறியிருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் திட்டமே மத்திய அரசிடம் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.கர்நாடகத்தை சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சரான சதானந்த கவுடாவும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்று வரை காவிரி பிரச்சினை தீரவில்லை. தமிழகத்தில் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் துயரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த ஆண்டு கூட குறுவை பாசனத்திற்காக மேட்டூர்  அணையை வரும் 12ஆம் தேதி திறக்க முடியாத நிலை நிலவுகிறது. காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்தது. அப்போதே இறுதித் தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால், அப்போது மத்திய அரசில் அங்கம் வகித்த கர்நாடக அமைச்சர்களின் தலையீடு காரணமாக  நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை. அதன் பின் 6 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு கடந்த ஆண்டு பிபரவரி மாதம் தான் உச்ச நீதிமன்ற ஆணைப்படி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதிலிருந்து 20 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், வேண்டுமென்றே அந்த வாரியத்தை அமைக்காமல் தமிழக மக்களுக்கு முந்தைய  மத்திய அரசு துரோகம் செய்தது.

நதிநீர் பிரச்சினைகளைப் பொருத்தவரை முந்தைய காங்கிரஸ் அரசில் தமிழ்நாட்டுக்கு துரோகம் மட்டுமே பரிசாக கிடைத்துவந்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பின்  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியிலாவது இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தமிழக மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு வலு சேர்ப்பதைபோல காவிரி பிரச்சினையை தீர்க்க காவிரி மேலாண்மை வாரியத்தையும், முல்லைப்பெரியாறு பிரச்சினையை தீர்க்க கண்காணிப்புக்குழுவையும் அமைக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இத்தகையச் சூழலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டமே மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய அமைச்சர் நண்பர் அனந்த குமார் கூறியிருப்பது, மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் செயலாகும்.

அரசியல் சட்டத்தின்படி மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொதுவானவர்களாக செயல்பட வேண்டும். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை  அமைப்பதற்காக  நண்பர் அனந்த குமார் குரல் கொடுக்க வேண்டும்.

காவிரி நடுவர் மன்ற  இறுதித் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள்  தொடரப்பட்டிருப்பதால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று கருத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச  நீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை எதிர்த்து பல மாநில அரசுகள் மேல் முறையீடு செய்துள்ள போதிலும், இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடவோ அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட அமைப்புகளை அமைக்கவோ எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கைகளை விரைவு படுத்தும்படி பிரதமர் நரேந்திர  மோடி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்களையும்  நான் தில்லியில் சந்தித்து பேசவிருக்கிறேன்

அதே நேரத்தில் இந்த பிரச்சினையில் தமிழக அரசும் விழிப்புடன் செயல்பட வேண்டும். கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிப்பதுடன், எல்லா கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தவும்  திட்டமிட்டிருக்கிறார். தமிழக முதலமைச்சர் அவர்களும் இப்பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். அதைத்தொடர்ந்து அனைத்துக் கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன்  பிரதமர் அவர்களை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

1 கருத்து:

மக்கள் பக்கம் சொன்னது…

முதல் அமைச்சர் இந்த விசயத்திலாவது அனைத்து கட்சிகளுடன் இனக்கமாக செல்லவேண்டும்