கடவுள் நம்பிக்கை என்று வரும்போது மனிதர்களை 1. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், 2. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று இரண்டு பகுப்பாக பிரிக்க முடியும். உலகில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்தான் அதிகம்.
கடவுளை நம்புகிறவர்களோ, நம்பாதவர்களோ - எவராக இருப்பினும் அடுத்தவரது நம்பிக்கைக்கு மதிப்பளிப்பது அவசியம். அதாவது,
அடுத்தவர் நம்பிக்கையில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அத்தகைய ஒரு நம்பிக்கையை அவர் கொண்டிருப்பதற்கான உரிமையை அங்கீகரிக்க வேண்டும். மத நம்பிக்கை குறித்த ஐ.நா பிரகடனத்தை காண இங்கே சொடுக்கவும். (மேலு விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.)
ஆனால்,
இந்த அடிப்படை உரிமையைக் கூட அங்கீகரிக்காத போக்கினை பதிவுகில் பார்க்க முடிகிறது. ஒருவகையில் பார்த்தால் - பத்திரிகைகள், அரசியல்வாதிகளிடம் காணப்படும் பண்பாட்டு முதிர்ச்சியை பதிவுலகில் காண முடியாதது அதிர்ச்சியளிக்க கூடியதாக இருக்கிறது.
எடுத்துக்காட்டாக, சாய் பாபாவின் மறைவு குறித்து சி.என்.என் - ஐ.பி.என் செய்தியில் "சாய் பாபா குறித்த விமர்சனங்கள் பல இருப்பினும் அதையெல்லாம் அலசும் நேரம் இதுவல்ல" என்று கூறினார்கள். தமிழ்நாட்டின் எதிர்எதிர் அரசியல் துருவங்களான கலைஞரும் செயலலிதாவும் இரங்கல் தெரிவித்தனர். சென்னைக் குடிநீர் திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் அளித்தற்கு நன்றிக்கடனாக துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த சென்றுள்ளார்.
ஆனால்,
பதிவுலகில் பலரும் மனம் போன பொக்கில் சாய் பாபா மரணத்தை கேலிக்கூத்தாக்க முயற்சிக்கிறார்கள். இது மன விகாரத்தின் வெளிப்பாடன்றி வேறல்ல!
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டுமின்றி - தமக்கென்று ஒரு மத அல்லது கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும் சாய் பாபாவை இந்த தருணத்தில் தூற்றுவது வியப்பளிப்பதாக இருக்கிறது.
சாய் பாபா கடவுள் அல்ல, அவர் ஒரு மனிதர்தான் என்பது சிலரது தூற்றுதலின் பின்னணியாக இருக்கிறது. ஆனால், அவர்களில் பலர் இராமன், கிருட்டிணன், இயேசு எல்லோரும் இந்த பூமியில் மனிதனாக வாழ்ந்து மறைந்தார்கள் என்பதை இன்னமும் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
சாய் பாபா ஏதோ சித்து வேலைகளை செய்தார் என்று அவரை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள் - ஆனால், அவர்களில் பலர் சித்து வேலைகளின் களஞ்சியமாக இருக்கும் இராமாயணம், மகாபாரதம், பைபிளை நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். (ஒரு ஒப்பீட்டுக்குத்தான் சொல்கிறேன், இவ்வாறு கூறுவதன் மூலம் நான் எவரது நம்பிக்கையையும் கேலி செய்வதற்கு முயற்சிக்கவில்லை.)
சாய் பாபா'வை நம்புகிறவர்களின் மனநிலையை அல்லது அவர்களது நம்பிக்கையை கொஞ்சமும் அறியாமல் வீசப்படும் அநாகரீக பதிவுகளாகவே நான் இவற்றை பார்க்கிறேன்.
சாய் பாபா - எனது அனுபவம்
நான் சாய் பாபா'வை 1994 ஆம் ஆண்டு புட்டபர்த்தியிலும் 2005 ஆம் ஆண்டில் கொடைக்கானலிலும் நேரில் பார்த்தது உண்டு. அங்கெல்லாம் - சாதி மதத்தை கடந்து அன்பு ஒன்றே நிலவும் சூழலைத்தான் நான் கண்டிருக்கிறேன். பதிவுலகில் பேசப்படுவது போல எவரும் ஏமாற்றப்பட்டு நான் பார்க்கவில்லை.
இப்போதும், சாய் பாபா மறைவால் அவரது பக்தர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருப்பதாகவும் தெரியவில்லை. அவர் மறைந்த 24.04.2011 அன்று,சென்னயில் உள்ள சாய் பாபா ஆலயமான சுந்தரத்திற்கு நான் சென்று பார்த்தேன். அங்கு வந்த ஆயிரக்கணக்கானோரில் ஒருவரும் அழுது புலம்பவில்லை. ஒரு சிலர் கண்ணீர் விடுவதாக, கதறுவதாக செய்திகள் வந்தாலும், அது சாய் பாபாவை மீண்டும் பார்க்க முடியாது என்கிற - அல்லது தமது குடும்பத்தில் ஒருவர் மறைந்தால் எழும் சோகம் போன்றதுதான். (85 வயதில் ஒருவர் இறந்து போவதில் வியப்பதற்கு எதுவும் இல்லை)
உலகிலுள்ள எல்லா சாய் பாபா வழிபாட்டு இடங்களிலும், வழிபாட்டின் போது ஒரு அமர்வு நாற்காலியை போட்டு வைத்திருப்பார்கள். அந்த நாற்காலியில் சாய் பாபா கண்களுக்கு தெரியாமல் அமர்ந்திருப்பதாக நம்புவார்கள். இது காலம் காலமாக நடக்கும் நிகழ்வு. இப்போது புட்டபர்த்தியிலும் ஒரு நாற்காலியை போட்டு அதில் அவர் அமர்ந்திருப்பதாக நம்பப் போகிறார்கள் (இது பகுத்தறிவுக்கு உகந்ததா என்பதெல்லாம் தேவையற்ற கேள்வி). எனவே, சாய் பாபா பக்தர்கள் ஏமாந்துபோனதாக பேச எதுவுமே இல்லை.
""உலகம் முழுவதும் மூன்று கோடி பக்தர்கள் தங்களது வாழும் தெய்வமாகக் கருதி வந்த சத்ய சாய் பாபா பருவுடல் நீத்தபோதிலும் அவரது பக்தர்களைப் பொருத்தவரை அவர் ஆன்மா எப்போதும் துணை நின்று வழிநடத்தும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்."" என்கிறது தினமணி தலையங்கம். அதுதான் உண்மை நிலைமை.
மேலும் "மீஇயல் ஆற்றல்களை நாம் ஏற்க மறுத்தாலும்கூட, அவர் எல்லாரையும் போன்று சாதாரண மனிதரா அல்லது இறைநிலை எய்திய சித்தரா அல்லது வெறும் துறவி மட்டும்தானா என்பதெல்லாம் அவரது வட்டத்துக்கு வெளியிலான வெறும்பேச்சுகளும் விவாதங்களுமாக மட்டுமே இருக்க முடியும்" என்கிறது அந்த தலையங்கம். மொத்தத்தில் சாய் பாபா'வின் பக்தர்கள் அவர் எப்போதும் தம்முடன் வாழ்வதாக நம்புகிறார்கள், நம்புவார்கள்.
என்னைக் கவர்ந்த பாபா'வின் கருத்துகள்.
1. நல்ல நேரம் - கெட்ட நேரம் என்கிற கருத்துக்களை பாபா நம்பவில்லை. மனதில் நல்ல நோக்கத்தோடு நல்ல செயலில் ஈடுபடும் எல்லா நேரமும் நல்ல நேரமே. அதுபோல கெட்ட நோக்கில் கீழான காரியங்களில் ஈடுபடும் எல்லா நேரமும் கெட்ட நேரமே. எனவே,
இராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்ப்பது வீண் வேலை.
2. பூசை, யாகம் செய்வது, விரதம் இருப்பது, கோவிலுக்கு போவது, உண்டியலில் பணம் போடுவது போன்ற எல்லாமும் அவரவர் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவே செய்யப்படுகின்றன. இதனாலெல்லாம் கடவுளை வசப்படுத்தவோ, காரியங்களை சாதிக்கவோ முடியாது. ஒரு மனிதன் சிறிதாக வழிபடுகிறானா, பெரிதாக வழிபாடுகளை நடத்துகிறானா? என்றெல்லாம் இறைவன் எதிர்பார்ப்பது இல்லை. மனிதனால் இறைவனுக்கு எந்த ஒரு பொருளையும் கொடுக்க முடியாது.
அன்பும் சகமனிதர்களை நேசிப்பதுமே இறவனை வழிபடும் ஒரே வழியாகும்.
3.
கோவில் கட்டுவதற்காக ஒரு ரூபாய் கூட நன்கொடை அளிக்காதீர்.
4. இராமனுக்கு கோவில் கட்டுவதாகக் கூறி, இன்னொரு வழிபாட்டு தளத்தை இடிப்பது மூடச்செயல். அது உண்மை பக்தி அல்ல.
இராமனுக்கு கோவில் கட்ட வேண்டுமானால், அவரவர் மனதில் கட்டுங்கள்.
5. பல ஆறுகள் ஒரே கடலில் கலப்பது போல -
எல்லா மதங்களும் ஒரே கடவுளைத்தான் போதிக்கின்றன.
சாய் பாபாவின் சாதனை
பார்ப்பனர் அல்லாத வகுப்பில் பிறந்து - இந்திய ஆன்மீகத்திலும் சேவையிலும் மிக உயர்ந்த நிலையை எட்டியவர் சாய் பாபா. சாதியை மட்டுமின்றி மதத்தையும் கடந்தவர். அன்பும் சேவையுமே லட்சியம் என வாழ்ந்தவர்.
பாபா ஒரு ஆன்மீக வாதியாகவே பார்க்கப்பட்டாலும் - அவரிடம் அளிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொண்டு அவர் கோவில்களையோ மடங்களையோ எழுப்பவில்லை. மருத்துவ மனைகள், கல்வி நிறுவனங்கள், குடிநீர்த் திட்டங்கள் என சமூக நலப்பணிகளுக்காகவே அவர் நிதியை செலவிட்டார்.
இந்தியாவின் ஜனாதிபதிகளும், பிரதமர்களும், பல மாநில முதல்வர்களும் அவரை நாடி வந்ததே வரலாறாக இருக்கையில் - சென்னையின் குடிநீர் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நாத்திகரான கலைஞரை தேடிவந்தார் சாய் பாபா. அத்திட்டத்திற்காக 200 கோடி ரூபாயை அளித்தார் அவர்.
சாய் பாபா ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி, பலருக்கு அவர் தம்மை வழிநடத்தும் கடவுள். ஆனால், அவர் உலகில் ஒருவருக்கும் கேடிழைத்தவர் அல்ல.