Pages

புதன், மே 09, 2012

நடிகர் விஜய் வாக்குறுதியை மீறுகிறார்:இதோ ஆதாரம்!


துப்பாக்கி திரைப்படத்தில் நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றிருப்பதால், "இனி திரைப்படங்களில் புகைபிடிக்க மாட்டேன்" என அவர் 2007 ஆம் ஆண்டில் அளித்  உறுதிமொழியை மீறியுள்ளார். இதனை சுட்டிக்காட்டி, நடிகர் விஜய் "திரைப்படங்களில் புகைபிடிக்க மாட்டேன்" என மீண்டும் அறிவிக்கக் கோரி பசுமைத் தாயகம் அமைப்பு அவருக்கு எழுதியுள்ள கடிதம்:

அன்புள்ள இளையதளபதி திரு. விஜய் அவர்களுக்கு, வணக்கம்

தங்களது நடிப்பில் வெளியாகவுள்ள துப்பாக்கி திரைப்படத்தின் விளம்பரம் மற்றும் சுவரொட்டிகளில் நீங்கள் புகைபிடித்தபடி காட்சியளிப்பது அதிர்ச்சியளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் உங்களுடைய ரசிகர்களாக இருக்கும் நிலையில் நீங்கள் புகைபிடிக்கும் காட்சி உங்கள் ரசிகர்களை புகையிலைக்கு அடிமையாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன்.

புகையிலைக்கு அடிமையாவோரில் 50% பேர், உங்களது ரசிகர்கள் உட்பட, புகையிலையால் ஏற்படும் கொடிய நோய்க்கு பலியாகி உரிய வயதாகும் முன்பே வலிமிகுந்த மரணத்தை தழுவுவார்கள் என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

2010 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 5,56,400 பேர் கொடிய புற்றுநோய்க்கு பலியாகியுள்ளனர். இதில் 42% ஆண்களுக்கும், 18% பெண்களுக்கும் புற்றுநோய் வருவதற்கும் புகையிலைதான் காரணமாக இருந்தது (தி இந்து நாளிதழ் 28.03.2012). புற்றுநோய்க்கு புகையிலைதான் மிகப்பெரிய காரணம். சென்னை நகரில் மட்டும் அடுத்த ஐந்தாண்டுகளில் 32% புற்றுநோய் அதிகமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது (தி இந்து நாளிதழ் 19.07.2011).

இந்திய நாடு முழுவது ஆண்டுக்கு பத்து லட்சம் பேரை புகையிலைப் பொருட்கள் கொலை செய்கின்றன. இவ்வாறு உரிய வயதாகும் முன்பே இறந்து போகும் வாடிக்கையாளர்களை ஈடுகட்டவே புகையிலை நிறுவனத்தினர் திரைப்படங்களில் மறைமுகமாக விளம்பரம் செய்கின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு கொடிய கேட்டிற்கு நீங்கள் துணைபோக வேண்டுமா என்று உங்கள் மனசாட்சியைக் கேளுங்கள். பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் உங்களால் புகையிலைக்கு அடிமையாவார்கள் என்பதை ஒருகணம் நினைத்து உங்கள் மகனது முகத்தை நீங்கள் உற்றுப்பார்க்க கேட்டுக்கொள்கிறேன்.

இளையதளபதி விஜய்: சொன்ன சொல் மாறலாமா?

2007 ஆம் ஆண்டு பத்திரிகைகளுக்கு நீங்கள் அளித்த பேட்டியில் இனி புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று உறுதியளித்தீர்கள். இந்த செய்தி 27.11.2007 அன்று தினத்தந்தி, தினகரன், தினமணி நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.
தினகரன் 27.11.2007
தினத்தந்தி 27.11.2007
தினமணி 27.11.2007
 அப்பொது நீங்கள் "அழகிய தமிழ்மகன் திரைப்படத்திற்கு பிறகு இனிமேல் வேறு படங்களில் புகைபிடிப்பது போல நடிக்க மாட்டேன்" என்று வாக்குறுதி அளித்தீர்கள். அவ்வாறே, 2008 ஆம் ஆண்டு முதல் நீங்கள் ஒரு படத்திலும் புகைபிடிக்கும் காட்சியில் நடிக்கவில்லை. குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுரா, காவலன், வேலாயுதம், நண்பன் ஆகிய உங்களது நடிப்பில் வெளியான எந்த படத்திலும் நீங்கள் புகைபிடிக்கவில்லை.

அந்தவகையில், தமிழ் திரைப்படங்களில் நல்ல முன்னுதாரணமாக விளங்கும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த், உலகநாயகன் திரு. கமலஹாசன், திரு. சூர்யா ஆகியோரைப் பின்பற்றி நீங்களும் திரைப்படங்களில் புகைபிடிப்பதைக் கைவிட்டீர்கள். (அசல் திரைப்படத்தில் திரு. அஜீத் குமார் புகைபிடிக்கும் காட்சியில் நடித்தபோது, அவர் உங்களைப் பின்பற்றி புகைபிடிப்பதைக் கைவிட நாங்கள் அவரிடம் கேட்டோம்)
அசல் திரைப்படத்தில் திரு. அஜீத் குமார் புகைபிடிக்கும் காட்சி

ஆனால், இப்போது துப்பாக்கி திரைப்பட விளம்பரத்தில் நீங்கள் மீண்டும் புகைபிடிக்கும் காட்சியில் நடிப்பது அதிர்ச்சியளிக்கிறது. "நான் ஒருமுறை முடிவெடுத்துவிட்டால், என்னாலேயே அதை மாற்ற முடியாது" என்பது உங்களது முத்தாய்ப்பு வசனங்களில் ஒன்று. ஆப்படிப்பட்ட நீங்கள் அளித்த வாக்குறுதியை நீங்களே மீற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். (பத்திரிகைகளில் வெளியான உங்களது வாக்குறுதி செய்தியை இணைத்துள்ளேன்)

நடிகர்கள் புகைப்பழக்கத்தை திணிக்கின்றனர்.

திரைப்பட கதாநாயகர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை திணிக்கின்றனர் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை தங்களது பார்வைக்கு அளிக்க விரும்புகிறேன்.

1. புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் புகைபிடிக்க தொடங்கும் இளம் வயதினரில் 52% பேர் திரைப்படங்களை பார்த்து புகைபிடிக்க கற்றுகொள்வதாகக் கூறியது. (அதனை இங்கே காண்க: Effect of Smoking on Movies - THE LANCET 2003)

2. உலக சுகாதார நிறுவனம் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட "பாலிவுட்: பலியா அல்லது நண்பனா" எனும் ஆய்வில் இந்தியத் திரைப்படங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை திணிக்கின்றன என்பதை தெளிவாக எடுத்துரைத்தது. கூடவே, சிகரெட் நிறுவனங்களிடம் திருட்டுத்தனமாக லஞ்சம் வாங்கிக்கொண்டு இக்காட்சிகள் திணிக்கப்படுகின்றன என்பதையும் அந்த ஆய்வு வெளிக்கொண்டுவந்தது.(அதனை இங்கே காண்க:“BOLLYWOOD” VICTIM OR ALLY- WHO 2003)

4. உலக சுகாதார நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட "புகையில்லா திரைப்படங்கள்: ஆதாரங்களில் இருந்து செயல்பாட்டுக்கு" எனும் நூலில் - திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் பெரும் கேடாக மாறிவிட்டதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. (அதனை இங்கே காண்க: Smoke-free movies- from evidence to action WHO 2009)

5. "பாலிவுட் படங்களில் புகையிலை பயன்பாடும், விளம்பரமும், அவற்றால் இந்திய இளைஞர்களின் புகையிலைப் பழக்கமும்" எனும் 2011 ஆம் ஆண்டு ஆய்வுக்கட்டுரை, திரைப்படம் பார்க்கும் இந்திய இளைஞர்கள் புகையிலைக்கு அதிகம் அடிமையாவதை நிரூபித்துள்ளது. (அதனை இங்கே காண்க: Tobacco use in Bollywood movies, association with tobacco use among Indian adolescents)

6. 26.03.2012 அன்று கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "திரைப்படங்கள் மூலம் திணிக்கப்படும் மறைமுக புகையிலை விளம்பரங்கள் சமுதாயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன". "திரைப்படங்களில் புகைபிடிப்பதை கட்டுப்படுத்தாவிட்டால், இந்திய அரசியல் அமைப்பின் 21 ஆம் பிரிவில் உறுதியளிக்கப்பட்டுள்ள குடிமக்களின் உயிர்வாழும் உரிமை பாதிக்கப்படும்", "திரைப்படங்களில் புகைபிடிப்பதைக் கட்டுப்படுத்தும் விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது. (அதனை இங்கே காண்க: Kerala Voluntary Health Services Vs. Union of India)

எனவே, நீங்கள் அன்று சொன்ன வாக்குறுதிகளையும் இன்றைய புதிய ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் பல லட்சம் சிறுவர்கள், இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி துப்பாக்கி திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடிப்பதைக் கைவிடக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இனி திரைப்படங்களில் புகைபிடிப்பிடிக்க மாட்டேன் என பகிரங்கமாக அறிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.