Pages

புதன், டிசம்பர் 07, 2016

தமிழகத்தை இரட்சிக்க வருகிறார் கும்பானி!

வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை காற்றும், எண்ணெயும் சேர்த்து நிரப்பப்போகின்றனவாம்.

முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மறைந்துவிட்ட நிலையில், அவருக்கு பதிலாக அரசியல் அவதாரம் எடுத்து தமிழ்நாட்டை இரட்சிக்கப் போகிறாராம் கும்பானி.

எண்ணெயில் தொடங்கி காற்று (செல்பேசி, தொலைக்காட்சி), செருப்பு, காய்கறி, மின்னணு பொருட்கள் என அத்தனைக் கடைகளும் திறந்து சிறப்பாக வியாபாரம் செய்து வரும் கும்பானி, அடுத்ததாக அரசியல் வியாபாரம் செய்ய முடிவு செய்திருப்பது குறித்து, ‘‘அடுத்த மாற்று கும்பானி’’ என்ற தலைப்பில் ஏற்கனவே வெளியிட்டிருந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

அரசியலில் வெற்றிடம் இல்லாத போதே வெற்றிக்கான வழிகள் குறித்து கனவு கண்டு கொண்டிருந்த கும்பானி, இப்போது வெற்றிடம் ஏற்பட்டிருப்பதால் அதை காசின் உதவியுடன் கைப்பற்றத் துடிக்கிறார். மாவலியின் நாடு வாமணன் காலடியில் அடங்கியதைப் போல, பேனை பெருமாள் ஆக்கி காட்டும் ஊடகங்கள் அனைத்தும் இப்போது கும்பானியின் கைகளுக்குள் அடங்கிவிட்டதால் நினைத்ததை எளிதில் சாதித்து விடலாம் என்று காற்றில் மிதந்தபடி கனவு காண்கிறாராம் அவர்.

அறுவடை செய்வதற்கு வயல் தேவைப்படுவதைப் போல, அதிகாரத்தைப் பிடிப்பதற்கு அரசியல் கட்சி தேவையல்லவா? அதனால் தான் தமிழகத்தில் வயலை வாங்குவதற்காக..... மன்னிக்கவும்.... அரசியல் கட்சியைத் தொடங்குவதற்காக இரு நாட்களுக்கு முன் சென்னை வந்தாராம் கும்பானி. மும்பையிலிருந்து சென்னைக்கு தனி விமானத்தில் வந்த கும்பானி, அங்கிருந்து மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்கு தனி ஹெலிகாப்டரில் பறந்து சென்றாராம்.

அரசியல் கட்சியைத் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சென்னையிலுள்ள சில ஊடகங்களின் நிர்வாகிகளையெல்லாம் அழைத்திருந்தாராம் கும்பானி. எதையும் தனித்தனியாக செய்வது தான் கும்பானிக்கு பிடிக்கும் என்பதால் ஊடகக்காரர்களை அழைத்து வருவதற்காக ஒவ்வொருவருக்கும் ஆடி, பென்ஸ், ஜாகுவார், பி.எம்.டபிள்யூ என வகை வகையாக தனித்தனிக் கார்களை அனுப்பி வைத்திருந்தாராம்.

கார் அனுப்பியதிலேயே கவிழ்ந்து போன ஊடகவியலாளர்கள் கும்பானியை புகழ் மழையால் குளிப்பாட்டி விட்டார்களாம். ஆலோசனையின் தொடக்கத்திலேயே தாம் புதிய கட்சி தொடங்கப்போவதை தெரிவித்த கும்பானி, தமது கட்சியின் பெயர் கொஞ்சம் நீளமாக இருக்க வேண்டும் என்று ‘டிப்ஸ்’ கொடுத்தாராம். ‘டிப்ஸ்’ கொடுத்தால் தான் நமது ஊடகவியலாளர்கள் உற்சாகம் அடைந்து விடுவார்கள் அல்லவா? ஆளுக்கு ஒரு பெயரை அள்ளி விட்டார்களாம். ஆனாலும், அவை எதுவும் கும்பானியை குஷிப்படுத்த வில்லையாம்.

கடைசியாக ஒரு பத்திரிகையாளர் எழுந்து,‘‘ நமது கட்சிக்கு ஆவி என்று பெயர் வைக்கலாம்’’ எனக் கூறினாராம். அதைக் கேட்டதும் கும்பானிக்கு கோபம் வந்து விட்டதாம். ‘‘ நீங்கள் என்ன சொல்கிறீர்கள்... கட்சியின் பெயர் மிக நீளமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் மிக சுருக்கமாக  ஒரு பேரை சொல்கிறீர்களே?’’ என்று கேட்டு, இருக்கையை விட்டு எழுந்து குதித்தாராம். அவர் குதித்த குதியில் கட்டிடமே அதிர்ந்ததாம்.

அவரை சமாதானப்படுத்திய அந்த பத்திரிகையாளர்,‘‘ கோபப்படாதீர்கள்... ஆவி என்பது கட்சியின் முழுப்பெயர் அல்ல சுருக்கம் தான். ஆல்இந்தியா விபரீதக் கட்சி என்பதன் சுருக்கம் தான் ஆவிக் கட்சி ஆகும். காவி என்றழைக்கப்படும் காலங்கால விபரீதக் கட்சி விபரீதத்திற்கு மேல் விபரீதத்தை  ஏற்படுத்தி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கவில்லையா? அதேபோல் நாமும் நமது பங்குக்கு விபரீதங்களை ஏற்படுத்தி தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்புகிறோம்... ஆட்சியைப் பிடிக்கிறோம்’’ என்று இங்கிலீஷ் காரன் படத்தில் திருமணத்தை நிறுத்த திட்டம் வகுத்துக் கொடுக்கும் வடிவேலுவைப் போல பிளானை விளக்கினார். அதைக்கேட்டு உற்சாகமடைந்த கும்பானி ஒரு கைப்பிடி நிறைய தங்கக்காசுகளை அள்ளி அவருக்கு பரிசளித்தாராம்.

அடுத்ததாக கட்சிக்கு ஆலோசகராக யாரைப் போடலாம் என்று ஆலோசனை நடந்ததாம். இதற்காவது சரியான பதிலைக் கூறி தங்கக் காசுவை அள்ளி விடவேண்டும் என்ற எண்ணத்தில் ‘கிரசாந்த் பிஷோரில்’ தொடங்கி ‘போகேந்திர பாதவ்’ வரை பல பெயர்களை பரிந்துரைத்தார்களாம் பத்திரிகையாளர்கள். ஆனால், அவை எதுவுமே கும்பானியை கவரவில்லையாம். ஒருவர் மட்டும் இரண்டாவது வாய்ப்பு கேட்க, ஆமோதித்தாராம் கும்பானி. அவர் சொன்ன பதிலைக் கேட்டதும் கும்பானி உண்மையாகவே குளிர்ந்து விட்டாராம். ஆம்... அந்த பெயர் ‘சதானி’ என்பது தான் அதற்கு காரணமாம்.

அந்த சதானியை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார் கும்பானி. அதற்கு தலையை தலையை ஆட்டிய அந்த பத்திரிகையாளர்,‘‘ அவரை நான் பார்த்திருக்கிறேன். அவரது முகம் சூரிய ஒளியால் ஏற்படும் பவரைப் போல ஜொலிக்கும்’’ என்றார்.

‘‘இனத்துக்கு இனமும் ஆச்சு... பணத்துக்கு பணமும் ஆச்சு’’ என்று திட்டமிட்ட கும்பானி, சதானியையே ஆலோசகராக நியமிக்க முடிவு செய்தார். இந்த யோசனையை சொன்ன பத்திரிகையாளருக்கு, தனது கம்பெனி சிம் கார்டு போட்ட 10 செல்பேசிகளை பரிசாக வழங்கினார் கும்பானி.

அதற்குள், அவருக்கு மேலும் பல நகரங்களில் சந்திப்புகள் இருப்பதை உதவியாளர் நினைவூட்ட, அத்துடன் கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட ஆயத்தமானார். ஆலோசனை வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்த கும்பானி, ‘‘அரிய ஆலோசனைகளை வழங்கியமைக்கு நன்றி. மும்பையிலும் பத்திரிகை தர்மம் நன்றாக இல்லை... தில்லியிலும் பத்திரிகை தர்மம் சரியாக இல்லை. தமிழகத்தின் தான் பத்திரிகை தர்மம் தழைத்தோங்கியிருக்கிறது. உங்களைப் போன்ற விசுவாசிகளை இதுவரை நான் பார்த்ததில்லை. உங்கள் விசுவாசத்தையும் பத்திரிகை தர்மத்தையும் எண்ணெய் ஊற்றி வளருங்கள். அடுத்தக்கட்ட ஆலோசனையை கோவாவில் வைத்துக் கொள்ளலாம். உங்களுக்காக தனி விமானத்தை அனுப்பி வைக்கிறேன்’’ என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார். போகும்போது வெகுமதியும் கொடுத்தார்.

கும்பானி கொடுத்த வெகுமதி வெயிட்டாக இருக்க, அதனால் ஏற்பட்ட புளங்காகிதத்துடன் ஊடக நண்பர்கள் வெளியில் வந்தார். அப்போது ஒருவர் சொன்னார்...‘‘ கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். ஆனால், கும்பானி தெய்வம் கூப்பிட்டு வைத்து கொடுக்கிறதே?’’ என்றார். அதைக்கேட்டதும் மற்ற பத்திரிகையாளர்கள் அனைவரும், ‘‘ கும்பானிக்கு ஜியோ... கும்பானி வாழ்க’’ என வித்தியாசமாக முழக்கமிட்டவாறே கலைந்தனர்.

இதையெல்லாம் அங்கு நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன்,‘‘ ஒழிக பத்திரிகை அதர்மம்’’ என்று கத்தினான்.

கருத்துகள் இல்லை: