Pages

திங்கள், ஜூன் 23, 2014

9-ஆம் வகுப்பு பாடநூலில் வரலாற்றுப் பிழை: வன்னியர்களுக்கு அநீதி!

தென் ஆப்பிரிக்காவில் ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி படம்
வன்னியர்களின் வரலாற்றை அழிப்பதிலும் மறைப்பதிலும் தமிழ் நாட்டினர் சிலர் எப்போதும் மும்முரமாக இருந்து வருகின்றனர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு சுதந்திரப் போராட்டத்தின் முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சி வரலாறு! (வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய் VANNIYAPHOBIA சிலரைப் பீடித்திருப்பது குறித்து "வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்: VANNIYAPHOBIA" பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்)

‘சத்தியாகிரகம்’ - மகாத்மா காந்தி வடிவமைத்த மாபெரும் போராட்ட முறை.  இதனை முதன் முறையாக தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி அரங்கேற்றிய போது, அதில் முதன்முதலில் களப்பலி ஆனவர் சாமி நாகப்பன் படையாட்சி. 

ஆனால், தமிழ்நாடு அரசின் 9 – ஆம் வகுப்பு படநூலில் இந்த வரலாற்று தகவல் மறைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் சத்தியாகிரக வேள்வியின் முதல் களப்பலி 'தில்லையாடி வள்ளியமை' எனத் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வரலாற்று தவறு திருத்தப்பட வேண்டும். மேலும், சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறும் தமிழக வரலாற்று பாடநூல்களில் இடம்பெற வேண்டும்.
தமிழ்நாடு அரசின் 9 – ஆம் வகுப்பு படநூல்

மகாத்மாவை உருவாக்கிய தென் ஆப்பிரிக்கா

மகாத்மா காந்தி 1893 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் நேட்டாலில் பணிக்கு சேர்ந்தார். அப்போது தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள்தான், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்கியது.
தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டமே மகாத்மா காந்தியை உருவாக்கியது, அதுவே இந்திய விடுதலைப் போரின் வழிகாட்டி என்பதை காந்தியும் தெளிவாக கூறியிருக்கிறார். "காந்தி இந்தியாவில் பிறந்திருக்கலாம் - ஆனால் தென் ஆப்பிரிக்காதான் காந்தியை 'உருவாக்கியது" என்றார் அவர்.

உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் 

1906 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் சட்டத்தை கொண்டுவந்தது. பெயரையும் கைரேகையையும் பதிவு செய்து கொண்ட ஆவணத்தை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். வேலை, தங்குமிடம் என எல்லா இடத்திலும் இந்தியர்கள் தனியாக பிரித்து வைக்கப்படுவார்கள். புதிதாக இந்தியர்கள் எவரும் டிரான்சுவால் மாகாணத்திற்குள் குடியேறக்கூடாது, மூன்று பவுண்ட் வரி செலுத்த வேண்டும், இந்தியர்களின் திருமணங்கள் சட்டபடி செல்லாது என்று பல விதிமுறைகளை முன்வைத்தது அச்சட்டம்.

இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இச்சட்டம் இந்தியர்களை துன்புருத்துவதாகவும் கண்ணியத்தை குலைப்பதாகவும் கூறிய காந்தி, விளைவுகள் எதுவானாலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் இந்தியர்கள் இச்சட்டத்தை எதிர்க்க அழைப்புவிடுத்தார்.  அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். அதாவது, இச்சட்டம் செயலுக்கு வந்தால் இந்தியர்கள் தமது பெயரை பதிவு செய்துகொள்ளக்கூடாது. சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார்.

1907 ஆம் ஆண்டு சூலை மாதம் டிரான்சுவால் காலனி அரசாங்கம் இந்த ஏசியாட்டிக் பதிவு சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. தனது பெயரை பதிவு செய்யாத இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 1906 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டுவரை எட்டு ஆண்டுகள் இப்போராட்டம் நீடித்து கடைசியில் வெற்றி பெற்றது. அந்தவகையில் காந்தி வெற்றி பெற்ற முதல் போராட்டமும் இதுதான்.

ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் எனப்படும் இதுதான் உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் ஆகும்.  காந்தி முதல் முறையாக சிறை சென்றதும் இந்த போராட்டத்திற்காகத்தான். இந்த முதல் சத்தியாகிரக போராட்டமே இந்திய விடுதலைப் போருக்கு வழிகாட்டியாக அமைந்தது. மேலும், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட பலரது அறப்போராட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கியது ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் என கருதலாம்.

உலகின் முதல் சத்தியாகிரகக் தியாகி

ஜொகனஸ்பர்க் சத்தியாகிரக காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். "இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்" என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
சாமி நாகப்பன் படையாட்சி
முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. (இதே சிறையில்தான் காந்தியும், பின்னாளில் நெல்சன் மண்டேலாவும் அடைக்கப்பட்டனர். 'கான்சிடியூசன் மலை' என்று அழைக்கப்படும் அந்த இடம் இப்போது ஜொகனெஸ்பர்க் நீதிமன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது). அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு கடின வேலைகளில் ஈடுபடுத்துவதற்காக நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார்.   உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.

ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் நிமோனியாவால் இதயம் செயலிழந்து மரணத்தை தழுவினார். 1909 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் அவர் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் (Braamfontein Cemetery) அடக்கம் செய்தனர். சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. அந்த இளம் வயதில் சம உரிமைக்காக தனது உயிரை தந்தார் அவர்.

முதல் களப்பலி

சாமி நாகப்பன் படையாட்சிதான் முதல் சத்தியகிரகத் தியாகி என மகாத்மா காந்தி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
Indian Opinion Newspaper 14.8.1909 
THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 9: Page: 404
14.8.1909 ஆம் நாளிட்ட இந்தியன் ஒப்பீனியன் இதழில் - சாமி நாகப்பனின் மரணமே முதல் தியாகம் (FIRST SACRIFICE) என தலைப்பிட்டு எழுதினார் மகாத்மா காந்தி. (THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 9: Page: 404)

15.07.1909 அன்று தென் ஆப்பிரிக்க கேப் காலனி பிரதம மந்திரி J. X. MERRIMAN என்பவருக்கு எழுதிய கடிதத்தில், எங்களது போராட்டம் அதன் முதல் பலியை வாங்கியுள்ளது. ஒரு இளம் சத்தியாகிரகப் போராளி கொடுஞ்சிறையிலிருந்து சாகும் நிலையில் விடுதலையாகி ஆறாம் நாளில் இறந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். (THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 9: Page: 410)
Letter to Prime Minister J. X. MERRIMAN
THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 9: Page: 410
தென் ஆப்பிரிக்க போராட்டத்தில் மிக முதன்மையான ஒரு நிகழ்வு 16.6.1909 ஆண்டு ஜொகனஸ்பர்கில் நடந்த இந்தியர்கள் கூட்டமாகும். 1500 இந்தியர்கள் திரண்ட இக்கூட்டத்தில், தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் தூதுக்குழுவை இங்கிலாந்துக்கு அனுப்புவது என முடிவெடுக்கப்பட்டது. இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 இந்தியர்களில் 5 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமிருந்த மகாத்மா காந்தி மற்றும் ஹாஜி ஹபீப் ஆகிய இரண்டு பேர் மட்டுமே இங்கிலாந்து பயணக்குழுவில் இடம்பெற்றனர். அவர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்ட 21.6.1909 அன்றுதான் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட சாமி நாகப்பன் படையாட்சி கைது செய்யப்பட்டார். காந்தி 10.7.1909 அன்று லண்டன் சென்று சேர்ந்தார். அதற்கு முன்பாகவே 6.7.1909 அன்று சாமி நாகப்பன் படையாட்சி மரணமடைந்தார். அந்தத் தகவல் தந்தி மூலம் 12.7.1909 அன்று தெரிவிக்கப்பட்டது. 16.7.1909 அன்று காந்தி வெளியிட்ட தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் புகழ்பெற்ற "டிரான்சுவால் இந்தியர்களின் வழக்கு" எனும் அறிக்கையில், சாமி நாகப்பனின் மரணத்தையும் குறிப்பிட்டுள்ளார் காந்தி. (STATEMENT OF TRANSVAAL INDIAN CASE, PRESENTED BY THE INDIAN DEPUTATION, THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 9: Page: 424)

சாமி நாகப்பனை போற்றிய மகாத்மா காந்தி

தனது சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும்.
Indian Opinion Newspaper 14.12.1909 
THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 10: Page: 217
# தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது -  நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று 14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

# தனது சகோதரர் இறந்த போது -   நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல என்று 18.3.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.
Indian Opinion Newspaper 18.3.1914 
THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 14: Page: 124
# சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். முதலாவதாக, 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவில்லை.

# நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி உதவித்தொகை நினைவு நிதியை உருவாக்க விரும்பினார். அதற்காக திருமதி.வோகல் என்பவர் நிதிதிரட்ட முன்வந்த போது காந்தி அதனை வரவேற்று ஆதரித்து 9.12.1911 மற்றும் 14.6.1912 தேதிகளில்  இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் எழுதினார். அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும்  நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்றார் காந்தி. அதுவும் நடக்கவில்லை.

# காந்தி இந்தியா திரும்பிய பின்னர் - இந்திய சுதந்திரப் போராட்டம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு - போராட வருவோர் நாகப்பனை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பதையில் பயணிக்க வேண்டும் என்றார் காந்தி. சென்னை (21.4.1915), மதுரை (26.3.1919), தூத்துக்குடி (28.3.1919), நாகப்பட்டினம் (29.3.1919) என தமிழ்நாட்டில் தான் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம்  நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி.

# இந்தியாவின் எரவாடா சிறையில் இருந்த காலத்தில் 'தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகிப் போராட்டம்' எனும் விரிவான நூலை எழுதினார். இந்த நூல் 1928 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அந்த நூலில் நாகப்பன் குறித்து விரிவாகக் கூறியுள்ளார் மகாத்மா காந்தி.

# 1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு, காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அதற்கு மூன்று நாள் முன்னதாக, சாமி நாகப்பன் படையாட்சி இறந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், சூலை 15 அன்று தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் (Braamfontein Cemetery) சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார் மகாத்மா காந்தி.

உலகின் முதல் சத்தியாகிரகமான தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் போராட்டத்தில் மிக முதன்மையான அடையாளமாக உள்ள சாமி நாகப்பன் படையாட்சியின் படம் ஜொகன்ஸ்பர்க் அருங்காட்சியத்தில் திறக்கப்பட்டுள்ளது. அவரது நினைவிடம் ஜொகன்ஸ்பர்க் கல்லரைத் தோட்டத்தில் உள்ளது.

வரலாற்று அநீதி திருத்தப்பட வேண்டும்

மகாத்மா காந்தியால் போற்றிப்புகழப்பட்ட, சத்தியாகிரக வேள்வியின் முதல் களப்பலி சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு தமிழ் நாட்டில் மறைக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் - மகாத்மா காந்தி குறிப்பிடும் நான்கு தியாகிகளில் மூன்றவதாக இடம்பெற்றுள்ள வள்ளியம்மா முனுசாமி முதலியார் - தமிழ்நாட்டின் பாடநூல்களில் 'முதல் களப்பலி' என்று குறிப்பிடப்படுவது அநீதியாகும்.  

இந்த வரலாற்று அநீதி திருத்தப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் 9 – ஆம் வகுப்பு படநூலில் வரலாற்று பிழை மாற்றப்பட வேண்டும். மேலும், மகாத்மா காந்தியின் சத்தியாகிரக வேள்வியின் முதல் களப்பலி சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறும் தமிழக பாடநூல்களில் இடம்பெற வேண்டும். 


1 கருத்து:

Unknown சொன்னது…

samy nagappan padayachiyin thiyagathai makkalitam kontu selvathu pol neethi thuraikku kondu sendru niyayam ketkalame.