Pages

வியாழன், மே 09, 2013


பாமக தொண்டர் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

"மரக்காணம் கலவரத்தின்போது பா.ம.க. தொண்டர் செல்வராஜ் மரணமடைந்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த பி.செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த சித்திரைத் திருவிழாவுக்காக எங்கள் கிராமத்திலிருந்து ஒரு வாகனத்தில் சென்றோம்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மதுரா கழிகுப்பம் கிராமத்தை அடைந்தபோது ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு எங்கள் வாகனம் மீது தாக்கியது. நாங்கள் அங்கிருந்து தப்பி விட்டோம். எனது சகோதரர் செல்வராஜ் அந்தக் கும்பலிடம் சிக்கிக் கொண்டார்.

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் கூறியபடி எனது தம்பியை அந்தக் கும்பல் கொன்றுவிட்டதாக அன்று இரவு எங்களுக்கு தகவல் கிடைத்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன்.
எனது சகோதரர் விபத்தினால் உயிரிழக்கவில்லை. அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். எனினும் எனது சகோதரர் விபத்தினால் உயிரிழந்ததாக காவல் துறையும், ஊடகங்களும் கூறி வருகின்றன.

தற்போதைய சூழலில் இந்தச் சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸôர் விசாரணை நடத்தினால் உண்மையான குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள். ஆகவே, எனது சகோதரர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் செல்வம் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்."

தினமணி (9.05.2013)

1 கருத்து:

mahendaran thangarajan சொன்னது…

idhu endha unmai ariyum kuzhuvin kannukkum theriyathu, enendral vanniyargal oru adhikka jathi endru solvargal