Pages

ஞாயிறு, ஜூன் 22, 2014

இந்தி எதிர்ப்பும் தமிழ்ப்பற்றும்: தமிழகக் கட்சிகளின் போலி வேடம்!

நடுவண் அரசு ஊழியர்கள் சமூக ஊடகங்களில் இந்தியைக் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்கிற உத்தரவு தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிரான உணர்வுகளை மீண்டும் எழுப்பிவிட்டுள்ளது. இந்தி பேசப்படாத மாநிலங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என நடுவண் அரசு பின்வாங்கியுள்ளது.

ஒரு தவளையை கொதிக்கும் நீரில் தூக்கிப்போட்டால், அது துள்ளிக்குதித்து ஓடிவிடும். அதுவே, குளிர்ந்த நீரில் போட்டு கொதிக்க வைத்தால், கொஞ்சம் கொஞ்சமாக வெந்து செத்துப்போகும். அதே நிலையில்தான் தமிழர்களும் இருக்கிறார்கள்.

மூன்றாவதாக ஒரு மொழியை தமிழர்கள் மீது திணிப்பதைக் கண்டு துள்ளிக்குதிக்கும் தமிழக அரசியல் கட்சிகள், முதல் மொழியான தமிழே இங்கு ஒழிக்கப்பட்டது குறித்து எந்தக் கவலையும் கொள்ளவில்லை.

முதல் மொழி ஒழிக்கப்பட்டு, அந்த இடத்தில் இரண்டாம் மொழி திணிக்கப்படுவதுடன் ஒப்பிட்டால் - மூன்றாம் மொழி இந்தித் திணிப்பு ஒரு பெரிய ஆபத்தே அல்ல!

இந்தித் திணிப்பை விட பெரிய ஆபத்து!

கல்வி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சி என எல்லாவற்றுக்கும் அடிப்படையானது 'கற்பித்தல் மொழி' (medium of instruction) ஆகும். மொழியியல் அறிஞர்களின் அறிவியல் பூர்வமான ஆய்வுகளின் படி - எந்த ஒரு இடத்திலும் 'கற்பித்தல் மொழி' என்பது அந்த இடத்தில் பேசப்படும் முதன்மை மொழியாகவே இருக்க வேண்டும்.
குறிப்பாக, பள்ளிக்குழந்தைகள் 6 முதல் 8 ஆண்டுகள் முதல் மொழியில் நன்றாகக் கற்றுத் தேர வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும், முதல் மொழியை முழுமையாகக் கற்றுத்தரும் முன்பாக இரண்டாவது மொழியைக் கற்றுத்தரக் கூடாது. முதன் மொழியில் கற்றுத்தேர்ந்த ஒரு குழந்தைக்கு அந்த முதல் மொழியின் மூலமாக இரண்டாம் மொழியைக் கற்றுத்தர வேண்டும்.

இதனை தமிழ்நாட்டு சூழலில் பார்த்தால் - தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழை மிகத் தெளிவாக கற்றுத்தந்த பின்னரே, ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்றுத்தர வேண்டும். ஆங்கிலம் தவிர்த்த எல்லா பாடங்களும் தமிழ் வழியிலேயே கற்றுத்தரப்பட வேண்டும்.

அதாவது, 6 ஆம் வகுப்பு அல்லது 8 ஆம் வகுப்பு வரையில், தமிழ் நாட்டில் தமிழ்வழிப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அங்கும் கூட, முதலில் தமிழைக் கற்பிக்கத் தொடங்கி, பின்னர் அந்த தமிழின் மூலமாகவே ஆங்கிலத்தைக் கற்பிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒரு மரத்தின் படத்தைக் காட்டி அதனை Tree என்று குழந்தைக்கு சொல்லித்தரக் கூடாது. மாறாக, மரத்தின் படத்தைக் காட்டி, முதலில் அது 'மரம்' என தமிழில் சொல்லிக் கொடுத்து. பின்னர் தமிழில் 'மரம்' என்பதுதான் ஆங்கிலத்தில் 'Tree' என்று சொல்வதே - சரியாக இரண்டாம் மொழி கற்பித்தல் முறையாகும்.

ஆனால், இந்தியை எதிர்க்கும் வேலி ஆங்கிலம் என்று சொல்லி - பின்னர் வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தமிழை ஒழித்து ஆங்கிலத்தை புகுத்திவிட்டார்கள். தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் தமிழ் முதன் மொழியாக இல்லாமல், ஆங்கிலம்தான் முதல் மொழி என்று ஆக்கிவிட்டார்கள்.

முதன் முதலில் எம்ஜிஆர் இந்த அநீதியை 'மெட்ரிகுலேசன் பள்ளிகள்' என்கிற சதி மூலம் செயலாக்கினார். இப்போது, அரசுப் பள்ளிகளிலும் இந்த அநீதியைப் புகுத்திவிட்டனர்.

மூன்றாம் மொழி இந்தித் திணிப்புக்கு எதிராக கொந்தளிக்கும் கட்சிகள், முதல் மொழி தமிழின் அழிவு குறித்து மவுனம் காக்கின்றன.

கட்சிகள் கண்டுகொள்ளாதது ஏன்?

திமுக - அதிமுக கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் நேர்ந்த பெரும் கேடுகளில் முதலாவது கேடு மதுத்திணிப்பு என்றால், இரண்டாவது பெரும் கேடு தமிழ் மொழி அழிப்பாகும்.

தமிழை ஏன் அழித்தார்கள் என்றால் அதற்கும் அறிவியல் ரீதியான காரணம் இருக்கிறது.

தமிழ் நாட்டில் மூன்றுவிதமான குழந்தைகள் உள்ளனர்:
1. வீட்டில் தமிழ் பேசும் குழந்தைகள்,
2. வீட்டில் ஆங்கிலம் பேசும் குழந்தைகள். 
3. வீட்டில் தமிழோ, ஆங்கிலமோ அல்லாமல் மூன்றாவதாக ஒரு மொழியை (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி) பேசும் குழந்தைகள்.

பள்ளிகளில் தமிழை முதல் மொழியாகக் கொள்வதால் "1. வீட்டில் தமிழ் பேசும் குழந்தைகள்" பலன் அடைவார்கள். அவர்கள் கல்வித்தரத்தில் வேகமாக முன்னேறுவார்கள்.

ஆனால், தமிழை அழித்து ஆங்கிலத்தை முன்னிறுத்தினால் "2. வீட்டில் ஆங்கிலம் பேசும் குழந்தைகள். 3. வீட்டில் தமிழோ, ஆங்கிலமோ அல்லாமல் மூன்றாவதாக ஒரு மொழியைப் பேசும் குழந்தைகள்" பலன் அடைவார்கள். அவர்கள் கல்வித்தரத்தில் வேகமாக முன்னேறுவார்கள். ஆனால், வீட்டில் தமிழ் பேசும் குழந்தைகள் பின் தங்கி விடுவார்கள்.
அதாவது, வீட்டில் தமிழ்பேசும் தமிழ்க் குழந்தைகளுக்கு பள்ளியிலும் தமிழில் கற்பது மிகச்சிறந்த கற்கும் சூழலாக அமையும். அதே நேரத்தில் - வீட்டிற்குள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி பேசும் குழந்தைகளுக்கு பள்ளியில் 'தமிழும் ஆங்கிலமும்' ஒப்பீட்டளவில் ஒன்றாகவே இருக்கும். அதுவே, விட்டில் ஆங்கிலம் பேசும் குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு பள்ளியிலும் ஆங்கிலத்தில் கற்பது மிகச்சிறந்த கற்கும் சூழலாக அமையும்.

ஆக, தமிழ் நாட்டில் தமிழை தாய்மொழியாகக் கொண்டிராத குழந்தைகளில் நலனுக்காகவே ஆங்கிலம் திணிக்கப்படுகிறது. 

சாதி ரீதியில் பார்த்தால் பெரும்பான்மை சாதியினர் வீட்டில் தமிழ் பேசுகிறவர்களாகவும், சிறுபான்மை சாதியினர் வீட்டில் ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளைப் பேசும் நிலையில் இருப்பதாலும் - ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை சாதியினரை ஓரங்கட்டவும் இந்த 'ஆங்கிலவழிக் கல்வி முறை' பயன்படுகிறது.

தமிழ் நாட்டில் "வீட்டில் தமிழ் பேசும் குழந்தைகள்" எண்ணிக்கைதான் அதிகம் என்றாலும், அதிகாரத்தில் இருப்பவர்களில் "வீட்டில் ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி பேசும் குழந்தைகளே அதிகம்". அரசியலிலும் இவர்கள்தான் அதிகம். எனவேதான், தமிழ் பேசாதவர்களின் ஆட்சியில் தமிழ் ஒழிக்கப்பட்டுவிட்டது. 

தமிழ் மக்களுக்கு எதிரான இந்தச் சதியை தமிழர்கள் அறியாமலேயே இருந்துவிட்டார்கள். குளிர்ந்த நீரில் போட்டு கொதிக்க வைத்தால், கொஞ்சம் கொஞ்சமாக வெந்து செத்துப்போகும் தவளையின் கதி தமிழர்களுக்கும் நேர்ந்து விட்டது.

இந்தப் பேராபத்தைக் கண்டு கொந்தளிக்காதவர்கள் - இப்போது இந்தியை எதிர்த்து முழக்கம் இடுகிறார்கள்.
குறிப்பு: பாமகவின் கொள்கை என்ன? 

"தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி முழுவதும் தமிழ்நாட்டின் முதல்மொழியான தமிழ்மொழி மூலமாகவே கற்பிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் ஆங்கிலம் இரண்டாவது மொழியாக சிறந்த முறையில் கற்பிக்கப்பட வேண்டும். மொழிச்சிறுபான்மையினர் அவரவர் தாய்மொழியை மூன்றாவது மொழியாகக் கற்றுக்கொள்ள வழிசெய்யப்பட வேண்டும்" (பாமக கொள்கை ஆவணம் - புதிய அரசியல் புதிய நம்பிக்கை, பக்கம் 82)

கருத்துகள் இல்லை: